குழந்தைகள் கொத்துக்கொத்தாக செத்து விழுந்ததை…..

(Rathan Chandrasekar)
உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் ஆக்சிஜன் சிலிண்டர்கள்
இல்லாத காரணத்தால் குழந்தைகள்
கொத்துக்கொத்தாக செத்து விழுந்ததை
இதயம் உள்ளவர்கள் அவ்வளவு எளிதில்
மறக்கமாட்டார்கள். அதேபோல,
கைக்காசை செலவு செய்து ஆக்சிஜன் வாங்கி
பல குழந்தைகளின் உயிர் காத்த டாக்டர்
கஃபீல் அஹ்மத் கானையும்
நம்மால் மறக்கவே முடியாது.

அந்தப் புனிதக் காரியத்தை செய்ததற்காக –
கஃபீல் கானைக் கைது செய்து
சிறையில் அடைத்தது உ.பி.அரசு.

எட்டு மாதங்களுக்குப் பிறகு
ஜாமினில் வந்திருக்கிற டாக்டர் கஃபீல் கான்
என்ன சொல்கிறார்?

அவர் கடிதம் இது.

லட்சுமி மணிவண்ணன் Lakshmi Manivannan
முகநூல் பக்கத்திலிருந்து பகிர்கிறேன்.

ரொம்ப நீளம் என்பதால் வாசிக்காமல் விடாதீர்கள்.
இது கடிதம் மட்டுமல்ல,
சமகாலத்திய ஆவணமும்கூட.
___________________________________________________

ஜாமீன் கிடைக்காத சிறை வாசத்தில்
எட்டு மாதங்கள் கடந்து விட்டன…
நான் உண்மையாகவே குற்றவாளியா…?”

சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் தாங்கமுடியாத சித்திரவதைகளுக்கும் அவமானங்களுக்கும் பிறகும் கூட ஒவ்வொரு நிமிடமும் கடந்து போன
ஒவ்வொரு காட்சியையும் கண் முன்னே நடப்பது போலவே நினைத்துப் பார்க்கிறேன்…!

சிலநேரங்களில் நான் எனக்குள்ளேயே கேள்விகளைக் கேட்டுகொள்கிறேன்… “நான் உண்மையிலேயே
குற்றவாளி தானா..? இந்த கேள்வி எனக்குள்
எழும்போதெல்லாம் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து
அதன் பதில் உயர்ந்து வரும்…”இல்லை” என்று…

2017 ஆகஸ்ட் 10. அந்த துன்பம் நிறைந்த இரவில்
எனக்கு ஒரு வாட்சப் தகவல் கிடைத்த
அந்த நிமிடத்தில், நான் என்னால் முடிந்ததை,
ஒரு மருத்துவர், ஒரு தந்தை, ஒரு பொறுப்புள்ள
இந்தியக்குடிமகன் என்ற முறையில்
செய்வதை எல்லாம் செய்தேன்…!

திரவ நிலையிலுள்ள ஆக்சிஜன் (Liquid Oxygen) திடீரென்று நிறுத்தப்பட்டதால் அபாயத்திற்குள்ளான ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்கு என்னால் முடிந்ததெல்லாம் நான் செய்தேன்…ஆக்சிஜன் இல்லாததால் இறந்துகொண்டிருந்த அந்த குழந்தைகளைக் காப்பாற்ற என்னால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு முயற்சிகள் செய்தேன். நான் பைத்தியக்காரனைப் போல் எல்லோரையும் அழைத்தேன், நான் கெஞ்சினேன், நான் பலருடனும் பேசினேன், ஓடினேன், வண்டியை ஓட்டினேன், உத்தரவிட்டேன், அலறினேன், வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டேன், ஆறுதல் சொன்னேன், அறிவுரை கூறினேன், பணம் செலவழித்தேன், கடன் வாங்கினேன், அழுதேன்…ஒரு மனிதனால் செய்ய முடிந்தது அனைத்தையும் செய்தேன்…

