ரணில் ஜனாதிபதியாக காரணமானவர்களை அம்பலப்படுத்தினர் விமல்

இது அராஜகத்தை ஏற்படுத்தும் செயலாகும். இளம் போராட்டக்காரர்கள் அதனை விளங்கிக்கொள்ளவில்லை. யோசிக்கும் அளவுக்கு அவர்கள் சொந்தபுத்தியில் இருந்தார்கள் என்று நான் நினைக்கவில்லை என்றார்.

கொழும்பில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், இறுதியில் என்ன நடந்தது. ஜனாதிபதி மாளிகையை சுற்றிவளைக்கும் போதும் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் நடத்துமாறு உத்தரவிடாத ஜனாதிபதி வீட்டுக்குச் சென்றுள்ளார். போராட்டக்காரர்களுக்கு பருப்பு ஊட்டுவதற்கு முயன்றவர் ஜனாதிபதி ஆகிவிட்டார்.

வியூகமோ தொலைநோக்கு பார்வையோ இல்லாத ‘போராட்டத்தின்’ விளைவாகவும் போராட்டக்காரர்களையே முடக்கும் ஒருவரான  ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார்.

ரணிலுக்கு வாக்களித்தது ஏன்? பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இன்மை. எல்லாவற்றுக்கும் முன்னதாக இந்த நிலைமையை இல்லாமற் செய்யவேண்டும். அதனை செய்யக்கூடியவர்கள் யார்? ரணில் விக்கிரமசிங்க, அந்த மனநிலை​யை ஏற்படுத்தியவர்கள் யார்? போராட்டக்காரர்கள் என்றார்.

லால்காந்த, சுனில் ஹந்துநெத்தி உள்ளிட்ட குழுவினர், பாராளுமன்றத்தை மற்றுமொரு ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகையாக முயன்றபோது, அவசரகாலச்சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி, பாதுகாப்பு தரப்பினருக்கு கட்டளையிட்டு, தாக்குதல் நடத்தியவர் ரணில் விக்கிரமசிங்க, அவ்வாறானவரே இன்று ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியல் நோக்கம், ஏதிர்கால நோக்கம் உள்ளிட்டவை எதுவுமே இல்லாத காதுகளில் தோடுபோட்டிருந்தவர்கள், தாடி வைத்திருந்தவர்கள் தலைமுடியை அலங்கோலமாக வைத்திருந்த குழுவினர். வீரர்களாகி, கதைகளை கூறி சமூக வலைத்தளங்களின் ஊடாக பிரசாரங்களை மேற்கொண்டு, நடிகர்களும் இணைந்து இந்த நிலைமையை தோற்றுவித்துவிட்டனர்.