’100 நாள்களில் திருப்தி இல்லை’ – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ

காணாமல் போனவர்கள், இராணுவ பிரசன்னம், ஜெனீவா தீர்மானம், அரசியல் கைதிகள், பட்டதாரிகள் விவகாரம், 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு, உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, நேற்றையதினம் பதிலளித்தார்.

ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பு, கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மதியம் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போதே மேற்கண்டவாறு ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்களின் ஆணையையேற்றுப் பதவியில் இருக்கின்றபோதிலும் பலமான அரசாங்கம் ஒன்றில்லாத காரணத்தால் தன்னால் முழுமையாகப் பணியாற்ற முடியவில்லையெனவும், பொதுத் தேர்தலின் பின்னர் நிலையான, பலமான அரசாங்கம் ஒன்று அமைவதை நாட்டுமக்கள் உறுதிப்படுத்துவதனூடானத் தன் சேவையின் பூரணத்துவத்தை உணரச் செய்யுமாறும் ஜனாதிபதி கோட்டாபய, மேலும் தெரிவித்தார்.

“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நான் இருக்கின்றபோதிலும், அரசமைப்பின் 19ஆவது திருத்தம் சில முட்டுக்கட்டைகளைப் போடுகின்றது. மக்கள் எனக்கான ஆணையைத் தந்திருக்கிறார்கள். அதை முழுமைப்படுத்துவதற்கு நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நாம் நிரூபிக்கவேண்டும். அந்த அங்கிகாரத்தையும் மக்கள் தருவார்களேயானால் பல வரப்பிரசாதங்களை அவர்கள் அனுபவிப்பர்” என்றார் ஜனாதிபதி கோட்டா.

“என்னைப் பொறுத்தவரையில் ஒரு தடவை ஜனாதிபதியாக இருந்தாலே பல முழுமையான நலத்திட்டங்களை நாட்டு மக்களுக்காகச் செய்யமுடியும். எம் திட்டங்கள் தூரநோக்குடைய திட்டங்களாக இருக்க வேண்டும். அத்தகைய திட்டங்களைத்தான் நாம் முன்னெடுத்துவருகிறோம்” எனவும் ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்தார்.

ஜெனீவா தீர்மானம்

இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட பிரேரணையிலிருந்து தாம் விலகுவாத அறிவித்தமையால் எந்தவித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை எனவும், தமக்கு நாட்டு மக்கள் வழங்கிய அங்கிகாரத்தை ஒருபோதுத் துஷ்பிரயோகம் செய்யப் போவதில்லை எனவும் சர்வதேசத்துக்கு எடுத்துரைத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

தமிழர்களின் பிரச்சினை தொடர்பில், ‘இங்கு சகல இன மக்களும் இலங்கைப் பிரஜைகள் என்ற ரீதியில் சுதந்திரமாக வாழும் நிலைமையை உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக, தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை நிவர்த்திசெய்து, நிலையான வாழ்வை உறுதிப்படுத்துவதனூடாகவே அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும். அதைவிடுத்து, அரசியல் சுயலாபங்களுக்காகச் சிலர் செய்கின்ற சதிகளுக்கு நாங்கள் ஒருபோதும் அடிபணியமாட்டோம். சர்வதேச அங்கத்தவர்களைச் சந்தித்து இந்த நிலைபற்றிய விளக்கத்தை நாம் வழங்கியிருக்கிறோம். அவர்களும் அதைப் புரிந்துகொண்டுள்ளார்கள்’ என, ஜனாதிபதி கோட்டா தெரிவித்தார்.

“சிங்களம், தமிழ், முஸ்லிம் யாராகினும் இந்நாட்டின் பிரஜைகளாக இருக்கும்போது இந்நாட்டிலுள்ள சகல வரப்பிரசாதங்களையும் பயன்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக, அபிவிருத்திகளை அனைவரும் அனுபவிக்க வேண்டும். தெற்கிலுள்ளவர்களுக்கு அனைத்தும் கிடைக்கின்றதென. வடக்கிலுள்ளவர்களும், வடக்கிலுள்ளவர்களுக்கு அனைத்தும் கிடைக்கின்றதென தெற்கிலுள்ளவர்களும் நினைக்கின்றனர். தெற்கிலே முருங்கை இலை மாத்திரம் சமைத்துச் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். அதேபோல் வடக்கிலும் இருக்கிறார்கள். ஆகவே, பிரச்சினைகள் என்பன அனைவரிடத்திலும் இருக்கின்றன. அவற்றைத் தகர்த்து முன்னோக்கிப் பயணிக்க நாம் முனையவேண்டும்” எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கேட்டுக்கொண்டார்.

