சிங்களப் பெருந்தேசியவாத எழுச்சியில் துரோகியானார் தியாகி

அந்த வகையில், இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பே, இந்தச் சிங்களத் தேசியவாதத் தேசப்பற்றுச் சிந்தனையால், கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டனர்.
ஆங்கிலேயரின் வெளியேற்றமும் இலங்கையின் சுதந்திரப் பிரகடனமும் இந்நிலைமைகளை மாற்றி அமைத்ததோடு மாத்திரமல்லாமல், இலங்கைத்தீவில் இரண்டாவது பெரும்பான்மை இனமாக இருந்த தமிழ் பேசும் மக்கள், தமக்கு முறையான உரிமைகள் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்தார்கள்.

அந்த உரிமைகளை அடைந்து கொள்வதற்கான அரசியல் பயணம், இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மூலமும் தொடர்ந்து, இலங்கைத் தமிழரசுக் கட்சி மூலமும் முன்னெடுக்கப்பட்டு, சமஷ்டி நோக்கி நகர்த்திய பொழுது, தமிழர் மீதான வன்முறை அரசியல் ஆரம்பிக்கப்பட்டது.

இது, 1956ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டம் அமுலாகிய போது, பெரும் வெடிப்பாகியது. இதைத் தொடர்ந்து, 1960களிலும் 1970களிலும் 1980களிலும் தமிழ் மக்கள் மீது, இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதன் தொடர்ச்சியின் உச்சமே, 1983 இனக்கலவரமும் ஆயுதப் போராட்ட வரலாற்றின் அபரிமித வளர்ச்சியும் ஆகும்.

இத்தகைய சூழலில், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தன்னை முன்னிலைப்படுத்தும் நோக்கத்துடன் காய்களை நகர்த்திய இந்தியா, இலங்கையைக் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடன், தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை வளர்த்தது. இதன் எதிரொலி, இந்தியாவில் தமிழ் போராட்டக் குழுக்களின் பயிற்சி முகாம்கள் பல முளைத்தன; பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

இலங்கையில் வடக்கு, கிழக்குப் பகுதி எங்கும் ஆயுதப் போராட்டம் உச்சக்கட்ட வளர்ச்சி நோக்கிப் பயணித்தது. 1987இல், ஐ.தே. க அரசாங்கம் ஆட்சியில் இருந்தது. ஜே.ஆர். ஜெயவர்தனா, ஜனாதிபதியாகவும் லலித் அத்துலத் முதலி பாதுகாப்பு அமைச்சராகவும் பதவிவகித்தார்கள்.

அந்தச் சூழலில், ‘ஒப்பரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம், வடமராட்சிப் பகுதி இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. அத்தகைய சூழலில், இந்தியப் பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தார். அவர் இந்த இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவரவும் தமது நாட்டின் தேசிய நலனைக் கருத்தில் கொண்டும் விடுதலைப் போராட்டக் குழுக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடனும், தமது இராணுவத்தைக் கொண்டு, ‘ஒப்பரேசன் பூமாலை’ என்னும் பெயர் சூட்டப்பட்ட ஒரு இராணுவ நடவடிக்கை மூலம், வான்வெளி ஊடாக, யாழ்ப்பாணத்தின் பிரதேசங்கள் மீது, உணவுப் பொட்டலங்களை விநியோகித்திருந்தார். இந்நடவடிக்கை, இலங்கையின் இறைமையை மீறும் வகையிலும் இலங்கையை அச்சுறுத்தும் வகையிலும் ​அமைந்திருந்தது.

இதைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி – ஜே.ஆர். ஜெயவர்தனா ஆகியோருக்கிடையில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. இதன் மூலம், இந்தியாவின் தேசிய நலன் பாதுகாக்கப்பட்டதுடன் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கான, அதிகாரப் பகிர்வை அடிப்படையாகக் கொண்ட 13ஆவது திருத்தச் சட்டமும் மாகாண அமைப்பு முறையும் இலங்கையில் அமுலாகுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

ஒப்பந்தத்துக்கு வருகை தந்த ராஜீவ் காந்தி, இலங்கையின் கடற்படைச் சிப்பாய் ஒருவரால் தாக்கப்பட்ட நிலையில், அவ்வதிகாரி சிறையில் அடைக்கப்பட்டார். அவர், பின்நாளில் ‘பூமி புத்திர’ என்ற அரசியல் கட்சியை உருவாக்கி இருந்தார்.

