இந்திய பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளராக ஒரு விவசாய தொழிலாளியின் மகன்.

அக்கட்சியின் பொதுச் செயலராக இருந்த சுதாகர் ரெட்டியின் பதவிக்காலம் இன்னும் இரு ஆண்டுகள் இருந்தாலும் உடல்நிலையின் காரணமாக அந்தப் பொறுப்பிலிருந்து விலக விரும்புவதாகத் தெரிவித்தார். இதையடுத்து, ஜூலை 18-19ஆம் தேதியில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலகக் கூட்டத்தில் டி. ராஜாவை அடுத்த பொதுச் செயலராகத் தேர்வுசெய்வதென ஒரு மனதாக முடிவுசெய்யப்பட்டது. கட்சியின் தேசிய கவுன்சில் ஜூலை 20ல் இதற்கு ஒப்புதல் அளித்தது. சுதாகர் ரெட்டி 2012ஆம் ஆண்டிலிருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்துவந்தார்.

இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்ட டி. ராஜா, தனது இளமைப் பருவத்தில் இருந்தே பொதுவுடமை இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் சம்மேளனம், அக்கட்சியின் விவசாய அமைப்பு ஆகியவற்றில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பொறுப்புகளை வகித்தவர். இதற்குப் பிறகு 1994ல் அக்கட்சியின் தேசியச் செயலராக உயர்ந்தார் டி. ராஜா.

1949ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் உள்ள சீதாதூரி்ல் விவசாயக் கூலித் தொழிலாளர்களான துரைசாமி – நாயகம் தம்பதியின் மகனாகப் பிறந்தார் ராஜா. குடியாத்தத்தில் உள்ள ஜி.டி.எம். கல்லூரியில் தன் பட்டப் படிப்பை முடித்தார். இவருடைய கிராமத்தில் முதன் முதலில் பட்டப்படிப்பை முடித்தவர் இவர்தான்.

கட்சியின் தேசியச் செயலாளராவதற்கு முன்பாக, அக்கட்சியின் இளைஞர் அமைப்பான அகில இந்திய இளைஞர் சம்மேளனத்தின் பொதுச் செயலராக 1985-90 ஆண்டுகளில் பொறுப்பு வகித்த டி. ராஜா, கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக அக்கட்சியின் தேசிய செயற்குழுவில் இடம்பெற்றுள்ளார்.

பஞ்சாபில் பிரிவினை இயக்கங்கள் தீவிரமாக செயல்பட்ட காலத்தில், ‘Save India, Change India’ முழக்கத்தை முன்வைத்தார் டி. ராஜா. அதேபோல, 80களில் வேலையில்லா திண்டாட்டம் பெரும் பிரச்சனையாக இருந்த போது, JOB or Jail என்ற முழக்கத்தை முன்வைத்துப் போராடினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது மக்களவையில் இரண்டு உறுப்பினர்கள், மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர் என சுருங்கியிருக்கும் நிலையில், அக்கட்சி தனது செல்வாக்கு குறித்து பெரும் சவாலை எதிர்கொண்டிருக்கிறது. இந்த சவாலான சூழலில் அக்கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவியேற்றிருக்கிறார் ராஜா.

இந்தச் சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் டி. ராஜா?

இது குறித்து பிபிசியிடம் பேசிய அவர், “இதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ்சும் இந்தியாவை ஒற்றைத் தன்மையுள்ள நாடாக மாற்ற முயற்சிக்கின்றன. இதனை எதிர்கொள்ள வேண்டுமானால் இடதுசாரி கட்சிகளை ஒற்றுமைப்படுத்த வேண்டும். இடதுசாரி சக்திகளிடையே ஒற்றுமை வேண்டும். அதை நோக்கி நான் பணியாற்றுவேன்” என்று கூறினார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் வாக்கு சதவீதமும் வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஆகவே, அக்கட்சியின் தேசிய அங்கீகாரத்தை ஏன் ரத்துசெய்யக்கூடாது எனத் தேர்தல் ஆணையம் கேள்வியெழுப்பியிருக்கிறது.

“இந்தக் கேள்விக்கு ஆணையத்திடம் பதில் சொல்வோம். மிகப் பெரிய சரிவு ஏற்பட்டிருக்கிறது என்பதும் உண்மை. ஆனால், எங்களுக்கு இந்தியாவில் சித்தாந்த ரீதியான செல்வாக்கு இருக்கிறது. ஆனால், அவை ஏன் வாக்குகளாகவோ, இடங்களாகவோ மாறுவதில்லை என்பதை ஆய்வுசெய்வோம்” என்கிறார் டி. ராஜா.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதி கான்பூரில் துவங்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து தற்போதுவரை ஒரே சின்னத்தில் தேர்தலை சந்தித்துவரும் கட்சி இது மட்டும்தான். 2004ஆம் ஆண்டில் 10 இடங்களில் வெற்றிபெற்ற அக்கட்சி, 2014ல் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது. 2019ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழகத்தில் மட்டும் இரு இடங்களில் அக்கட்சி வெற்றிபெற்றுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைய வேண்டுமென்பது நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டுவருகிறது. “இப்போதைக்கு இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவோம். அதைத்தான் இந்தத் தருணத்தில் சொல்ல முடியும்” என்கிறார் டி. ராஜா.

2007ஆம் ஆண்டில் முதன் முறையாக மாநிலங்களவைக்குத் தேர்வுசெய்யப்பட்ட டி. ராஜா, 2013ல் மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்வானார். அவருடைய மாநிலங்களவை பதவிக்காலம் இம்மாதம் 24ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது.

Dalit Question, The Way Forward: Fight Against Unemployment ஆகிய இரு நூல்களை எழுதியிருக்கிறார்.

ராஜாவின் மனைவியின் பெயர் ஆனியம்மா. இவர் அக்கட்சியின் மகளிர் அமைப்பான இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக இருக்கிறார். இத்தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்.

இன்குலாப் ஜிந்தாபாத்…
இந்திய கம்யூனிஸ்ட் ஜிந்தாபாத்…

தோழமையுடன்…
இராமச்சந்திர மூர்த்தி.பா