கிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள்

இலங்கையின் சுதந்திரத்துக்காகச் சிங்களத் தலைவர்களும் தமிழ்த் தலைவர்களும் முஸ்லிம் தலைவர்களும் உழைத்தார்கள். தமிழ்த் தலைவர்களுக்கு, தலைமை தாங்கும் அந்தஸ்து கூட வழங்கப்பட்டிருந்தது.

சுதந்திரத்துக்குப் பின்னர், தமிழ்த் தலைவர்கள், பலவழிகளிலும் பல துறைகளிலும் புறக்கணிக்கப்பட்டார்கள். இதைத் தொடர்ந்ததான காலங்கள், மனவேதனைகளையே தமிழர்களுக்குக் கொடுத்தது. அதனை அரசியல் ஊடாகவேனும் பெற்றுவிட வேண்டும் என்றுதான், இப்போதும் முயன்று கொண்டிருக்கிறார்கள். இதுவே, இலங்கைத் தமிழர்களின் கொடுப்பினை என்று நொந்து கொள்பவர்களும் உண்டு.

இப்போது, கிழக்கைப் பொறுத்தவரையில் ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர், கிழக்கு மாகாண ஆளுநராகச் செயற்பட்ட ஹிஸ்புல்லாஹ் பதவி விலகியதையடுத்து, தென் மாகாண முன்னாள் முதலமைச்சரான ஷான் விஜயலால் டி சில்வா, கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஷான் விஜயலால் டி சில்வா தென்மாகாணத்தின் முதலமைச்சராகத் தொடர்ச்சியாக மூன்று தடவைகள் பதவி வகித்தவராவார்.

ஹிஸ்புல்லாஹ் தொடர்பாகப் பல விமர்சனங்கள் குறிப்பாக, நேர்மையற்ற தன்மையாலும் தமிழ், சிங்களப் பகுதிகள் அபிவிருத்தியில் புறந்தள்ளப்பட்ட காரணத்தாலும் கிழக்கு மாகாண மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும், புறக்கணிக்கப்பட்டு வந்திருந்தார். ஆனால், ஏப்ரல் 21 தாக்குதல்கள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டன.

இவ்விடயத்தில், கிழக்கு மாகாணத்துக்கென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட புதிய ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தொடர்பாகவும் நம்பிக்கையற்ற விதத்திலான கருத்துகள் பரப்பப்படத் தொடங்கி இருக்கின்றன.

இருந்தாலும், “கிழக்கு மாகாணம் 30 வருடங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டதொரு மாகாணம். அதற்கு, நாம் அனைவரும் முகம் கொடுத்தவர்களாக இருக்கின்றோம். அதன் பெறுபேறுகள் என்னவென்பதும் நம் எல்லோருக்கும் தெரியும். ஏப்ரல் 21ஆம் திகதிக்குப் பின்னர், கிழக்கு மாகாணம் பல்வேறு வகையான இன்னல்களுக்கு முகம் கொடுத்தது. இவற்றைக் கருத்தில் கொள்ளாது, நாம் அனைவரும், இந்தக் கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைய வேண்டும். எந்தவிதமான உதவிகள் தேவையாக இருந்தாலும் என்னை அணுகி, உங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்” என்று, திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஆராய்வுக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார் ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா.

இப்போது தான் தனது பணியை ஆரம்பித்திருக்கின்ற கிழக்கின் ஆளுநர், தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களைச் சம அளவுகளில் கொண்டதான கிழக்கை, கையாளப்போகின்ற விதம் குறித்து, அவர் பதவியேற்று முதலாவது வாரத்திலேயே, தெளிவாகச் சொல்லிவிட்டிருக்கின்றார். இத்தகைய சூழலில், அவருடைய பதவிக்காலமே அதற்கான பதிலை வழங்கப் போகின்றது.

