சென்னையிலிருந்து வெளியேற்றப்படும் மெட்ராஸ்காரர்கள்.

(தி.ஸ்டாலின்)

சென்னையை நிலைக்குலையவைத்த வெள்ளப்பெருக்குக்குப் பிறகு அதிமுக அரசால் எடுக்கப்படும் முக்கிய நடவடிக்கையாக இருப்பது ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி. சென்னையின் நீர் தளங்களும், நீர்வழித்தடங்களும் ஆக்கிரமிப்புக்குட்பட்டதாலேயே பெரும்பாதிப்பு வந்தது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததும், அறிவுப்பு எதுவுமின்றி செம்பரம்பாக்கம் ஏரியின் நீரை திறந்துவிட்டதுவும் கூட இந்தப் பேரிடருக்கு முக்கியக்காரணங்களாக குற்றச்சாட்டு உண்டு.ஆனால் அதற்கு பொறுப்பேற்க தயாரில்லாத மாநில அரசு, ஆக்கிரமிப்பை முன்னிலைப்படுத்துகிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும், தவிர்க்கப்படவேண்டுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை. எந்தவகையான ஆக்கிரமிப்பும் சமூகத்திற்கு எதிரானதுதான். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் என அடையாளப்படுத்தப்படுபவர்கள் யாவர்? அவர்களை அடையாளப்படுத்துபவர்கள் யாவர்?

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக கூறப்பட்டதும் சென்னையின் பிரம்மாண்ட மாளிகைகள் சரியும் காட்சியை மனதில் கண்டுகொண்டு செய்திகளைக் கண்டால் அங்கே குடிசைகள் இடிக்கப்படும் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. சென்னை ஆறுகளின் கரைகளில் உள்ள குடிசைகளை எந்திரங்கள் இடித்துத்தள்ளிக்கொண்டிருக்கின்றன. ஆற்றங்கரைகளை குடியிருப்பாக ஆக்கியது சரியல்லதான். ஆனால் அதற்கு யார் காரணம்? சென்னை என்னும் பிரம்மாண்டமான நகரத்தை உருவாக்க ஆரம்பித்து 375 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். இன்னமும் சென்னை வளர்ந்துகொண்டுதானிருக்கிறது. இந்த மாபெரும் வளர்ச்சிக்குப் பின்னணியில் இருக்கும் உழைக்கும் மக்களே ஆற்றங்கரைகளில் குடியிருந்தவர்கள். அவர்களில் 95 சதவீதம்பேர் தலித்துகள். அவர்கள் ஏன் அங்கு குடியேறினார்கள். சென்னை ஆறுகள் தெளிந்த நீரையும் அழகுததும்பும் கரையையும் கொண்டிருந்ததால் அதில் மயங்கிக் குடியேறினார்களா?இல்லை. உண்மையில் அங்கே ஓடிக்கொண்டிருந்தது ஆறல்ல சாக்கடை என்பதை யாவரும் அறிவோம். சாக்கடையில் எவர்தான் குடியிருப்பார். அவர்கள் அங்கு தள்ளப்பட்டார்கள். சென்னை நகரம் உருவாகும் முன் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கிராமங்களைக் கொண்டிருந்த பிரதேசம் அது. தலித்துகள் குறிப்பாக பறையர் நிரம்பியிருந்த பிரதேசம் அது. பெரும்பறைச்சேரி என்று அங்கிலேயர் எழுதிவைத்தனர் அன்றைய சென்னையை. ஏகாதிபத்தியத்தின் துவக்ககால சென்னையை உருவாக்குவதிலிருந்து இன்றைய தொழிநுட்ப சென்னையை உருவாக்கும்வரை தங்களின் வியர்வையும் ரத்தத்தையும் சிந்தி உழைத்தவர்கள் தலித்துகள்தான். அவர்களால் உருவாக்கப்பட்ட சென்னையை ஆக்கிரமித்துக்கொண்டவர்கள்தான் அவர்களை ஆற்றங்கரைகளுக்கும், ஒதுக்குப்புறங்களுக்கும் தள்ளினார்கள். சென்னைக் கிராமங்களின் பூர்வீகமாகக்கொண்டவர்களோடு பிறபகுதிகளிலிருந்து வந்தவரகளும் இந்த மாபெரும் உழைப்பில் ஈடுப்பட்டனர். இவர்களெல்லோரும்தான் மெட்ராஸ்காரர்கள் ஆனார்கள். இவர்களால்தான் மெட்ராஸ் சிங்காரச்சென்னையாகியது. ஆனால் சிங்காரத்திற்கு இடைஞ்சலாக இருப்பதாக இம்மக்களையே விரட்டத்துவங்கினார்கள் அரசியல் அதிகாரமுடையவர்கள். இதில் திமுக, அதிமுக என்ற வேறுபாடெல்லாம் இல்லை. திமுககாலத்தில் சேரிகள் திடீரென எரியும். பிறகு அங்குள்ளவர்களை நகரத்துக்கு வெளியே கொண்டுசென்று அமர்த்துவார்கள். இப்படி சென்னை தலித்துகளை அப்புறப்படுத்தும் ஊர்த்தெருவாக மாறிக்கொண்டிருக்கிறது.

