ஐரோப்பிய ஒன்றியம்: கேள்விக்குறியான எதிர்காலம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

எதிர்காலம் எதிர்வுகூறவியலாதது. நிகழ்காலம் நிச்சயமற்றது. இறந்தகாலம் மீளாது. இம் மூன்று காலங்கட்குமிடையான உறவும் முரணுமே நிகழ்வுகள் யாவையும் தீர்மானிக்கின்றன. நடந்தவை நடப்பவற்றுக்குத் தளமிடுகின்றன. நடப்பது நடக்கவுள்ளதன் திசைவழியின் வரைபடத்தை நடந்ததின் உதவியுடன் வரைகிறது. கடந்த இரு வாரங்களாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வெளிப்படையாகத் தம்முள் கொள்கையளவில் முரண்பட்டிருப்பதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்புப் பற்றி ஐயம் வெளியிட்டிருப்பதும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளார்ந்த நெருக்கடிகளை இன்னொரு முறை பொதுவெளிக்குக் கொணர்ந்துள்ளன.

கடந்த வாரம் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோன், தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா, இல்லையா என்பதை பிரித்தானியா சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கும் எனவும் அவ்வாக்கெடுப்பு எதிர்வரும் ஜூன் 23ஆம் திகதி நடைபெறும் எனவும் அறிவித்தார். மறுசீரமைத்த ஒரு ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரித்தானியா தொடர்ந்தும் இருக்க விரும்புவதாகத் தெரிவித்த அவர், ஐரோப்பிய ஒன்றியத்திற் சட்ட, பொருளாதாரத் திருத்தங்களைக் கோரினார். அவ்வாறு சீரமைத்த ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்திருத்தற்கான ஆதரவை சர்வசன வாக்கெடுப்பின் மூலம் பெறவேண்டுவதாக அவர் தெரிவித்தார்.

அவர் கோரும் திருத்தங்களில் மூன்று பிரதானமானவை. முதலாவது, ஜரோப்பிய ஒன்றியச் சட்டங்களைப் பிரித்தானியப் நாடாளுமன்றம் சட்டவாக்கத்தின் மூலம் தடுக்க இயலுமானவாறு ஐரோப்பிய ஒன்றிய யாப்பிற் சட்டத் திருத்தம். இரண்டாவது, பிரித்தானியாவிற் பணியாற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாட்டவர்க்கான சலுகைகளை நிறுத்தும் அதிகாரம். மூன்றாவது, யூரோ நாணயத்தைப் பயன்படுத்தாத ஐரோப்பிய ஒன்றிய நாடுகட்குச் சலுகை வழங்கக்கூடிய நிதியியல் ஒழுங்குகளை உருவாக்கல்.

இவை, நொடிந்து போயுள்ள பிரித்தானியப் பொருளாதாரத்தைக் காப்பதற்கான முன்மொழிவுகளாம். இவற்றை அனுமதிப்பின் யூரோவைப் பயன்படுத்தும் நாடுகள் பொருளாதாரப் பாதிப்புக்குள்ளாகும். அத்துடன் பிரித்தானியா கோரும் திருத்தங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படைகளையே கேள்விக்குட்படுத்துவன.

இப்போது ஐரோப்பாவுக்குப் பெரிய சவாலாகவுள்ள அகதிகள் நெருக்கடி பற்றிய ஐரோப்பிய ஒன்றியக் கொள்கைகளையிட்டு பிரான்சும் ஜேர்மனியும் நேரடியாக மோதுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் பிரசல்ஸ் மாநாட்டுக்குச் சில நாட்கள் முன்னர் பிரான்ஸ் பிரதமர் மானுவேல் வால்ஸ், ஜேர்மனி சான்செலர் அங்கெலா மேக்கலின் அகதிகள் கொள்கை ‘முட்டாள்தனமானது’ என வெளிப்படத் தாக்கினார்.

