சீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா

(ஜனகன் முத்துக்குமார்)

சீன – ஆபிரிக்க இராணுவ மற்றும் பாதுகாப்புச் சபை, கடந்த செவ்வாய்க்கிழமையன்று, பெய்ஜிங்கில் முடிவடைந்திருந்தது. இதில், 50 ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் சீனத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இது ஒரு புறமிருக்க, போர்த்துக்கலின் காச்கீஸ் நகரத்தில், ஐரோப்பிய ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஜோஸ் மானுவல் பரோசோ தலைமையில், போர்த்துக்கேய ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சோசா மற்றும் 20 ஆபிரிக்க அமைச்சர்கள் உட்பட 400க்கும் அதிகமான ஆபிரிக்க, ஐரோப்பியத் தலைவர்களுக்கான முதலாவது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆபிரிக்க -ஐரோப்பா உச்சிமாநாடு, இதே வாரத்தில் நடந்தேறியிருந்தது.

இவ்விரண்டு உச்சி மாநாடுகளும் 6,000 மைல்கள் தொலைவில் நடந்தன என்றாலும், இவ்விரண்டு உச்சிமாநாடுகளின் நோக்கமும் இலக்குகளும், ஒன்றாகவே அமைந்திருந்தன. அது குறிப்பாக, சீனா, ஐரோப்பா போன்ற பிராந்திய வல்லரசுகள், இந்தியா, துருக்கி, ரஷ்யா போன்ற நாடுகள், ஆபிரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் அதேவேளை, வளர்ந்துவரும் ஆப்பிரிக்க நாடுகளுடன் பொருளாதார உடன்படிக்கைகளை எவ்வாறாக செய்துகொள்ளமுடியும் என எண்ணும் அதேவேளை, உலக வல்லரசான ஐக்கிய அமெரிக்கா, “அமெரிக்காவுக்கு முன்னுரிமை” (America first) என்ற வெளியுறவுக் கொள்கை நிகழ்ச்சிநிரலைப் பின்தொடரும் இக்காலகட்டத்தில், ஐ.அமெரிக்காவை விஞ்சி, ஆபிரிக்காவுடனான பொருளாதார, பாதுகாப்புக் கட்டமைப்புக்களை எவ்வாறாக நிறுவலாம் என்னும் தன்மை அடிப்படையிலேயே, குறித்த உச்சிமாநாடுகள் கவனம் செலுத்தியிருந்தன.

ஆபிரிக்காவின் அபிவிருத்தியை பொறுத்தவரை, பெரியதொரு மாற்றத்தின் விளிம்பில் அது உள்ளமை அவதானிக்கத்தக்கது. ஆபிரிக்கக் கண்டமானது, 15-24 வயதுக்கு உட்பட்ட வயதினரில் 226 மில்லியன் இளைஞர்களைக் கொண்டுள்ளது. இது, உலக இளைஞர்களின் 19 சதவீதம் ஆகும். 2035க்குள், இளம் வயதினர்களின் எண்ணிக்கை, உலகின் பிற பகுதிகளை விட குறித்த கண்டத்தில் அதிகமாகும் அதே சமயத்தில், கிட்டத்தட்ட 45 சதவீத ஆபிரிக்கர்கள், நடுத்தர அல்லது மேல் வர்க்கத்தில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆபிரிக்காவுக்கு மட்டுமல்லாமல், தத்தமது பிராந்தியத்தில் பெரியதொரு பங்கைக் கோரும் உலகளாவிய சக்திகளுக்கும், இந்நிலை நேர்முகமானதும் எதிர்முகமானதுமான நிலைமைகளையே வழங்கும் என்பது உறுதியானது.

