திரைப்பட பின்னணிப் பாடகி திருமதி. எஸ். ஜானகி அவர்களது பிறந்த தினம்

எஸ். ஜானகி ஏப்ரல் 23, 1938 – ஆம் ஆண்டு, ஆந்திராவில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் திரு. ராமமூர்த்தி – திருமதி. சத்தியவதி தம்பதிகளுக்கு பிறந்தார். சிறு வயதிலேயே பாடத் துவங்கிய இவர், நாதசுர மேதை திரு.பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். அதன் பிறகு 1956-ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி பாட்டுப்போட்டி ஒன்றை நடத்தியது. அதில் கலந்து கொண்டு ஜானகி இரண்டாம் பரிசு பெற்றார். இப்பரிசினை அன்றைய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திரபிரசாத் அவர்களின் கரங்களால் பெற்றார்.

இதைத்தொடர்ந்து, சென்னைக்கு குடிபெயர்ந்த ஜானகி ஏவி.எம்.ஸ்டூடியோவில் ஒப்பந்த அடிப்படையில் பாடகியாக சேர்ந்தார். இவர் முதன் முதலாக தமிழில், ‘விதியின் விளையாட்டு’ என்ற படத்துக்காக “பெண் என் ஆசை பாழானது ஏனோ” என்ற பாடலை பாடினார். இந்த படத்திற்கு இசையமைத்தவர் டி.சலபதிராவ்.

இதற்கு அடுத்த நாளே, தெலுங்கில் வெளியான “எம்எல்ஏ” என்ற படத்திற்காக “நீயாசா அடியார்” என்ற பாடலை திரு. கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.

இதனைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது. முதல் வருடத்திலேயே, எவ்வித முயற்சியும் செய்யாமல் 6 மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடினார். எனினும் அவரது வாழ்கையில் பெரும் திருப்பத்தையும், புகழையும் அவருக்கு தேடித்தந்த படம் என்றால் அது “கொஞ்சும் சலங்கை” தான்.

1962- ஆம் வருடம் வெளி வந்த இத் திரைப்படத்தில் “சிங்கார வேலனே தேவா…” என்று இவர் பாடிய பாடல் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கேட்டவர்களை எல்லாம் பலே! என்னமா பாடியிருக்காங்க! என்று சொல்ல வைத்தது. அதோடு இப்பாடலின் காட்சியமைப்புகளும் அருமையாக படமாக்கப்பட்டிருந்தது.

இப்பாடல் ஜானகிக்கு கிடைத்தது பற்றி ஓர் சுவாரசிய தகவல் உண்டு.

‘கொஞ்சும் சலங்கை’ படத்துக்கு சிங்கார வேலன் சந்நிதியில் ஒரு நாதஸ்வர வித்வானும், ஒரு கைதேர்ந்த பாடகியும் சேர்ந்து, பக்தியும் காதலும் பொறாமையற்ற போட்டியுமாய் இணைந்து இசைக்கும் ஒரு பாடல் அது.

அருமையான சூழல்.

கீர்த்தனைகளையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஆபேரியில் அக்மார்க் தமிழிசை மரபில் அருமையாக ஒரு மெட்டும் தயார் செய்துவிட்டார் அப்படத்தின் இசையமைப்பாளர் திரு.எஸ்.எம். சுப்பையா நாயுடு. இப்பாடலிற்கு நாதஸ்வரம் வாசித்த திரு.காருக்குறிச்சி அருணாசலமும் தகுந்த சிரத்தையுடன் ஒத்திகை எல்லாம் முடித்து தன் பங்கிற்கு தயாராகிவிட்டார்.

ஆனால் இங்குதான் பிரச்சினை துவங்குகிறது.

முதலில், தமிழ்த் இசையுலகின் மூத்த பாடகர்கள் அனைவரும் பாட அழைக்கப்படுகிறார்கள். எப்பேர்ப்பட்ட மலையையும் சர்வ சாதாரணமாக ஊதித் தள்ளும் அவர்களுக்கு அன்று அப்பாடல் சரியாக கை கொடுக்காததால் பி.லீலா வருகிறார். தன் பங்கிற்கு அவரும் முயற்சி செய்துப் பார்த்துவிட்டு, மெட்டின் தரத்திற்கு தலைவணங்கி விலகிக் கொள்கிறார். இப்படி எல்லோரும் விலகிக்கொள்ள யாரைப் பாட வைக்கலாம் என்று யோசித்துத் கொண்டிருந்த எஸ்.எம்.எஸ்- க்கு பி.லீலாவே ஜானகியைப் பரிந்துரை செய்கிறார். அந்நேரத்தில் ஜானகி அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில பாடல்களை மட்டுமே பாடியிருந்தார்.

இப்போது, உடனே ஜானகி அழைக்கப்படுகிறார். மெட்டு வாசித்து காட்டப்படுகிறது.

