கொரனாவின் வறுமை…. இந்தியாவில்

அவள் சங்கீதாகுமாரி சோரன்.
சர்வதேச கால்பந்தாட்ட வீராங்கனை.
ஜார்கண்ட் சார்பில் ஒடிஷாவின் கட்டாக்கிலும்,
அருணாச்சலப் பிரதேசத்தின் பாஸிகாட்டிலும் தேசிய மகளிர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடியவள்.
2018இல் இந்தியா சார்பில் பூடானில் நடைபெற்ற
18 வயதுக்குட்பட்ட SAFF (தெற்காசியா கால்பந்து கூட்டமைப்பு) மகளிர் சாம்பியன்ஷிப்பிலும், அதே ஆண்டில் தாய்லாண்ட்
19 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியிலும்
பங்கேற்ற வீராங்கனை.
இப்போது மூன்று மாதங்களாக கல் சுமந்து வயிறைக் கழுவிக்கொண்டிருக்கிறாள்.
“என்ன செய்வது? வீட்டில் வறுமை. வயசான அம்மா அப்பா. அப்பாவுக்கு கண் தெரியாது.காது கேட்காது.
சகோதரன் கூலி வேலைக்குப் போகிறான்.
கொரோனா ஊரடங்கால் சாப்பாட்டுக்கே பிரச்சினை.
இந்த செங்கல் சூளையில் தினக்கூலியாக வேலை பார்க்கிறேன். காலை பத்து மணிக்குத் தொடங்கினால் மாலை ஐந்து வரை வேலை. எவ்வளவு கற்களைச் சுமக்கிறேனென்று பார்த்து ரூபாய் நூற்றைம்பதிலிருந்து இருநூறு வரை கூலி கொடுக்கிறார்கள். அம்மாவும் இங்கே என்னோடு கல் சுமக்கிறாள்….” என்று டெலிகிராப் செய்தியாளரிடம் கவலையுடன் சொன்ன சங்கீதா,
“இப்போதும் இங்கிருந்து ஏழுகிலோமீட்டர் சைக்கிளில் போய் பிர்ஸா முண்டா ஸ்டேடியத்தில் கால்பந்தாட்டப் பயிற்சி செய்கிறேனாக்கும்!” என்று பெருமிதமாகச் சொல்லும்போது,
அவள் கண்களில் நீர் ததும்புகிறது.
ஊடகங்களில் சேதி பரவி, லோகம் முழுக்க
பாரத லட்சணம் பரவியபோது –
‘சங்கிதா குமாரியின் நிலைமை நாட்டிற்கு தர்மசங்கடம். அவமானம். இந்தப் பிரச்சனையை நீங்கள் முதலில் கவனியுங்கள்…வறுமை காரணமாக செங்கல் சூளையில் பணிபுரியும் மாநிலத்தைச் சேர்ந்த சர்வதேச வீராங்கனைக்கு
உதவி செய்யுங்கள்… ஆதரவை வழங்குங்கள்….” என்று தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேக்கா ஷர்மா ஜார்கண்ட் அரசுக்கு கடிதம் எழுதினார்.
ஜார்கண்ட் பரபரத்தபோது – மாவட்ட வளர்ச்சி அதிகாரி கொஞ்சம் பணத்துடன் ரேஷன் பொருள்களையும் கொண்டுபோய் சங்கீதாவின் வீட்டில் கொடுத்து போட்டோ எடுத்துக்கொண்டார்.
‘கிலாடி கல்யாண் கோஷ்’ திட்டத்தின்கீழ் சங்கீதாவுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுமென்றும், அவளுக்கு ஒரு நிரந்தர வருமானம் ஏற்படுத்தும் நோக்கில், தன்பாத்தில் மாநில அரசால் அமைக்கப்படவுள்ள ‘பெண்கள் கால்பந்து வாரிய மையத்தில்’ பயிற்சியாளராக பணி நியமனம் வழங்கப்படுமென்று ஜார்கண்ட் அரசு அறிவித்துள்ளதாகவும் நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் டாட் காமில் படித்து மகிழ்வெய்திக்கொண்டிருக்கிறேன்.
இன்ஷா அல்லாஹ் !
நயன்தாராவுக்கு ஊசி போட்ட நர்ஸ் கையில்
ஊசியே இல்லை என்று வட்டம் சுட்டி
க்ளோஸப் படம் போட்ட ஊடக தர்மப் பக்கங்களில் தேடித் தேடிக் களைக்கிறேன் – சங்கீதாவின்
ஒரு க்ளோஸப் படம் கூட சிக்கவில்லை.