இந்திய அமைதிப்படை புலிகளைத் தவறாக கணித்துவிட்டது

இலங்கை உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக 1987இல் அங்கு சென்ற இந்திய அமைதிப்படை, விடுதலைப்புலிகள் அமைப்பைத் தவறாக கணித்துவிட்டது என்று மனித உரிமை ஆர்வலர்கள் மூவர் தெரிவித்துள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போர் சூடுபிடித்தபோது நடைபெற்ற அனைத்து தரப்பினரின் அட்டூழியங்களையும் மனித உரிமை ஆர்வலர்களும் கல்வியாளர்களுமான 4 பேர் ஆவணப்படுத்திக் கொண்டிருந்தனர். இதில் ஒருவர் கொல்லப்பட்டதால் மற்றைய 3 பேர், நாட்டை விட்டு வெளியேறினர்.

அவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியிருந்த, தயா சோமசுந்தரம், ராஜன் ஹூலே மற்றும் கோபாலசிங்கம் ஸ்ரீதரன் ஆகிய மூவரும், போருக்குப் பிறகு நாடு திரும்பியுள்ளனர்.  யாழ்ப்பாணத்தில் இருக்கும் அந்த மூவரையும், இந்தியாவிலிருந்து வெளிவரும், ‘தி இந்து’ பத்திரிகையின் சார்பில், அதன் இலங்கைக்கான நிருபர், மீரா ஸ்ரீநிவாசன், அண்மையில் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

அந்த உரையாடல் தொடர்பில், ‘தி இந்து’ வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கி சுமார் 5 ஆண்டுகள் கழித்து, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கல்வியாளர்கள் பலர் இணைந்து 1988இல் மனித உரிமை அமைப்பை (யுனிவர்சிட்டி டீச்சர்ஸ் போர் ஹியூமன் ரைட்ஸ்) தொடங்கினர்.

குறிப்பாக பல்கலைக்கழகத்தில் உடற்கூறியல் பிரிவுத் தலைவராகப் பணியாற்றிய ரஜனி திரநகம, ராஜன் ஹூலே, கோபாலசிங்கம் ஸ்ரீதரன் மற்றும் தயா சோமசுந்தரம் ஆகிய 4 பேரும் இந்த அமைப்பின் முகமாக விளங்கினர்.

வெளிநாட்டில் தத்துவப் படிப்பை (டொக்ட்ரேட்) முடித்த இந்த இளம் கல்வியாளர்கள், எந்த நாட்டுப் பல்கலைக்கழகத்தில் வேண்டுமானாலும் பேராசிரியர்களாக பணியாற்றி இருக்கலாம். ஆனால், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவதற்காக 1980களில் மீண்டும் இலங்கைக்கே திரும்பி உள்ளனர்.

கொழும்பு நகரில் தமிழர்களுக்கு எதிராக 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த கலவரத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். சுமார் ஓர் இலட்சம் பேர் புலம் பெயர்ந்தனர். இதையடுத்து, தமிழர்களுக்கு ஆதரவாக பல கிளர்ச்சிக் குழுக்கள் வளரத் தொடங்கின. ஆயுதம் ஏந்திய இக்குழுக்கள் தங்கள் இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்ததுடன் பயிற்சியும் வழங்கத் தொடங்கின.

ஒருபுறம் இராணுவத்துக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் சண்டை நடந்த நிலையில், தலைமை தாங்குவது தொடர்பாக கிளர்ச்சிக் குழுக்களுக்குள்ளேயே மோதல் வெடித்தது. இதனால், தமிழ் சமுதாயமே மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மனித உரிமை மீறல் சம்பவங்களை ஆவணப்படுத்துவது என இந்த நான்கு பேரும் முடிவு செய்தனர்.

இராணுவமோ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட தமிழ் கிளர்ச்சி குழுக்களோ யாராக இருந்தாலும் அவர்கள் நிகழ்த்திய மனித உரிமை மீறல் சம்பவங்களை இவர்கள் ஆவணப்படுத்தினர். முன்னதாக, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து தகவல்களைத் திரட்டி, அதன் உண்மை தன்மையை உறுதிப்படுத்தினர்.

இவர்கள், யாருமே விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராகச் செயல்படவில்லை. மாறாக, காயமடைந்த புலிகளுக்கு, திரநகம மருத்துவ உதவி செய்தார். இலங்கை அரசு இரக்கமற்றதாக மாறியதால், இவர்களைப் போன்ற தமிழ் அறிவாளிகள் அவ்வாறு மாறவில்லை. தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை விடுதலைப்புலிகள் அமைப்பினர் ஓர் அரசு போலவே நடத்தினர்.

கணிதவியலாளரான கோபாலசிங்கம் ஸ்ரீதரன், மாணவ பருவத்திலேயே இடதுசாரி அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தவர். அவர் கிளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தபோதும் ஆயுதம் ஏந்திய போராட்டத்திலிருந்து விலகி நின்றார். அவர் கூறும்போது, “என்ன நடக்கும் என்று நினைத்தேனோ அது நடக்கவில்லை. இது பொதுமக்களின் போராட்டம் என அனைவரும் கூறினர். ஆனால், உண்மையில் துப்பாக்கி ஏந்தியவர்கள் மட்டுமே போராட்டத்தை முடிவு செய்தனர். அவர்கள் (விடுதலைப்புலிகள்) பொதுமக்கள் போராட்டத்தில் பங்கேற்பதை விரும்பவில்லை” என்றார்.

