வடக்கில் அடை மழை; 66 ஆயிரத்து 223 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக ஆயிரத்து 874 குடும்பங்களை சேர்ந்த 6 ஆயிரத்து 298 பேர் பாதிப்படைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவடட செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்வான பிரதேசங்கள் மற்றும் குடிசைகளில் வாழும் குடும்பங்களே மோசமாக பாதிப்படைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தினை பொறுத்தவரையில் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. அதிலும் வடமராட்சி, பருத்தித்துறை போன்ற பகுதிகளில் அதிக பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.

177 குடும்பங்கள் வீடுகளில் வசிக்க முடியாத நிலையில் பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நாம் உலர் உணவுகள் வழங்கியும் வருகின்றோம். மழை தொடர்ச்சியாக பெய்யுமாக இருந்தால் பாதிப்புக்கள் இன்னும் அதிகரிக்கலாம். நாம் பாதிப்புக்களை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி எம்முடன் தெடர்பு கொண்டிருந்தார். மக்களை மீட்பது, இடர் மீட்ப்பு போன்றவற்றுக்கு தாங்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாக கூறியுள்ளார். சில இடங்களில் அவர்கள் மீட்ப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து பிரதேச செயலர்களுக்கும் இடர் ஏற்படும் சூழ்நிலையில் உடனடியாக இராணுவத்தினரின் உதவியை கூறுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

மழையின் காரணமாக பல இடங்களில் கால்வாய்கள் நிரம்பியுள்ளன. இதனால் நுளம்புகளின் பெருக்கம் அதிகமாக காணப்படும். எனவே மக்கள் டெங்கு நோய்த் தாக்கம் தொடர்பிலும் விழிப்பாக இருக்க வேண்டும். அண்மைய மழை காரணமாக யாழிலுள்ள வெள்ள நீர் தடுப்பணைகள், கடல்நீர் தடுப்பணைகள் வெகுவாக பாதிப்படைந்துள்ளன. அதிலும் அராலி, அரியாலை, தொண்டமானாறு அணைகள் பாதுகாப்பிற்காக திறக்கப்பட்டுள்ளன. எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

கிளிநொச்சி

இதுவரை 8,877 குடும்பங்களைச் சேர்ந்த 28,597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

இவர்களில் 2,017 குடும்பங்களைச் சேர்ந்த 6,288 பேர் 22 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது மழை இல்லாத போதும் இரணைமடு உள்ளிட்ட பாரிய மற்றும் சிறு குளங்கள் வான்பாய்வதனால் அதன் நீர் வெளியேறும் தாழ் நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியிருக்கின்றனர்.

மேலும் வெள்ள நீர் உட்சென்ற வீடுகளுக்கும் பொது மக்களால் உடனடியாக மீள திரும்ப முடியாதுள்ளது. கரைச்சி பிரதேசத்தில் 4,205 குடும்பங்களைச் சேர்ந்த 13,654 பேரும், கண்டாவளையில் 4,017 குடும்பங்களைச் சேர்ந்த 13,054 பேரும், பூநகரியில் 336 குடும்பங்களை சேர்ந்த 972 பேரும், பச்சிலைப்பள்ளியில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா

400 குடும்பங்களைச் சேர்ந்த 1,308 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4 நலன்புரி நிலையங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மருதோடை, வெடிவைத்தகல், ஊஞ்சல்கட்டி, புளியங்குளம் தெற்கு, நெடுங்கேணி தெற்கு, மாமடு, அனந்தர் புளியங்குளம், கற்குளம், நைனாமடு, புளியங்குளம் வடக்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குரிய 242 குடும்பங்களைச் சேர்ந்த 721 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 17 வீடுகளும் பகுதியளவு சேதமடைந்துள்ளது.

வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரதேச செயலக பிரிவின் நேரியகுளம் கிராம அலுவலர் பிரிவில் 156 குடும்பங்களைச் சேர்ந்த 584 பேர் பாதிப்படைந்ததுள்ளதுடன், 86 வீடுகளும் பகுதியளவு சேதமடைந்துள்ளது. வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவில் மருதமடுவ பகுதியில் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பாதிப்படைந்துள்ளதுடன், இரு வீடு சேதமடைந்துள்ளது.

105 வீடுகள் பகுதியளவு பாதிப்படைந்துள்ளன. மேலும் ஒரு நலன்புரி நிலையத்தில் இருந்து மக்கள் மீள தமது இடங்களுக்கு திரும்பியுள்ள நிலையில் வவுனியா வடக்கில் மருதோடை, இராமனூர், புளியங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 3 நலன்புரி நிலையமும், செட்டிகுளம் அடைக்கலமாதா வித்தியாலயத்தில் ஓரு நலன்புரி நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

நலன்புரி நிலையங்களில் 142 குடும்பங்களைச் சேர்ந்த 442 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்படுகிறது.

முல்லைத்தீவு

கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 9ஆயிரத்து 297 குடும்பங்களை சேர்ந்த 30 ஆயிரத்து 20 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

தொடர் மழை வெள்ளத்தினால் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு, துணுக்காய் வெலிஓயா பிரதேசங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 169 குடும்பங்களை சேர்ந்த 509 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 இடைத்தங்கல் முகாம்களில் 83 குடும்பங்களை சேர்ந்த 250 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 8 ஆயிரத்து 889 குடும்பங்களை சேர்ந்த 28 ஆயிரத்து 831 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒன்பது இடைத்தங்கல் முகாம்களில் 236 குடும்பங்களை சேர்ந்த 797 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 63 குடும்பங்களை சேர்ந்த 142 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1 இடைத்தங்கல் முகாமில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.

மாந்தை கிழக்கு பிரதேசத்தில் 158 குடும்பங்களை சேர்ந்த 515 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வெலிஓயா பிரதேசத்தில் 8 குடும்பங்களை சேர்ந்த 23 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் 15 இடைத்தங்கல் முகாம்களில் 323 குடும்பங்களை சேர்ந்த 1060 மக்கள் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கான உடனடி உதவிகள் வழங்கும் நடவடிக்கையில் அரச திணைக்களங்கள் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.