சிவில் பாதுகாப்புப் பிரிவு என்ற படைமுகாமுக்கு முன்னே நூற்றுக்கணக்கான பெண், ஆண் போராளிகள்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மிகக் கடினமான வாழ்க்கைச் சூழலுக்குள்ளாகியிருக்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டி கடந்த சில நாட்களுக்கு முன்னர் எழுதியிருந்தேன். போர் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தப் போராளிகள் தடுப்பு முகாமிலிருந்து விடுதலையாகி வந்து அல்லது அரசாங்கம் பெருமிதமாகச் சொல்வதைப்போல புனர்வாழ்வு பெற்று வந்து ஐந்து ஆண்டுகளாகி விட்டன. ஆனால், வேலை வாய்ப்பில்லாமல் தங்களுடைய வாழ்க்கையை ஒழுங்கு படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். மாகாணசபையோ தமிழ்த்தேசிய அரசியலாளர்களோ அரசாங்கமோ இவர்களுக்கு உதவவில்லை என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தேன்.

இன்று கிளிநொச்சி – இரணைமடுவில் உள்ள சிவில் பாதுகாப்புப் பிரிவு என்ற படைமுகாமுக்கு முன்னே நூற்றுக்கணக்கான பெண், ஆண் போராளிகள் ஒன்று சேர்ந்து தமக்கு வேலை வாய்ப்பு வேணும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பலர் தங்கள் கைக்குழந்தையுடன் வந்து நின்றனர்.

இன்று காலை 10.30 மணியளவில் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகள், தாங்கள் புனா்வாழ்வுப் பெற்று வெளியில் வந்த காலம் முதல் நிரந்தர தொழில் இல்லாமல் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் வாழ்ந்து வருவதாகச் சொன்னார்கள். புனா்வாழ்வு பெற்ற காலத்தில் தங்களுக்கு பண்ணை பயிற்சியே வழங்கப்பட்டது என்றும் எனவே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் தமக்கு லைவாய்ப்பை வழங்குமாறும் கேட்டனர்.

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு புதிதாக ஆட்கள் எடுப்பதாக ஏற்கனவே எங்களுக்கு தகவல் கிடைத்தது. ஆனால், அது ஒரு சூழ்ச்சிகரமான பொறி என்று ஊடகங்களும் எங்களுடைய தமிழ் அரசியல்வாதிகளும் தெரிவித்தனர். படைக்கு ஆட்சேர்ப்பதற்கான நடவடிக்கையாகவே சிவில் பாதுகாப்புப் பிரிவுக்கு ஆட்சேர்க்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. இதனால் நாங்கள் அப்போது இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கவில்லை. ஆனால் காலம் செல்லவே எங்களுக்கு உண்மை நிலைமை விளங்கியது. அப்போது சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள் இன்று நல்ல சம்பளம் பெறுகின்றனர். அவர்களுடைய குடும்பங்கள் சிறப்பாக வாழ்கின்றன. நாங்கள் ஏமாந்து விட்டோம். எங்களைக் கவனிப்பார் யாருமே இல்லை. எமது நிலைமையைக்குறிபிட்டு நாங்கள் பலருக்கும் கடிதங்கள் எழுதினோம். யாருமே அதைக் கவனிக்கவில்லை. இந்த நிலையில்இன்று (02. 01.2017) தேசிய அடையாள அட்டை மற்றும் புனா் வாழ்வு பெற்று விடுதலையான கடிதம் ஆகியவற்றுடன் வருமாறு தகவல் வெளிவந்தது. அதற்காகவே இங்கு வந்திருகின்றோம். எனவே எங்களுக்கு வேலைவாய்ப்பை தாருங்கள் என சிவில் பாதுகாப்புத் திணைக்கள கிளிநொச்சி கட்டளை அதிகாரி மேஜர் சாகர வீரசிங்கவிடம் கோரிநின்றனா்.

மேலும் அவர்கள் தெரிவிக்கும்போது வெளியில் நாங்கள் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு கோரினோம். போராளிகளுக்குதானே சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் வேலை இருக்கிறது என்றார்கள். ஆனால் இங்கு போராளிகளான எங்களுக்கு வேலைவாய்ப்பு தர மறுகின்றீா்கள் எனவும் போராளிகள் குறிப்பிட்டனா்.

இது தொடா்பில் சிவில் பாதுகாப்புத் திணைக்கள கிளிநொச்சி கட்டளை அதிகாரி மேஜர் சாகர வீரசிங்க கருத்து தெரிவித்தபோது

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு புதிதாக ஆட்கள் எடுப்பதாக வெளியான தவறான தகவலை அடிப்படையாக கொண்டு நூற்றுக்கணக்கான போராளிகள் ஒன்று கூடியுள்ளனா். சிவில் பாதுகாப்பு திணைக்களத்தை பொறுத்தவரை தற்போதைக்கு புதிதாக ஆட்கள் எவரையும் உள்வாங்கும் நிலையில் இல்லை. இந்த முன்னாள் போராளிகளை பாா்க்கின்ற போது கவலையாக இருக்கின்றது. இந்த விடயத்தில் எங்களால் எதுவும் செய்ய முடியாது. இது கொழும்பு மட்டத்தில் உயரதிகாரிகளால் தீர்மானிக்கப்படுகின்ற விடயம் எனவும் குறிப்பிட்டாா்.

இதனையடுத்து அங்கிருந்து வெளியேறிய போராளிகள் இரணைமடுச் சந்தியில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு முன்பாக வேலைவாய்ப்பு கோரி கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதேவேளை 170 போ் கையொப்பம் இட்ட வேலைவாய்ப்பு கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை கிளிநொச்சி அரசாங்க அதிபா் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளித்துள்ளனர் இந்தப் போராளிகள்.

படையினரின் காலடியில் இந்தப் போராளிகளை விழ வைத்திருக்கிறது தமிழ்ச் சமூகம்.

எங்கே மறைந்திருக்கிறார்கள், வீரத்திருமகன்களான தமிழ் அரசியல்தலைவர்கள்?

(Sivarasa Karunagaran)
கட்சி வேறுபாடுகளை மறந்து இவ்விடயத்தில் யாவரும் இணைந்து ஒரு தீர்வு கண்டாக வேண்டும் பொது அமைப்புக்கள் தமக்கிடையில் ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி மத்திய மாகாண அரசுகளிடம் பேசி இதற்கு தொடர்சியான தீர்வும் நடைமுறைச்சாத்தியமான திட்டங்களும் ஏற்படுத்தி செயற்படுத்த வேண்டும். வெறும் தற்காலிக இனாம்கள் இவர்களை கொஞ்சப்படுத்துவது மட்டும் அல்ல நிரந்தரத் தீர்வும் அல்ல. வேலை செய்து உழைக்கும் பொறி முறையை உருவாக்கி இதில் இவர்கள் உள்வாங்கப்படவேண்டும். தேர்தலுக்காக இவர்களின் பிரச்சனையை கையிலெடுக்கும் அரசியல்வாதிகள் துரத்தப்படவேண்டும் – (சாகரன்)