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக 1988 நவம்பரில் உருவான வடகிழக்கு மாகாண சபைக்கு, ஈ.பி.ஆர்.எல்.எவ்இன் வரதராஜப்பெருமாள் முதலமைச்சராக இருந்தார். முதலமைச்சரின்றி ஏறத்தாள 18 வருடங்கள் இயங்கிய வடகிழக்கு மாகாணத்துக்கு, ஆறு ஆளுநர்கள் பதவியில் இருந்துள்ளனர்.

1988 நவம்பரில் பதவிக்கு வந்த லெப்ரினன்ட் ஜெனரல் நளின் செனவிரத்ன 1993 நவம்பர் வரை பதவி வகித்தார். 1993 நவம்பர் முதல் 1994 ஓகஸ்ட் வரை லயனல் பெர்னாண்டோ பதவியிலிருந்தார். 1995 ஜனவரி முதல் 1998 ஒக்டோபர் வரையில் காமினி பொன்சேகா பதவியில் இருந்தார். 1998 நவம்பர் முதல் 2004 நவம்பர் வரை மேஜர் ஜெனரல் அசோக ஜயவர்தன பதவி வகித்தார். 2004 டிசெம்பர் தொடக்கம் 2006 ஜனவரி வரையில் டிரோன் பெர்னாண்டோ ஆளுநராக இருந்தார். 2006 ஜனவரி முதல் 2006 டிசெம்பர் வரையில், ரியல் அட்மிரல் மொஹான் விஜய விக்கிரம ஆளுநராகப் பதவி வகித்தார். அந்தவகையில், வடகிழக்கு மாகாண சபையின் இறுதி ஆளுநராகவும் கிழக்கின் முதலாவது ஆளுநராகவும் பதவி வகித்தவர் என்ற பெருமை மொஹான் விஜய விக்கிரமவுக்கு உண்டு.

1987 முதல் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணசபையாக இருந்த நிர்வாகம் 30.06.2006ஆம் ஆண்டு தொடக்கம், இரண்டாகப் பிரிக்கப்பட்டு, கிழக்கு மாகாண சபை தனி நிர்வாகமாகச் செயற்படத் தொடங்கிய போது, ரியல் அட்மிரல் மொஹான் விஜய விக்கிரம இருந்தார். கிழக்கு மாகாண சபைக்கான முதல் தேர்தல் நடைபெற்று, முதலாவது முதலமைச்சர் சத்தியப்பிரமாணத்தையும் இவரிடமே பெற்றார்.

கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக ரியல் அட்மிரல் மொஹான் விஜய விக்கிரம 2015ஆம் ஆண்டு ஜனவரி வரை பதவி வகித்தார். ஒஸ்ரின் பெர்னாண்டோ 2017 ஜூலை வரை இருந்தார். 2019 ஜனவரி 03ஆம் திகதி வரை ரோஹித்த போகொல்லாகம, 2019 ஜனவரி 03 முதல் ஜூன் 03 வரை எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆளுநராக இருந்தார்கள். இவர்களையடுத்து ஷான் விஜயலால் டி சில்வா ஆளுநராகி இருக்கிறார்.

ஆளுநர் பதவியின் அதிகாரத்தை முழுமையாக யாரும் பிரயோகிக்கா விட்டாலும், அது சார்ந்து, பல்வேறு வகைகளிலும் அரசியல்வாதிகளிடம் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஜனாதிபதியின் விருப்பத்தின்படி, தனது பிரதிநிதியாக மாகாணமொன்றின் ஆளுநர் நியமிக்கப்படுகின்றார். ஆதலால் தனித்துவமான பல அதிகாரங்களையும் ஆளுநர் தன்வசம் கொண்டுள்ளார்.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் ஆளுநருக்கான அதிகாரங்களை வரையறுக்கிறது. ஜனாதிபதியைப் போன்ற நிறைவேற்று அதிகாரங்கள், மாகாண சபையின் முதலமைச்சருடன் நான்குக்கு அதிகமில்லாத எண்ணிக்கையிலான அமைச்சரவை நியமனம், அவ்வமைச்சரவைக்குக் கீழ் வரும் திணைக்களங்கள் மீதான அதிகாரங்கள், சட்ட உருவாக்கங்கள் மீதான கடப்பாடுகள் எனப் பல்வேறு விடயங்கள் இதில் அடங்குகின்றன.

