தமிழருக்கான மூன்றாவது அணியை அமைத்தல் சாத்தியமா…?(Part 2)

(சாகரன்)

2009 இற்கு பின்னராக உருவான தேர்தல் ஜனநாய சூழலை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருக்கும் முன்னாள் போராளிகள் அமைப்புக்களின் கட்சிகளும் இன்ன பிற மக்கள் நலன் சார்ந்த சக்திளும் பாரம்பரிய அப்புக்காத்து அரசியலிடம் இருந்து தமக்கு கைமாற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியே இருந்த சுகு சிறீதரன் போன்றவர்கள் தலமை தாங்கும் ஈபிஆர்எல்எவ் இருந்து பிரிந்து சென்று தற்போது தமிழர் சமூக ஜனநாயக் கட்சி போன்று பரிணாமம் அடைந்த கட்சிகளுடன்  இணைத்துக்கொண்டு ஒரு பலமான மக்கள் நலன் சார்ந்த ஜனநாயக பூர்வமான ஐக்கியத்தை ஏற்படுத்தி செயற்பட்டிருக்க வேண்டும். இதற்கான பாரிய தார்மீகப் பொறுப்பு இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பேச்சாளராக செயற்பட்ட ஈபிஆர்எல்எவ் இன் சுரேஷ் பிரேமசந்திரனுக்கு நிறையவே வாய்புகள் இருந்தன. விடுதலைப் போராட்ட அமைப்பின் முக்கிய உறுப்பினராகவும் பத்மநாபாவின் கொலையிற்கு பின்பு பிளவுபடாத ஈபிஆர்எலஎவ் இன் செயலாளராகவும் ஏன் இதன் பின்பு புலிகளால் உருவாகப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பிரபாகரனின் நம்பிக்கைகு பாத்திரமாக இருந்த சுரேஷ் இற்கு கிடைகப் பெற்ற வாய்பை விட வேறு யாருக்கும் இந்த வாய்பு இருந்ததாக அறிய முடியவில்லை.2009 ம் ஆண்டு யுத்த காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசம், தென் இலங்கை, இந்தியா, சர்வதேசம் எங்கும் ஏகத்திற்கு செல்லும் வாய்பை கொண்டிருந்த ஒரே நபர் இவர்தான். ஏனைய யாவரும் இந்த நான்கு தளத்திற்கும் ஏகத்தில் பாதுகாப்பாக சென்று வருவதற்குரிய வாய்புக்களை கொண்டிருக்கவில்லை. மேலும் இந்தியாவுடன் பேசும் அளவிற்கு பழைய உறவுகளை தொடர்ந்தும் பேணி வந்தவர். இப்படியான பலவகைப்பட்ட தகமைகளை கொண்டிருந்த சுரேஷ் பிரேமசந்திரன் ஒரு பரந்துபட்ட ஜனநாயக முன்னணியை அப்புக்காத்து அல்லது கொழும்பு தமிழ் தலமை அரசியலுக்கு மாற்றிடாக ஒரு தலமையை உருவாக்குவதில் வெற்றி கொள்ளவில்லை.

மேலும் சுமந்திரனின் வருகையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற பொறுப்பு நழுவும் நிலையும் தமிழரசுக் கட்சியின் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் கையாண்ட ஏதேச்சாகாரமும் இதன் தொடர்சியான எம்பி பதவி கிடைக்காத நிலமையும் சரியான தயாரிப்புக்களை செய்யாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்து வெளியேறிய உணர்ச்சிக் கொந்தளிப்பு செயற்பாடுகளும் இவரை அரசியலில் தனிமைப் படுத்திவிட்டது என்ற தோற்றப்பாட்டை கொடுத்திருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் புளொட், ரெலோ போன்ற அமைப்புக்களை குறைந்த பட்சமாவது தனது நியாயமான தமிழ் தேசியக் கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்யுங்கள் என்ற கோரிக்கையிற்கு ஆதரவாக இணைத்து பலமாக நின்று தமிழரசுக் கட்சியிற்கு மூக்கணாங்கயிறு போடுவதில் தவறிவிட்டார் சுரேஷ் பிரேமசந்திரன். சரி இதனை விடுவோம் கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் அமைக்க முற்பட்ட கூட்டணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மண்குதிரையை நம்பி செயற்பட முற்பட்டதும் அது தவறிய போது விக்னேஸ்வரனுக்கு அரசியல் பாடம் கற்பிக்கும் அனுபவமும் வரலாறும் தன்னகத்தே உள்ள சுரேஷ் பிரேமசந்திரன் சிவி இன் சருகு புலியாட்டத்திற்கு செம்பு தூக்கும் நிலையிற்கு தாழ்ந்து போவது போய் கொண்டிருப்பதும் புரியப்படாத அரசியலாக இருக்கின்றது. இங்கு தோற்றுப் போவது சுரேஷ் மட்டும் அல்ல ஒரு ஜனநாயக முற்போக்கு மாற்று அணியை உருவாக்காமல் போனதால் மக்களும்தான்.

மீண்டும் தமிழரசு என்ற ஒரே குட்டடையில் ஊறிய மட்டையான விக்னேஸ்வரனை மட்டும் சம்மந்தர், மாவை, சுமந்திரனுக்கு மாற்றான தலமையாக பார்பதற்கு வழியும் சமைத்துவிட்டது. இது 1970 பிற்கூற்றிலும் 1980 களின் முற் கூற்றிலும் இந்த அப்புகாத்து அரசியலை அம்பலப்படுத்தி தலையங்கள் தீண்டிய சுரேஷ் இன் அன்றைய அரசிலை இச் செயற்பாடுகள் பொய்யென்று எடுத்துக் கூறி நிற்காதா…?

(இன்னும் வரும்…..)