இன்றைய தினம் வடக்கு மாகாணத்தின் அதி கூடிய வெப்பநிலை மாங்குளம், மூன்று முறிப்பு, பாலைப்பாணி, கனகராயன்குளம், புளியங்குளம் மற்றும் ஓமந்தைக்கு இடையில் பதிவாகியுள்ளது. நண்பகல் 1.00 மணியளவில் 37 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. ஆனால் இப்பகுதிகளில் உணரக்கூடிய வெப்பநிலை சராசரியாக 42 பாகை செல்சியஸ் ஆகக் காணப்பட்டது.
ஆனால் யாழ்ப்பாண நகரில் உண்மையான வெப்பநிலை 33 பாகை செல்சியஸ் ஆகப் பதிவாகியுள்ளது. ஆனால் உணரக்கூடிய வெப்பநிலை 45 பாகை செல்சியஸ் ஆகக் காணப்பட்டது.
தற்போது(இரவு 11.00 மணி) வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் வளி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகக் காணப்படுகின்றது. ஆனால் யாழ்ப்பாண நகரில் 29.5 பாகை செல்சியஸ் ஆகக் காணப்படுகின்றது. ஆனால் யாழ்ப்பாண நகரில் தற்போது கூட உணரக்கூடிய வெப்பநிலை 36 பாகை செல்சியஸ் ஆகக் காணப்படுகின்றது.
உணரக்கூடிய வெப்பநிலை என்பது உண்மையான வெப்பநிலையை (அளவீடு செய்யக்கூடியது) விட மனித உடலினால் உணரக்கூடிய வெப்பநிலை யைக் குறிக்கும்.
ஒரு பிரதேசத்தின் உணரக்கூடிய வெப்பநிலையை தீர்மானிப்பதில் பல காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. அதில்
- வளி வெப்பநிலை
- காற்றின் உறுதியும் வேகமும்
- சாரீரப்பதன்
- பெற்ற வெயிலின் அளவு
- தரை மேற்பரப்பு தன்மை ( தரை மேற்பரப்பை பொறுத்து சூரிய கதிர்வீச்சு தெறித்தல் ( Albedo) வேறுபடும்.
- சூரிய கதிர்வீச்சு உறிஞ்சு தன்மை ( கதிர்வீச்சு உறிஞ்சு தன்மை பொருளுக்கு பொருள், இடத்துக்கிடம் வேறுபடும்.)
- தாவரப் போர்வை
- நீர்ப்பரப்பு
- அணிந்திருக்கும் ஆடையின் தன்மை
- வாகனப் புகை
- மனித உடலியல் தன்மை.
இக் காரணங்களினால் உணரக்கூடிய வெப்பநிலையின் அளவு தீர்மானிக்கப்படும்.
இன்றைய தினம் வடக்கு மாகாணத்தில் அதி கூடிய வெப்பநிலை பதிவான இடங்களில் உணரக்கூடிய வெப்பநிலை குறைவாக இருக்க, யாழ் நகரின் மையப்பகுதியில் அளவீடு செய்யப்பட்ட உண்மையான வெப்பநிலையின் அளவு குறைவாக இருக்க, உணரக்கூடிய வெப்பநிலையின் அளவு விகிதாசார அடிப்படையில் மிக மிக உயர்வாக உள்ளது. அதாவது 37 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவான இடங்களில் உணரக்கூடிய வெப்பநிலை 42 பாகை செல்சியஸ் ஆகக் காணப்பட, 33 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவான யாழ்ப்பாண நகரில் உணரக்கூடிய வெப்பநிலை 45 பாகை செல்சியஸ் ஆக உள்ளது.
இது நாங்கள் யாழ் நகரை எவ்வளவுக்கு மோசமாகக் கட்டமைத்துள்ளோம் என்பதற்கு மிகப்பெரிய ஆதாரம்.
நீர் நிலைகளை நிரப்பி கட்டடங்கள் அமைத்து, தாவரப்போர்வைகளைக் குறைத்து, வெப்பச் சிறைப்பிடித்தலுக்கு உள்ளாகக்கூடிய கட்டிடவமைப்பு ( கட்டிடங்களுக்கிடையிலான இடைவெளி குறைவாக உள்ளமையே இது), சீமெந்து தரைகளின் அதிகரிப்பு, சூரியனின் குற்றலைக் கதிர்வீச்சினை உறிஞ்சி நெட்டலைக்கதிர்வீச்சாக வெளிவிடக்கூடிய கட்டுமான அமைப்பும் , கட்டுமான பொருட்களின் பயன்பாடும், அதிகரித்த வாகனப் புகை வெளியேற்றமும், வளிமண்டலத்தில் சேர்ந்துள்ள தூசு துணிக்கைகளும், யாழ் நகரின் குறிப்பாக யாழ்ப்பாண நகரின் மத்திய வியாபார வலயத்தை சூழ்ந்துள்ள பகுதிகளில் உணரக்கூடிய வெப்பநிலையின் அளவை அதிகரித்துள்ளன.
இதனை இன்னொரு வகையில் சொல்வதானால் யாழ்ப்பாண நகரின் பேரூந்து நிலையத்தை மையப்படுத்தியதாக நகர வெப்பத்தீவொன்று ( Urban Heat Island) வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்நிலை யாழ்ப்பாண நகருக்கு ஆரோக்கியமானதல்ல.
ஏற்கனவே வளித் தரக் குறிகாட்டியிலும் (இது வளி மாசுபாட்டினைக் குறிக்கும் நவீன வார்த்தை) மிக மிக மோசமான இடத்தைக் கொண்டுள்ளோம்.
காலநிலை மாற்றம் காரணமாக எதிர்காலத்தில் எங்கள் பிரதேசங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆகவே உணரக்கூடிய வெப்பநிலையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக உரிய தரப்புக்கள் வினத்திறனுடன் செயற்பட வேண்டும். நாம் உணரக்கூடிய வெப்பநிலையின் அளவை எமது செயற்பாடுகள் மூலம் குறைக்கலாம். நாம் எல்லோரும் இணைந்து செயற்பட்டால் எங்கள் நகரத்தை பசுமை நகரமாக மாற்றலாம்.
-நாகமுத்து பிரதீபராஜா-