ஆப்கானிஸ்தானிலிருந்தும் உள்நாட்டுப் போர்கள் தொடரும் சிரியா, ஈராக் உட்பட்ட மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் தப்பி வரும் அகதிகளை ஐரோப்பா முழுதும்; பகிரவேண்டும் என்ற ஜேர்மனி சான்செலரின் முன்மொழிவை பிரான்ஸ் ஒருபோதும் ஆதரிக்காது என்றுரைத்த பிரான்ஸ் பிரதமர், ஜேர்மனியின் முன்மொழிவை எதிர்த்தற்கான ஆதரவை ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வலதுசாரிகளிடம் கோரினார். ஜேர்மனியின் அகதிகள் கொள்கைக்கு அந்நாடுகளின் எதிர்ப்பை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு, இருப்பு, பொருளாதார நலன் ஆகியவற்றின் அடிப்படையிற் பெற பிரான்ஸ் முயல்கிறது.

அதன் முதற் கட்டமாக நீண்டகாலமாக ஜேர்மனியின் நட்பு நாடுகளாக இருந்த செக் குடியரசு, ஹங்கேரி, போலாந்து, ஸ்லொவாக்கியா ஆகிய விஷெகிராட் குழும நாடுகளும் மசிடோனியாவும் பல்கேரியாவும் பிரான்ஸின் முன்மொழிவை ஆதரித்ததோடு அகதிகள் நுழையாவண்ணம் எல்லைகளை மூடவும் இணங்கின. இவை ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜேர்மனியின் அதிகாரத்துக்கெதிரான சவாலாக நோக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிவலுவான சக்தியாக ஜேர்மனி உருவெடுத்துள்ளதை ஏற்க இயலாத பிரான்ஸ் அதைத் தடுத்துத் தனது அதிகாரத்தை நிறுவ முயல்கிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஆதரவைக் கோருவதன் மூலம், பிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜேர்மனியின் உயர் நிலையை கேள்விக்குட்படுத்துவதோடு அரசியல், இராணுவ, பொருளாதார ரீதியில் உயர்ந்துவரும் ஜேர்மனியின் பலத்துக்குச் சவால் விடுக்கிறது.

பிரித்தானியாவைப் பின்பற்றி, நெதர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்திருப்பதா இல்லையா எனத் தீர்மானிக்கும் சர்வசன வாக்கெடுப்பு நடத்துவதை அரைவாசிக்கும் மேற்பட்ட ஒல்லாந்தர்கள் விரும்புவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறே, இப்போது மூன்றாவது பிணையெடுப்பின் துர்விளைவுகளை எதிர்நோக்கும் கிரேக்கம் மக்களின் பெரும்பான்மையோர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதால் எதுவித நற்பலன்களும் கிடைக்காது எனக் கருதுகிறார்கள்.

பொருளாதாரத்தில் மிகத் தள்ளாடும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான இத்தாலி, ஐரோப்பியப் பொருளாதாரக் கொள்கைகளால் கடுமையாகப் பாதிக்கப்படுவதாயும் பக்கச்சார்பான பொருளாதாரக் கொள்கை உருவாக்கங்கள் கண்டிக்கத்தக்கன எனவும் இத்தாலியப் பிரதமர் மட்டியோ றென்சி குற்றச்சாட்டினார். ‘ஐரோப்பிய ஒன்றியம் அனைத்து அங்கத்துவ நாடுகட்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும். ஒரு சிலவற்றுக்கு மட்டுமல்ல’ எனவும் அவர் தெரிவித்தார்.

ஸ்பெயின், போர்த்துக்கல், அயர்லாந்து, பின்லாந்து ஆகியவற்றின் பொருளாதாரமும் தள்ளாடுகிறது. தமது சிக்கலில் இருந்து மீள ஐரோப்பிய ஒன்றியம் உதவவில்லை எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுமை தம் மீது சுமத்தப்படுவதாக அவை நினைக்கின்றன.

