எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…….! (Part 1)

(வருடம் ஒன்றிற்கு மேல் எழுத ஆரம்பித்த எனது பயண அனுபவங்கள் பல்வேறு வேலைப்பழுக்கள் காரணமாக தொடர முடியவில்லை… தற்போது அத்தியாயங்கள் பலவற்றை கடந்து இடை அத்தியாயம் ஒன்றில் தொடர்கின்றேன்)

மன்னார், தலைமன்னார் பயணங்கள்…

வவுனியாவில் இருந்து மன்னார் வீதியூடாக மன்னார் அல்லது மதவாச்சி செட்டிகுளம் ஊடான பயணம் என்பது வீதிகளின் தரங்களின் அடிப்படையில் எனது பயணம் இரண்டாவது தெரிவாக அமைந்தது. 1980 களின் நடுப்பகுதி வரையிலான எனது கடைசி அனுபங்களே இந்தப் பிரதேசங்கள் பற்றி நேரடி அனுபவங்களாக இருந்தன. வயலும் அதனைச்சார்ந்த தொழில்களும் வற்றாத ஆறும்(மல்வத்து ஓயா) கட்டுரைக் கரைக் குளம் என்று இன்றுவரை வற்றாத இரணைமடுவிற்கு அடுத்து பெரிய குளமும் அமைந்த பிரதேசங்களை ஊடறுத்த பயணமாக அமைந்தது. மகிந்த காலத்து நகரத்தை இணைக்கும் நெடுஞ்சாலை என்பது செட்டிகுளப்பாதையின் தரத்தை மன்னார் வீதியைவிட சிறந்ததாக உணர முடிந்தது. திரும்பி வரும் போது மன்னார் வீதியை பாவித்ததினால் இதனை உணர முடிந்தது. 80 களில் ஓலையிலான வேய்த கடைகளையும் மரக்குற்றிகளினால் ஆனா பிரதான வீதியில் அமைந்த சந்தி தேநீர் கடைகள் இன்று கொங்கிறீர் இனால் ஆன தகரக் கொட்டடைகைகளாக காட்சியளித்தன. ஆனால் மக்களின் வாழ்கைத் தரத்தில் வாழ்கைமுறையில் அதிக மாற்றத்தை யுத்தம் முடிந்து இந்த 8 வருடங்களிலும் காண முடியவில்லை சிறப்பாக குடிசனப் பரம்பல் மிகவும் ஐதாக இருந்தது.செட்டிகுளப்பாதையில் ஒரே புகையிரதத்தை மூன்று வேறுவேறு கடவைகளில் கடந்த அனுபவம் புகையிரத்தின் வேகத்தையும் எமது பயணப்பாதையின் தரத்தையும் அளவீடு செய்வதற்கு ஏதுவாக இருந்தது. பழம் பெரும் கிராமமாக இருந்த செட்டிகுளம் 1970 களில் இருந்த வளர்சிநிலையிலேயே இருக்க காணப்பட்டது.மடு மாதாவிடம் ‘அருள்’வேண்டிவருபவர்கள் அதிகமாக காணப்பட்டது. நீலம் வண்ணம் பூசப்பட்டு பல சீமெந்து கட்டங்களைக் கொண்ட நிலப்பரப்பில் தறிக்காமல் விடப்பட்ட காட்டு மரங்களின் நிழல் போதவில்லை பசுமையைத் தரவில்லை நிழலையும் தரவில்லை கூடவே அதிக வருமானத்தை தன்னகத்தேயும் ஸ்தாபன மயப்படுத்தப்பட்ட மதப் பிண்னணியையும் பல்லின மக்களையும் யாத்திரிகர்களாக கொண்ட ‘பெருமை’ மிக்க வணக்கத் தலம் தனித்து தவித்து நிற்பது போன்ற தோற்றத்தை கொண்டிருந்தது. இந்தப் பிரதேச மக்களின் வாழ்கைத் தரத்தை அடையாளப்படுத்தியிருந்தது.

2008 யுத்த காலத்தில் மாதாவின் சொருபத்தை காணவில்லை என்ற செய்திகளுள் ‘முக்கியமான’ ஒருவர் தன்னை தற்காத்துக்கொள்ள தன்னுடன் சொரூபத்தை எடுத்துச் சென்றார் என்ற செய்திகளின் உண்மை…? பொய்களை…? என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை.
தோராயமாக 6 தொடக்கம் 8 மாதம் வரையும் தாக்கு பிடித்த இலங்கை அரசு புலிகளின் யுத்த களம் முக்கியமாக சீலன் பிரிவின் இழப்புக்களுடன் வேகமாக முள்ளிவாய்கால் வரை நகர்ந்த யுத்த சூழலை எனக்கு நினைவு படுத்தியது. மாதா சொரூபமும் செட்டி குளமும். இதனைக் கடந்து எனது பயணம் மன்னார் நகரை(மன்னார் தீவு என்று பலரும் முன்னர் அழைத்தனர்) பண்ணைப் பாலத்தை கடந்து யாழ்பாணத்தின் தீவகத்திற்குள் புகும் அனுபவங்களை எனக்கு உள்வாங்க வைத்தது..
(இன்னும் வரும்…..)