மனநல நிபுணரான தயா சோமசுந்தரம் கூறும்போது, “உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தை எட்டி இருந்தது. தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, பொதுமக்கள் இங்கும் அங்கும் ஓடினர். போதிய உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை. சாலைகளில் மக்கள் செத்து மடிந்தார்கள். பலர் காயமடைந்தனர். இந்த நிலையில்தான் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு தோன்றியது” என்றார்.

தவறான கணிப்பு

இலங்கை உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக 1987 இல் அங்கு சென்ற இந்திய அமைதிப்படை, விடுதலைப்புலிகள் அமைப்பைத் தவறாகக் கணித்துவிட்டதாக இவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து ஸ்ரீதரன் கூறும்போது, “எதற்காக இங்கு வந்தீர்கள் என இந்திய அமைதிப்படையினரிடம் கேட்டேன். அப்போது அவர்கள் அளித்த பதிலில் தமிழர்களின் நலன் என்பது கடைசியாகத்தான் இருந்தது. அரசியல் காரணங்களுக்காகவே அவர்கள் இங்கு வந்தார்கள் என்பதுதான் உண்மை. 24 மணி நேரத்தில் விடுதலைப்புலிகளை சரணடைய வைத்து விடலாம் என எண்ணினார்கள். அது நடக்கவில்லை. விடுதலைப்புலிகளைப் பற்றி அவர்கள் தவறாக கணித்துவிட்டார்கள். இந்திய இராணுவம் மட்டுமல்ல, ஏராளமான அறிவுஜீவிகளும் இந்த விவகாரத்தில் தோற்றுப் போனார்கள்” என்றார்.

பின்னடைவு
இதனிடையே, 1989 ஆம் ஆண்டு செப்டெம்பர் 21ஆம் திகதி மாலை பல்கலைக்கழகத்திலிருந்து வீடு திரும்பியபோது, திரநகம தனது வீட்டுக்கு வெளியே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து கொலை மிரட்டல் காரணமாக, மற்ற 3 பேரும் நாட்டை விட்டு வெளியேறினர். ஆனாலும் அவர்கள் அங்கிருந்தபடி, இலங்கைப் போர் பற்றி தொடர்ந்து பல அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர்.

இதனிடையே, திரநகம படுகொலைச் மனித உரிமை அமைப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. திரநகம படுகொலை குறித்து உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்றாலும், இதற்குக் காரணம் விடுதலைப்புலிகள்தான் என அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் சந்தேகித்தனர்.

இதுகுறித்து ஓக்ஸ்போர்டு பல்கலையில் கணிதம் படித்தவரான ஹூலே கூறும்போது, “திரநகம படுகொலைக்குப் பிறகு எங்கள் அமைப்புக்கு உதவியவர்களை விடுதலைப்புலிகள் அமைப்பினர் துன்புறுத்தினர். குறிப்பாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களான மனோகரன் மற்றும் செல்வி ஆகியோர் 1991 இல் கொல்லப்பட்டனர். எங்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு வைத்திருந்த மேலும் பலர் கொல்லப்பட்டனர். இதனால், விடுதலைப்புலிகளுக்கு எதிராக கருத்து சொன்னால் நமக்கும் இந்த நிலைதான் ஏற்படும் என்று தமிழர்கள் அச்சமடைந்தனர்” என்றார்.

இறுதியில் இந்த மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்பார்த்தது போலவே, 2009 இல் போர் முடிவுக்கு வந்தது. இதில் விடுதலைப்புலிகள் இராணுவத்தால் வீழ்த்தப்பட்டனர். இறுதிக்கட்டப் போரில் சுமார் ஓர் இலட்சம் தமிழர்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். அவர்களைப் பற்றிய தகவலை அரசிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

உறவினர்கள்.
இதுகுறித்து ஸ்ரீதரன் கூறும்போது, “1980கள் மற்றும் 1990களில் நாங்கள் வெளியிட்ட பகுப்பாய்வுகள் இறுதியில் நிஜமானதை கண்கூடாக பார்க்க முடிந்தது. ஆனால், பேரழிவையும் மனித உயிரிழப்பையும் எங்களால் தடுக்க முடியாமல் போய்விட்டது. எங்களைப் போன்ற ஒரு சில நபர்களால் இதற்கு மேல் என்ன செய்திருக்க முடியும். எனினும், குற்றம் செய்ததாகவே நான் உணர்கிறேன். அந்தக் காலத்தில் நாடு திரும்பி என்னால் முடிந்ததைச் செய்திருக்க வேண்டும். ஆனால் அது சாத்தியமாகவில்லை. இதில் நான் தோற்றுவிட்டேன்” என்றார்.
நிலைமை மாறவில்லை

கொலை மிரட்டல் காரணமாக சிறிது காலம் இந்தியாவில் வசித்த ஹூலேயும் அவுஸ்திரேலியாவில் வசித்த சோமசுந்தரமும் போர் முடிந்த பிறகு நாடு திரும்பி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகின்றனர். ஸ்ரீதரனும் நாடு திரும்பி உள்ளார். இலங்கையில் போர் முடிந்த பிறகும் நிலைமை மாறவில்லை என இவர்கள் தெரிவித்துள்ளனர்.