இவையனைத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குட்படுத்தியுள்ளன. இரண்டாம் உலகப் போராற் சிதைந்த ஐரோப்பக் கண்டத்தை ஒன்றிணைத்து முன்னேறும் தேவையை உணர்ந்ததாலேயே, ஐரோப்பிய ஒன்றியத்தின் உருவாக்கத்துக்கு வித்திட்டனர்.

1957ஆம் ஆண்டு பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, லக்சம்பேர்க், நெதர்லாந்து, மேற்கு ஜேர்மனி ஆகிய ஆறு நாடுகள் இணைந்து ‘ரோம் உடன்படிக்கையை’ உருவாக்கினர். அது ‘ஐரோப்பிய பொருளாதார சமூகம்’ உருவாக வழிவகுத்தது. பிரித்தானியா அதில் இணைவதற்கு அதன் கீழ்ப் பொதுநலவாய அமைப்பு இருந்தமையைச் சுட்டி பிரான்ஸின் அப்போதைய ஜனாதிபதி சார்ள் டி கோல், ஐரோப்பியப் பொது அடையாள உருவாக்கத்துக்கு பிரித்தானியா முட்டுக்கட்டையாக இருக்கும் எனக் கூறி, பிரித்தானியா இணைவதைத் தடுத்தார்.

1960இல் பிரித்தானியா, ஐரோப்பிய சுதந்திர வர்த்தக இணைவு எனும் அமைப்பை வேறு ஆறு நாடுகளுடன் தொடங்கியது. இன்று அதில் தொடக்க உறுப்பு நாடுகள் இரண்டும் மேலும்; இரண்டு நாடுகளும் மட்மே உள்ளன. 1969இல் டி கோல் பதவி விலகும் வரை ஐரோப்பிய பொருளாதார சமூகத்தில் பிரித்தானியா இணைய முடியவில்லை. பிரித்தானியா, அயர்லாந்து, டென்மார்க் ஆகியன 1973ஆம் ஆண்டு ஐரோப்பிய பொருளாதார சமூகத்தில் இணைக்கப்பட்டன. 1985ஆம் ஆண்டு செங்கன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அதை ஏற்ற பெல்ஜியம், பிரான்ஸ், மேற்கு ஜேர்மனி, லக்சம்பேர்க், நெதர்லாந்து ஆகியன தமது பிரசைகள் எல்லைக் கட்டுப்பாடின்றி இந் நாடுகளிற் பயணிக்க அனுமதித்தன.

1992ஆம் ஆண்டு உருவாகி, 1993ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்த மெஸ்டரிச்ட் உடன்படிக்கை மூலம் ஐரோப்பிய ஒன்றியம் நடைமுறைக்கு வந்தது. இப்போது இதில் 28 நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன.

அதைத் தொடர்ந்து, நாடுகளிடையே மனிதர்களும் பண்டங்களும் எல்லைக் கட்டுப்பாடற்றுச் செல்வதற்கான ‘ஐரோப்பிய பொருளாதார நிலப்பரப்பு’ உருவானது. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் வகிக்கும் 28 நாடுகளும் அங்கத்துவம் வகிக்காத நோர்வே, ஐஸ்லாந்து, லிக்டென்ஸ்டைன் ஆகியவையும் அதில் உள்ளன.

அடுத்து, 2002ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நாணயமாக யூரோ அறிமுகமானது. இப்போது, 28 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 19 நாடுகள் யூரோ நாணயத்தைப் பயன்படுத்துகின்றன.

கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு கால பரிணாமத்தின் விளைவாக இன்றைய வடிவை அடைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் உருவான போது, ஐரோப்பிய நாடுகளின் தேச அடையாளங்கள் யாவும் ஐரோப்பிய அடையாளத்துட் கரையும் எனப்பட்டது. ஆனால், அவ்வாறு நிகழவில்லை.

