இந்தியா : தமிழ் நாட்டில் நாம் தமிழர் கட்சி வகுப்புவாதத்தை முன்னெடுக்கின்றது

இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் சபையில் (UNHRC) அமெரிக்கா ஒரு தீர்மானத்தை கடந்த மார்ச் மாதம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு இந்திய அரசாங்கத்தின்மீது அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, நாம் தமிழர் கட்சியின் தலைவர் செபஸ்தியான் சீமான் ஜெனீவாவிற்குப் சென்றிருந்தார்.

அமெரிக்காவின் இத்தீர்மானம், இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது சம்பந்தமாக எந்தவித தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. மாறாக, பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட இனவாத யுத்தத்திற்கு வாஷிங்டன் தனது ஆதரவை கொடுத்திருந்ததோடு, அது போர்க்குற்றங்களை மேற்கொண்டபோது கண்களை மூடிக்கொண்டும் இருந்தது.

2009 மே மாதம் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு அமெரிக்கா மனித உரிமைகள் பற்றிய பிரச்சினைகளை எழுப்பி அழுத்தம் கொடுப்பதற்கான காரணம், இலங்கை ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ, தானாகவே சீனாவுடனான உறவை தூரத் தள்ளி வைப்பதற்காகும். ஆதலால், அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரிப்பது என்பது, நாம் தமிழர் கட்சி மற்றும் இதர தமிழ் குழுக்கள் என்பன அமெரிக்காவின் மூலோபாய நலன்களை பாதுகாக்கின்றன என்பதாகும்.

வகுப்புவாத அரசியல் தோல்வியின் விளைவே விடுதலைப் புலிகள் அமைப்பின் தோல்வி என்ற உண்மையை நாம் தமிழர் கட்சி மற்றும் இதர தமிழ்க் கட்சிகள் மூடி மறைத்துள்ளன. இலங்கை இராணுவத்தினால் ஒரு மூலைக்குள் முடக்கப்பட்ட முதலாளித்துவ விடுதலைப் புலிகள், இலங்கை, இந்தியா அல்லது உலகின் தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுவதற்கு இயல்பாகவே இலாயக்கற்று இருந்தனர். பதிலாக, கொழும்பு அரசாங்கம் மேற்கொண்ட யுத்தத்திற்கு ஆதரவு கொடுத்த அமெரிக்கா, இந்தியா மற்றும் இதர அரசுகளுக்கு முழுப் பயனற்ற அழைப்புக்களையே அவர்கள் விடுத்தனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பினுடைய இராணுவத் தோல்வியின் முதலாம் ஆண்டு தினமான 2010 மே 18ம் திகதி அன்றே நாம் தமிழர் கட்சி நிறுவப்பட்டது. ஒரு திரைப்பட இயக்குனரும், நடிகருமான சீமான், நாம் தமிழர் கட்சி என்ற பெயரைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான அனைத்து இந்திய திராவிட முன்னேற்றக் கழகம் (AIDMK) ஆகியவற்றை விட தன் கட்சி அதிக வகுப்புவாதம் உடையது என்பதை வலியுறுத்த விரும்புகிறார். ஏற்கனவே, விடுதலைப் புலிகளின் ஒரு ஆதரவாளர்தான் சீமான்.

புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் விடுதலைப் புலிகளின் எச்ச சொச்ச குழுக்களான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் உலகத் தமிழர் பேரவை போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகளை ஜெனீவாவில் சீமான் சந்தித்தார். கொழும்பு அரசாங்கத்துடன் ஒரு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளுதல் அல்லது தனிநாடு அமைப்பதற்கான ஆதரவை நாடுதல் என்ற நோக்கு நிலையுடன் இந்த அமைப்புக்கள், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளிடம் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

மார்ச் 22 ம் திகதி அன்று ஜெனீவாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், நாம் தமிழர் கட்சி, இலட்சக்கணக்கான என் இன மக்களின் பிணங்களுக்கு இடையே பிரசவிக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் இருக்கும் இதர கட்சித் தலைவர்கள் “உண்மையான தமிழர்கள்” அல்ல, அவர்கள் திராவிடர்கள் என்று சீமான் குற்றம்சாட்டினார் — இந்த திராவிடர்கள் என்ற சொற்றொடர் பொதுவாக தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்னாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

