ஐவரி கோஸ்டின் கனிம வளங்களை எடுப்பதற்காக கூலிகளாக கொண்டு செல்லப்பட்ட Upper Valto நாட்டின் பெயரை Burkino Faso “நேர்மையான மனிதர்களின் தேசம்” என்று பெயர் மாற்றம் செய்த தோமஸ் சங்காரா “ஆபிரிக்காவின் சேகுவேரா” எனப் படுகிறார்.
வெறும் மூன்றே ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்த தோமஸ் சங்காரா அந்நாட்டு மக்களுக்கு செய்தவை ஏராளம்.
மூன்று ஆண்டுகளில் சதிப் போராட்டத்தினால் கொல்லப்பட்ட சங்காராவின் நினைவு நாள் இன்றாகும். (1987.10.15)
ஏகாதிபத்திய நாடுகள் , கடன் வழங்குவதன் மூலமாகவே தமது மறைமுக காலனியாதிக்க கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு சங்காராவின் வெளியுறவு, பொருளாதாரக் கொள்கைகள் தான் வழிகாட்டியாக இருக்க முடியும்.
மூன்று ஆண்டுகளில் ஒரு தலைவனால் என்ன செய்த விட முடியும் என்பதற்கு புர்கினோ பாசாவில் சங்காராவின் மூன்று ஆண்டுகளே உதாரணமாகும்.
உள்நாட்டு வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், உணவு உற்பத்தியில் தன்னிறைவு, கல்வி, மருத்துவம், சாலைகளை அமைத்தல் என அம்மக்களுக்கு சங்காரா புதிய வாழ்வை திறந்து விட்டார்.
மிகவும் பின்தங்கிய மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினோ பாசோ வில் பெண்கள் நிலையை மேம்படுத்தியதில் சங்காரா ஓர் நிகரற்ற தலைவராக வரலாற்றில் நினைவு கூறப்படுகிறார்.
வாரத்தில் ஒரு நாள் ஆண்கள் சமைக்க வேண்டும், வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என கட்டளை பிறப்பித்தவர் சங்காரா.
பெண்களின் விடுதலையை ஏதோ இரக்கப்பட்டு அங்கிகரிக்கும் முற்போக்காளர்கள் சங்காராவிடம் கற்க வேண்டும்.
“புரட்சியும் பெண்களின் விடுதலையும் ஒன்றாகவே செல்ல வேண்டும்; இதுவே புரட்சியின் வெற்றிக்கான அடிப்படை நிபந்தனை” என்றார் சங்காரா.
சோசலிச புரட்சி ஏற்பட்டவுடன் பெண் விடுதலை கிடைத்து விடும் என்று உருட்டிக் கொண்டிருக்கும் ஆண் கம்யூனிஸ்ட்டுகளுக்கு சங்காரா ஒரு பாடத்தை விட்டுச் சென்றிருக்கிறார்.
சமத்துவம் பற்றி பேசுவதில் அல்ல; அதை வாழ்வதில் தான் புரட்சி உள்ளது என்கிறார் சங்காரா. இன்றும் மகளிர் தினத்தில் பெண்கள் பிரச்சனைகளை பெண்களே பேசுகிறோம் என்பதைக் கூட போராடியே பெற வேண்டியிருப்பதும் அவ்வாறு கோரிக்கை வைப்பதே முதலாளித்துவ, லிபரல் கோரிக்கை என்று கம்யூனிஸ்ட் கட்சி ஆண்களின் வாதத்தை மறுத்து சண்டை பிடிக்க வேண்டியிருப்பதும் ஒரு துரதிஷ்டமாக இருக்கிறது.
அவர்கள் சங்கராவிடம் கற்கட்டும்.
தனக்கு முன்பிருந்த ஊழல் அடிமைகள வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த தேவையில்லை என சங்காரா முடிவெடுத்தால் காலனியாதிக்க நாடுகள் அவரை விட்டு வைக்குமா?
1987 இல் பிரான்ஸ் செய்த சதி முயற்சியில் சங்காரா கொல்லப் படுகிறார்.
ஆனால் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு சங்காரா போன்ற ஏகாதிபத்திய எதிர்ப்பாளரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.
பெண் விடுதலை சம்மந்தமாக செயலில் கடைபிடிக்க வேண்டியவற்றை, கம்யூனிஸ்ட் கட்சிகளும் சங்காராவிடம் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது.
“ஆண்களின் விடுதலைக்கான பாதை பெண்களின் விடுதலையில்தான் தொடங்குகிறது” என்பார் சங்காரா.
ஏகாதிபத்தியத்தின் எல்லை தாண்டிய மூலதன/ கனிம வள/ உழைப்புச் சுரண்டல் இருக்கும் வரை சங்காராவின் வீரம் செறிந்த போராட்டமும் வாழ்வும் மரணமும் நினைவு கூறப் படும்.
அவரின் நினைவுகள் உலகெங்கிலுமுள்ள போராடும் மக்களுக்கு ஒக்சிஜனை வழங்கிக் கொண்டிருக்கும்.
(Mohana Dharshiny)