கனடாவின் பொருளாதாரம் நலிந்தது

கனடாவில் வேலைவாய்ப்புகள் நிறைந்த மகாணம் ஒன்ராறியோ. நலிந்த மாகாணங்களில் கடல் தொழிலை முதன்மைப்படுத்தும் நியூபவுண்லான்ட்; உம் ஒன்று. ஒன்ராறியோவின் தொழில் வாய்ப்பு அதிகமான வியாபர நகரமான ரொறன்ரோவில், நியூபவுண்லான்ட் வாகனங்களை இடைக்கிடை காண முடியும். இவ் வாகனங்கள் நலிவடைந்த நிலையில் இருக்கக் காணப்படும். இவர்கள் எல்லாம் வேலை தேடி ரொறன்ரோவிற்கு வருபவர்களாக இருப்பர். இது வழமையாகக் காணக்கூடிய ஒன்று. அண்மை காலங்களில் கனடாவின் எண்ணை வளம் நிறைந்த ‘வளமான” அல்பேட்டா மாகாணத்தின் வாகனங்களையும் ரொறன்ரோ வீதிகளில் அதிகம் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த வாகனங்கள் நலிந்த நிலையில் இல்லை. அப்படியாயின் இவர்கள் உல்லாசப் பிரயாணிகள் என்றால் அதுதான் இல்லை. உல்லாசப் பயணிகள் பொதுவாக நல்ல நிலையில் உள்ள வாகனத்தில் வருபவர்களாக காணப்படுவர். அல்பேட்டா அமெரிக்க கூட்டமைப்பினரால் ரஷ்யாவை பொருளாதாரத்தின் மூலம் வீழ்த்த எடுத்த எண்ணை விலைக் குறைப்பில் கல்லெறி வாங்கிய கனடாவின் மாகாணம். எண்ணை விலைக் குறைப்பு இந்த மாகாணத்தையும் கனடிய பொருளாதாரத்தையும் தாக்கியுள்ள நிலையில் அல்பேட்டா மாகாணத்தில் வேலை வாய்பின்மைனால் நலிவடைந்த தொழிலாளர்கள் தொழில் வாய்ப்பு கூடியதாக கருதப்படும் ரொறன்ரோவிற்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதன் விளைவே ரொறன்ரோ வீதிகளின் அல்பேட்டா மாகாணத்தவரின் வாகனங்களின் பிரசன்னம். மொழி, நிறம் ஒன்று… பாகுபாடுகள் அதிகம் இல்லாததனால் மாகாணம் விட்டு மாகாணம் மாறி வேலைக்கு அலைய முடிகின்றது இங்கு. நாம் நமது நாட்டில் இது போன்று தலைநகரம் கொழும்பிற்கு அலைய முடியவில்லை இந்த அளவு சுதந்திர உணர்வுடன். பாகுபடுத்திப் பார்க்கும் மனநிலையும், மொழித் தடையும், இனத் தடையும் எம்மைப் பிரித்தே வைத்திருத்தன, பிரித்தே வைத்திருந்தனர் பாராளுமன்றவாதிகள் தமது பாராளுமன்றக் கதிரைகளுக்காக.

(சாகரன்)