சீமான், தன்னை “உண்மையான தமிழன்” என்றும், தமிழர்களை இரட்சிக்க வந்தவர் போலவும் சித்திரித்துக் காட்டுகின்றார். எவனும் என்னவனும் இல்லை, எனது இனம் சார்ந்த தலைவனும் இல்லை [the DMK or AIADMK). மொழி அடிமையாக, இந்திய அடிமையாக, திராவிட அடிமையாக, சாதியடிமையாக, மத அடிமையாக, எல்லா நிலைமையிலும் அடிமையாக இருக்கின்ற தமிழ் தேசிய இனம் விடுதலை பெற இருக்கின்ற கடைசி வாய்ப்பு அரசியல் விடுதலையாகும்

தொழிலாள வர்க்கம் சம்பந்தமாக ஈவிரக்கமற்ற கொள்கையைக் கொண்டிருக்கும் தி.மு.க மற்றும் அ.தி.மு.கவுக்கும், சீமானுக்கும் இடையே அடிப்படை வேறுபாடுகள் எதுவும் கிடையாது. தமிழ் நாட்டின் ஆளும் தட்டின் மிகவும் ஆவேசமான பிரதிநிதியாக நாம் தமிழர் கட்சியை அவர் முன் தள்ளுகின்றார்.

1958ல் “நாம் தமிழர்கள் கட்சி” என்பதை நிறுவிய எஸ்.பி. ஆதித்தனாருடைய பிற்போக்குத்தன அரசியல் திட்டத்தை அடிப்படையாக கொண்டுதான் தன்னுடைய கட்சிக்கு சீமான் நாம் தமிழர் கட்சி எனப் பெயரிட்டார். அது தனித் தமிழ் நாட்டிற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இந்தியாவில், இந்தி மொழி கட்டாயமாக உத்தியோகபூர்வ மொழியாகச் சுமத்தப்படுவதற்கு எதிரான எதிர்ப்புக்களை ஆதித்தனார் சுரண்டிக்கொண்டார். இதன் பின்பு, காங்கிரஸ் அரசாங்கம் ஆதித்தனாரின் இயக்கத்தின்மீது கடுமையான அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. ஆதித்தனார் தன்னுடைய பிரச்சாரத்தை 1960களின் தொடக்கத்தில் கைவிட்டு, 1967ல் தனது கட்சியை தி.மு.க. வில் கரைத்துவிட்டார்.

தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு பரந்தளவிலான எதிர்ப்புக்கள் தமிழ் நாட்டில் உள்ள நிலையில், தனது தேர்தல் நோக்கத்திற்காக நாம் தமிழர் கட்சி இதனை சுரண்டிக் கொள்ளப் பார்க்கிறது. இந்தக் கட்சி, 2016 ம் ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு உத்தேசித்துள்ளது. ஓர் உண்மையான தமிழன் ஆட்சிக்கு வந்தால்தான் “தமிழர்களுக்கான அரசியல் விடுதலைஎன்றும், அதுதான் “மத்திய அரசாங்கத்தை நம் கோரிக்கைகளுக்கு அடிபணிய வைக்க முடியும்” என்றும் சீமான் கூறுகிறார். மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப் பிரிவினை உணர்வுகளைக் குறிப்பால் உணர்த்திய அவர், அதுதமிழீழ தாயகமா? அல்லது தமிழ் நாடா“ என்று புது டெல்லி தீர்மானிக்கட்டும் என்று குறிப்பிட்டார்.

2011 தமிழ்நாடு சட்டசபை தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சியின் சந்தர்ப்பவாத மற்றும் வலதுசாரி பண்பு சாட்சியாக உள்ளது. இலங்கையில் நடந்த யுத்தத்தின்போது, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் மரணங்களுக்கு இந்திய அரசாங்கம் மற்றும் அதன் கூட்டாளிக் கட்சியான தி.மு.க. வை நாம் தமிழர் கட்சி குற்றம்சாட்டியது. அதே நேரத்தில், அ.தி.மு.க. வை மறைமுகமாக நாம் தமிழர் கட்சி ஆதரித்தது. அ.தி.மு.க. வின் தலைவி ஜெ. ஜெயலலிதா, இராஜபக்ஷ அரசாங்கத்தினுடைய பிற்போக்கு யுத்தத்தை பகிரங்கமாக ஆதரித்ததுடன் காலம் கடந்தபின்புதான் அதன் யுத்தக் குற்றங்களை விமர்சித்திருந்தார்.