நான் எனது துறைத்தலைவரையும் என் சக ஊழியர்களையும் BRD மருத்துவக்கல்லூரி முதல்வரையும், பொறுப்பு முதல்வரையும்,
கோரக்பூர் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டையும்,
கோரக்பூர் சுகாதார கூடுதல் இயக்குனரையும் கோரக்பூர் CMS/SIC யையும், CMS/SIC BRD-யையும் அழைத்து, திடீரென்று ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட பயங்கர நிலையைக் குறித்து தெரிவித்தேன். (என்னிடம் இந்த அழைப்புகள் பற்றிய ஆதாரங்கள் உள்ளன)

நான், வாயு கொடுக்கும் நிறுவனங்களான மோடி கேஸ்,
பாலாஜி கேஸ், இம்பீரியல் கேஸ்,
மயூர் கேஸ் ஏஜன்சி ஆகியவற்றையும் BRD மருத்துவக்கல்லூரியின் அருகிலுள்ள மருத்துவமனைகளையும் அழைத்து,
அவர்களிடம் நூற்றுக்கணக்கான
பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற
வாயு சிலிண்டர்களுக்காக மன்றாடினேன்.

நான் அவர்களுக்கு கொஞ்சம் பணம் முன்தொகையாக கொடுத்தேன். மீதிப்பணம் சிலிண்டர் தரும் பொழுது தருவேன் என்று உறுதி கூறினேன்.

(நாங்கள் திரவ ஆக்சிஜன் கொள்கலன் வரும் வரையில்
250 ஜம்போ சிலிண்டர்களை ஏற்பாடு செய்திருந்தோம்.
ஒரு ஜம்போ சிலிண்டரின் விலை 216 ரூபாய் ஆகும்)

நான் ஒரு கியுபிகிலிருந்து அடுத்ததற்கு,
10 வது வார்டிலிருந்து 12-வது வார்டுக்கும்,
ஒரு வாயு பகிர்மான முனையிலிருந்து
அடுத்த முனைக்கும் வாயு வருகிறதா என்பதை
உறுதி செய்வதற்காக நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தேன்.

வாயு சிலிண்டர்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக
அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு நானே காரை
ஒட்டிக்கொண்டு சென்றேன். அதுவும் தேவையை பூர்த்தி
செய்யும் அளவுக்கு இல்லை என்றான போது அருகிலுள்ள
ஆயுதம் தாங்கிய எல்லைக்காவல் படையினரிடம் சென்றேன். அப்படையின் DIG-யை சந்தித்து நிலைமையின் அபாயத்தை விளக்கினேன். அவர்கள், எனது வேண்டுகோளை ஏற்று நேர்மறையான உடனடி நடவடிக்கை மூலம் எனக்கு உதவினார்கள். அவர்கள் ஒரு பெரிய கனரக வாகனமும் ஒரு இராணுவ வீர்களின் படையையும் எனக்கு உதவுவதற்காக அனுப்பினார்கள். இராணுவ வீரர்கள் கேஸ் ஏஜன்சிகளிலிருந்து BRD-க்கு வாயு சிலிண்டர்களை கொண்டுவந்து சேர்ப்பதற்கும் காலி சிலிண்டர்களை திருப்பித் தரவும் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் தொடர்ந்து 48 மணிநேரங்கள் எங்களுடன் இருந்தார்கள். அவர்களின் மனதைரியம் எங்களுடைய மனதைரியத்தை அதிகரித்தது. நான் அவர்களுக்கு சல்யூட் செய்கிறேன். அவர்களின் உதவிக்கு என்றென்றும் நன்றி உடையவனாகயிருப்பேன்.

ஜெய் ஹிந்த்!

