கொரோனாவால் தடுமாறும் அரசாங்கம்: அச்சுறுத்தலுக்குள் மக்கள்

கொரோனா வைரஸ் என்ற கிருமியால் உருவாக்கப்படும் ‘கொவிட்-19’ என்ற பெருந்தொற்றுநோய், ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு வடிவம் எடுக்கின்றது; திரிபடைந்த வீரியமான கொரோனா வைரஸ்களாக மக்களுடன் கலக்கின்றது.

இந்த அச்சுறுத்தல் கட்டத்தை எதிர்கொள்வதில், இலங்கை அரசாங்கம் பாரிய தோல்வியை அடைந்திருக்கின்றது. பரந்துபட்ட சுகாதாரக் கட்டமைப்பொன்று, காலங்காலமாக நாட்டில் பேணப்பட்டாலும், தீர்மானம் எடுக்கும் சக்தியாக இருக்கின்ற அரசாங்கத்தின், தூர நோக்கற்ற செயற்பாடுகளால், பாரிய பின்னடைவு ஏற்பட்டு இருக்கின்றது.

முதல் இரண்டு அலைகளில், கொரோனா வைரஸ் பரவல் கட்டங்களில், ஒவ்வொரு நாளும் 200 பேரைத் தாண்டாத அளவிலேயே தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டார்கள். உயிரிழப்புகளும் மிகவும் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன.

ஆனால், இன்றைக்கு ஒவ்வொரு நாளும், 2,000 பேரளவில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் 20க்குக் குறையாமல் பதிவாகி வருகின்றது. 22 மில்லியன் மக்கள் வாழும் நாடொன்றில், மேற்கண்ட எண்ணிக்கைகள் அச்சுறுத்தலான அளவிலானவை.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையால், இந்தியா தள்ளாடிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆயிரங்களைத் தொடுகின்றது. உத்தரப்பிரதேசம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சுகாதாரத்துறை கிட்டத்தட்ட செயலிழந்துவிட்டது.

மக்கள் வைத்தியசாலையில் இடம் கிடைக்காமல், சுவாசிப்பதற்கான ஒட்சிசன் சிலிண்டர்கள் இல்லாமல் செத்து வீழ்கிறார்கள். கண்ணுக்கு முன்னாலேயே உறவுகளின் மரணங்களைக் கண்டு மக்கள் வெதும்புகிறார்கள். மயானங்களில் சடலங்களை எரிப்பதற்கே இடம் போதாமல் ‘டோக்கன்’ முறை நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

மத்திய அரசும் மாநில அரசுகளும், பாதிப்பை எவ்வாறு கையாள்வது என்று தெரியாமல் திணறுகின்றன. இவ்வாறான நிலையொன்றை நோக்கி, இலங்கையும் விரைவில் செல்லக்கூடும் என்று, சுகாதாரத் துறையினர் எச்சரிக்கின்றனர்.

நாட்டிலுள்ள பிரதான வைத்தியசாலைகளில், நோயாளர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு நாளும் பல மடங்காக அதிகரித்து வருகின்றது. படுக்கை நெருக்கடி, ஒட்சிசன் சிலிண்டர் பற்றாக்குறை பற்றிய அறிவித்தல்கள் வெளியாகி வருகின்றன.
ஆனால், இவற்றையெல்லாம் எவ்வாறு எதிர்கொண்டு, மக்களைப் பாதுகாப்பான கட்டத்துக்குள் வைத்துக் கொள்வது என்பதில், அரசாங்கத்துக்குள் பாரிய குழப்பம் நீடிக்கின்றது. சுகாதார அமைச்சர் ஒரு கதை கூறுகிறார்; கொவிட்-19 அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் இன்னொரு தகவல் சொல்கிறார்; கொரோனா தடுப்பு பணிப்பாளரான இராணுவத் தளபதியோ வேறொரு செய்தி சொல்கிறார்; அரசாங்கத்தின் பேச்சாளர்களோ வேறு மாதிரியாகப் பேசுகிறார்கள்.