மெட்டு முழுவதையும் கவனமாக கேட்டு விட்டு ஜானகி, “இந்த நாதஸ்வர சங்கதிகள் எல்லாம் “ப த நி ச.. க ம த நி..” என கால் அளவும் அரையளவுமாக இருக்கிறது, அதனை முழுவதுமே சரளியாகப் பாடினால் சரி வராது. அதனால் இதை நான் ராகமாக ஆகாக்காரத்தில் பாடிவிடுகிறேன்” என்கிறார்.

இதை ஸ்வரமாகப் பாடுவதே பலருக்கு சிம்ம சொப்பனம், வெறும் ராகமாகப் பாடுவது இன்னும் கஷ்டமே அம்மா என்கிறார் எஸ்.எம்.எஸ்.
இல்லை சார். இந்த பாட்டுக்கு இதுதான் சரியாக வரும் என்கிறார் ஜானகி.
அவரது புதிய முயற்சியை அலட்சியப்படுத்தாமல் எஸ்.எம்.எஸ் ஸும் அவருக்கு ஆதரவு வழங்க, நாதஸ்வரமா குரலா எனத் தெரியாத அளவுக்கு அப்பாடலில் ஜானகி ஜொலிக்கிறார்.

இப்பாடலின் ரெக்கார்டிங் முடிந்ததும் நாதஸ்வர சக்கரவர்த்தி திரு. காருகுறிச்சி அருணாசலம் ஜானகியைப் பற்றி இப்படி சொல்கிறார்.

“பிற்காலத்துல இந்தப் பொண்ணு பெரிய பாடகியாக வரும்”, என்பதே அது.

ஜானகியின் குரலையும், அவரது சாதனைகளையும் நாம் பலவாறாக புகழ்ந்தாலும், அதில் முக்கியமானது அவரின் வெர்சடாலிட்டி (versataility) மட்டுமே. ‘சகலகலாவல்லி’ என்று வார்த்தைக்காக வெறுமனே சொல்லாமல் அதன் ஆழத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

எந்த ஒரு பாடலையும் வெறும் பாடலாக மட்டும் பாடிவிட்டு செல்லாமல், இசை மற்றும் உணர்வு சார்ந்த விஷயங்களை சரியாக கணித்து அதற்கு தகுந்த விதமாக தனது குரலை மாற்றி, அட்சர சுத்தமாகப் பாடுவது அவரது தனித்தன்மை.

இதனை, அவருடைய சமகாலத்து ஜாம்பவான்களாக விளங்கிய கலைஞர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இது தெளிவாக விளங்கும்.

1983- ல் மேஜர் சுந்தர் ராஜன் இயக்கத்தில் வெளிவந்த “இன்று நீ நாளை நான்” என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற “பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்” என்ற பாடல் இசைஞானி இளையராஜா அவர்களால் இசை வார்க்கப்பட்டு ஜானகியின் குரலில் நிறைவு செய்யப்பட்டிருக்கும்.

இப்பாடல், துவங்கும் போது சில்லென்ற சாரல்காற்று உங்களை தீண்டிச் செல்வதைப்போல நீங்கள் உணரமுடியும். மறுநொடியில், ஜானகியின் ஆலாபனைகள் துவங்கும், ஒரு விதவையின் ஏக்கத்தையும், தாகத்தையும் எடுத்துச்சொல்லும் இப்பாடலில், ஜானகி “மழை செய்யும் கோளாறு… கொதிக்குதே பாலாறு…” என்ற வரியில் ஒரு விதவை தனது மனதில் இருக்கும் ஏக்கத்தையும், உணர்ச்சிகளையும் எப்படி வெளிக்காட்டியிருப்பார் என்பதை தனது குரலில் அவ்வளவு அற்புதமாகவும், முழுவதுமாகவும் பிரதிபலித்திருப்பார்.

இப்படி அவரது வெர்சடாலிட்டி-க்கு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் ஒரு பாட்டு இரண்டு பாட்டிற்கு சொல்லிவிட்டு நகர்ந்து விட முடியாது. இதுபோல் ஏராளமான பாடல்கள் பட்டியலில் இருக்கின்றன.

‘பூஜைக்கு வந்த மலரே வா’ பாடலில் ஒருவித வெட்கமும் கூச்சமும் கொண்ட இவரது குரல் வெளிப்படுகிறது என்றால் ‘வசந்தகால கோல’ங்களில் நெஞ்சம் கரையும் ஏக்கம் வெளிப்படும்.

‘உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்’ பாடலில் ஆழமான தாபம் என அவரது குரலில் வெளிவரும் உணர்ச்சி அலைகள், படக் காட்சிகளை பார்க்காமலே, இது போன்ற காட்சியாகத் தான் இருக்க முடியும் என யூகிக்கச் செய்கிறது.

இதே போன்று, பாடலில் பலகுரலை உட்புகுத்தி பாடுவதில், ஜானகிக்கு நிகர் ஜானகியே.

குழந்தையின் குரலிலும், பாட்டியின் குரலிலும் பாடியிருக்கிறார். இவர் உதிரிப்பூக்கள் திரைப்படத்திற்காக பாட்டியின் குரலில் பாடிய ‘போடா போடா பொக்கே’ போன்ற பாடல்கள் இசை ரசிகர்களை திகைக்கச் செய்தது. அவரது குழந்தைக்குரல் பாடல்கள் எல்லா மொழிகளிலும் இன்றும் ரசிக்கப்படுபவை.

பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த, மௌன கீதங்கள், திரைப்படத்தில் “டாடி..டாடி.. ஒ மை டாடி..” என்று குழந்தை போல் இவர் பாடிய பாடல் என்றும் ரசிக்கப்படுபவை.

இப்படி, சிறுகுழந்தைகள், பதின்பருவப்பெண்கள் ஏன் ஆண்குரலில் கூட இவர் பாடியிருக்கிறார்.

ஜானகி உச்ச ஸ்தாயிகளில் உலவுவதை மிக விரும்பும் பாடகி. அவரது பல புகழ்பெற்ற பாடல்கள் மிக சிக்கலான குரல் உச்சங்களைத் தொட்டு செல்பவை. ஆனால் அவர் பாடும்போது எவ்விதமான முயற்சியும் தெரியாது. எந்த வகையான உடல் அசைவுகளையும் முகச்சுளிப்புகளையும் காணமுடியாது. அவர் முகத்தைப்பார்த்தால் அவர் பாடுவதாகக்கூட தோன்றாது. உள்ளிருந்து ஸ்வரங்கள் இயல்பாகவே ஓடி வரும்!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 17 மொழிகளில் பாடிய பெருமை இவரையே சேரும். தமிழில் இவர் குரல் கொடுக்காத நடிகைகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அக்காலம் முதல் இக்காலம் வரை பிரபல நடிகைகள் பலருக்கு இவர் பின்னணி பாடியுள்ளார்.

இளையராஜாவின் கற்பனை வீச்சை தன் குரலால் சென்று எட்ட முடிந்த ஒரே பாடகி எஸ்.ஜானகிதான் என்று சொல்லப்படுகிறது. அவர்களுடையது மிக வெற்றிகரமான கூட்டணியாக அமைந்தது. ராஜாவின் இசையில் ஜானகி அபூர்வமான நாட்டுப்புற உச்சரிப்புடன் நாட்டுப்புறப் பெண்களுக்குரிய குழைவும் தளுக்கும் மிகக் கச்சிதமாக கலந்த பல பாடல்களை பாடியிருக்கிறார்.

இளையராஜாவின் முதல் படத்தில் ‘அன்னக்கிளி உன்னைத்தேடுதே’ மற்றும் ‘மச்சானப் பார்த்திங்களா’ போன்ற பாடல்கள், தமிழ்த் திரையிசையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

முதல்மரியாதை படத்தில் “ராசாவே உன்னை நம்பி” என்பது முதல் துவங்கி தேசியவிருது பெற்றுத்தந்த ‘இஞ்சி இடுப்பழகா’ வரை உதாரணம் சொல்லலாம்.

இளையராஜா தமிழுக்குக் கொண்டுவந்த நுட்பமான மேலையிசை மெட்டுகளை தமிழ்க்குரலின் அழகும் இயல்பும் எங்கும் கெடாமல் பாடி புகழ்பெற வைத்ததில் ஜானகியின் பங்கு மிக முக்கியமானதாகும்.

ஜானகி ஏ.ஆர். ரஹ்மான் இசையிலும் காதலன், உயிரே, ஜோடி, சங்கமம் உள்ளிட்ட பல படங்களில் பாடி இருக்கிறார். சங்கமம் படத்திற்காக இவருக்கு தமிழ்நாடு அரசு விருது கிடைத்தது.

2013- ஆம் வருடம் ஜானகிக்கு மத்திய அரசு ”பத்மபூஷண்” விருது அளித்து கவுரவித்தது. ஆனால் காலம் தாழ்த்தி வந்த விருது என்று அதை ஏற்க மறுத்து விட்டார்.

விருதுகள்

தமிழக அரசின் கலைமாமணி விருது,

பதினான்கு முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது,

ஏழு முறை தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது,

பத்து முறை ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது

என்று பல்வேறு தரப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்துள்ள இவர், இதுவரை நான்கு முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது வாங்கியுள்ளார்.

1976, ”பதினாறு வயதினிலே” படத்தில் ”செந்தூரப்பூவே” பாடல்

1980, ”ஒப்போல்” மலையாளத் திரைப்படத்தில் ”எட்டுமனூரம்பழத்தில்” பாடல்

1984, ”சித்தாரா” தெலுங்குப் படத்தில் ”வென்னெல்லோ கோடாரி அந்தம்” பாடல்

1992, ”தேவர்மகன்” படத்தில் ”இஞ்சி இடுப்பழகா” பாடல்.

பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, ரசிகர்கள் நெஞ்சத்திலும், திரையிசை வரலாற்றிலும் நீங்கா இடம் பிடித்துள்ள எஸ்.ஜானகி அவர்களை, அவரது பிறந்த நாளில் ”லஷ்மன் ஸ்ருதி” இசைக்குழு வாழ்த்தி வணங்குகிறது.

(Lakshman Sruth)