ஆகஸ்ட் மாதத்தில் கூட ஒன்பது பூங்காக்களையும் நடைபாதைகளையும் அமைப்பதற்காக 35 குடிசைப்பகுதிகளில் இருக்கும் 14000 குடிசைகள் அப்புறப்படுத்தப்படலாம் என்ற செய்திவந்தது. தற்போது வந்த மழைவெள்ளத்தை அதற்கான காரணமாக்கியிருக்கிறது அரசு. குடிசைவாழ் மக்களை அரசுகள் எப்போதும் அலட்சியப்படுத்தியே வருகின்றன. அதன் ஒரு வடிவம்தான் அவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக சித்தரித்து அப்புறப்படுத்துகிறார்கள்.

சென்னைக் குடிசைவாசிகளுக்கு இப்போதல்ல எப்போதும் பிரச்சனைதான். அரசியலால் குடிசைகள் எரிவதும், இயகையால் நாசமாவதும் புதியதல்ல. தேசமெங்குமுள்ள தலித் குடிசைகளுக்கு இதுதான் நிலை. ஆனால் யார் குடிசைவாசிகளைக்காப்பது. குடிசைகளை கொளுத்துபவர்களும் கொளுத்துவதை வேடிக்கைப்பார்பவர்களுதான் ஆட்சியதிகாரத்திற்கு வருகிறார்கள் என்றால் யார்தான் காப்பது. சென்னை குடிசை மக்கள் எத்தனை போராட்டங்களை நடத்தியிருப்பார்கள். எத்தனை மனுக்களைக் கொடுத்திருப்பார்கள். ஆனாலும் யார் மனம் இறங்கிவரும். மேலேயிருப்பவனும் அவன் மனமும் இறங்கத்தான் செய்யுமா? இந்தக் குடிசைகளைக் கடந்துதானே சட்டமன்றத்துக்கு போகிறார்கள். இந்த குடிசைகளைக் கடந்துதானே கமிஷன் பணங்கள் கட்டுக்கட்டுகளாக போகின்றன. உலக முதலீட்டார்களை அழைத்துவந்து உங்களுக்கு என்ன வேண்டும் எனக்கேட்கும் ஆட்சியாளர்கள் குடிசைவாசிகளை அழைத்து பேசுவதில்லையே. அண்மையில் முகநூலில் ஒரு ஆவணம் பகிரப்பட்டது. சென்னைக் குடிசைப்பகுதி மக்கள் அமைப்பின் நான்காவது மாநாடும் சர்வதேச மகளிர்தின பேரணியும் 30-301994 இல் நடைப்பெற்றது. தலித் தலைவகளான பௌத்த பெரியார் சுந்தர்ராஜன், அய்யா அ.சக்திதாசன், டாக்டர் சேப்பன், திரு.கருப்பன் IAS, கக்கன்ஜீயின் சகோதரர் விஸ்வநாதன் கக்கன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட அந்த மாநாட்டு அறிக்கை ‘நகரழகு திட்டம்’ ‘எழில்மிகு சென்னை2000’ போன்ற திட்டங்கள் மூலம் சேரிமக்களின் இருப்பிடங்கள் பறிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, குடிசைவாசிகளுக்கான கோரிக்கைகளை தீர்மானங்களாகவும் போட்டிருப்பதையும் கூறுகிறது. இம்மாநாட்டைத் தொடர்ந்து குடிசைகள் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்குவதாக நிதி ஆணையம் 1994 ஜூன் 1 ஆம் தேதி அறிவித்தது. ஆனால் மேம்பாடுகள் எதுவும் நடக்கவில்லை. அந்த மாநாட்டு அறிக்கையில் 21 இலட்சம் பேர் குடிசைவாழ்வினராக இருந்ததாக கூறப்பட்டிருக்கிறது. இப்போது இவ்வெண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருக்கும். ஆனாலும் அரசு அலட்சியத்தையும் வெளியேற்றத்தையும் நடவடிக்கையாகக் காட்டிக்கொண்டிருக்கிறது.

