தொண்டையில் சிக்கிய முள்

(முகம்மது தம்பி மரைக்கார்)
‘பிச்சை வேண்டாம் நாயைப் பிடி’ என்கிற நிலையை, நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருக்கின்றன. “உள்ளூராட்சித் தேர்தலை நடத்துங்கள்” என்று, தேர்தலுக்கு முன்னர் கூச்சலிட்டவர்கள், தேர்தல் நடந்த பிறகு, அதன் விசித்திர முடிவுகளால், விழி பிதுங்கி நிற்கின்றனர். அரசியல் கட்சிகளின் உள்ளும் புறமும், உடைவுகளை ஏற்படுத்தி விடும் அபாயகரமான நிலைவரங்களை, உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியிருக்கின்றன.

தேசிய அளவில், ஆட்சி மாற்றமொன்றை, ஏற்படுத்தி விடுமளவுக்கான கொதி நிலையை, இந்தத் தேர்தல் முடிவுகள் உருவாக்கி விட்டிருக்கின்றன. மூன்று வருடங்களுக்கு முன்பு, நகமும் சதையுமாகத் தோன்றிய ரணிலும் மைத்திரியும் அரசியல் விவாகரத்தைக் கோரி நிற்குமளவுக்கு, நிலைமை இருக்கிறது.

இன்னொருபுறம், முஸ்லிம் கட்சிகளின் தொண்டைக்குள் சிக்கிய முள்ளாக, உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் மாறியிருக்கின்றன. கலப்பு முறைத் தேர்தலுக்கு ஆதரவளித்து, கைகளை உயர்த்திய முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், இப்போது அதே தேர்தல் முறைமையைத் திட்டித் தீர்க்கின்றனர்.

அப்படியென்றால், உள்ளூராட்சித் தேர்தலின் புதிய முறைமை குறித்த புரிதல்கள் இல்லாமலேயே, அதற்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஆதரவளித்தார்களா என்கிற கேள்வி இங்கு எழுகிறது. அல்லது, இந்தத் தேர்தல் முறைமையிலுள்ள ஆபத்தை அறிந்து கொண்டுதான், அதற்கு ஆதரவாகக் கைகளை உயர்த்த வேண்டிய நிலைக்கு இவர்கள் ஆளாகியிருந்தனரா என்கிற வினாவும் இன்னொருபுறம் எழுந்து நிற்கிறது.

பலம் காட்டும் தளம்

முஸ்லிம் கட்சிகள், தங்கள் அரசியல் பலத்தைக் காட்டுகின்ற தளமாக கிழக்கு மாகாணம் உள்ளது. அதிலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில், வெற்றிக் கொடி கட்ட வேண்டும் என்பதுதான் அக்கட்சிகளின் பெரு விருப்பமாகும்.

ஆனால், நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகளின்படி, அம்பாறை மாவட்டத்திலேயே, பெருவாரியான இடங்களில் எந்தவொரு முஸ்லிம் கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைவரம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில்தான், கல்முனை மாநகரசபையில் கூட்டாட்சி அமைக்க வருமாறு, சாய்ந்தமருதில் தோடம்பழச் சின்னத்தில் போட்டியிட்டு, ஒன்பது ஆசனங்களைப் பெற்றுள்ள, சுயேட்சைக் குழுவை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், கடந்த வாரம் அழைத்திருந்தார். ஆனாலும், அந்த அழைப்பை சாய்ந்தமருது சுயேட்சைக் குழு நிராகரித்து விட்டது.

தந்திரம்

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலின் வழிநடத்தலுடன், கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, தோடம்பழச் சின்னத்தில் சுயேட்சைக்குழு களமிறக்கப்பட்டது. இந்த நிலையில், மேற்படி சுயேட்சைக் குழுவுக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் பாரியளவில் முரண்பாடுகள் ஏற்பட்டன.

ஒரு கட்டத்தில், குறித்த சுயேட்சைக் குழுவைக் களமிறக்கிய சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு எதிராக, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம், எழுத்து மூலம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதற்கிணங்க, சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தை, வக்பு சபை கலைத்ததும், பின்னர் அந்த நடவடிக்கைக்கு எதிராகச் செய்யப்பட்ட மேன்முறையீட்டுக்கு இணங்க, கலைக்கப்பட்ட நிர்வாகத்துக்கு மீண்டும் அதிகாரம் வழங்கப்பட்டமையும் அறிந்த தகவல்களாகும்.

மேற்படி சம்பவங்கள் காரணமாக, முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் மீது, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகமும் சுயேட்சைக் குழுவும் கோபத்தில் இருந்துள்ளது.