சபையில், நிதி சார்ந்த எந்த ஒரு சட்ட மூலத்தை நிறைவேற்றுவதாக இருந்தாலும், ஆளுநருடைய அங்கிகாரம் இல்லாமல் சாத்தியமில்லை.

1987 முதல் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபை நிர்வாகம் தொடர்பாக, பேரினவாதிகளின் நீண்ட கால எதிர்ப்பை அடுத்து, 2006 ஜூலை 14இல், மக்கள் விடுதலை முன்னணி, இணைந்த வடகிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு, கிழக்கு மாகாணத்துக்கெனத் தனியே மாகாணசபை நிறுவ வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இவ்வழக்கு விசாரணையை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்தனவால் அறிவிக்கப்பட்ட வடகிழக்கு இணைப்பு, சட்டவிரோதமானது எனக் கூறி, அதனைப் செல்லுபடியற்றதாக்குவதாக 2006 ஒக்டோபர் 16இல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து 2007 ஜனவரி முதலாம் திகதி, வடகிழக்கு மாகாணசபை இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கிழக்கு மாகாண சபைக்காக, 2008 மே 10இல் முதலாவது தேர்தல் நடைபெற்றது.

இம்மாகாணத்தின் தரவுகளின் படி, 2019ஆம் ஆண்டின் அடிப்படையில் தமிழர்கள்- 38சதவீதம், முஸ்லிம்கள் 37சதவீதம், சிங்களவர்கள் 25சதவீதமும் வசித்து வருகின்றனர். ஆனால், தமிழர் ஒருவரை ஆளுநராக நியமிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது ஆதங்கமாக இருந்தாலும், இனி வருங்காலங்களிலும் அது சாத்தியமற்றதாகிவிட்டதான கவலையும் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

கிழக்கு மாகாணத்தில், மேற்குறிப்பிடப்பட்டுள்ள விகிதாசார அடிப்படையில் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், மத்திய அரசாங்கத்தினதும், மாகாண சபையினதும் முஸ்லிம் அமைச்சர்களாலும் அரசியல் ரீதியாகவும் அபிவிருத்தியோடு சம்பந்தப்பட்ட விடயங்களிலும் நியமன விடயங்களிலும் பதவி உயர்வுகளிலும் பல ஆண்டுகளாகத் தமிழ், சிங்களப் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றே பல தரப்பினராலும் ஆதாரபூர்வமாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இவ்வாறான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால், இனங்களுக்கிடையில் முரண்பாடுகள், நம்பிக்கையீனங்கள் வளர்ந்து வந்துள்ளன. இதன் காரணமாக, இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இவைகளை நிவர்த்தி செய்யும் வகையில், புதிய ஆளுநர் செயற்படுவாரா என்பதும் இக்குற்றச்சாட்டுகளுக்குள் புதைந்திருக்கின்றன.

மத்திய அரசாங்கத்தின், மாகாணங்களின் அமைச்சுகள் கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பகுதிகளுக்கு அபிவிருத்திக்கென நிதி ஒதுக்குவதில் காட்டிய அக்கறையீனம் இனரீதியாகவும் மத ரீதியாகவும் கட்சி ரீதியாகவும் நிதி ஒதுக்கும் தன்மை போன்றவற்றின் விளைவே, இனமுறுகலுக்கு அடிப்படைக் காரணங்களாகும்.

இந்த விடயத்தில், மத்திய அரசும், மாகாண சபையும் தலையீடு செய்து, இனரீதியான திட்டத்தை நிறுத்தி, தமிழ்ப் பிரதேங்களினதும் தமிழ் மக்களினதும் மீதான அக்கறையை வெளிப்படுத்துவது, புதிய கிழக்கு மாகாண ஆளுநருக்கிருக்கும் சவாலாகும்.