நிச்சயமாக, ஐரோப்பிய நாடுகளில் முதலாம், இரண்டாம் உலகப் போர்க் காலங்களில் இருந்த தேசிய உணர்வுகள் இப்போது இல்லை. எனினும், தேச அரசு சார்ந்த முதலாளிய வேர்கள், முதலாளியம் ஏகாதிபத்திய, பன்னாட்டு முதலாளிய வடிவை எய்தியும், முற்றாக அறவில்லை. எனவே முதலாளியப் போட்டிக்கு இன்னமும் ஒரு தேசியப் பரிமாணம் உள்ளது. அதை, அண்மைய பொருளாதார நெருக்கடியின் போது கண்டோம். அதன் தொடர்ச்சியை இப்போது காண்கிறோம்.

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்த இரு-மைய உலகில் கம்யூனிச சார்புடைய ஆட்சிகள் ஐரோப்பாவில் உருவாகாமல் தடுப்பதும் ஐரோப்பிய ஒன்றிய உருவாக்கத்தின் ஒரு நோக்கமாகும். 1989இல் பெர்லின் சுவரின் வீழ்ச்சியுடன் உருவான ஒரு-மைய உலகின் இருப்புக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் முன்னாள் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகளையும் முதலாளிய நவதாரளப் பாதைக்குக் கொண்டுவந்ததில் ஐரோப்பிய ஒன்றியத்துக்குக் கணிசமான பங்குண்டு. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, உலகின் பலமிக்க சக்தியாகத் தன்னை நிலைநிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் கடந்த இரண்டு தசாப்தங்களாக உலக நாடுகளிற் போர்களைத் தொடுத்து, ஆட்சிகளைக் கவிழ்த்து அமெரிக்காவுக்குத் தான் எவ்வகையிலும் சளைத்ததல்ல என நிறுவியுள்ளது. அதற்கு வெகுமானமாக, 2012ஆம் ஆண்டு சமாதான நொபெல் பரிசு ஐரோப்பிய ஒன்றியத்துக்குக் கிடைத்தது.

ஐரோப்பிய ஒன்றியம் இன்று எதிர்நோக்கும் தப்பிப் பிழைப்பதற்கான சவால் புதிதல்ல. தன் உருவாக்கத்திலேயே அது தன்னைத் தானே அழித்தற்கான அடிப்படைகளையும் கொண்டிருந்தது. தன்னைத் தக்க வைக்கவும் இலாபத்தைப் பெருக்கவும் முதலாளியம் தொடர்ந்தும் புதிய வழிகளைத் தேடும். அவ்வகையில் கூட்டுச்சேர்ந்து உலகைச் சூறையாடும் கூட்டணியாக அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய கூட்டுக் களவாணியாகவே ஐரோப்பிய ஒன்றியம் உருவானது.

உறுப்பு நாடுகளிடையேயான எல்லைகளோ கட்டுப்பாடுகளோ அற்ற மனிதரதும் பொருட்களதும் போக்குவரத்து அதன் உருவாக்கத்தின் மூலாதாரமாகும். இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் எல்லைகளை மூடுவதையும் கட்டுப்பாடுகளை விதிப்பதையும் பற்றிப் பேசுகின்றன. சில எல்லைகள் ஏலவே மூடுண்டுள்ளன. பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு ஒன்றியத்தின் அடிப்படை சரக்குகளின் கட்டுப்பாடற்ற சுதந்திரமான கொண்டுசெல்லல். ஆனால், அது இப்போது கிட்டத்தட்ட இயலாமலாயுள்ளது.

மறுபுறம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரஜைகளின் சுதந்திரமான நடமாட்டத்தை மட்டுப்படுத்தப்படும் போது, செங்கன் நடைமுறை செல்லாமற் போகிறது. உறுப்பு நாடுகள் யூரோ நாணயத்தினின்று வெளியேறித் தங்கள் சொந்த நாணயங்களுக்கு மீளின் யூரோ இயல்பாகவே மரிக்கும். இவை ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குட்படுத்துவன. சில கூட்டணிகள் பாழ்நரகில் தீர்மானிக்கப்படுகின்றன. அவை தம் விதியைத் தாமே எழுதுவன.