சிம்பாப்வே: ஆபிரிக்காவின் கலகக்காரன்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலக அரசியல் அரங்கில் கலகக்காரர்களுக்கு தனியான இடமுண்டு. கலகக்காரர்கள் எல்லோரும் ஓரே இயல்புடையவர்கள் அல்லர். அவர்கள் வாழ்ந்த காலம், இடம், உலகச் சூழல் என்பனவும் அவர்களின் நடத்தையுமே அனைத்தையும் தீர்மானிக்கிறது. கலகக்காரர்களே உலக அரசியல் அரங்கை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள் என்பதைத் துணிந்து சொல்லவியலும். அவர்கள் இல்லாவிடின் ஒற்றைப் பரிமாண உலக அரசியலை சத்தமின்றி ஏற்று நடக்கும் இயல்புடனேயே உலகம் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால், உலகம் இப்போது அவ்வாறு இயங்குவதில்லை. அவ்வாறு இயங்குவதையே அதிகார மையங்கள் விரும்புகின்ற போதும் அது சாத்தியமாவதில்லை.

காலங்காலமாக பல்வேறு கலகக்காரர்கள் அதிகாரமையங்கள் விரும்பிய உலக ஒழுங்கைக் கலைத்துப் போட்டிருக்கிறார்கள்; மாற்றுச் சிந்தனையைத் தூண்டியிருக்கிறார்கள். இன்று, உலக ஒழுங்கின் தன்மைகள் மாறி வருகிற சூழலில் கலகக்காரர்களின் தன்மையும் மாறியுள்ளது. இருந்தபோதும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில அரசாங்கத் தலைவர்கள் இன்னமும் கலகக்காரர்களாக இருக்கிறார்கள்.

உலகின் மிக வயதான அரசாங்கத் தலைவராகத் திகழ்கின்ற சிம்பாப்வே நாட்டின் ஜனாதிபதி ரொபேட் முகாபே கடந்த வாரம் தனது 93 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். இது மீண்டுமொரு முறை, உலக அரசியல் அரங்கின் பார்வையை சிம்பாப்வேயின் மீது குவித்திருக்கிறது.  மீண்டுமொருமுறை சிம்பாப்வேயில் ஆட்சிமாற்றம் அவசியம் தேவை என மேற்குலக நாடுகளின் விருப்பத்தை ஊடகங்கள் பிரதிபலிக்கின்றன. ஏன் மேற்குலக நாடுகள் சிம்பாப்வேயில் ஆட்சி மாற்றத்தைக் கோருகின்றன?

இதுவே முகாபேயைக் கலகக்காரனாக நிலைநிறுத்துகின்றது. அமெரிக்காவும் மேற்குலகும் கடந்த அரைநூற்றாண்டுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் வேண்டிய வகையில் ஆட்சிமாற்றங்களைச் சதிகளின் மூலமும் இராணுவப்புரட்சிகளின் மூலமும் படையெடுப்புகளின் மூலமும் சாத்தியமாக்கி வந்துள்ளது.

ஆனால், கடந்த மூன்று தசாப்தங்களில் சிம்பாப்வேயில் இதைச் செய்து முகாபேயைப் பதவியிலிருந்து அகற்ற இயலவில்லை. ஈராக்கில் சதாம், லிபியாவில் கடாபி போன்றே முகாபேயையும் அகற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

கொலனியாதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த பல நாடுகளின் சுதந்திரம் உண்மையான சுதந்திரமாக இருக்கவில்லை. இதன் இன்னொரு வடிவமாக இப்போது சுதந்திர நாடுகள், அமெரிக்காவில் ஏதோவொரு இருட்டறைக்குள் நிச்சயிக்கப்படுகின்றன.

ஒரு தேசத்தை நிரந்தரமாகவே பிளந்து, பத்துப் பதினைந்து நாடுகளாக்குவதில் பிரித்தானியக் கொலனித்துவத்தை இதுவரை யாரும் மிஞ்சவில்லை.

அரபு மண்ணில் அவர்கள் கிழித்த கோடுகள்தான் இன்றும் அரபு மக்களைப் பிளவுபடுத்தியுள்ளன. தேசம் என்றாலே என்னவென்று சிந்தித்திராத ஆபிரிக்க மக்களை, நாடுகளாக எல்லை பிரித்து, இல்லாத பகைமைகளை உருவாக்கியதில் ஒவ்வொரு ஐரோப்பிய கொலனிய ஆட்சிக்கும் பங்குண்டு.

