நகோனோ – கரபாக்: மௌனமாக ஒரு யுத்தம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

உலகின் பல மூலைகளிலும் நடப்பவை நம் காதுகளை எட்டுவதில்லை. எட்டுவனவும் முழுமையான செய்திகளல்ல. அவற்றிற் பாதி உண்மையுமல்ல. தெரிந்தே திரித்த செய்திகள் எங்களை அடைகின்றன. உலகின் செய்தி வழங்குனர்கள் தரும் செய்திகளை விடத் தராமல் விடும் செய்திகள் பல சமயங்களில் முக்கியமானவை. செய்திகளின் முக்கியம், அவை யாருக்கானவை என்ற அடிப்படையிலேயே முடிவாகின்றன.சில நாட்களுக்கு முன்னர், கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்குமிடையே மூண்ட யுத்தம், நெடுங்காலமாகத் தொடரும் முரண்பாட்டைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்துள்ளது. இரு நாடுகளும் போரிடுதற்குக் காரணமாக அமைந்தது, நகோனோ-கரபாக் என்ற நிலப்பரப்பாகும். ஆர்மேனியாவுக்குரிய நகோனோ-கரபாக் அஸர்பைஜானாற் சூழப்பட்ட நிலப்பரப்பாகும்.

நகோனோ-கரபாக்கின் வரலாறு பழையது. அங்கு வசிக்கும் ஆர்மேனியக் கிறிஸ்தவர்கள் மிக நீண்டகாலமாக அங்கு வாழ்ந்து வருகிறார்கள். கி.பி. 7ஆம் நூற்றாண்டில் பாரசிகத்தின் (இப்போதைய ஈரான்) மீதான அரேபியப் படையெடுப்பு, பாரசிகத்தையும் அதை அண்டிய பிற பகுதிகளையும் அரேபியக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

அதன் பின்பு பல்வேறு ஆட்சி மாற்றங்களைத் தொடர்ந்து, ரஷ்யப் பேரரசின் எழுச்சியின் பின் 1799இல்; நகோனோ-கரபாக், ரஷ்யப் பேரரசின் ஆசிபெற்ற ஆட்சியானது. 1804 முதல் 1813 வரை நீடித்த ரஷ்ய-பாரசிக யுத்தத்தில் ரஷ்யாவின் வெற்றி, நகோனோ-கரபாக்கை ரஷ்யப் பேரரசின் கட்டுப்பாட்டுக்குட் கொண்டுவந்தது. அதனால் நகோனோ-கரபாக்கின் முஸ்லிம்கள் பாரசிகம் நோக்கிப் பெயரப் பாரசிக ஆர்மேனியர்கள், நகோனோ-கரபாக்குக்கு நகர்ந்தனர்.

நவீன தேச அரசுகளின் உருவாக்கமும் முதலாம் உலகப் போரும் 1917இல் நடந்த ரஷ்யப் புரட்சியும் நவீன நகோனோ-கரபாக்கின் உருவாக்கத்திற் செல்வாக்குச் செலுத்தின. புரட்சியையடுத்து நகோனோ-கரபாக் உள்ளடங்கிய காக்கேசிக்-குறுக்கான ஜனநாயக சமஷ்டிக் குடியரசு உருவானது. பின்னர் அது, ஜோர்ஜியா, அஸர்பைஜான், ஆர்மேனியா ஆகிய மூன்று அரசுகளானது. அடுத்து 1918-20 காலத்தில் ஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்குமிடையே சிறுசிறு எல்லைப் போர்கள் நடந்தன. சர்சைக்குரிய பகுதிகளில் நகோனோ-கரபாக் ஒன்றாகும். 1918இல் நகோனோ-கரபாக் தன்னை சுயாட்சிப் பகுதியாக அறிவித்தது. அப்போது அங்கு புகுந்த (துருக்கிய) ஒட்டோமான் பேரரசின் படைகளை ஆர்மேனியர்கள் எதிர்த்து விரட்டினர்.