என்னைவிட மூத்த மற்றும் இளைய மருத்துவர்களிடம் பேசினேன்…என்னுடன் பணிபுரியும் செவிலியர்களுடன் பேசினேன். “யாரும் குழப்பமோ பதற்றமோ அடையாதீர்கள்…நிலைகுலைந்து போயிருக்கும் தாய் தந்தையரிடம் கோபப்படாதீர்கள்…யாரும் ஓய்வெடுக்காதீர்கள்…நாம் ஒன்றுபட்டு ஒரே குழுவாக வேலை செய்தால்தான் எல்லோருக்கும் சிகிச்சையளிக்கவும் எல்லா உயிரையும் பாதுகாக்கவும் இயலும்…” என்று கூறினேன்.

நான் குழந்தைகளை இழந்த கண்ணீருடன் நின்ற தாய்தந்தையாருக்கு ஆறுதல் கூறினேன்…குழந்தைகளை இழந்த, துக்கத்தில் ஆத்திரப்பட்டு, கோபத்துடன் இருந்த தாய்தந்தையருக்கு ஆறுதல் கூற முயன்றேன்…அப்பகுதி எங்கும் மனக்குழப்பம் நிறைந்து காணப்பட்டது…அவர்களிடம் திரவ ஆக்சிஜன் தீர்ந்து விட்டதாகவும் அதற்குப் பதிலாக ஆக்சிஜன் சிலிண்டர்களை பயன்படுத்த முயற்சி செய்வதாகவும் விளக்கினேன்…!

நான் அனைவரிடமும் உயிர்காக்கும் முயற்சிகளில் கவனம் கொள்ளும்படி கேட்டுக்கொண்டேன்…நான் அழுதேன்…என்னுடைய குழுவில் உள்ள அனைவரும் அழுது கொண்டிருந்தார்கள்…குறிப்பிட்ட காலத்தில் வாயு வாங்கியதற்காக பாக்கிப் பணத்தை பட்டுவாடா செய்யாத ஆட்சியாளர்களின் தோல்வியைக் கண்டு…அதனால் ஏற்பட்ட மீளத்துயரதைக் கண்டு…அழுதோம்…!

13-08-2017 அதிகாலை 1:30 க்கு திரவ ஆக்சிஜன் கொள்கலன் வந்துசேருவது வரை நாங்கள் எங்கள் பணிகளை நிறுத்தவேயில்லை..!

ஆனால்… அன்றைய தினம் விடிந்த பிறகு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மகாராஜ் மருத்தவமனைக்கு வந்த பிறகு தான் எனது வாழ்க்கை தலைகீழாக மாறியது…!

அவர் என்னிடம் கேட்டார், ”அப்ப…நீங்க தான் டாக்டர். கஃபீல் இல்லையா…? நீங்கள் தானே வாயு சிலிண்டர்கள் ஏற்பாடு செய்தவர்?”

“ஆமாம் சார்” நான் பதில் சொன்னேன்.

அவர் கோபத்துடன், “அப்படி என்றால், வாயு சிலிண்டர்கள் ஏற்பாடு செய்ததால் நீங்கள் ஒரு ஹீரோ ஆகிவிட்டீர்கள் என்று நினைக்கிறீர்கள் அப்படித்தானே…? நாம் பார்க்கலாம்..”

யோகிஜி கோபப்படுவதற்கு காரணமிருக்கிறது…இந்த செய்தி ஊடகங்களில் வந்துவிட்டது என்பது தான் அந்த காரணம்…நான் அல்லாவின் மேல் ஆணையிட்டு சொல்கிறேன்…நான் அன்றைய தினம் இரவு எந்த ஊடகவியலாளருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. ஊடகவியலாளர்கள் ஏற்கனவே அன்றைய தினம் இரவில் அங்கிருந்தார்கள்..