அவர்களுடைய கொலனி ஆட்சிக் காலம் முடிந்தாலும், கொலனிய அதிகாரம் போய்விடவில்லை. சில இடங்களில் புதிய எசமானர்கள் வந்து சேர்ந்தனர். வேறு இடங்களில் பழைய எசமானர்களின் நலன்களைப் பேணுகின்ற விதமான சமரசங்களுக்கு சுதந்திரம் என்று பேரிடப்பட்டது. விடுதலைக்காக எங்கும் போராட்டங்கள் நடந்தன.

போராடி வெல்லப்பட்ட சுதந்திரம் ஒவ்வொன்றுக்கும் பல விதங்களில் குழிபறிக்கப்பட்டது. இதுதான் மூன்றாம் உலக நாடுகளின் துன்பக் கதையாகத் தொடர்கிறது.

இரத்தம் சிந்திப் பெறப்பட்ட விடுதலைகள் வீணாயின. சில தலைவர்களுடன் செய்யப்பட்ட சமரசங்கள் அந்த நாடுகளின் சுதந்திரத்துக்கும் அண்டை நாடுகளின் சுதந்திரத்துக்கும் ஆப்பு வைத்தன.

இன்று ஆபிரிக்காவில், ஐரோப்பிய கொலனிய எசமானர்களின் இடம் அமெரிக்காவிடம் பறிபோய்க்கொண்டிருக்கிறது. இந்தப் பின்புலத்தில் சிம்பாப்வேயையும் அதன் கலகக்காரனையும் நோக்குதல் தகும்.

சிம்பாப்வே ஆபிரிக்கக் கண்டத்தின் தென்பகுதியில் தென்னாபிரிக்கா, பொஸ்ட்வானா, ஸம்பியா, மொசாம்பிக், நமீபியா ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்ட நாடாகும். 13 மில்லியன் மக்கள் சனத்தொகையில் 99 சதவீதமான கறுப்பு ஆபிரிக்கர்களையும் வெறும் 0.2 வௌ்ளை வெள்ளை ஆபிரிக்கர்களையும் கொண்ட இந்நாட்டில் 16 மொழிகள் தேசிய மொழிகளாக அங்கிகரிக்கப்பட்டுள்ளன.

‘சுதந்திரம், ஒற்றுமை, உழைப்பு’ என்பது சிம்பாப்வேயின் மகுட வாக்கியமாகும். இப்பகுதி பண்டைய வரலாற்றில் புகழ்பெற்ற நாகரிகமொன்றின் இருப்பிடமாக இருந்தது.

11 ஆம் நூற்றாண்டில் இருந்து, பல்வேறு அரசாட்சிகளுக்கு உட்பட்டதாக இருந்த இப்பகுதி, பிரதான வர்த்தகப் பாதையாகவும் இருந்தது.

1890 இல் சிசில் ரோட்ஸ் தலைமையிலான பிரித்தானிய, தென் ஆபிரிக்கக் கம்பெனி இப்பகுதியை முதன்முறையாக எல்லையிட்டு ‘ரொடீசியா’ எனப் பெயரிட்டது.

இரண்டாம் உலகப் போரின் முடிவின் பின்னர், ஏனைய கொலனியாதிக்க நாடுகளில் நடைபெற்றது போல, சிம்பாப்வேயிலும் பிரித்தானிய ஆட்சிக்கெதிரான விடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்றது.

1950 களில் ஆபிரிக்கத் தேசியவாதத்தின் எழுச்சியும் ஆபிரிக்கக் கண்டம் முழுவதிலுமான அதன் செல்வாக்கும் சிம்பாப்வேயின் கொலனிய விடுதலைப் போராட்டத்துக்கு உத்வேகமளித்தது.

ஆனால், ஏனைய பிரித்தானிய கொலனிகளில் நடைபெற்றது போலல்லாது புதிய திருப்பமொன்றை சிம்பாப்வேயின் விடுதலைப் போராட்டம் கண்டது.

