தேர்தல் விஞ்ஞாபனங்கள் எங்கே?

இன்னும் மூன்று வாரங்களுக்குக் குறைவான காலப்பகுதியே உள்ளது. ஆனால் எதை மய்யப்படுத்தி தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள் என்பதை மூன்று முக்கிய தமிழ்த் தேசிய கட்சிகளும் சொல்லக் காணோம். தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிந்த நிலையின் வெளிப்பாடு இது என்பதை உறுதிபடச் சொல்லலாம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடனேயே நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகள் தொடங்கின. தேர்தல் வரப்போகிறது என நாம் அனைவரும் அறிவோம். எல்லாக் கட்சிகளும் வேட்பாளர்களை இவ்வாண்டு தொடக்கத்திலேயே தேடத் தொடங்கிவிட்டன. வேட்பாளர்கள், கூட்டணிகள், குத்துவெட்டுக்கள் என கட்சிகளின் காட்சிகள் இவ்வாண்டு தொடக்கம் முதல் அரங்கேறின. வேட்பாளர்களைத் தேடுவதில் காட்டிய அக்கறையில் ஒரு கொஞ்சத்தையேனும் காட்டியிருந்தால் இப்போதைக்கு தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை.

தமிழ் அரசியல் கட்சிகளின் நோக்கம் என்ன? நலன் என்ன? என்பதை பற்றிய கேள்விகளை தமிழ் மக்கள் இப்போதாவது கேட்க வேண்டும். ஏனெனில் தேர்தல் அரசியலின் இழிவார்ந்த பக்கங்களுக்கு எமது தமிழ்க்கட்சிகள் சொந்தக்காரர்கள். இப்போதும் தேர்தலில் யார் வெல்வது என்பதுதான் பிரச்சினையாக இருக்கிறதே தவிர எதை மய்யப்படுத்தி வாக்குக் கேட்கிறார்கள் என்பதல்ல.

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தின் அடிப்படையான பலவீனங்களென இன்று ஓரளவேனும் பலராலும் ஏற்கப்படுவனற்றில் பிரதானமானது ஜனநாயகமின்மை. இதைத் தோற்றுவித்து உருவாக்குவதில் தமிழரசுக் கட்சிக்கும் அதன் மறு அவதாரமான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் முக்கிய பங்கு இருந்தது. தமிழ்த் தேசிய அரசியலின் முக்கிய அடையாளங்களாக இருந்து வந்துள்ள ‘தனிப்பெரும் தலைவர்’ ‘ஏகப் பிரதிநிதித்துவம்’ ‘இன ஒற்றுமை’ என்ற கருத்தாக்கங்கள் விடுதலைப் புலிகளின் தோற்றத்திற்கு மிக முந்தியன.

மாற்று அரசியல் ஒன்று உருவாவதற்கெதிராகப் பழமைவாதம் ‘தமிழர் ஒற்றுமை’ என்ற கருவியைப் பலவாறாகவும் பயன்படுத்தி வந்துள்ளது. அதன் விளைவாக, மக்கள் அரசியல் என்ற கருத்தாக்கம் தமிழ் அரசியற் பரப்பில் வேரூன்றத் தவறியது. அதை விடவும் சாதி, பால், பிரதேசம் என்பன சார்ந்த முரண்பாடுகளும் ஏற்றத் தாழ்வுகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அப் பிரச்சினைகளை இல்லை என மறுப்பதுடன் அவற்றைப் பற்றிப் பேசுவது தமிழ் மக்களைப் பிளவு படுத்தும் என வாதிப்பதும் தமிழ்த் தேசியவாதிகட்கு வழமையாகிவிட்டது. அவற்றை மறுத்ததால் அவை இல்லாமற் போய்விடவில்லை. இன்று அவை முன்பு நாம் அறிந்திருந்த அதேயளவு உக்கிரத்துடன் தொடருவதை நாம் அறிவோம்.

ஒரு தேசிய இனத்தின் விடுதலையை அதன் அக முரண்பாடுகளைப் புறக்கணித்து வெற்றிகரமாக முன்னெடுக்க இயலாது என நாம் உணரலாம். தேசியத்தின் செயற்பாடும் உயர் வர்க்க, சாதிய, ஆணாதிக்க, பிரதேச மேலாதிக்கச் சிந்தனைகள் சரிவரக் கையாளப்படாத போது, அவை ஏற்படுத்தும் விளைவுகள் போராட்டத்தை மட்டுமன்றித் தேசிய இன அடையாளத்தையும் கடுமையாகப் பாதிக்க இயலும் என்பது நம் கவனத்துக்குரியது.

இன்று ‘மாற்று அரசியல்’ என்பது ‘மாற்றுத் தலைமை’யாகச் சுருங்கியுள்ளது. தமிழ்த் தேசிய அரசியல் மரபில் மக்கள் மய்ய அரசியல் என்பது என்றுமே பேசுபொருளாக இருந்ததில்லை. ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களிற்கான தீர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. விடுதலைப் புலிகளின் போரின் போது தமது உயிர்களை ஈந்தோரும் வேறு பலவாறான தியாகங்களைச் செய்தோரும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைச் சேர்ந்த இளைஞர்களும் யுவதிகளுமே. அவர்களது வர்க்கப் பின்னணியைச் சேர்ந்தோரே இன்று தமது வீடுகளுக்கும் நிலங்களுக்கும் தொழில்களுக்கும் மீள இயலாமல் அல்லற்பட்டுக் கிடப்போரிற் பெரும்பாலோராக உள்ளனர். தமிழ்த் தேசியத்தின் தலைமைகள் அனைத்தும் அவர்களின் நலன் பற்றிய அக்கறையே இல்லாமல் இருப்பதை நாம் காணுகிறோம். எனவே மக்கள் பற்றிய உண்மையான அக்கறையற்ற தேசிய இன விடுதலை அமைப்பு எதுவும் கோருகிற தேசமோ இன விடுதலையோ யாருடைய நன்மைக்கானது என்பதை நாம் கவனமாக ஆராய வேண்டும்.