“மீனவர்களின் துயரம் தீரவில்லை” ; வேந்தன் ஆதங்கம்

ஆரம்பகாலம் முதலே மீனவர்கள் பல்வேறு கவனயீர்ப்பு  போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். பல தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்ட போதிலும், மீனவர்களின் பிரச்சினைகள் குறைந்தபாடில்லை. மாறாக, அவை பல மடங்கு அதிகரித்துச் செல்வது வேதனைக்குரியது என அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கியமாகச் சட்டவிரோத மீன்பிடி முறைகள் மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய எல்லைத் தாண்டல் குறித்தும் அவர் தனது நிலைப்பாட்டை முன்வைத்தார். இது வெறும் மீனவர் பிரச்சினை மட்டுமல்ல; இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திரப் பிரச்சினையாகும்.

“இரு நாடுகளும் உயர்மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தி, சட்டத்தை முறையாக அமுல்படுத்துவதன் மூலம் மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்,” என அவர் வலியுறுத்தினார்.

கடந்த காலத்துடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், “2009-ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு – கிழக்கில் ஒரு நிழல் அரசாங்கம் இருந்தபோது இவ்வாறான பிரச்சினைகள் மிகக் குறைவாகவே இருந்தன. ஆனால், இன்று சட்டத்தின் மூலம் மீனவர்களின் தினசரிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாத ஒரு துரதிர்ஷ்டவசமான சூழலே நிலவுகிறது,” என்றார்.

குறிப்பாக, இந்திய மீனவர்களையும் ஈழத் தமிழ் மீனவர்களையும் ஒருவருக்கொருவர் மோதவிட்டு, அந்த மோதல்களை வைத்து அரசியல் செய்யும் போக்கு இன்று காணப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

“கடல் தொழிலாளர்களின் இந்த அவல நிலை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும். அரசாங்கம் இதில் நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், கடல் வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கவும் அரசாங்கம் துரித கதியில் செயற்பட வேண்டும்,” என்பதே வேந்தனின் பிரதான கோரிக்கையாக அமைந்துள்ளது.