விடுதலைப் போராட்டம் வளர்ந்து, வலுவடைந்து, கறுப்பர்களின் கைக்கு அதிகாரம் கை மாறுவதற்கு முதல், 1965 அளவில் சிம்பாப்வே ஒருதலைப் பட்சமாகச் சுதந்திரப் பிரகடனம் செய்துகொண்டது.

இது கறுப்பு இனத்தவரது பிரகடனமல்ல. மாறாக நாட்டின் இரண்டே சதவீதத் தொகையினரான வெள்ளைக் குடியேற்றக்காரர்களது பிரகடனம்.இதைச் செய்தது இயன் ஸ்மித் தலைமையிலான ‘ரொடிசீய முன்னணி’யாகும்.

இச்செயலுக்குத் தூண்டுகோலாக இருந்தது தென்னாபிரிக்காவின் நிறவெறி ஆட்சி. வெள்ளைக் குடியேற்றவாதிகளான பிரித்தானியர்கள், சுதந்திரத்தை பெரும்பான்மை கறுப்பர்களிடம் கையளித்துச் செல்வது தங்களுக்கு ஆபத்தானது என்பதை உணர்ந்தனர்.

மேலும், இயற்கை வளங்கள் நிறைந்த சிம்பாப்வே போன்றதொரு நாட்டை, அவ்வளவு இலகுவில் விட்டுக்கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. பிரித்தானிய ஆட்சிக்கு எதிராகச் செய்யப்பட்ட இச்சுதந்திரப் பிரகடனத்தை எதிர்ந்துப் படைகளை அனுப்பி, சிம்பாப்வேயை முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவர பிரித்தானியா முயலவில்லை.

மாறாக, வெள்ளை ஆட்சி அவர்களுக்குப் பயனுள்ளது என அவர்கள் அறிவார்கள். இந்நிலையில், எப்படியும் தென்னாபிரிக்கா மூலமும் மொசாம்பிக் மூலமும் வணிகம் நடக்கும் என அறிந்துகொண்டே, வணிகமும் தடை என்று நாடகமாடியது.

கொலனியாதிக்க விடுதலைக்கு எதிரான கறுப்பின சிம்பாப்வேயினரின் போராட்டம் பின்னடைவைச் சந்தித்திருந்த நிலையில், இயன் ஸ்மித்தின் ஆட்சிக்கு எதிராக, கறுப்பின சிம்பாப்வேயினரின் பிரதிநிதியாக ரொபேட் முகாபேயின் தலைமையிலான ஆபிரிக்கத் தேசிய ஒன்றியம் (ஸானு) போரிடத் தொடங்கியது.

‘ஸானு’வின் போராட்டத்துக்கு ஏனைய ஆபிரிக்க நாடுகளின் இடதுசாரிகளின் முழுமையான ஆதரவு இருந்தது. கெரில்லாப் போராட்டம் முனைப்படைந்து, ஸ்மித்தின் அரசாங்கம் வீழ்வது உறுதியாகிவிட்ட நிலையில், இடையில் தலையிட்ட பிரித்தானியா, 1979இல் தங்களுக்கு சார்பான நேதன் சித்தோலே என்ற கறுப்பினப் பாதிரியாரை ஆட்சியில் அமர்த்தி, தனது கைப்பொம்மை அரசை நிறுவ முயன்றது.

தொடர்ந்தும் போராடிய ‘ஸானு’ 1980 இல் பிரித்தானியாவில் இருந்து சுதந்திரத்தைப் பெற்றெடுத்ததோடு ‘ரொடீசியா’ என்ற பெயரை சிம்பாப்வே என மாற்றிக் கொண்டது.

சுதந்திரம் வெல்லப்பட்ட போதும், பிரித்தானிய கொலனிய நலன்களையும் வெள்ளைக் குடியேற்றக்காரர்களது சொத்துடைமைக்கும் பாதுகாப்பாக, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

இவை, வெள்ளைக் குடியேற்றக்காரர்கள் தொடர்ந்தும் சிம்பாப்வே பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த வழி செய்தன. இதை, நிரந்தரமாக ஏற்பதானால் அது சுதந்திரத்தையே அர்த்தமற்றதாக்கி விடும் என முகாபேயின் ஆட்சி அறிந்திருந்தது. எனவே, முகாபே சிம்பாப்வேயின் பொருளாதாரத்தை ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து விடுவிக்கின்ற நோக்கில், பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதாயிற்று. இவை, மேற்குலகுக்கும் முகாபேயின் ஆட்சிக்குமிடையிலான நேரடி மோதலாக உருவெடுத்தன.

