தோழர் பத்மநாபாவின் 68வது (19.11.2019) பிறந்த தினம்.

திம்புக் கோட்பாட்டை உருவாக்குவதிலும் அதனை ஒருமித்த குரலில் வலியுறுத்துவதிலும் காத்திரமான பங்களிப்பைச் செலுத்தினார்.

அதன் விளைவாக உருவானதே இந்திய-இலங்கை ஒப்பந்தமும், மாகாணசபை முறைமையும், 13ஆவது திருத்தமும். வடக்கு-கிழக்கை இணைத்து முதலாவது மாகாணசபையை உருவாக்கி அதில் அனைத்து இனத்தவர்களுடன் அமைச்சுப் பதவியைப் பகிர்ந்து ஜனநாயக மரபை கட்டிக்காத்தவர் தோழர் நாபா. இன்று வடக்கு-கிழக்கில் வாழ்கின்ற தமிழ் பேசும் சமூகங்களிடையே ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்கே நாம் மிகவும் சிரமப்படுகின்றோம்.

மாகாணசபை முறைமை எமது பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையாவிட்டாலும் இருநாடுகளுக்கிடையிலான ஒப்பந்தமானது அதற்கான ஒரு ஆரம்பப்புள்ளியாக அமையும் என்று அவர் நம்பியிருந்தார். அன்றைய சூழலில் ஏற்பட்ட மற்றும் ஏற்படவிருந்த அழிவுகளை இதன் மூலம் தடுக்க முடியும் என்றும் அவர் நம்பியிருந்தார்.

இன்று நாம் அன்று இணைந்திருந்த வடக்கு-கிழக்கு இணைப்பை மீண்டும் உருவாக்குவதற்கே சிரமப் படுகின்றோம்.

தமிழ் மக்களின் தேசிய இனவிடுதலை என்பது ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரின் மற்றும் சமூகத்தினரின் விடுதலையுடன் சேர்த்தே முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் தோழர் பத்மநாபா. மேலும் சர்வதேசரீதியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் விடுதலையை ஆதரிப்பதன் மூலமே நாம் எமது தேசிய இன விடுதலைக்கான ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் நன்கு உணர்ந்திருந்தார்.

அதனாலேயே பல்வேறு சிரமங்களின் மத்தியிலும் சர்வதேசரீதியில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் விடுதலைக்காகக் குரல்கொடுத்தார். அவர்களுக்கு ஆதரவான போராட்டங்களை இலங்கையிலும் அதற்கு வெளியிலும் மேற்கொண்டிருந்தார்.

இடதுசாரிக் கட்சிகளுடன் உறவுகளைப் பேணி தமிழகத்திலும் இந்தியாவின் ஏனைய மாகாணங்களிலும் ஈழ மக்களின் விடுதலைக்காக ஆதரவைத் தேடுவதில் அவர் ஈடுபாட்டுடன் பங்காற்றினார்.

மனிதாபிமானத்திற்கும் மனிதநேயத்திற்கும், ஜனநாயகத்திற்கும் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்த எமது தோழர் க.பத்மநாபாவின் வழிகாட்டலில் நாம் இணைந்து செயற்பட்டோம் என்பதே எமக்குப் பெருமையாகும்.

அவரது 68 ஆவது பிறந்தநாளில் அவரது தீர்க்கதரிசனத்தையும் அவர் வலியுறுத்திய ஐக்கியத்தையும் அவரது மனிதநேயத்தையும் உயர்த்திப்பிடிப்பதில் நாம் பெருமை அடைகின்றோம்.அவரது வழியில் தொடர்ந்தும் நாம் பயணிப்போம்.