‘3 மாதத்துக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்படும்’

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை, எதிர்வரும் ஜனவரி மாதம் 6ஆம் திகதி முதல் 3 மாதத்துக்கு, புனரமைப்பு பணிகளுக்காக மூடப்படும் என்று, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார். இந்தப் பிரதான ஓடுபாதையானது, எதிர்வரும் 3 மாதங்களுக்கு, காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 வரையான 8 மணிநேரம் வரையான காலப்பகுதிக்கு மூடப்பட்டிருக்கும் என்று அவர் அறிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை, கடந்த 1986ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. இது 3,350 மீற்றர் நீளத்தையும் 45 மீற்றர் பரப்பையும் கொண்டது. இது 20 ஆண்டுகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் அறிக்கையின் பிரகாரம், இந்த ஓடுபாதைக்கான புனரமைப்பு காலம், 1996ஆம் ஆண்டுடன் நிறைவடைகின்றது. இது தொடர்பில் குறித்த அமைப்பினால் அடிக்கொரு தடவை ஞாபகப்படுத்தப்பட்டு வந்தது. இந்தப் பிரதான ஓடுபாதை, 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘1996ஆம் ஆண்டு தொடக்கம், ஆட்சியில் இருந்த கடந்த அரசாங்கங்கள், இந்தப் பிரதான ஓடுபாதையை புனரமைப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 28 எயார்லைன்ஸ்களைச் சேர்ந்த சுமார் 177 விமானங்கள், அன்றாடம் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது. நாளாந்தம் 25,000 பணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துவதுடன். 300 டொன் பொருட்கள் பரிமாறப்படுகின்றன. இதனால், ஓடுபாதையில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதோடு விமானங்களுக்கு இது பாதிப்பையும் ஏற்படுத்தும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘சீனா நிறுவனமொன்று, 40 மில்லியன் டொலர் செலவில் இந்த புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளது. எனவே, ஒரு நாளைக்கு 8 மணித்தியாளங்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்படும். சில எயார்லைன்ஸ்கள் செயற்படுதற்கு மாத்திரம், சில ஓடுபாதைகள் 4 மணித்தியாளங்களுக்கு திறந்து வைக்கப்படும். இதற்கு பதிலாக, மத்தல ராஜபக்ஷ விமான நிலையத்தை பயன்படுத்துவது, சிறந்ததாக அமையாது. ஏனெனில், அங்கு சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை’ என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.