சீனாவைப் பொறுத்தவரை, கடந்த இரண்டு தசாப்தங்களாக அது ஆபிரிக்காவில், கடந்து போன ஏகாதிபத்திய சக்திகளின் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக கைகொடுக்கும் ஒரு நாடாகவே செயற்படுகின்றது. அதன் அடிப்படையில் அது ஆபிரிக்காவின் இயற்கை வளங்கள் தொடர்பில் முதலீடுகள் மேற்கொள்ளுதல், ஆபிரிக்க நாடுகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க உதவுவதன் மூலம், “வெற்றிகரமான” பொருளாதாரப் பங்காளியாக அமைகின்றது. சீனா இப்போது, ஆபிரிக்கக் கண்டத்தின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ளது. 10,000க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள், ஆபிரிக்கக் கண்டத்தில் இயங்குகின்றன. ஆபிரிக்கக் கண்டத்தில் முதலீடுகளை சீனா தொடர்ந்துகொண்டு வருவது, பில்லியன் டொலர் மதிப்பிலான பல கடன்களை வழங்குவது, ஆபிரிக்க நாடுகள் சீனாவின் பெரும் கடன்களால் சுமை ஏற்றப்பட்டிருப்பது, மற்றும் அதன் அடிப்படையில் குறித்த நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியலில் வெளிப்புற செல்வாக்குக்கு எளிதில் வழிவகுக்கும் என எண்ணுகின்றது. எவ்வாறிருப்பினும் சீனா, அதன் கடன்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதன் மூலமும், சர்வதேச தரங்களுக்கு இணங்குவதன் மூலமாகவும், நம்பகமானதொரு கடனளிப்பவராகவும், பரிஸ் ஒப்பந்தம், IMF நிறுவிய தராதரங்களுக்கு அமைய கடனையும் முதலீடுகளையும் சீனா மேற்கொள்ளுமாயின், தொடர்ச்சியாகவே குறித்த பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்தும் ஒரு நாடாக சீனா அமையும் என்பதில் மாற்றமில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்தவரை, ஐ.அமெரிக்கா விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புதல், அதன் மூலமாக ஆபிரிக்காவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெரியதொரு பாத்திரத்தை வகித்தல் என்பதன் அடிப்படையிலேயே, குறித்த பாதுகாப்பு, பொருளாதார முதலீடுகளை மேற்கொள்கின்றது. ஆயினும், இந்நிலை சீனாவின் பங்கிலிருந்து வேறுபட்டது, ஏனெனில், குறித்த ஐரோப்பிய நாடுகளின் ஆபிரிக்கச் செல்வாக்கானது, ஒருபோதும் கொலனித்துவ அடிப்படையில் பார்க்கப்பட முடியாத ஒன்றாகும். மாறாக இது, புதிதாக ஆபிரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான நம்பகத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் பிராந்தியங்களுக்கு இடையிலான மரியாதைகளை உருவாக்குவதற்கான ஒரு வழியின் அடிப்படையிலேயே மேற்கொள்ள கூடிய ஒன்றாகும். இதன் அடிப்படையிலேயே, ஐரோப்பிய ஒன்றியம் தனது தனிப்பட்ட நாடுகள் ஆபிரிக்க கண்டத்தில் வெவ்வேறு நிகழ்ச்சிநிரலில் இயங்குவதைத் தவிர்த்து, ஐரோப்பிய ஒன்றியமாக ஒன்றுபட்டுச் செயற்படுவதை அவதானிக்க முடியும். ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ஆப்பிரிக்க ஒன்றியத்துக்கும் இடையில் ஒருங்கிணைந்ததோர் அணுகுமுறையை உருவாக்க ஐரோப்பிய ஒன்றியம் முன்னுரிமை வழங்குதலே, இதன் முதலாவது படிநிலையாக இருக்கும். இதுவே தற்போது ஐரோப்பாவை எதிர்கொள்ளும் ஆபிரிக்க குடிவரவுச் சவாலுக்கு உதவியாக இருக்கும்.

இவ்வாறான பல நிகழ்ச்சிநிரல்களின் மத்தியிலேயே, ஆபிரிக்காவின் எதிர்காலம் பார்க்கப்பட வேண்டியதாகின்றது.