தமிழ் நாடு பொலிஸ்

தமிழ் நாடு பொலிஸ் நடாத்திய அராஜகங்கள் இப்பொது ஒரு விவாதமாக பேசப்படுகிறது.தமிழக அரசின் பொறுப்பற்ற தன்மையை எல்லோரும் கண்டிக்கிறார்கள்.கருணாநிதியின் முதலாவது ஆட்சிக்காலத்தில் நக்கலைட் ஒழிப்பு என்னும் பெயரில் தமிழக பொலிசார் நடத்திய அராஜகங்கள் கொஞ்சமல்ல.இதில் பொலிஸ் கமிஷனர் வால்டர் தேவாரம் புகழ் பெற்றிருந்தார்.எத்தனை அப்பாவி ஹரிஜன இளைஞர்கள் நக்சலைட் முத்திரை குத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள்.இதையும் யாரும் கண்டிக்க துணியவில்லை. ஊட்டியில் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தமிழ் தீவிரவாதிகள் என்னும் பட்டம் கட்டி பொலிசார் தாக்கினார்கள்.இது எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம்.இதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை .

பல வருடங்கள் முன்னால் சம்பளம் கேட்டு போராடிய மாங்கனிச்சோலை என்னும் இடத்தில் பொலிசாரால், பலர் சுடப்பட்டும் பலர் தாமிரபரணி ஆற்றில் வீழ்ந்தும் இறந்ததாக செய்திகள் வந்தன.அப்போது முதல்வராக ஜெயலலிதா இருந்தார்.அப்போது அந்த பொலிஸ் அராஜகம் கண்ணுக்குத் தெரியவில்லை .

இன்றைய சம்பவத்தில் மாணவர்களை காப்பாற்ற குப்பத்து மக்கள் உதவுவதாக செய்திகள் வந்தன.அவர்கள் அப்பாவிகள் ஏழைகள்.ஆனால் உயிர்களைக் காக்க எவ்வளவு துடியாக துடிக்கிறார்கள்.இவ்வாறான குப்பத்து ஏழைகளும் இஸ்லாமியர்களுமே சென்னையில் வெள்ளம் வந்தபோது மக்களைக் காக்க களம் இறங்கினார்கள்.

இவ்வாறான ஏழைத் தொழிலாளர்கள் வெண்மணியில் சம்பள உயர்வு கேட்டுப் போராடியபோது அண்ணாவினுடைய தி.மு.க அரசு கண்டுகொள்ளவில்லை.பண்ணையார்கள் அந்த ஏழைத் தொழிலாளர்களை உயிரோடு நெருப்பில் கொழுத்தி எரித்தார்கள.பகுத்தறிவாளர் அண்ணா,கருணாநிதி,எம்.ஜி. ஆர் எல்லாம் ஒன்றாக இருந்தகாலம் அது.

ஏழைகளைப் பற்றி ஏளனமாக நினைப்பவர்களுக்காகவும் பொலிஸ் அராஜகம் பற்றி இப்போது புலம்புபவர்களுக்காகவும் இதை நினைவு படுத்துகிறேன்.

மாங்கனிச்சோலையில் பொலிசாரால் ஏழைத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டபோது இந்த அராஜகங்கள் கண்ணுக்கு தெரியவில்லை.இன்று பொலிஸ் அராஜகத்திலிருந்து குப்பத்து மக்கள் மாணவர்களை காப்பாற்ற முயலும்போது அவர்கள் பண்பு அன்பு கண்ணுக்குத் தெரிகிறது.

வாழவழியற்று உடலை விற்று வயிறு கழுவும் அப்பாவி விபச்சாரிகள் மீது இந்த பொலிசார் நடாத்தும் அராஜகங்கள் வெளியே வராத செய்திகள் .

படித்த மத்தியதர வர்க்க சமூகம் ஏழைகளை படிக்காத பாமர மக்களை இனியாவது புறந்தள்ளுவதை நிறுத்தவேண்டும்.இந்த பொலிஸ் அராஜகம் எங்கே நடந்தாலும் இந்த சமூகம் இனியாவது பாதிக்கப்படுபவர்களுக்காக குரல் கொடுக்க முன் வரவேண்டும்.தமிழக மக்களுக்கும் இன்றைய செயதிகளைப் படிப்பவர்களுக்கும் இந்த அனுபவம் பாடமாக இருக்கும்

(Vijay Baskaran)