கடந்த கால யுத்தம் பல ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்டது. இராணுவம் மட்டுமல்ல ஆயுதக் குழுக்களும் தமிழ் பேசும் மக்களை வேட்டையாடியது.
இங்கே பல நூறு அப்பாவிகள் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டனர்.சகல தரப்புகளுமே துப்பாக்கி முனையில் மக்கள் கவலைகளை ஆதங்கங்களை மௌனமாக்கிறார்கள்.
ஆனால் ஒரே ஒரு சுதந்திரம் இருந்தது. இராணுவத்தால் அல்லது அரசோடு இணைந்து செயற்பட்டவர்களின் கொலைக்கு மட்டுமே அழவும் ஆர்ப்பாட்டம் பண்ணவும் முடிந்தது. அதற்கான தாராள உரிமைகளும் வழங்கப்பட்டன.
1983 இல் வெலிக்கடை சிறைப் படுகொலை உலகையே அதிரவைத்த துயரமான சம்பவம். இலங்கை அரச நிர்வாகத்தின் கொடூர முகத்தைக்காட்டியது.அதை செய்வித்தது அரசு. செய்தவர்கள் சமூக குற்றவாளிகள்.
அந்த அரச பயங்கரவாதத்தை எதிர்க்கப் புறப்பட்டவர்கள் பயங்கரவாதிகளாக மாறியது காலத்தின் கொடுமை.சகல துப்பாக்கிகளும் மக்களின் நெஞ்சைக் குறிவைத்தன.
1986 மே மாதம் புலிகள் தங்கள் சகோதர அமைப்பு உறுப்பினர்களை படுகொலை செய்தனர். பொதுவெளிகளில் வைத்து உயிரோடு கொழுத்தினார்கள். பலர் வேதனைப் பட்டபோதும் சிலர் கொலையாளிகளுக்கு குளிர்பானங்களைக் கொடுத்தே வரவேற்றனர்.
இந்தப் படுகொலைகளை எந்த தமிழ் ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை. இன்றுவரை பேசவும் தயாராக இல்லை.அதன் தொடர்கதையாக கந்தன் கருணை படுகோலை. ஒரு வீட்டில் ஐம்பதுக்கும் அதிகமானவர்களை வைத்து பூட்டி வைத்து குண்டு வைத்துக் கொன்றனர்.இதையும் இன்றுவரை தமிழ் சமூகம் கண்டிக்கத் தயாராக இல்லை.
இதை செய்தவர்கள் குற்ற பின்னணி கொண்டவர்கள் அல்ல. தமிழ் பேசும் மக்களால் புனிதர்கள் ஒழுக்கமானவர்கள் என அழைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள். இந்தப் பிணங்களை புதைத்ததும் எரித்ததும் பொதுமக்களுக்கே தெரியும்.
இந்த சம்பவங்களுக்கும் அரச இராணுவ பயங்கரவாதங்களுக்கும் தொடர்பே இல்லை. மக்களின் விடுதலைக்காக போராடுகின்றோம் என தம்பட்டம் அடித்தவர்களால் செய்யப்பட்ட மோசமான படுகொலைகள். இவர்கள் செய்த கொலைகளை வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.
இன்று செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட பிணங்களை வைத்து தனியே அரச இராணுவ பயங்கரவாதம் என சொல்லி கண்ணீர் வடிப்பவர்கள் புலிகளின் படுகொலைகளைப் பற்றி பேசத் தயாராக இல்லை.
செம்மணி படுகொலைகளுக்கு அரசு இராணுவம் பொறுப்பேற்க வேண்டும். அதில் தார்மீக நியாயம் உண்டு. இவை மக்கள் கண்களுக்குத் தெரியாமல் நடந்தவை.
ஆனால் புலிகள் செய்த கொலைகள் அனைத்தும் மக்கள் கண்முன்னே நடந்த படுகொலைகள். அவற்றைக் கொண்டாடிய தமிழர்கள் இன்னமும் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள்.
கொலையில் பங்கேற்றவர்களும் இருக்கிறார்கள்.கிட்டுவின் சகா ரகீம் என்று அழைக்கப்பட்ட கனரத்திரனம் சுக்ளா என அழைக்கப்பட்ட மரியநேசன் சாஸ்திரி என பலர் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள். இவர்களிடம் யாருமே நியாயம் கேட்பதில்லை.
இந்தப் படுகொலைகள் மட்டுமா…? காத்தான்குடி ஏறாவூர் பகுதிகளில் எந்த சம்பந்தமும் இல்லாத அப்பாவி முஸ்லிம்களை குழந்தைகளை படுகோலை செய்யதவர்களை கடந்து போவது ஏன்? அவர்கள் மனித உயிர்கள் இல்லையா? மக்களுக்காக போராட புறப்பட்டவர்களுக்கே அப்பாவிகள் யார்? இராணுவம் யார் என்று தெரியாத முரடர்களா புலிகள்?
தமிழர்கள் செம்மணியில் மட்டும் கொல்லப்படவில்லை. ஒவ்வொரு ஊர்களிலும் புலிகளால் கொன்று புதைக்கப்பட்வர்கள் ஏராளம். அவற்றை எல்லாம் தோண்டி எடுக்கத் தயாரா?
வடக்கு கிழக்கு மண் எங்கும் புலிகள் கொன்று புதைத்த மனிதர்கள் ஏராளம். சிங்களவர்கள் தமிழர்களை மட்டுமே கொன்றார்கள். புலிகளோ தமிழன் சிங்களவன் முஸ்லிம் ஏன் தம் சகாக்களைக் கூட கொன்று புதைத்தார்கள்.
மாத்தையா பிரிவினையின்போது மாத்தையா உட்படநானூறுக்கும் அதிகமானோர் சித்திரவதை செய்து கொன்று புதைக்கப்பட்டனர். இந்த அணையாத விளக்கு வடக்கு கிழக்கு எங்குமே எரிகிறது. நீறு பூத்த நெருப்பாகவே உள்ளது.
செம்மணி தொடங்கி ஊர் ஊராக வடக்கு கிழக்கு எங்கும் புதைகுழிகளில் பிணங்கள் உள்ளன. அவற்றையும் தோண்டுங்கள். உண்மைகள் வெளியே வரட்டும். நியாங்கள் வெல்லட்டும்.