எனக்கு வேண்டாம் இந்த புத்தாண்டு….?

தொலைத்த உறவுகளைத் தேடும் இடையறாத போராட்டம்… தமது வாழ்விடங்களை விடுவிக்க மழை வெயில் பாராது போராட்டம்…. கற்ற படிப்பிற்கும், பெற்ற பட்டத்திற்கு வேலை வேண்டிப் போராட்டம்….. தனியார் கல்விநிறுவனங்களை உருவாக்காதே என்ற கோரிக்கைப் போராட்டம்…. மலையகத்தில் வாழ்வாதாரத்தை வேண்டி மௌனப் போராட்டம்….. வரட்சிக்கு நிவாரணம் கோரி டெல்லி வரை சென்று இடுப்பின் உடைகளை களைந்து போராட்டம்….. இதில் எதிலும் ஆளும் வர்க்கங்கள் அதிகம் அக்கறை காட்டியதாக தெரியவில்லை. போர் முரசு கொட்டும் வளைகுடாவும் போர் ஒத்திகை பார்க்கும் கிழக்கு கடலோரமும்….. சர்வதேச போர் நகர்வுகள்…. மனிதம் செத்துப் போகின்றதா..? என்ற அச்சநிலை ஆனால் இன்று பிறக்கும் தமிழ் சிங்கள வருடப் பிறப்பிற்கு மட்டும் மொழி மதம் இனம் கடந்து வாழ்த்துகளும் மகிழ்ச்சியும் தெரிவிக்கும் ஆட்சியாளர்களின் ஆரவாரத்திற்கு குறைவுகள் இருக்காது…? இந்த வாழ்த்துக்களிலும் உண்மை இல்லை…. வாழ்த்தை ஏற்கும் மகிழ்வு நிலையிலும் மக்கள் இல்லை யாருக்கு வேண்டும் இந்த புதுவருடம்…? எனக்கும் வேண்டாம் இந்தக் கொண்டாட்டம்…? இது விரக்தியின் வெளிப்பாடு அல்ல விழிப்புணர்விற்கான அறைகூவல். போராடும் சக்திகளுக்கு ஆதரவழிப்போம் போராடுவதற்கான நிர்பந்தம் நாளை எங்கள் வீட்டுக்கதவையும் தட்டும் அதுவரை காத்திருந்தால் எமக்காகவும் போராட அன்று யாரும் வரப்போவது இல்லை.