தேர்தல் காலத்தில் சாய்ந்தமருதில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் பிரசாரக் கூட்டத்தில், கலந்து கொண்ட அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தையும் அவர்கள் களமிறக்கிய சுயேட்சைக் குழுவையும் நேரடியாகவே, தனது உரையில் சாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு பின்னணியில்தான், கல்முனை மாநரசபையில் தம்முடன் இணைந்து ஆட்சியமைக்க வருமாறு, சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவை, மு.கா தலைவர் ஹக்கீம் அழைத்திருந்தார்.

மேயர் பதவியையும் சுயேட்சைக் குழுவுக்கே வழங்குவதாகவும் ஹக்கீம் இதன்போது தெரிவித்திருந்தார்.
41 அங்கத்தவர்களைக் கொண்ட கல்முனை மாநகரசபையில், தனித்து ஆட்சியமைக்கும் வகையில் எந்தவொரு தரப்புக்கும் அறுதிப் பெரும்பான்மை ஆசனங்கள் கிடைக்கவில்லை.

யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் 12 ஆசனங்களையும் சாய்ந்தமருது சுயேட்சைக் குழு ஒன்பது ஆசனங்களையும் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட த.தே.கூட்டமைப்பு ஏழு ஆசனங்களையும் மயில் சின்னத்தில் களமிறங்கிய ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு ஐந்து ஆசனங்களையும் பெற்றுள்ளன. ஏனைய ஐந்து தரப்புகளுக்கும் தலா ஒவ்வோர் ஆசனங்கள் கிடைத்துள்ளன.

உண்மையாகவே, சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவானது, தம்முடன் ஆட்சியமைப்பதற்குச் சம்மதிக்கவே மாட்டாது என்பதை, மு.கா தலைவர் மிக நன்றாகவே அறிவார்.

அப்படியிருந்தும், கூட்டாட்சி அமைப்பதற்காக, அந்தக் குழுவை ஏன் அவர் அழைத்தார் என்பதைக் கொஞ்சம் கூர்மையுடன் பார்ப்பவர்களுக்குச் சில விடயங்களை அனுமானித்துக் கொள்ள முடியும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கைகோர்க்கும் திட்டம்

முஸ்லிம் காங்கிரஸும் த.தே.கூட்டமைப்பும் சில இடங்களில் கூட்டாட்சி அமைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன என்று, தேர்தல் பிரசாரக் காலத்திலேயே மு.கா தலைவர் கூறியிருந்தார்.

தேர்தல் முடிந்த பிறகும், இதே நிலைப்பாட்டை மு.கா அறிவித்திருந்தது. “சில உள்ளூராட்சி சபைகளில் இணைந்து ஆட்சியமைக்கும் பொருட்டு, த.தே கூட்டமைப்புடனும் சுதந்திரக் கட்சியுடனும் முஸ்லிம் காங்கிரஸ் பேசி, கொள்கையளவில் இணக்கம் கண்டுள்ளது” என, அந்தக் கட்சி தெரிவித்திருந்தது.

அந்த வகையில், கல்முனை மாநகரசபையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கான சாத்தியம் உள்ளது. ஆனாலும், கல்முனைப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் நீண்ட காலமாகவே, நிர்வாக மற்றும் எல்லைப் பிரச்சினைகள் இருந்து வருகின்றன.

இதனால், இரண்டு தரப்பினரும் அரசியல் ரீதியாக ஒருவரையொருவர் எதிராளிகளாகப் பார்த்து வருகின்றனர். இந்தநிலையில், கல்முனை மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மு.கா கூட்டாட்சியமைத்தால், கல்முனையிலுள்ள முஸ்லிம்கள், மு.காங்கிரஸ் தலைமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் அபாயம் உள்ளது.

எனவேதான், எடுத்தாற்போல் கல்முனை மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டுச் சேராமல், சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவைக் கூட்டாட்சியமைக்க வருமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அழைத்திருக்க வேண்டும்.

தனது அழைப்பு நிராகரிக்கப்படும் என்பது மு.கா தலைமைத்துவத்துக்குத் தெரிந்திருந்தும் அதைச் செய்தமை கவனிப்புக்குரியது. இதன்பின்னர், கல்முனை மாநகரசபையில் த.தே.கூட்டமைப்புடன் மு.காங்கிரஸ் கூட்டாட்சி அமைக்கலாம்.