பட்டதாரிகள் பாதிக்கப்படார்

பட்டதாரிகளை பயிற்சியாளர்களாக இணைத்துக்கொள்வதை இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்திருக்கின்றமையை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளதாகவும், பயிற்சியளிப்பதொன்றும் தேர்தல்கால உறுதிமொழிகளாகதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

“பட்டதாரிகளுக்கான நியமனம் என்பதை நாங்கள் ஏற்கெனவே அறிவித்துவிட்டோம். அதன்பிரகாரமே தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சிகள் ஆரம்பித்தன. தனியார் துறைகளில் பணிபுரிந்தவர்கள்கூட அதனைவிட்டுவிட்டு இவ்வேலைத்திட்டத்தில் இணைந்துகொண்டனர். இப்போது அதை நிறுத்தச் சொல்வது ஏற்புடையதல்ல.

“கட்சி, பிரதேசம் பார்த்து இந்த நியமனங்கள் வழங்கப்படவில்லை. விண்ணப்பதாரிகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கே பயிற்சி வழங்கப்படவுள்ளது. ஆகையால் இப்பயிற்சிநெறிகள் ஒருபோதும் தேர்தல்கால அறிவித்தலாகாது. ஜனாதிபதித் தேர்தலின்போது நாம் வழங்கிய வாக்குறுதிகளையே தற்போது நிறைவேற்றி வருகிறோம். ஆகையால், தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு இவ்விடயங்களை விளக்கிக் கடிதம் அனுப்பப்படும்” என, ஜனாதிபதி தெரிவித்தார்.

காணாமல் போனோர்

‘காணாமல் போனவர்கள் பிரச்சினை இரு தரப்பிலும் இருக்கிறது. நான் ஏற்கெனவே பலதடவை இதனைச் சொல்லியிருக்கிறேன். யுத்தகாலத்தில் மரணித்தவர்களின் உடலங்களை மீட்க முடியவில்லை. அத்தகையவர்கள் காணாமல் போனவர்களாகவே கருதப்படுகின்றனர். ஒரு சிலரின் தூண்டுதலால் இப்பிரச்சினையைப் பூதாகரமாக்கப் பார்க்கின்றனர்” என ஜனாதிபதி தெரிவித்தபோது, படையினரிடம் ஒப்படைத்தவர்கள் பற்றியே மக்கள் போராடுகின்றனர் என ஊடகவியலாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்குப் பதிலளிக்கையில், “படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட சிறுவர்கள், காணாமல் போன சிறுவர்கள் தொடர்பில் யுனிசெப், ஆதாரங்களைத் திரட்டி வெளியிட்ட அறிக்கையில், சுமார் 2,600 பேர் சாட்சியம் வழங்கியிருக்கிறார்கள். இவர்களில் ஆறு பேர் மாத்திரமே இராணுவத்தில் தம் பிள்ளைகளை ஒப்படைத்ததாகக் கூறியிருக்கிறார்கள். ஏனையவர்கள் அனைவரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடம் தங்கள் பிள்ளைகளை ஒப்படைத்ததாகவும், யுத்தம் முடிந்த பின்னர் தம் பிள்ளைகளைக் காணவில்லை எனவும் சொல்லியிருக்கிறார்கள்.

“எனவே இதை இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும். காணாமல் போனவர்கள் தொடர்பில் சில கருத்துகளை மாத்திரம் வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் குற்றஞ்சாட்ட முடியாது” என்றார் ஜனாதிபதி.

அப்படியானால், காணாமல் போனவர்கள் பிரச்சினைக்கு ஜனாதிபதியாகிய உங்களின் பொறுப்புக்கூறலென்ன? என ஊடகவியலாளரால் கேட்கப்பட்டபோது, “காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் யுத்த களத்தில் இறந்துவிட்டார்கள் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கான மரண சான்றிதழை நாம் வழங்கத் தயாராக இருக்கின்றோம். தம் சொந்தங்களை இழந்தவர்கள், அச்சோகத்திலிருந்து மீண்டு வரவேண்டும். எதிர்காலத்தை நோக்கிப் பயணித்தால் எதிர்வரும் நூறு நாள்களுக்குள் இந்தப் பிரச்சினைக்கு என்னால் தீர்வு வழங்க முடியும்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

“அப்படியானால் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுக்கு மரணச் சான்றிதழ் கொடுக்க அரசாங்கம் தயாரா?’ எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘எக்னெலிகொட தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. அவர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டால் மரண சான்றிதழ் வழங்குவோம். இதேபோல், காணாமல் போனவர்களில் ஆதாரமுள்ள சில விடயங்களை விசாரணைக்குட்படுத்தவும் நாம் தயாராக இருக்கின்றோம்” என, ஜனாதிபதி பதிலளித்தார்.

