தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும் இருப்பும் : மறைக்கப்படும் உண்மைகள்!

தமிழ் மக்கள் பேரவையின் பத்திரிகையாளர் மாநாடு கொழும்பில் நேற்று 22/11/16 அன்று நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றவாத அரசியல் தலைமை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தைப் பிரதியிடுவதற்கு முனைந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தோல்வியடைந்த போது அதற்கு மாற்றாகத் தோற்றுவிக்கப்பட்டதே தமிழ் மக்கள் பேரவை. ஜேர்மனியில் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள், தமது அரசியல் பினாமிகளை உருவாக்கும் நோக்கத்துடன் 2015 ஆம் ஆண்டு மாவை சேனாதிராசாவை அழைத்துப் பேச்சுக்கள் நடத்தின. அப் பேச்சுக்களின் அடிப்படையில் புலம்பெயர் அமைப்புக்கள் தாம் சுட்டுவிரலை நீட்டும் சிலரை கூட்டமைப்பின் வேட்பாளர்களாக நியமிக்குமாறு கேட்டுக்கொண்டன. அதற்கு கூட்டமைப்பு இணங்க மறுத்ததன் பின்புலத்திலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான பிரச்சாரமும் நிதித் திரட்டலும் புலம்பெயர் நாடுகளில் முடுக்கிவிடப்பட்டன. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தலில் படு தோல்வியடைந்ததும், மீண்டும் ஜேர்மனியில் ஒன்று கூடிய அமைப்புக்கள் தமிழ் மக்கள் பேரவையைத் தோற்றுவித்தன. இதுவே தமிழ் மக்கள் பேரவைக்கான தோற்றத்தின் அடிப்படை.

ஆக, மாவை சேனாதிராசா போன்ற அதிகாரத்திற்காக மட்டுமே வாழும் அரசியல் சாக்கடைகளோடு கூட கைகோர்த்துக்கொள்ளத் தயாரான அமைப்புக்கள், தமது அதிகாரத்தையும் அதனூடான அரசியல் வியாபாரத்தையும் நிலைநாட்ட ஏற்படுத்திகொண்ட ஏற்பாடே தமிழ் மக்கள் பேரவை. தேர்தல் அரசியலையும் அதனூடான அரசியல் பிழைப்புவாதத்தையும் முன்வைக்கும் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகளை ஒன்றிணைத்து தோற்றம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் தோற்றம் குறித்தே மக்களுக்கு உண்மையைக் கூறத் தயாரில்லை என்பதை அவர்களின் ஊடக மாநாடு குறித்துக்காட்டுகிறது.

தமிழ் மக்கள் மத்தியில் தண்டிக்கப்பட வேண்டிய கொலையாளியான ‘மண்டையன் குழு’ சுரேஷ் பிரேமச்சந்திரன், பரம்பரைப் பாராளுமன்ற அரசியல்வாதியான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுன்னாகம் நிலகீழ் நீர் ஊழலின் சூத்திரதாரிகளில் பிரதனமான சீ.வீ.விக்னேஸ்வரன் என்ற பாராளுமன்ற அரசியல்வாதி போன்றவர்களிடையே இணைப்பேற்படுத்தப்பட்டு தோற்றுவிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை தேர்தல் அரசியலை நிராகரிப்பதாக ஊடகவியலாளர் மாநாட்டில் கூறப்பட்டுள்ளது அப்பட்டமான பொய்.

சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன் ஆகிய மூவரும் தமது பதவிகளைத் துறந்து தேர்தல் கட்சிகளைக் கலைத்துவிட்டு, இனிமேல் வாக்குக் கேட்டு வரமாட்டோம் என உறுதியளிக்கட்டும் பார்க்கலாம்!

இதோ, நேற்று நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் மாநாட்டில் விக்னேஸ்வரனின் இருதய நோய் வைத்தியரின் உரையின் ஒரு பகுதி:

“யுத்தத்திற்கு பின்னரான சூழலில் இந்த இனமுரண்பாடானது, மக்கள் பங்களிப்புடனான கலந்துரையாடல்கள் இல்லாது, வடக்கிலும் சரி தெற்கிலும் சரி வெறுமனே தேர்தல் வெற்றியை குறியாகக்கொண்ட அரசியல்வாதிகளாலும், துரதிர்ஷ்டவசமாக சில ஊடகங்களாலும், பிழையான திசையில் கொண்டுசெல்லப்பட்டு வருகின்றன.