அப்போது, கல்முனையிலுள்ள முஸ்லிம்கள் மு.காவுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தால்,
“நாங்கள் சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவைத்தான் ஆரம்பத்தில் அழைத்தோம். அவர்கள் மறுத்ததால்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தோம். எனவே, த.தே கூட்டமைப்பை நோக்கி, முஸ்லிம் காங்கிரஸ் செல்லும் நிலையைச் சாய்ந்தமருது சுயேட்சைக் குழுதான் ஏற்படுத்தியது. எனவே, இந்த நிலைவரத்துக்கான முழுப்பொறுப்பையும் சாய்ந்தமருது சுயேட்சைக் குழுதான் ஏற்க வேண்டும்” என்று முஸ்லிம் காங்கிரஸ் கூறி, தப்பித்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்காகவே, கல்முனை மாநகரசபையில் கூட்டாட்சி அமைப்பதற்காகச் சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவுக்கு மு.கா அழைப்பு விடுத்ததான எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுவதைக் காணமுடிகின்றது.

இன்னொருபுறம், கல்முனையில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் த.தே. கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் மாத்திரம் இணைந்து கொண்டு கூட்டாட்சி அமைப்பதற்கும் ஆசனங்கள் போதாது. கல்முனை மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு ஆகக்குறைந்தது 21 ஆசனங்கள் தேவையாக உள்ளன. ஆனால், மு.காவும் த.தே.கூட்டமைப்பும் இணையும் போது, 17 ஆசனங்களே கிடைக்கும்.

எனவே, அறுதிப் பெரும்பான்மையைப் பெறுவதென்றால், அந்தக் கூட்டணிக்கு இன்னும் நான்கு ஆசனங்கள் தேவைப்படும். அந்த ஆசனங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் கல்லில் நாருரிக்க வேண்டிவரும்.

இது இவ்வாறிருக்க, கல்முனை மாநகரசபையில் த.தே.கூட்டமைப்புடன் இணைந்து மு.காங்கிரஸ் ஆட்சியமைக்காது என்று, மு.காங்கிரஸின் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் கூறியுள்ளமையும் இங்கு கவனத்துக்குரியது. பிரதியமைச்சர் ஹரீஸ், கல்முனையைச் சொந்த இடமாகக் கொண்டவராவார்.

ஆனாலும், கல்முனை மாநகர சபையின் ஆட்சியைக் கையிழக்கும் ஒரு நிலைவரம், முஸ்லிம் காங்கிரஸுக்கு ஏற்படுமாக இருந்தால், அந்த நேரத்திலும் த.தே.கூட்டமைப்பைப் பிரதியமைச்சர் ஹரீஸ் புறக்கணிப்பாரா என்பதும் இங்கு கேள்விக்குரியதாகும்.

பிழைக்கப்போகும் சாத்தியங்கள்

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட எந்தவொரு சபையிலும், முஸ்லிம் காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைவரமொன்று உருவாகியுள்ள நிலையில், மு.கா எதிரான தரப்புகள் ஒன்றிணைந்து அங்கு ஆட்சியமைக்கும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக உள்ளது.

குறிப்பாக, மயில் சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் கூட்டணியும் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸும் அங்கு கூட்டாட்சி அமைக்கும் என்கிற பேச்சுகள் அரசியலரங்கில் உள்ளன.

இதை வலுப்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவுக்கும் ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பாக அதன் தலைவர் எம்.ரி. ஹசன் அலி, அந்தக் கூட்டணியின் பங்காளிக் கட்சியான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோருக்கும் இடையில் அண்மையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றிருந்தது.

இது இவ்வாறிருக்க, அக்கரைப்பற்றிலுள்ள இரண்டு உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியுள்ள அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ், அதற்கு மேலதிகமாக, அம்பாறை மாவட்டத்தில், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் மாத்திரம்தான் ஆறு ஆசனங்களைப் பெற்றுள்ளது.

ஆனால், மயில் சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு, அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பெரும்பான்மை சபைகளிலும் கணிசமானளவு ஆசனங்களைப் பெற்றுள்ளது. பல சபைகளில் மற்றைய அணிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான சந்தர்ப்பமும் மயில் தரப்புக்கு உள்ளது.

அந்தவகையில், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் மாத்திரம்தான் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸும், மயில் தரப்பும் இணைந்து ஆட்சியமைப்பதற்கான சர்ந்தர்ப்பம் உள்ளது.

அம்பாறை மாவட்டத்தில், அட்டாளைச்சேனை பிரதேசம்தான் முஸ்லிம் காங்கிரஸுக்கு அநேகமான சந்தர்ப்பங்களில் விகிதாசார அடிப்படையில் அதிக வாக்குகளை அள்ளி வழங்கி வருகிறது.