சரி.அவர்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டுமல்லவா? சென்னையில் அவர்களுக்கும் பங்கிருக்கிறதல்லவா? மாற்று இடங்கள் எங்கே வழங்கப்படுகின்றன. அவர்களின் வேலையிடங்களிலிருந்து வெகுதூரத்தில் கொண்டு சென்று அமர்த்துகிறார்கள். அவர்களின் பிள்ளைகளின் கல்வியும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஏன் சென்னைக்கு உள்ளேயே இவர்களுக்கு இடமில்லையா? பெருமுதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும், அரசியல் செல்வாக்குடையவர்களும் புதிதுபுதிதாக கட்டடங்களை எழுப்பிவரும் சென்னையில் இவர்களை குடியமர்த்த இடமில்லை என்பது எந்தளவு உண்மை. சென்னை முழுக்க 1300க்கும் அதிகமான குடிசைப்பகுதிகள் உள்ளன. இவைகளின் மொத்த பரப்பளவு சுமார் 6 ச.கி.மீ என்கிறது ஓர் ஆய்வு. ஆனால் அரசிடம் கையகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படாமல் உள்ள நிலப்பரப்பு சுமார் 10 ச.கி.மீ. என்கிறது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒரு தகவல். ஆக இந்த இடத்திலேயே அவர்களைக் குடியமர்த்த முடியும். ஆனால் நகரத்திற்கு வெளியே தள்ளிவைக்கிறது அரசு. மேலும், தலித்துகளுக்கு மட்டுமே பாத்தியமான பஞ்சமர் தரிசு நிலங்கள் சென்னையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மற்றவர்களாலும் அரசாலும் அபகரிக்கப்பட்டிருக்கின்றன. அந்நிலங்களை மீட்டெடுத்தால் அனைத்து சென்னைவாழ் ஏழை தலித்துகளுக்கும் வீட்டுமணைகளை வழங்க முடியும். மற்றும், கோயில் நிலங்களைக் கையகப்படுத்தி இன்னும் பலநூறு குடியிருப்பு பகுதிகளை உருவாக்கமுடியும். ஆனாலும் அவையெல்லாம் ஜாதிய,மத, அரசியல், பொருளாதார ஆதிக்கவாதிகளிடம் சிக்கியுள்ள நிலங்கள். அவற்றை மீட்கபோனால் இங்கே யாரும் அரசியல் செய்யமுடியாது. எனவே ஆக்கிரமிப்பாளர் பட்டமும், வெளியேற்றம் என்னும் தண்டனையும் தலித் ஏழைகளுக்கு அளிக்கப்படுகின்றன. சென்னையை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ள ஆதிக்கவாதிகளை நெருங்க அஞ்சும் அரசு தலித்துகளை குப்பைகளை அள்ளுவதைப்போல அள்ளி வெளியேக் கொண்டு சென்று கொட்டிக்கொண்டிருக்கிறது.

சென்னையில் குடிசையில் வாழும் அனைத்து ஏழை எளிய தலித்மக்களை பாதுகாப்பாக சென்னையிலேயே குடியமர்த்தவேண்டும். பஞ்சமி நிலங்கள்,கோயில் நிலங்கள், அரசு இடங்கள் ஆகியவை உடனடியாக அவசரச்சட்டம் இயற்றி அதன்மூலம் மீட்கப்பட்டு தலித்துகளுக்கும் பிற உழைக்கும் ஏழை எளியமக்களுக்கும் அளிக்கப்படவேண்டும். அவர்களுக்கு நிலையான வேலைகளுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியும் பெற வழிவகுக்கவேண்டும்.

நீர் நிலைகள், புறம்போக்குகள்,ஆற்றங்கரைகள் என பல்வேறு இடங்களிலும் ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியார் வியாபார நிறுவனங்கள், உள்நாட்டு,பன்னாட்டு ஆலைகள், பொழுதுபோக்கு தளங்கள், கல்லூரிகள்,பல்கலைக்கழங்கள்,சொகுசு பங்களாக்கள், மாளிகை வீடுகள் அனைத்தும் கையகப்படுத்தப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றப்படவேண்டும்.

இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை தமிழகம் முழுக்க

நடைமுறைப்படுத்தப்படவேண்டும். அதுபோலவே வீடில்லாத தலித் மற்றும் பிற ஏழை எளிய மக்களுக்கு அவர்கள் விரும்பும் பாதுகாப்பான இடங்களை அவசரச்சட்டதின் மூலம் கையகப்படுத்தி குடியமர்த்திடும் பணியும் தமிழகம் முழுக்க நடைமுறைப்படுத்தப்படவேண்டும்