போலீசார் எனது வீட்டிற்கு வந்தார்கள்…எங்களை வேட்டையாடினார்கள், மிரட்டினார்கள், எனது குடும்பத்தாரை கொடுமைப்படுத்தினார்கள். என்னை ஒரு மோதலின் மூலமாக கொலை செய்துவிடுவதாக எச்சரித்துக் கூறினார்கள்… எனது குடும்பத்தில் அம்மாவும், மனைவியும் குழந்தைகளும் அச்சத்திலாழ்ந்தார்கள்… அவர்களுக்கு ஆறுதல் சொல்ல என் வாயில் வார்த்தைகள் ஏதும் வரவில்லை…

எனது குடும்பத்தை அவமானத்திலிருந்து காப்பாற்ற நான் போலீசில் சரணடைந்தேன்…அப்போதும் நான் தவறேதும் செய்யவில்லை என்றும் அதனால் எனக்கு நீதி கிடைக்கும் என்றும் உறுதியாக நம்பினேன்…!

ஆனால் நாட்கள் கடந்து போய்க்கொண்டிருந்தன…ஆகஸ்ட் 2017 முதல் ஏப்ரல் 2018 வரை….ஹோலி வந்தது, தசரா வந்தது, கிறிஸ்துமஸ் போனது, புத்தாண்டு வந்தது, தீபாவளி வந்தது…ஒவ்வொரு நாளும் ஜாமீன் கிடைக்குமென்ற எதிர்பார்ப்பில் கடந்தது…அப்போது தான் நீதி, சட்ட முறைகளும் கூட அவர்களின் கடும் அழுத்தத்தில் இருக்கிறதென்று எங்களுக்குப் புரிந்தது… (அவர்களும் அவ்வாறு தான் சொன்னார்கள்)

நான் இப்போது…150-க்கு அதிகமான சிறைக்கைதிகளுடன் ஒரு குறுகலான அறையின் கட்டாந்தரையில் தான் தூங்குகிறேன்…இரவில் இலட்சக்கணக்கான கொசுக்களுக்கும் பகலில் ஆயிரக்கணக்கான ஈக்களுக்கும் நடுவில் வாழ்வதற்காக, உணவு உட்கொண்டு, அரைநிர்வாணமாக குளித்து, உடைந்து நொறுங்கிய கதவுகளைக் கொண்ட கழிப்பறைகளைப் பயன்படுத்திக்கொண்டு…எல்லா ஞாயிற்றுக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் வியாழக்கிழமையும் எனது குடும்பத்தாரை எதிர்பார்த்தவாறே சிறையில் காத்துக் கிடக்கிறேன்…

எனக்கு மட்டுமல்ல எனது குடுமபத்திற்கும் வாழ்க்கை நரகமாகவே கழிகிறது…ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்…காவல் நிலையத்திலிருந்து நீதிமன்றத்திற்கு கோரக்பூரிலிருந்து அலகாபாத்திற்கு…நீதி கிடைப்பதற்காக…ஆனால் அனைத்துமே வீண் முயற்சிகளாகின…

எனது குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட என்னால் முடியவில்லை…அவளுக்கு இப்போது ஒரு வயதும் ஏழு மாதங்களும் ஆகின்றன…குழந்தைகள் மருத்துவர் என்ற முறையில் எனது குழந்தை வருவதைப் பார்க்க முடியாதது மிகவும் வேதனையானது என்பதோடு ஏமாற்றமளிப்பதுமாகும். ஒரு குழந்தை மருத்துவர் என்ற முறையில், குழந்தைகளின் வளர்ச்சிக் காலகட்டங்களின் முக்கியத்துவத்தைப்பற்றி நான் தாய்தந்தையருக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் எனது குழந்தை நடக்கத் துவங்கிவிட்டதா, பேசுகிறதா, ஓடுகிறதா என்பது ஏதும் எனக்குத் தெரியாது…

மீண்டும் ஒரு கேள்வி என்னை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது…நான் உண்மையில் குற்றவாளிதானா…? இல்லை…இல்லவேயில்லை…!

2017 ஆகஸ்ட் 10 –ம் தேதி நான் விடுப்பிலிருந்தேன் (என்னுடைய துறைத்தலைவர் அனுமதியுடன்). என்றபோதும் எனது கடமையை உணர்ந்து ஓடோடிச் சென்றேன். அதுவா நான் செய்த தவறு?

