ஜனாதிபதித் தேர்தலில் ஜேவிபி

ஏனெனில் சிறுபான்மையினரின் எதிர்காலச் சுபீட்சம் இக்கொள்கைகளிலேயே தங்கியுள்ளது. எனினும், இவர் ஜனாதிபதியாக மாட்டார் என்பது உண்மையே. அவ்வாறாயின் ஏன் இவருக்குப் பின்னால் சிறுபான்மையினர் செல்ல வேண்டும்?
ஆரம்பத்தில் கூறியதுபோல் இவர் ஜெயிப்பதற்காக இக்களத்திற் குதிக்கவில்லை. எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்குள்ள பலத்தை எடைபோடுவதற்கான ஒரு வெள்ளோட்டமே அவரின் முயற்சி. அதேபோன்று சிறுபான்மை மக்களும் தமது இலக்குகளையும் இலட்சியங்களயும் ஜனாதிபதித் தேர்தலுடன் மட்டுப்படுத்தாமல் அதற்கப்பாலே சென்று வகுக்க வேண்டும்.திஸநாயக்காவின் கரங்களைப் பலப்படுத்துவதால் இந்நாட்டின் எதிர்கால அரசியலின்; ஜனநாயகப் போக்கினையும் அனைத்து மக்களின் அமைதியான வாழ்வையும் மேம்பாட்டையும் உங்களால் நிர்ணயிக்க முடியும்.

எப்படி?

சிறுபான்மை இனங்களிரண்டும் தனித்தனியாகவோ இணைந்தோ பெரும்பான்மை இனத்தவரின் ஆதரவில்லாமல் எந்த உரிமையையோ சலுகையையோ வென்றெடுக்க முடியாது. இதை முக்கியமாக தமிழினம் உணரவேண்டும். முஸ்லிம்களும் தமிழினத்தைப் பணயம் வைத்து இரண்டு தேசியக் கட்சிகளுடனும் அரசியல் பேரம்பேசிச்சலுகைகளைப் பெற்ற காலம் முடிந்துவிட்டதென்பதை உணரவேண்டும். பௌத்த ஆதிக்கவாதத்தின் பிடிக்குட் சிக்கியிருக்கும் இக்கட்சிகள் முஸ்லிம்களுக்கு இனிமேலும் பரிவுகாட்டா. உங்களின் வாக்குகளைப் பெற்றபின் உங்களின் சில தலைவர்களுக்குமந்திரிப் பதவிகளை வழங்குவதோடு அவர்களின் கடமை தீர்ந்துவிடும். ஆகவே பெரும்பான்மைச் சமூகத்திலிருந்து ஒரு பலமுள்ள குரல் சிறுபான்மையினரையும் உள்ளடக்கிய மக்கள் குரலாக ஒலிக்க வேண்டும்.தற்போதைய சூழலில் அந்தக் குரலே திஸநாயக்காவின் தேசிய மக்கள் சக்தி.

இதுவரை இடம்பெற்ற கருத்துக் கணிப்புகளின்படி முன்னிலையில் நிற்கும் இரு வேட்பாளர்களும் அறுதி வெற்றிக்குத் தேவையான ஐம்பத்தொரு சதவீத வாக்குளைப் பெறார் என்பது உறுதி. அவர்களுள் எவர் வென்றாலும் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. எனவே முஸ்லிம்களும் தமிழர்களும் தமது தலைவர்களின் விருப்புவெறுப்புகளுக்கு முக்கியத்தும் அளியாது சுயமாகச் சிந்தித்து,நீண்டகாலத்தைக் கருத்திற்கொண்டு,தேசிய மக்கள் சக்தியைப் பலப்படுத்தினால் அடுத்து வரப்போகும் பொதுத் தேர்தலில் அக்கட்சி மூன்றாவது சக்தியாக உருவாகி ஒரு தனிப்பாதையில் நாட்டை வழிநடத்தும். ஆந்தப் பாதையிலேதான் சிறுபான்மை இனங்களுக்கு விடிவுண்டு.

– கலாநிதி அமீர் அலி