என் மனவலையிலிருந்து…..!

ரஜனியை இமயமலைக்கு செல்ல அனுமதியுங்கள்……!

(சாகரன்)

பெரியாரின் பகுத்திறவு கொள்கையை மூலதனமாக்கி சினிமாக் கவர்ச்சியை துணைக்கு அழைத்து பிராமண மேலாதிக்கம் நிறைந்த காங்கிரஸ் கட்சியை பின்தள்ளி இந்தியாவின் தேசியக் கட்சி ஆட்சியை தமிழ்நாட்டில் இருந்து துடைத்தெறிந்த பெருமையுடன் ஆரம்பமானதே தமிழ்நாடு என்ற பெயருடன் தமிழ் வெறியூட்டிய அண்ணாத்துரை தலைமையிலான திராவிட கட்சி ஆட்சி. பல்வேறு அடுக்களிலும் கழகத்தின் கண்மணிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது திராவிட இயக்க கட்சி. இயற்பெயர்களை தமிழ் ‘மறவர்’களின் பெயரை மருவி மாற்றி சூட்டி, மேடைப் பேச்சுகளை பயிற்சியாக கொடுத்து கரைவேட்டி, துண்டுகளை உடுத்தி தலைவர்களை உருவாக்கி அடுக்கு மொழி வசனங்களைப் பேச வைத்து இதற்காகவே கைதட்டும் வாங்கி கழக கண்மணிகளின் திடமான ஆதரவுத்தளத்தை கொண்டதே திராவிட முன்னேற்றக் கழகம்.

பெரியார், அண்ணாத்துரை, காமராஜ் போன்ற ‘பெரும்’ தலைவர்களின் மறைவு அரசியல் சாணக்கியன் கருணாநிதியை கேள்வி கேட்க முடியாத தலைவனாக முதலமைச்சராக்கியது தமிழ்நாட்டின் வரலாறு. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு. சாதாரண பாமர மக்களை சினிமாவின் கதாநாயகன் நிஜத்திலும் அப்படியே இருப்பான் என்பதை வெள்ளந்தியாக நம்பும் அப்பாவித்தனத்தையும் வறுமைகளையும் மூலதனமாக்கிய எம்ஜிஆர் கேள்விக்கு அப்பாற்பட்ட கருணாநிதியை கணக்கு கேள்வி கேட்டு பிரிந்து சென்று இன்னொரு திராவிட கட்சியை உருவாக்கி ஆட்சியமைத்தது புரட்சித் தலைவரின் வரலாறு.

அவர் உயிருடன் இருக்கும் வரை பல அடுக்கு தளத்தைக் கொண்டு கலைஞரின் திராவிட முன்னேற்ற கழகத்தை ஆட்சியில் அமர முடியாமல் ஆனால் அதே வேளை பலமான எதிர் கட்சியாக தொடர்ந்தும் இருக்க வழி செய்தது எம்ஜிஆர் இன் கட் அவுட் கவர்ச்சிகர நடவடிக்கைகள். ஆனால் இரு திராவிட கழகங்களும் சூட்கெஸ் பணப் பணிமாற்றத்தில் ஒரு புரிந்தணர்வுடன் செயற்பட்டதே உண்மை. தமிழ் நாட்டு இடதுசாரிகள் கூட கருணாநிதியை எதிர்கொள்ள எம்ஜிஆரின் நட்பை நாடி நிற்றதும் அண்ணா திராவிட கழகத்துடன் ஜக்கிய முன்னணி அமைத்ததும் எம்ஜிஆர் இற்கு கிடைத்து சமயோசித அரசியல் வெற்றிகள்.

‘இளைஞன்’ எம்ஜிஆரின் திடீர் மரணம் கருணாநிதிக்கு தற்காலிகள் ஆறதல்களைத்தான் கொடுத்தது. மீண்டும் ஜெயலலிதாவின் எம்ஜிஆர் ஐ முன்னிலைப்படுத்திய இரண்டை (இலை) விரல் அணுகு முறை எம்ஜிஆரிடம் கிடைத்த அதே தோல்விகளை கருணாநிதி சந்திப்பதற்கு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தமிழ் நாட்டில் ராஜீவ் காந்தியின் மனிதக் குண்டு படுகொலை காரணமாகியது.