அவர்கள் என்னை துறைத்தலைவராகவும், BRD-யின் துணைவேந்தராகவும் 100 படுக்கைகளைக் கொண்ட அக்யுட் என்கேபலைட்டிஸ் சின்ட்ரோம் வார்டின் பொறுப்பாளராகவும் மாற்றிக்கொண்டார்கள்…நான் அங்கே பணி அடிப்படையில் இளைய மருத்துவர்களில் ஒருவராவேன். 08-08-2016 அன்று தான் எனது பணிநிரந்தர ஆணையைப் பெற்றேன். அங்குள்ள NRHM- பொறுப்பு அதிகாரியும் குழந்தை மருத்துவத்துறையின் விரிவுரையாளருமாவேன்…எனது வேலை மாணவர்களுக்கு பாடம் நடத்துவதும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதுமாகும். திரவ ஆக்சிஜன் கொள்கலன், ஆக்சிஜன் சிலிண்டர் போன்றவை வாங்குவதற்கோ டெண்டர் கொடுப்பதற்கோ, பராமரிப்புப்பணி செய்வதிலோ, பணம் பட்டுவாடா செய்வதிலோ நான் எந்த பணியிலும் ஈடுபட வேண்டியதில்லை.

ஆக்சிஜன் கொடுத்து வந்த புஷ்பா சேல்ஸ் என்னும் நிறுவனம் வாயு கொடுப்பதை நிறுத்தியதற்கு நான் எவ்வாறு பொறுப்பாளியாவேன். மருத்துவத்துறை பற்றி தெரியாதவர்களுக்குக் கூட டாக்டர்கள் சிகிச்சையளிப்பவர்கள் என்றும், ஆக்சிஜன் வாங்கும் பணி செய்பவர்கள் அல்ல என்பதும் தெரியும்.

புஷ்பா சேல்ஸ் நிறுவனத்திற்கு தரவேண்டிய 68 லட்சம் ரூபாய் பாக்கியை பட்டுவாடா செய்யக்கேட்டு அந்நிறுவனம் அனுப்பிய 14 நினைவூட்டல் கடிதங்களுக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த DM, மருத்துவக்கல்வி இயக்குனர், மருத்துவக் கல்வித் துறையின் முதன்மை செயலாளர் ஆகியவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள்.

உயர்மட்ட அளவில் ஆட்சியாளர்களின் முற்றிலுமான தோல்விதான் அது…. அவர்களுக்கு பிரச்சனையின் ஆழம் புரியவில்லை. அவர்கள் எங்களை பலியாடுகளாக்கினார்கள். கோரக்பூரின் சிறைக்கொட்டடியில் உண்மையை பிணைத்து போட முயல்கிறார்கள்..!

புஷ்பா சேல்ஸ் இயக்குனர் மனீஷ் பண்டாரிக்கு ஜாமீன் கிடைத்தபோது. எனக்கும் நீதி கிடைக்குமென்றும் எனது வீட்டருடன் வாழவும் மருத்துவ சேவை செய்யவும் இயலும் என்று நாங்கள் நம்பினோம்.

ஆனால், நம்பிக்கையை இன்னும் இழந்துவிடவில்லை…நாங்கள் இப்போதும் காத்திருக்கிறோம்…

எனக்கு, ஜாமீன் பெறும் உரிமையை தருவதோடு சிறையை தண்டனையைத் தவிர்க்கவேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் கூறுகிறது…எனது வழக்கு நீதிமறுப்பிற்கான சிறந்த உதாரணம் ஆகும்.

நான் விடுதலைபெற்று எனது குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் இருக்கும் காலம் வருமென்று நம்புகிறேன். உண்மை நிச்சயம் வெல்லும்..நீதி கிடைக்கும்…!

நிராதரவாக நிற்கும், இதயம் நொறுங்கிய தந்தை, கணவன், சகோதரன், மகன், நண்பன்.

டாக்டர். கஃபீல் கான்.
18-04-2018

_______________________________________

தமிழாக்கம் – செம்பியன்