சுயலாபங்களையும் தேர்தல் வெற்றிகளையும் குறியாகக்கொண்டிராது, மக்களின் நலனை கருத்திற்கொண்ட மக்கள்மயப்படுத்தப்பட்ட ஒரு தளத்தில், தூரநோக்குடன் இயங்குவதன் மூலமாகத்தான், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உண்மையான நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என நாம் திடமாக நம்பியதன் ஒரு வெளிப்பாடு தான் இந்த தமிழ் மக்கள் பேரவையின் தோற்றம்.

தமிழர்களின் நீதிக்கான பயணத்தின் மிக தீர்க்கமான இந்த காலப்பகுதி, இப்படியாக ஒரு தெளிவற்ற ஒரு வெற்றிடமான நிலையில் தொடர்ந்தும் இருப்பதன் ஆபத்தை நாம் உணர்ந்து கொண்டோம்.

இவ்வெற்றிடம், தேர்தல் மைய அரசியலினால் ஒருபோதும் நிரப்பப்படமாட்டாது, அப்படி தேர்தல் மைய அரசியலினால் நிரப்பப்படவும் கூடாது எனும் நோக்கோடு , வடக்கு கிழக்கில் வாழும் சமூக, மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், துறைசார் நிபுணர்கள், சமூக, மத பெரியவர்கள் இணைந்து நடாத்திய தொடர் கலந்துரையாடல்களும், ஆயுதமோதல்களின் முடிவிற்கு பின்னரான தமிழர் அரசியற்போக்கின் நாம் பெற்ற பட்டறிவுமே இப்படியான ஒரு மக்கள் மயப்படுத்தப்பட்ட அமைப்பின் தேவையை வெளிப்படுத்திநின்றது.”

தேர்தல் வெற்றியை மட்டுமே நோக்காகக் கொண்ட ஊழல் பேர்வளிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கிய வெற்றிடத்தை நிரப்பவில்லை. மாறாக மக்கள் சார்ந்த அரசியல் சக்திகளால் அது நிரப்பப்படுவதைத் தடுக்கும் வகையில் தாம் தேர்தல் அரசியலுக்கு எதிரானவர்கள் என்ற மாயையை ஏற்படுத்த முனைகிறது.

சுய நிர்ணைய உரிமை என்பதன் உள்ளர்த்தத்தையே தலைகீழாகப் புரட்டிப்போட்டு, சமஷ்டியை சுய நிர்ணைய உரிமை என நம்பவைக்க முனையும் தமிழ் மக்கள் பேரவை மாற்று அரசியல் ஒன்று தோன்றுவதைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளில் முனைப்புடன் செயற்படுகிறது.

கடந்தகாலத்தில் நடைபெற்ற ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தில் தவறுகளிருப்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதனையே , வன்முறைக் காலகட்டம் என்றும், ஆயுத மோதல்களுக்கான காலம் என்றும் கொச்சப்படுத்தும் இப் பேரவை ஆபத்தான கருத்துருவாக்கத்தை மக்கள் மத்தியில் விதைக்கமுனைகின்றது.

இலங்கைப் பேரினவாத அரசமைப்பின் அடிப்படைக் கோட்பாடு தெளிவானது. இலங்கை என்பது பல்லின மக்கள் வாழும் சிங்கள பௌத்த நாடு, அங்கு சிங்கள பௌத்த கருத்தியலுக்கு இடையூறு ஏற்படாதவகையில் அதன் விரிவாக்கத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் வாழலாம் என்பதே இலங்கை அதிகாரவர்க்கத்தின் கோட்பாடு. அக் கோட்பாட்டை அங்கீகரிப்பதை நல்லிணக்கம் என்றும் யாப்பு மாற்றம் என்றும் அழைக்கின்றனர்.

இலங்கை அதிகாரவர்க்கத்தின் சிங்கள பௌத்த உளவியலுக்கு எதிரான போராட்டம் மக்கள் சார்ந்த அரசியல் பொறிமுறையை முன்வைப்பதன் ஊடாகவே நடத்தப்பட வேண்டும். தமிழ் மக்கள் பேரவை முன்மொழியும் இணக்க அரசியல் ஊடாக அல்ல.

புலம்பெயர் பிழைப்புவாதக் குழுக்கள், அவர்களின் உள்ளூர் பினாமிகள், தோற்றுப்போன பாராளுமன்ற அரசியல் குழுக்கள் போன்றவர்களின் தேர்தலை நோக்கிய இணைப்பே தமிழ் மக்கள் பேரவை!

– இனியொரு.கொம்- 23-11-2016