ஈழத்து போராளி தலைவர் சபாரத்தினத்தின் மரணத்திற்கு கலைஞர் உடன் பிறப்புகளுக்கு முரசொலியில் எழுதிய கண்ணீர் அஞ்சலி, தொடர்ந்த காலங்களில் 180 டிக்கிரி திரும்பிய சபாரத்தினத்தின் கொலைஞர் பிரபாகரனுக்கு வழங்கிய ஆதரவில் அம்பலப்பட்டு போக இதே மண்ணில் பத்மநாபாவின் மரணத்தை உறுதிப்படுத்த பின்புலத்தில் இருந்து செயற்பட்டதும் குற்றுயிராக இருந்தவர்களை சிகிச்சை அளிக்காமல் தாமதித்ததும் கொலைஞர்கள் சுப்புலஷ்மி ஜெகதீசனின் வீட்டில் பாதுகாத்தும் கலைஞரின் தமிழ்நாட்டு அரசியலுக்காகவே ஈழப் போரளிகள், ஈழப் பிரச்சனை என்று அம்பலமாகி போனது. முள்ளிவாய்கால் இறுதியுத்தத்தில் கருணாதிதியின் கரங்கள் தடுத்து நிறுத்தல்களை மத்திய அரசின் ஊடாக செய்யவில்லை என்ற கோவத்தை தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் புலிகள் இயக்கத்தின் குழாத்தில் ஆறாத வடுவாக மாறியது.

இதனை சரியாக கணித்த ஜெயலலிதா தான் என்றுமே பிரபாகரனை ஆதரிக்காத நம்பாத நிலையிலும் தமிழக சட்டப் பேரவையில் அதி உட்சமான ‘தமிழ் ஈழத்திற்கான’ ஆதரவுத் தீர்மானத்தை நிறைவேற்றி தமிழ் நாட்டில் கருணாநிதி உட்பட யாரும் ஈழத் தமிழர்களை வைத்து தன்னை மீறி அரசியல் நடாத்தி இலாபங்களை அடையமுடியாமல் ஆப்படித்த பெருமயை தனதாக்கி கொண்டார்.

தனி மனுஷியாக சகல எதிர்புக்களையும் சமாளித்தவர் இறுதியில் ஒரு மன்னார்குடி (அ)சாதாரண மனுஷியிடம் ‘தோழி’ உடன் பிறவா ‘சகோதரி’ என்று எழும்ப முடியாத 75 நாட்கள் ஆஸ்பத்திரிச் சிறையில் இருந்து மரணமாக்கப்பட்டது அந்தோ பரிதாபம். இதற்கான சகல காய் நகர்த்தல்களையும் குஜராத்தில் இருந்து முஸ்லீம்களின் கொலை என்ற அடித்தளத்திலிருந்து புறப்பட்டு டெல்லியின் செங்கோலைப் கைப்பற்றியதில் வாஜ்பேஜி யைம் விஞ்சிவிட்டவர் மோதி. ஜெயலலிதாவின் ஆஸபத்திரி அனுமதி தொடக்கம் இன்றுவரை தமிழ்நாட்டின் ஆட்சி செயற்பாட்டிற்கான சினிமாவின் திரைகதை வசனம் இயக்குனர் எல்லாம் இதே நரேந்திரர்தான். துpராவிட கழகத்தின் ‘தலைவர்களின் சொத்துக் குவிப்பு குற்றப் பத்திரங்களை கையில் வைத்திருந்த படி முக வில் இருந்து வைகோ வரை மௌன அரசியலை மட்டும் நடத்த வாய்கட்டுப் போட்ட பெருமை இந்த இந்துவத்துவாவாதியைச் சேரும். திராவிட கழகங்களில் யாரும் சுத்தம் இல்லை என்பதே இந்த மௌனத்தின் வெளிப்பாடு.