முகாபேயின் சோசலிஸ செயற்திட்டங்கள் வெள்ளைக் குடியேற்றக்காரர்களின் நலன்களுக்கும் மேற்குலக நாடுகளின் நலன்களுக்கும் பாதகமான இருந்தன.

குறிப்பாக கனிய வளங்கள், தங்கம் என்பவற்றைத் தோண்டும் சுரங்கக் கம்பெனிகள், தேசிய மயமாக்கப்பட்டமையை ஏற்க இயலவில்லை.

உலகின் மிகப்பெரிய பிளாட்டினச் சுரங்கங்களை சிம்பாப்வே கொண்டிருக்கிறது. முகாபேயின் இந்நடவடிக்கைகளுக்குக் குழிபறிக்க, தென்னாபிரிக்காவின் நிறவெறி அரசு பயன்பட்டது.

முகாபே சோஷலிஸப் பொருளாதாரம் பற்றித் திட்டமிட்ட காலத்தில், சர்வதேச மட்டத்தில் மேற்குலகு, தன்னைப் புதிய நவகொலனிய முறைக்கு ஆயத்தப்படுத்தி விட்டது.

1950 முதல் விடுதலை பெற்ற நாடுகள் பலவற்றின் தலைமைகள், மேற்குலகுடனும் சர்வதேச நிதி மூலதனத்துடனும் சமரசத்துக்கு ஆயத்தமாகி விட்டன.

தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சி நீக்கப்பட்டபோது, மண்டேலா, வெள்ளை அதிகார வர்க்கத்துடன் மட்டுமன்றி, ஏகாதிபத்தியத்துடனும் பல சமரசங்களைச் செய்து கொண்டார்.

இக்காலகட்டம், சோவியத் யூனியனின் உடைவு, கிழக்கு ஜரோப்பாவின் ‘சோஷலிஸ’ அரசுகளின் சரிவு என்பனவற்றையும் கொண்டிருந்த ஒன்று. எனவே, 1990 இற்குப் பின்பு சிம்பாப்வேயின் நிலைமை மேலும் கடினமாகியது.

விவசாய மையப் பொருளாதாரமான சிம்பாப்வேயில், 1990 களில் 70 சதவீதமான பயிர்ச்செய்கை நிலங்கள், சிம்பாப்வே சனத்தொகையில் 0.6 சதவீதமான வெள்ளைக் குடியேற்றக்காரர்களின் கைகளில் இருந்தன.

இதனால் 1997 இல் நிலச் சீர்திருத்தத்தை முகாபே நடைமுறைப்படுத்தினார். 6,000 வெள்ளைக் குடியேற்றக்காரர்களின் கைகளில் இருந்த நிலமானது 245,000 சிம்பாப்வே விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதன் விளைவால் நாட்டின் 40 சதவீதமான புகையிலை மற்றும் 49 சதவீதமான தானியங்கள் ஆகியன இவ்வாறு நிலங்களைப் பெற்ற விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்டன.

சிம்பாப்வேயின் பயிர்ச்செய்கை நிலங்களையெல்லாம், அங்கு ஒரு நூற்றாண்டுக்கு மேலாக ஆண்டு அனுபவித்து, சிம்பாப்வே மக்களின் உழைப்பை உறிஞ்சி வாழ்ந்த, வெள்ளையர்களின் வசம் இருந்த நிலத்தை ஆபிரிக்கர்களுக்குப் பங்கிட்ட முகாபேயின் செயலுக்கு மன்னிப்பு வழங்க மேற்குலகு தயாராக இல்லை.

சிம்பாப்வேயிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. அவை, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளன.

சிம்பாப்வே பொதுநலவாய நாடுகளின் அங்கத்துவத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிம்பாப்வே பொதுநலவாயத்திலிருந்து நிரந்தரமாக நீங்குவதாக அறிவித்தது.

