தமிழ்நாட்டுத் தமிழர்கள், தனித்து வாழ்வதன் தாத்பரியங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக நடந்த போராட்டங்கள் வெறும் போராட்டங்கள் என்ற வரையறைக்குள் அடங்கி விடக் கூடியன அல்ல. போராட்டங்கள் போர்களாகவும் நடந்தன. போர்கள் என்றாலே இடங்கள் பறிபோவதும், அவ்விடங்களில் வாழ்ந்தவர்கள் இடம் பெயர்ந்து வேற்றிடம் தேடிப் பயணம் செய்ய நேர்வதும் தவிர்க்க முடியாதவை. ஈழப் போராட்டத்திலும் யுத்தங்களிலும் அதுதான் நடந்தன. இழப்பதற்கு எதுவுமில்லாதவர்கள் போராடிக் கொண்டிருக்கும்போது இயன்றவர்கள் வெளியேறி பூமிப் பந்தின் பல பாகங்களுக்கும் சென்றனர். யுத்தத்தின் காரணமாய் மரணத்துள் வாழ நேர்ந்தவர்கள் அகதிகளாய் அலைய நேரிட்டதையும் பதிவுகளாக்கித் தந்துள்ளார்கள்.

நிலைகொள்ளல் இன்றி நீரில் பட்ட தெப்பமாய் அலையும் மனிதர்களாய் இருப்பவர்களின் நிலை அறியாது தமிழ்நாட்டுத் தமிழர்கள், தனித்து வாழ்வதன் தாத்பரியங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நிலம், தமிழர்களுக்கு மட்டும் உரியது எனப் பேசுவதன் ஆபத்து தமிழர்களின் நலனில் அக்கறை கொண்ட பேச்சா? என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ் அடையாளத்தை உருவாக்கும் மொழி, பண்பாடு, அறிவு ஆகியவற்றை உருவாக்கும் ஒரு நிலப்பரப்பின் அவசியத்தை வலியுறுத்தும் அதே நேரத்தில் அந்த நிலம் தமிழ் மொழி பேசுபவர்கள் மட்டும் வாழும் பிரதேசமாக இருக்க வேண்டும் என வாதிடுவதன் ஆபத்துக்களை உணர வேண்டும்.

(அ. ராமசாமி)