தீர்மானம் எடுக்கின்ற ஒரே கட்டமைப்புக்குள் இருந்தே, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரியாகப் பேசுகிறார்கள். அவை, ஊடகங்களில் வெளியாகி, இன்னும் இன்னும் மக்களைக் குழப்புகின்றன.

கொரோனா வைரஸ் என்பது கண்ணுக்குத் தெரியாத எதிரி. அதை எதிர்கொள்வது என்பது, நாட்டு மக்களின் சுய கட்டுப்பாட்டோடும் சம்பந்தப்பட்ட ஒன்று. ஆனால், அதை எதிர்கொள்வது சார்ந்து, அரசாங்கம் மாத்திரமல்ல, நாட்டு மக்களும் பாரிய அசமந்தமான போக்கை வெளிப்படுத்துகிறார்கள்.

கொரோனா வைரஸின் ‘மூன்றாவது அலை’ மோசமாகத் தாக்குவதற்கு, மக்களும் பாரிய பொறுப்பை ஏற்றாக வேண்டும். கடந்த, சித்திரை வருடப் பிறப்புக் காலத்தில், அதிகளவிலான மக்களின் பங்கெடுப்போடு, கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. நகரங்களில் ஆடைக் கொள்வனவு, பொருட்கள் கொள்வனவு என்று, வழக்கத்துக்கு அதிகமான மக்கள் திரட்சி ஏற்பட்டது.

அந்தத் திரட்சிகளின் போது, சுகாதார வழிமுறைகள் பெரியவில் பின்பற்றப்படவில்லை. அதன் இன்னொரு கட்டமாக, நுவரெலியாவில் அரசாங்க கட்டமைப்பின் ஆதரவோடு, ‘வசந்த விழா’ கொண்டாட்டங்கள் நடைபெற்றன. தற்போதும், பண்டிகைகளை முன்வைத்து மக்கள் திரட்சி, பாரியளவில் புடவைக் கடைகள், விருந்தகங்களில் நிகழ்த்தப்படுகின்றன.

மேற்கு நாடுகள், கொரோனா வைரஸைக் குறிப்பிட்டளவு வெற்றிகரமாக எதிர்கொண்டு, இயல்பு நிலையை நோக்கி நகரத் தொடங்கி இருக்கின்றன. ஆனாலும், அந்த நாடுகளில் நிர்வாகக் கட்டமைப்பும் சுகாதாரத் துறையும் எந்தவொரு தருணத்திலும், கொரோனா வைரஸைக் குறித்து, எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிடவில்லை.

ஆனால், இந்தியாவிலும் இலங்கையிலும், கொரோனா வைரஸ் குறித்த மதிப்பீடுகள் குறைந்திருந்தன. இந்திய அரசு, கொரோனா வைரஸை வென்றுவிட்டதாக அறிவிக்கவும் செய்தது.

அவ்வாறான கட்டமொன்றை நோக்கி, இலங்கை அரச கடமைப்பும் சென்றிருந்தது. பொதுக் கூட்டங்கள் தொடங்கி, பாரிய மக்கள் திரட்சியுள்ள நிகழ்வுகள் இடம்பெற்று இருக்கின்றன. அத்தோடு, பாதுகாப்பு நடவடிக்கைகள், அதிக பட்சம் நகரங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டன.

கொரோனா வைரஸ் ப​ரவலால் மக்கள் நோய்வாய்ப்படுவதைத் தடுக்கும் வகையில், முதல் கட்டத்தில் கிடைத்த தடுப்பூசிகளைச் செலுத்துவதை, சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நிர்வாகக் கட்டமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் கொழும்பு உள்ளிட்ட நகரப் பகுதிகளில் வசிப்பவர்கள் என்றுமே அரசாங்கம் மட்டுப்படுத்தியது.
அத்தோடு, முதல் கட்டமாகத் தடுப்பூசிக்களைக் பெற்ற பின்னர், இரண்டாம் கட்டமாக எவ்வாறு தடுப்பூசிகளைப் பெறுவது என்பது சார்ந்தும், தடுப்பூசிகளை மக்களுக்குச் செலுத்துவது தொடர்பான பொறுப்புமிக்க அதிகார மட்டம் அசமந்தமாக இருந்தது.

