என் மாமா…

(கமலாகரன்)

 

ஈழவிடுதலைப் போராட்டம் தந்த ஒப்பற்ற உறவு.
தேசத்தின் அனர்த்தங்கள் விளைவித்த நாசம்… நேசம் துறந்து உறவுகளைப் பிரிந்து தமிழகம் வந்தேன்.
வாராது வந்த மாமணியாய் வந்தாள் என் வாழ்வில் ஒரு சமூகவிடுதலைப் போராளிப் பெண்.
எல்லாம் இழந்த மனோ நிலையில் ஒரு மன நோயாளிபோல் வாழ்ந்து திரிந்த என்னை தன் துணையாய் ஏற்க முன் வந்தாள்.
நான் யார். என் நிலை என்ன என்பது பற்றி எல்லாம் நான் சொல்லாமலே எல்லாம் அறிந்திருந்தாள் முன்கூட்டி என்னைப் பற்றி.
திருமணம் வரை நகர்ந்த எம்முறவில் முதன் முதலில் என் மாமனாரை பார்த்தது என் திருமணத்தன்றுதான்.


தன் மனைவியை விடுதலைப்புலிகளின் அராஜகத்திற்கு பலிகொடுத்த அந்த சோகம் அவர் முகத்தில் குடிகொண்டேயிருந்தது.
என் மாமி ஒரு தலைசிறந்த சமூகப்போராளி. அவளுக்கு சமூக வர்க்க பேதம் இருந்ததே இல்லை. அவளைப் போன்றதொரு போராளி எமது சமூகத்தில் நிலையாமல் போனதும் எமது தோல்வியென நான் உறுதியாக நம்புகிறேன்.
அப்படியொரு மாமியோடு வாழ்ந்த என் மாமா அமைதியாக இருந்ததன் காரணம் நான் அறிவேன். நீங்களும் அன்றைய காலம் உணர்ந்து புரிந்து கொள்வீர்கள்.
அதிகம் பேசாத என் மாமாவோடு அன்று முதல் இன்றுவரை நிறைய விடையங்களை பேசி முடித்த ஒரு நல்ல மருமகன் நானென இன்னும் நம்புகிறேன்.
என்னை அவர் தன் மகனுக்கு இணையாக நேசித்தார் என்பதே எனக்கான தற்திருப்தி.
இன்று அதிகாலையின் பொழுதில் என்னவளுக்கு வந்த தொலைபேசி அழைப்பு வாழ்வின் சில தார்ப்பரியங்களை உணர்த்தி விட்டிருக்கிறது.
ஒரு போராளியின் வாழ்வில் ஒரு போராளிக் குடும்பத்தின் சங்கமம் என்பது எத்தனையோ அனுபவங்களையும் இழப்புகளையும் குறை நிறைகளையும் தந்தாலும் என் மாமனாரோடு நான் வாழ்ந்தது சில காலம் எனினும் எனக்கது பொற்காலமே
மாமாவின் விருப்பப்படியே அவர் இறுதிக்காலம் சொந்தமண்ணில் நிகழ்வதில் எனக்கும் என்னவளுக்கும் முழுத்திருப்தியே.
“மாமா உங்களுக்கு எம் அனைவரினதும் இதய அஞ்சலி. போய் வாருங்கள்.”..வேறென்ன நான் சொல்ல.