இந்தப் பின்புலத்தில், இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை, இந்திய ஆக்கிரமிப்பாக அன்றைய பிரதமர் ரணசிங்க பிரேமதாஸ முற்றாக வெறுத்தார்; எதிர்த்தார். 1987இல் ஒப்பந்தத்தின் மூலம், புலிகளின் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்படும் நோக்கில், புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் யாழ்ப்பாண சுதுமலைப் பிரகடனம் அமைந்தது.

“தமிழ் மக்களின் பாதுகாப்பை, இந்தியாவை நம்பி ஒப்படைக்கிறோம்” எனக்கூறி, அதைத் தொடர்ந்து, ஆயுத ஒப்படைப்புகளும் நிகழ்ந்தன. இந்தச் சூழலில், இந்தியா வாக்குக் கொடுத்ததை நிறைவேற்றுவதில் நடந்த தாமதங்கள், புலிகளின் தளபதிகளான குமரப்பா புலேந்திரன் குழுவினரது மரணங்கள், அதைத் தொடர்ந்து தியாகி திலிபனின் உண்ணாவிரதப் போராட்டம், அவரது சாவு மீண்டும் புலிகளை ஆயுதம் எடுத்துப் போராடத் தூண்டியது. இதனைப் பிரேமதாஸ ஆதரித்தார்.

அப்போது, அவர் இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுள்ள இரண்டாவது ஜனாதிபதியாகத் தெரிவாகியிருந்த காலகட்டம். இலங்கையின் இறைமையை மீறிய, இலங்கைத் தமிழருக்கு மாகாண தீர்வை முன்வைத்த, தமிழ்த் தீவிரவாதத்தை ஆயுதமும் பயிற்சியும் கொடுத்து வளர்த்த, சிங்கள மக்களின் நிம்மதியைக் குலைத்த, இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதற்கு, அந்த இராணுவம் பயிற்சி கொடுத்து வளர்த்தவர்களைக் கொண்டே நடவடிக்கை எடுத்தார்.

அதன்மூலம், ஏவியவனையும், ஏவப்பட்டவனையும் மோதவிட்டு, அதாவது, இந்திய இராணுவத்தைத் தமிழ் போராட்டக் குழுக்களுக்குப் பகையாளியாக்கி, தமிழரை அழித்து, ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பிரேமதாஸ முயன்றார்.

இச் செயற்பாட்டில் மூலம், சிங்கள இராணுவமும் சிங்கள மக்களும் போராடாத ஒரு போருக்காக, அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி, போராட வைத்து, இறுதியில் 1989இல் நாட்டைவிட்டு இந்திய இராணுவத்தை வெளியேற்றவும் செய்தார்.

இந்தச் சிங்களப் பெருந்தேசியவாதத் தேசப்பற்று நடவடிக்கை, ஆனையிறவு இராணுவ வீரர்கள், கருணாவால் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகவும், அறந்தலாவவில் பௌத்த பிக்குகள் படுகொலை செய்யப்பட்ட விவகாரமும் இன்று, தேர்தல் பிரசார பேச்சு விவகாரத்தின் காரணமாக, பொதுசன பெரமுன ஆட்சியாளர்களைப் பெரும் சங்கடத்துக்கு உள்ளாக்கியிருந்தது.

பெருந்தேசியவாத பிரசாரத்தை அடிநாதமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட அறுதிப் பெரும்பான்மைக் கனவையும் ஆட்சி அதிகாரக் கனவையும் கருணாவின் கருத்தாடல் சின்னாபின்னப்படுத்தி விடுமோ என, அச்சம் மேலிடவும் கருணாவின் விவகாரம் தொடர்பாக எழும் சங்கடங்கள், பல்வேறு தேசிய , சர்வதேச சட்டச் சிக்கல்களையும் உண்டுபண்ணிவிடுமோ என, ராஜபக்‌ஷ அரசு அஞ்சியது.