அதுதான், இன்றைக்கு மூன்றாவது அலையின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், ஒவ்வொரு நாட்டிடமும் தடுப்பூசிகளுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை வந்திருக்கின்றது. ஏற்கெனவே, இந்தியாவிலிருந்து கிடைக்கப்பெற்ற ‘கொவிசீல்ட்’ தடுப்பூசியைப் பெற்ற இலட்சக்கணக்கான மக்கள், அதன் இரண்டாவது தடுப்பூசிக்காக காத்திருக்கிறார்கள்.

ஒரு தயாரிப்பு வகையான தடுப்பூசியை, ஏற்கெனவே செலுத்தினால், அதே தயாரிப்பு வகையான தடுப்பூசியையே இரண்டாவது தடவையாகவும் செலுத்த வேண்டும் என்கிற அறிவுறுத்தல் உலகம் பூராவும் காணப்படுகின்றது.

அவ்வாறான நிலையில், அரசாங்கத்தின் பேச்சாளரான உதய கம்மன்பில, இரண்டாவது தடுப்பூசியாக, இன்னொரு தயாரிப்பு வகையான ஊசியொன்றைச் செலுத்த முடியும் என்கிறார்.

ஆனால், அது தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் எந்தவித உத்தரவாதத்தையும் இதுவரை வழங்கவில்லை. சுகாதாரத் துறையினரின் ஆலோசனைகள் இன்றி, தான்தோன்றித்தனமாக, தீர்மானங்களை, அரசாங்கம் மக்களை நோக்கி வீசுகின்றது. இவை, தேர்தல் மேடைகளில் வழங்கப்படும் வாக்குறுதிகளுக்கு ஒப்பானவையாகவே இருக்கின்றன.

மாறாக, தூர நோக்கும் கண்ணியமும் உள்ள மக்களின் பாதுகாப்பில் அக்கறையுள்ள ஒரு பொறுப்புமிக்க அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஒன்றாகத் தெரியவில்லை.

உலகில் வல்லரசு நாடுகள், பணக்கார நாடுகளையே கதிகலக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸூக்கு, ஏழை நாடுகள் எம்மாத்திரம்? அதிலும், பொருளாதார ரீதியில் அதிகம் பின்னடைவைச் சந்தித்துள்ள நாடான இலங்கை, பாரிய அச்சுறுத்தலுள்ள கொரோனா வைரஸை எதிர்கொள்வது அவ்வளவு இலகுவானது இல்லைத்தான்.

அப்படியான நிலையில், கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான திட்டமிடமும் அதற்கான திறனும் அதியுச்சத்தில் பேணப்பட வேண்டும். கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பிலும், அதியுச்ச பலனைப் பெற முயற்சிக்க வேண்டும்.

அதற்கு, கொரோனோ வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளில், அரசியலுக்கு அப்பாற்பட்டு நின்று, திறந்த மனதோடு அரச கட்டமைப்பு பயணிக்க வேண்டும். மாறாக, நெருக்கடியான கட்டங்களில் நின்று, அரசியல் ஆதாயங்களை தேடும் கீழ்த்தரமான வேலைகளைச் செய்யக்கூடாது.

கொரோனா வைரஸ் என்ற கொடியோனை தோற்கடிக்கவில்லை என்றால், இலங்கையை பொருளாதார பின்னடைவுகள் மாத்திரமல்ல, சமூக, சுகாதார பின்னடைவுகளும் ஆக்கிரமிக்கும். அதிலிருந்து மீள்வதென்பது, சில தசாப்தங்களுக்கு முடியாது போகலாம்.