இன்று, சிம்பாப்வேயின் பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்துள்ளது என்பது உண்மை. பண வீக்கம், வீதங்களில் சொல்லப்பட்ட நிலை மாறி, மடங்குகளில் அதுவும் நூற்று மடங்குகளில் சொல்லப்படுகின்ற அளவுக்குச் சென்றுள்ளது.
உணவு ஏற்றுமதி செய்து வந்த நாடு, உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்குகிறது. இதற்கான பழி முழுவதும் முகாபே ஆட்சியின் மீது சுமத்தப்படுகிறது.

இந்த நிலை எப்படி ஏற்பட்டது என்பது பற்றி எதுவும் சொல்லப்படுவதில்லை. நிருவாகச் சீர்குலைவு, ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் என்கின்ற குற்றச்சாட்டுகள் வாய்ப்பாடு மாதிரி நம்பப்படுகின்றன.

இக்குற்றச்சாட்டுகளில் உண்மை உண்டு. ஆனால், சிம்பாப்வேயின் பொருளாதாரச் சீர்குலைவுக்கு முக்கியமான காரணம், கடந்த பதினைந்து ஆண்டுகளாக சிம்பாப்வே மீது விதிக்கப்பட்டுள்ள பல்வேறு வணிகத் தடைகளும் பொருளாதார நெருக்குவாரங்களுமே என்பது சொல்லப்படுவதில்லை.

1990 களில் கொங்கோவின் தலைவராக லோரன்ட் கபீலா, தலைமையேற்ற அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கத்துடன் அமெரிக்கா, பிரித்தானிய ஆதரவுடன் ருவாண்டா மற்றும் உகாண்டா படைகள் கொங்கோவை ஆக்கிரமித்திருந்தன.

அப்போது, கபீலாவுக்கு சார்பாகப் படைகளை அனுப்பி, ஆக்கிரமிப்பை முறியடித்தமை மேற்குலக நலன்களுக்கு எதிரான முகாபேயின் நடவடிக்கைகளில் ஒன்று.

இன்றுவரை எந்தவொரு அமெரிக்கத் தளத்தையும் உருவாக்க சிம்பாப்வே இடமளிக்கவில்லை. பூகோள மூலோபாயத் தேவைகளுக்கு, அமெரிக்காவின் ஆபிரிக்கக் கட்டளைப் பிரிவின் பிரசன்னமோ ‘இராணுவ ஆலோசகர்களது’ பிரசன்னமோ சிம்பாப்வேயில் இல்லை.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், 1980 இல் சுதந்திரமடைந்தது முதல் அமைதியான நாடாக சிம்பாப்வே இருந்து வருகிறது.

முன்னெப்போதையும் விட, அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடியான கட்டத்தை நோக்கி சிம்பாப்வே நகர்ந்து கொண்டிருக்கிறது.

இன்றும் சிம்பாப்வேயின் கிராமப்புற ஆபிரிக்கர்களிடையே முகாபேயிற்கு முழுமையான ஆதரவு இருக்கிறது. ஆனால், முகாபே தனது இறுதிக் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். தனக்குப் பின்னர் ‘ஸானு’க் கட்சியை யார் நடாத்தப் போகிறார்கள் என்பதை அவர் அறிவிக்காமல் தவிர்த்து வருகிறார்.

‘ஸானு’க் கட்சியில் உபஜனாதிபதி தலைமையிலான ஒரு குழுவும் ‘ஸானு’வின் இளைய தலைமுறையினரைக் கொண்ட இன்னொரு குழுவும் அதிகாரத்தைக் கைப்பற்ற போட்டியிடுகின்றன.

முகாபேயின் மனைவியான கிரேஸ் மருபூ ஆதரவு, இளைய தலைமுறையினர் குழுவுக்கு உண்டு. அதன் வழி அடுத்த தலைவராக கிரேஸ் உருவெடுக்கக்கூடும்.

காலம் கடந்து செல்லும் காலமதில், நேற்றைய நாயகர்கள் அரங்குகளில் இருந்து விலகுகிறார்கள். அது ரொபேட் முகாபேயிற்கும் நடக்கும்.

ஆனால் ஆபிரிக்காவின் கலகக்காரனாக சோசலிஸம் பின்னடைவைச் சந்தித்த வேளையிலும் தனது நாட்டை வழிநடத்தி, மேற்குலக நலன்களுக்கு எதிரான போராட்டத்தில் சளைக்காது போராடியவர் என்ற வகையில் முகாபே வரலாற்றின் முக்கிய கலகக்காரன் தான்.