இந்தப் பிரதேசத்தை இழந்து விடக் கூடாது என்பதற்காகவே, உள்ளூராட்சித் தேர்தலுக்கு சில வாரங்கள் உள்ள நிலையில், தமது கட்சி சார்பான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அட்டாளைச்சேனைக்கு மு.கா வழங்கியிருந்தமையும் நினைவு கொள்ளத்தக்கது.

ஆயினும், 20 உறுப்பினர்களைக் கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையில், முஸ்லிம் காங்கிரஸ் ஒன்பது ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது.

இந்த நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச சபையில், தேசிய காங்கிரஸ் ஆறு ஆசனங்கள், ஐ. மக்கள் கூட்டமைப்பு மூன்று ஆசனங்கள், பொதுஜன பெரமுன ஓர் ஆசனம் என, கட்சிகள் இணைந்து, கூட்டாட்சி அமைப்பதற்கான அதிகபட்ச சாத்தியமொன்றும் உள்ளது.

அன்சிலும் உதுமாலெப்பையும்

ஆனால், அவ்வாறானதொரு கூட்டாட்சி அமையும் போது, அச்சபையின் தவிசாளர் பதவியை அல்லது அப்பதவியின் அரைவாசிக் காலத்தின் முதல் பகுதியை, தமக்கு வழங்க வேண்டுமெனத் தேசிய காங்கிரஸ் கோரவுள்ளதாக அறிய முடிகிறது.

மேலும், இவ்வாறு பெறப்படும் தவிசாளர் பதவியைத் தேசியக் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பைக்கு அந்தக் கட்சி வழங்கலாம் என்கிற பேச்சொன்றும் உள்ளது. ஆனால், உதுமாலெப்பையின் பெயர், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் எந்தவொரு வேட்பாளர் பட்டியலிலும் இடம்பெற்றிருக்கவில்லை என்பதை இங்கு பதிவு செய்தல் பொருத்தமாகும்.

இந்த நிலையில், உதுமாலெப்பையை முதலாவது பதவிக் காலத்துக்கு, தவிசாளராக்கும் தீர்மானத்தை, ஐ.மக்கள் கூட்டமைப்பு ஒத்துக் கொள்ளுமா என்பது சந்தேகமாகும். தேசிய காங்கிரஸுடன் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு இணைந்து ஆட்சியமைத்தால், தவிசாளர் பதவியை ஐக்கிய மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.ஏ. அன்சிலுக்கு வழங்க வேண்டுமென்றுதான் அந்தக் கூட்டமைப்பிலுள்ள மிகப் பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.

மு.கா தலைவர் ஹக்கீமுடன் முரண்பட்டுக் கொண்டு, முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய பதவிகளை உதறி விட்டு, அன்சில் வெளியேறி வந்துள்ளார். எனவே, அவ்வாறான ஒருவரையே, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக்கிப் பார்க்க வேண்டுமென, ஐ.ம கூட்டமைப்பினரில் அநேகர் விரும்புகின்றனர்.

ஆக, அட்டாளைச்சேனையின் தவிசாளர் ஆசனத்தில் முதலாவதாக யார் அமர்வது என்கிற இந்த இழுபறியானது, தேசிய காங்கிரஸும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பும் இணைவதற்கான சாத்தியத்தை சிலவேளை இல்லாமல் செய்து விடுமோ என்கிற சந்தேகமும் ஒரு பக்கமாக உள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், அந்தக் கூட்டணி அமையும் போது, அன்சிலுக்கு முதலாவதாக தவிசாளர் பதவி வழங்கப்படாது விட்டால், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் எதிரணியில் அன்சில் அமர்வார் என்று, அவருடன் மிக நெருக்கமாக இருப்பவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

முள்

இப்படியான சூழ்நிலைகளுக்கு மத்தியில்தான், மார்ச் மாதம் ஆறாம் திகதியன்று உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டும்தான் உள்ளன. இந்தக் காலப் பகுதிக்குள், முஸ்லிம் கட்சிகளின் முன்னே இருக்கின்ற சிக்கல்களுக்கெல்லாம் பொருத்தமான தீர்வுகளைக் காண்பதென்பது மிகவும் கஷ்டமாகும்.

தொண்டையில் சிக்கிய முள்ளை விழுங்குவதா, துப்புவதா என்பதைத் தீர்மானிப்பதற்கே, அந்தக் கட்சிகளுக்கு கால அவகாசம் போதாது என்பதுதான் – தற்போதைய கள நிலைவரமாகும்.