எதற்காக இந்த கொலைவெறியாட்டம்…..? குஜராத்தில் ஆடிய ஆட்டத்தில் கண்ட சுவையா….? அல்லது செங்கோட்டை பதவி தந்த புகழா…? பிரமசாரியாக வலம் வரும் பிரமசாரியத்தை துறந்தவர் ஆடும் சிவதாண்டவம் எதற்காக..? தனையனின் அனுபவக்குறைவுச் சிதறல்களை தனக்கு சாதகமாக்கி உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றி அதியத்தை நிகழ்த்தியவர் திராவிட பாரம்பரியத்தை உடைத்து இங்கும் காவிக் கொடி பறக்கவிடவேண்டும் என்ற ஆவல்தான். வேறு என்ன..?

இதற்கு இவர் கண்டுபிடிக்க முயலும் சினிமா கவர்ச்சி…. பஞ் டயலாக்…. இமயமலை சாமி… ரஜனிகாந். மூப்பனார் காலத்தில் கிடைத்த வாய்பை நழுவ விட்டவர் இனி அப்படியொரு வாய்ப்பு ரஜனிக்கு ஏற்படாது என்பதே என்கருத்து. இது ரஜனிக்கும் தெரியும். மேலும் தமிழ் நாட்டின் தலைவனாகி கன்னடத்திற்கு போவதற்கான தடாவை தன் தலையில் தானே மண்ணைக் கொண்டுவது போல் செய்யவும் மாட்டார்இதனாலே சொல்கின்றேன் வற்புறுத்தி அரசியலுக்கு இழுத்தாலும் இமயமலைக்கு போகின்றேன் என்று பாசாங்கு காட்டி நழுவியே விடுவார். இன்னும் ஒரு 5 படமாவது சங்கர் வகையறாக்களின் கிராபிக்ஸ் இனால் இளைஞனாகவும், அட்டக்கத்தி றஞ்ஜித் வகையறாக்களால் முதுமையான புரட்சி செயல் வீரனாகவும் நடித்து கோடிகளை சம்பாதித்து ‘எளிமை’யாக வாழ்ந்து அரிதாரம் பூசியநிலையிலேயே புகழுடன் இமய மலைக்கு நிரந்தரமாக சென்றுவிடுவார். ஆனால் அப்போதும் தமிழகம் மீண்டும் ஒரு திராவிடனைத் தேடிக்கொண்டே இருக்கும் தலைவனாக்க.

என்னை நீண்ட நாட்களாக துரத்திக் கொண்டிருக்கும் கேள்வி……! பெரியாரின் பகுத்தறிவு இயக்கத்தின் அடித்தளமும் ஜல்லிக்கட்டுவரையும் மெரினாவில் கூடி போராடி மக்களை அணிதிரட்டும் வல்லமையும் செந்தமிழ் மணியரசன் போன்றவர்களின் இடைவிடாத ‘இயற்கை’ச் செயற்பாடுகளும் ஒரு திராவிடனுக்கு அப்பால் ஒரு சாமானய மக்களுக்கான தலைவவர்களைக் கொண்டு ஒரு அரசியல் இயக்கத்தை கட்டியமைத்து தமிழ் நாட்டில் பீடித்திருக்கும் திராவிட அரசியல் ஊழல்களில் இருந்து மக்களை இதுவரை மீட்க முடியவில்லை என்பதே.

நல்லகண்ணு போன்றவர்கள் நல்லவர்களாக இருப்பதினால் வல்லவர்கள் என்று மக்கள் வாக்கு வழங்கவில்லையோ…?

யாராவது இதற்கு மணி கட்டியே ஆகவேண்டும். அவரை ‘இமயமலை’க்கு செல்லவிடுங்கள்….! காவிகளை களத்திலிருந்து அகற்றுங்கள்…..!!

(May 25, 2017)