அ.தி.மு.க. வைப் போலவே நாம் தமிழர் கட்சியும் தமிழ் நாட்டிலுள்ள தொழிலாளர்களை, அவர்களது வர்க்க சகோதரர்களான இந்திய மற்றும் இலங்கைத் தொழிலாளர்களுடன் பிரித்து வைக்கும் வகுப்புவாத பிரச்சாரத்தை கிளறுகிறது. உண்மையிலேயே இராஜபக்ஷ அரசாங்கம்தான் போர்க் குற்றங்களுக்கு முழுப் பொறுப்பாகும். ஆயினும், அரசாங்கம் மேற்கொண்ட இந்தக் குற்றங்களுக்கு, பொய்யான முறையில் அப்பாவி சிங்கள மக்கள் மீது சீமான் குற்றம்சாட்டுகிறார். மார்ச் 26ம் திகதி பிரான்சில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான் “இறந்தது முழுக்கத் தமிழன், கொன்றொழித்தது சிங்களவன்” என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் காவிரி நீர் பிரச்சனையில்,அ.தி.மு.க. உடன் இணைந்து நாம் தமிழர் கட்சியும் தமிழ் நாட்டு மக்களை கர்னாடாகா மாநிலத்திற்கு எதிராக இருத்த முயன்றது. தொடர்ச்சியாக வரும் தமிழ்நாட்டின் அரசாங்கங்கள் தண்ணீரை குறைவாக தருவதாக கர்னாடகாவை குற்றம்சாட்டுகின்றன.

கேரள அரசாங்கம்கூட தமிழ்நாட்டு விவசாயிகளுடன் ஆற்றுநீரை பகிர்வதை மட்டுப்படுத்திக் கொள்ளுவதற்காகக் ஒரு புதிய அணையை கட்ட இருக்கிறது. இந்தப் பூசலிலும் சீமான் கடந்த ஆண்டு ஆத்தரமூட்டும் வகையில் எச்சரிக்கையை விடுத்தார். கேரளா இத்திட்டத்தைத் தொடர்ந்தால், “அது தமிழ்நாட்டில் வாழும் மலையாளி மக்களை [கேரளாவில் இருந்து வந்தவர்களை] கொலை செய்வதற்கு வழிவகுக்கும்” என்றார்.

ஒப்பீட்டு ரீதியில் தற்போது சிறிய கட்சியாக இருந்தாலும், பல தாசாப்த காலமாக மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க கட்சிகளிலிருந்து பரந்தளவில் வெளியேறி வருபவர்களை நாம் தமிழர் கட்சி சுரண்டிக்கொள்ளப் பார்க்கின்றது. தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களை பிளவுபடுத்துவதற்காக, தமிழ் வகுப்புவாத அரசியலுக்கு சுவாசம் கொடுத்து உயிர்பிக்க சீமான் பார்க்கின்றார்.

தமிழ் நாடு உட்பட இந்தியாவில் வர்க்கப் போராட்டம் மிகவும் ஆழமடைந்து வருகின்றது. தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள், குறிப்பாக தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் நாடுகடந்த கூட்டுத்தாபனங்களான Foxconn, Hyuandai, BYD போன்ற சிறப்புப் பொருளாதாரப் பகுதிகளில் தொழிலாளர்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. பாடசாலைகளில் சீர்கேடான வசதி நிலைமைகளால் மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பான நிலைமைகள் உருவாகியுள்ளது. வாழ்க்கைத் தரத்தின் சீர்கேட்டினால், பரந்தளவில் கிராமப் புற வறியவர்களின் அதிருப்திகள் வளர்ச்சி கண்டு வருகின்றது.

நாம் தமிழர் கட்சியின் துண்டாடும் வகுப்புவாத அரசியலை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும். இனம், மதம், மொழி பாகுபாட்டிற்கு ஊற்றாக இருக்கும் முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்ட, இலங்கை, இந்தியா மற்றும் உலகத் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டமே மிகவும் அவசியமாக உள்ளது.

இதன் பொருள், தெற்காசிய சோசலிச குடியரசுகளின் பாகமாக, இந்தியா மற்றும் இலங்கையில் சோசலிசக் கொள்ளகைகளை அமுல்படுத்தும்பொருட்டு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். சோசலிச புரட்சியால் மட்டும்தான் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் கிராமப்புற வறியவர்களின் ஜனநாயகக் கடமைகள் தீர்க்கப்பட முடியும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி, இந்தியா உட்பட தெற்காசியாவில் இந்த முன்னோக்கை முன்வைத்து தமது பகுதிகளைக் கட்டியெழுப்ப போராடி வருகிறது.