ரஷ்யாவை போர் புரியும் சூழலுக்கு தள்ள முயற்சி: அமெரிக்கா மீது புடின் குற்றச்சாட்டு

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் அணியில் சேர ரஷ்யா எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைப்புக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. இதனால் ஆத்திரமடைந்துள்ள ரஷ்யா, ஒன்றரை லட்சம் ராணுவத்தினரை உக்ரைன் எல்லையில் நிறுத்தி உள்ளது. இதனால், போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைநகர் மாஸ்கோவில், ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பனுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது: ரஷ்யாவின் கவலைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. எங்களது முக்கிய கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படவில்லை. நேடோ படை விரிவாக்கம், ரஷ்ய எல்லை அருகே ஆயுதங்களை குவிப்பது உள்ளிட்ட எங்களின் கோரிக்கை ஆலோசிக்கப்பட்டதாக தெரியவில்லை. உக்ரைனின் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா பெரிதாக அக்கறை காட்டவில்லை என எனக்கு தோன்றுகிறது.

ஆனால், ரஷ்யாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவது தான் அதன் முக்கிய பணி. இந்த இலக்கை அடைவதற்கான ஒரு முக்கிய கருவியாக உக்ரைன் இருப்பதாக நான் கருதுகிறேன். ரஷ்யா மீது அதிக தடைகள் விதிக்க ஒரு சந்தர்ப்பமாக இந்த நெருக்கடியை பயன்படுத்துவதே அமெரிக்காவின் குறிக்கோள். இந்த விவகாரத்தின் மூலம், ரஷ்யாவை போர் புரியும் சூழலுக்குள் தள்ள அமெரிக்கா முயற்சி செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.