இராணுவப் பிரசன்னம்

சிவில் நடவடிக்கைகளில் படையினரை உள்வாங்கியிருப்பது தொடர்பில் ஜனாதிபதி பதிலளிக்கையில், “எங்களுடைய ஆட்சிக்காலத்திலும் பார்க்க, கடந்த ஆட்சிக்காலத்தில் அதிகளவான இராணுவத்தைப் பயன்படுத்தியிருந்தார்கள். ஆனால், அதைப்பற்றித் தற்போது எவரும் பேசுகிறார்களில்லை. அலரி மாளிகையில் எத்தனை இராணுவ வீரர்கள் கடமையாற்றினார்கள், பல்கலைக்கழக நிர்வாகத்தில்கூட இராணுவத்தை ஈடுபடுத்தினார்கள். ஒப்பீட்டளவில் கடந்த ஆட்சிக்காலத்தில்தான் அதிகளவான படையினரை சிவில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியிருந்தனர்.

“இராணுவத்தில் கேணல் நிலையை அடைகின்ற வீரர்களுக்கு வழங்கப்படுகின்ற விசேட அறிவுசார் பயிற்சிகள் மிகப் பயனுள்ளவை. ஒரு கட்டுக்கோப்புக்குள் தம் கடமையைச் செய்யக்கூடியவர்களே படையினர். ஆகையால் அவர்களைச் சிவில் சேவைகளில் இணைத்துக்கொள்வதால் எத்தகைய பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய பல நாடுகளிலும் இத்தகைய நடைமுறை இருக்கிறது. இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார் அவர்கள் சிவிலியர்கள்தான்” என்றார்.

“ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் இராணுவத் தளபதியை பாதுகாப்புச் செயலாளராக நியமிப்போம் என பகிரங்கமாகத் தெரிவித்தவர்கள்தான் தற்போது இராணுவப் பிரசன்னம்பற்றிப் பிதற்குகின்றனர்” எனவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சாடினார்.

அரசியல் கைதிகள்

“அரசியல் கைதிகள் விவகாரத்தை, தேர்தல் பிரசாரங்களுக்காகப் பயன்படுத்துவீர்களா?” எனக் கேட்கப்பட்டபோது, ‘இந்நாட்டில் அரசியல் கைதிகள் இருப்பதாக நான் கருதவில்லை” என ஒன்றை வசனத்தில் பதிலளித்தார் ஜனாதிபதி.

ஆயிரம் ரூபாய் சம்பளம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதாகவும், அவர்களின் ஒத்துழைப்புடன் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்தார்.

சுயாதீனம் பேணப்படவேண்டும்

சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனம் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, சில ஆணைக்குழுக்கள் அரசியல் சுயலாபங்களுக்காக உருவாக்கப்பட்டவையாகவே தோன்றுவதாகவும் சாடினார்.

“சுயாதீன ஆணைக்குழுக்களை அரசாங்கம்தான் உருவாக்குகிறது. தனிப்பட்ட பிரசாரங்களைச் செய்வதை சுயாதீனம் என்று கூறமுடியாது. பொலிஸ் ஆணைக்குழு எதற்காக உருவாக்கப்பட்டது. 38 ஆண்டுகால சேவை அனுபவமுள்ள பொலிஸ்மா அதிபரின்மீது நம்பிக்கையில்லாமலா பொலிஸ் ஆணைக்குழுவை உருவாக்கினார்கள்? இதனூடாக, பொலிஸ்மா அதிபர் சுயாதீனமற்றவர் என்று கூறமுடியுமா? ஆகையால், அடிப்படையை மாற்ற வேண்டும்” என, ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அரசியல் எதிர்காலம்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுரவுக்கான முழு ஆதரவையும் தான் வழங்கவுள்ளதாகவும், தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பார்த்து வாக்களிக்கும் நடைமுறையை மக்கள் சாத்தியப்படுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, “வடக்கு, கிழக்குவாழ் மக்கள் என்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பார்க்காமல், வேறு பல புற அழுத்தங்களினாலேயே எனக்கு வாக்களிக்கவில்லை. எதிர்காலத்தில், முகங்களுக்கு அப்பால் சென்று, தேர்தல் விஞ்ஞானத்திலுள்ள தூரநோக்குத் திட்டங்களைப் பார்த்து வாக்களிக்கும் உறுதிப்பாட்டை மக்கள் எடுக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.