ராஜபக்‌ஷக்கள் சார்பாக, கருணா விவகாரத்தைச் சமாளிக்கவும் கருணாவைப் பாதுகாக்கவும் முக்கியமான பிரசார வியூகமொன்றை, ராஜபக்‌ஷ தரப்பு வகுத்து, தமது எதிர்த்தரப்பில் சக்தி வாய்ந்த அமைப்பாகப் பார்க்கப்படும் சஜித் தரப்பின் பிரசாரத்தை ஆட்டம் காண வைக்க, மிகப்பெரும் வரலாற்றுத் திரிபுவாத வெடிகுண்டு ஒன்றைத் தமது பெருந்தேசியவாதக் கட்டமைப்பு சிதைவுபடாத வகையில், தமது எதிரியின் பிரசாரம் தவிடுபொடியாகும்படி, இந்திய- இலங்கை ஒப்பந்தக் கதையை, முழுப்பூசணிக்காயை எடுத்து, பெருந்தேசியத் திரிபுவாதம் என்னும் சோற்றுக்குள் புதைத்துவிட்டார்கள். இது, ‘காகம் இருக்கப் பனம் பழம் விழுந்த கதைபோல்’ சஜித் தரப்பினரைச் சிக்கலுக்குள் மாட்டிவிட்டது.

ராஜபக்‌ஷக்களைப் பொருத்தவரையில், அதிகாரவெறி என்பது அவர்களுக்கு அளவு கடந்தது. அந்த வேட்கை காரணமாக, நாட்டுப் பற்றாளரான ரணசிங்க பிரேமதாஸவை, சிங்கள தேசத்தின் துரோகியாகச் சிங்கள பெருந்தேசியவாதத்துக்கு அடையாளப்படுத்தி, சிங்கள இனத்துக்கு வரலாற்றுத் துரோகம் இழைத்த கட்சிகளாக ஐ.தே.க, சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியையும் அடையாளப்படுத்தி, அவர்களை சிங்கள பெருந்தேசிய வாத எழுச்சியில் காணாமல் ஆக்கி, சிங்கள பெருந்தேசியவாதத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க ராஜபக்‌ஷக்கள் முனைந்துள்ளனர்.

உண்மையில், உணர்வெழுச்சி மூலம் சிங்களப் பெருந்தேசியவாதத்தையே தமது போலிப் பிரசாரங்கள் மூலம் வரலாற்றைத் திரிபுபடுத்தி உண்மைக்குப் புறம்பான வகையில் அந்நிய சக்திகளுக்கு எதிராகவும் தாய் நாட்டுக்காகவும் தன்னைத் தியாகம் செய்தே ஒரு தேசப்பற்றாளரான அமரர் ரணசிங்க பிரேமதாஸவை, ராஜபக்‌ஷக்கள் தமது பெருந்தேசியவாத சுயலாப வரலாற்றுத் திரிபுவாத கருத்தாடல்கள் மூலம் ,சிங்கள மக்களின் துரோகியாகப் பிரகடனப்படுத்தி இருப்பது என்பது, அவர்கள் தங்கள் அதிகார நலன்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக எதையும் செய்வார்கள் என்பதை மிகத் தெளிவாக கோடிட்டுக் காட்டுகின்றது.

இந்தப் பின்புலத்திலேதான் ராஜபக்‌ஷக்கள் இன்று கருணாவைப் பாதுகாப்பதற்கு பல்வேறு செயற்பாடுகளையும்,பிரசாரங்களையும் முன்னெடுத்துள்ளார்கள். கருணாவும் கடந்த வார கட்டுரையில் குறித்துரைத்துள்ள விடயங்களின் அடிப்படையில் தப்பிப் பிழைத்துள்ளார்.

ஆயினும் இந்தப் பெருந்தேசியவாத மாயை உடைபடும் தருவாயில் கருணாவின் நிலை என்னவாகும்.

சிங்களத் தேசியத்தின் தியாகி பிரேமதாஸ, சிங்கள பெருந்தேசியவாத எழுச்சியில் துரோகியாகிய போது, சிங்களப் பாரம்பரிய இனவாதிகள் நட்போடும் அன்போடும், தமது செல்லப்பிள்ளையாக, சிங்கள மக்களின் விமோசனத்தின் கருவியாகப் பார்க்கப்பட்ட கருணா, அவரது மேடைப் பேச்சு காரணமாக ஒரு கணப்பொழுதில் துரோகியாகப் பார்க்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் எனப் பல்வேறு எதிர்வினைகளைச் சந்தித்த கருணா, இத்தகைய அதிகார மமதையினரிடத்தில் இருந்தால் அல்லது எதிர்த்தால். அவருக்கு என்ன கிடைக்கும்? காலம் பதில் சொல்லும்.