குலம் அக்கா

இதில் கல்யாணியாக இருக்கட்டும்…. வரதராஜப்பெருமாளாக இருக்கட்டும்…..மாவினாக இருக்கட்டும் ஏன் மட்டையடி வீரன் பிரகலாதனாக இருக்கட்டும் இவரின் தைரிய பட்டறையில் வளர்ந்தவர்கள் இவர்கள். குடும்ப உறவுகளுக்கு அப்பால் போராளிகள் என்ற கோதாவில் இவரின் உறவுப்பாலம் பரந்து விரிந்தது. இதில் பெயர்களை குறிபிட முற்பட்டால் அது அடக்கும் அளவிற்குள் எழுதும் பக்கங்கள் போதாமல் போகும். எந்த சூழலிலும் ஒடுக்கு முறைக்கு எதிராக முகம் கொடுத்து மரணத்தை தனதாக்கி கொள்ள இவர் தயங்கியது இல்லை. இந்த மரணங்கள் எதிரி முகாமில் இருந்தாகட்டும் எம்மவர் முகாங்களில் இருந்தாகட்டும் மரணத்தை விரட்டும் தைரியம் இவரிடம் மட்டுமே நான் கண்டு வியந்த தைரியங்கள்.

மூன்று தலமுறையை தாண்டி மக்கள்…. மருமக்கள்… பேரர்கள் ஏன் இவரின் வாழ்கைத் துணைவர் வேதநாயகம் அங்கிளும் இந்தப் போராட்ட வரலாற்றில் மிக மிக முக்கிய பங்காற்றியவர்கள். ஈழ விடுதலைப் போராட்ட உறவுகளுக்குள் ஒரு ஜக்கியமும் முரண்பாடுகளும் இருந்தாலும் இவர் அளவில் அவை நட்பு முரண்பாடாக கடந்து சென்றவை என்பதை சில வருடங்களின் முன்பு நடைபெற்ற இவரின் பல பத்து வருட குடும்ப வாழ்வு நிறைவு நிகழ்வுக் கொண்டாத்தில் கலந்து கொண்டவர்களைக் கண்டு மகிழ்ந்ததில் நானும் ஒருவன்.

1960, 1970 களின் அவர் வாழ்ந்த வீடு பல்வேறு வரலாற்றுக் கால கட்டங்களை கடந்து மீண்டும் 2009 இற்கு பின்னரான இவரின் மீள் குடியேற்றத்தின் பின்பும் அதே ‘பழைய” வீடாக தோற்றம் அளிப்பதுவும் இதற்குள் தனது இராஜாங்கத்தை நடாத்திய பெருமைக்குரிய பெண்மணி குலம் அக்கா. காலச் சக்கரத்தில் பல்வேறு பரிணாம வளரச்;சிகளில் ‘அரசியல்’ தொடர்பாளர்கள் பலர் தமது வசதி வாய்புகளை பெருக்கிய போதும் இவர் தனது 70களின் வாழ் நிலையில் இருந்த அதே பழைய வசதி வாய்புகளுடன் நிறைவு கண்ட பெண்மணி.
எம்மை காணும் போதெல்லாம் முகம் மலர்ந்து சிரிப்புடன் வாருங்கள் தோழர்….. ‘தோழர் அஞ்சலி, எனது பிள்ளைகளை பற்றி தவறாது நேசம் விசாரிப்பவர். தாயகம் செல்லும் போதெல்லாம் அந்த கடற்கரை வீதி குடிலுக்குள் நான் புகாமல் வந்ததாக வரலாறு இல்லை. இனி வரும் நாட்களில் அந்த கடற்கரை வீதி குடிலுக்குள் எம் கால் தடம் பதிக்கும் போதெல்லாம் ஒரு சொட்டு கண்ணீரை சிந்தாமல் நகர்வதுவும் சாத்தியமோ…?

சென்று வாருங்கள் தாயே நான்கு தசாப்பதமாக மூன்று தலைமுறைக்கு போராட்ட வாழ்வியலைக் கற்றுக் கொடுத்து ஒலித்த அந்த இராஜ கம்பீரக் குரல் எம் காதில் அந்த கடற்கரை வீதியைக் கடக்கும் போது ஒலித்துக்கொண்டே இருக்கும்……