உலகப் போரில், ஓட்டோமன் பேரரசின் தோல்வியைடுத்து, நகோனோ-கரபாக் பகுதியை பிரித்தானியப் படைகள் தமது கட்டுப்பாட்டுள் கொண்டுவந்தன. அதைத் தொடர்ந்த பரிஸ் அமைதி மாநாட்டில் நகோனோ-கரபாக்கை அஸர்பைஜானின் கட்டுப்பாட்டுக்குள் வைக்;க முடிவானது. நகோனோ-கரபாக் மக்கள் அதை ஏற்கவில்லை. எனவே, அஸர்பைஜான் படைகட்கும், அமைதி மாநாட்டு உடன்படிக்கையை நிராகரித்த நகோனோ-கரபாக் போராளிகட்குமிடையே போர் மூண்டது. இறுதியில், நகோனோ-கரபாக் தேசிய சபை தன்னை ஆர்மேனியாவுடன் இணைப்பதாக அறிவித்தது.

முதலாம் உலகப் போரின் முடிவின் பின்னர் ரஷ்யப் புரட்சியையடுத்து வலுவான தேசமாக உருவாகிய சோவியத் யூனியனில், ஆர்மேனியா, அஸர்பைஜான், ஜோர்ஜியா ஆகியன இணைந்தன. நகோனோ-கரபாக், அஸர்பைஜான் சோவியத் சோசலிசக் குடியரசுக்கு உட்பட்ட சுயாட்சிப் பிரதேசமாகியது. ஆர்மேனியா, 1960 அளவில் நகோனோ-கரபாக் மீது உரிமை கோரிய போதும் சோவியத் யூனியன் வலுவாயிருந்தவரை நகோனோ-கரபாக்கில் பாரிய முரண்பாடுகள் ஏற்படவில்லை.

1980களில் தொடங்கிய சோவியத் யூனியனின் சரிவுடன் இப் பகுதிகளில் முரண்பாடுகள் மீண்டும் தோன்றின. சோவியத் யூனியனின் பிடி தளர்ந்த நிலையில், அஸர்பைஜான் அஸர்மயமாக்கல் என்ற கொள்கை மூலம் நகோனோ-கரபாக் பகுதியின் சுயாட்சியை மறுத்து அதை மெதுமெதுவாக அஸர்பைஜானின் பகுதியாக்க முயன்றது. ஆனால், ஆர்மேனியப் பெரும்பான்மையைக் கொண்ட நகோனோ-கரபாக் அதை வன்மையாக எதிர்த்ததுடன், அஸர்பைஜானில் இருந்து விலகி ஆர்மேனியாவில் இணையும் விருப்பை சோவியத் யூனியனுக்குத் தெரிவித்தது. ஆனால், சோவியத் யூனியன் அதை ஏற்கவில்லை. நகோனோ-கரபாக்கின் வழங்கப்பட்டிருந்த சுயாட்சி அதிகாரத்தை அஸர்பைஜான் இல்லாமலாக்கியது. 1991 டிசெம்பரில் நகோனோ-கரபாக்கில் நடந்த சர்வசன வாக்கெடுப்பு ஆர்மேனியாவுடன் இணைவதற்கான முழு ஆதரவு வழங்கியது. இதன் மூலம் நகோனோ-கரபாக் ஆர்மேனியாவின் ஒருபகுதியாக மாற முடிந்தது.

சோவியத் யூனியனிலிருந்து விடுபட்ட ஆர்மேனியாவும் அஸர்பைஜானும், நகோனோ-கரபாக் பகுதிக்காக மோதின. முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட அஸர்பைஜான் இப் போரில் கூலிப்படைகளையும் பயன்படுத்தியது. ஆப்கான் முஜாகிதீன்களின் பங்குபற்றல் குறிப்பான கவனிப்புக்குரியது. மறுபுறம் கிறிஸ்தவப் பெரும்பான்மையைக் கொண்ட ஆர்மேனியா, கிறிஸ்தவ ஆர்மேனியப் பெரும்பான்மையைக் கொண்ட நகோனோ-கரபாக் பகுதியைத் தக்கவைக்கப் போரில் ஈடுபட்டது. ஆர்மேனிய-அஸர்பைஜானிய முரண்பாடாயிருந்த நகோனோ-கரபாக் மோதல் மெதுமெதுவாக கிறிஸ்தவ-இஸ்லாமியச் சண்டையாக உருமாறியது. ரஷ்யாவுக்கு எதிராகப் போராடிய செச்னியப் போராளிகள் அஸர்பைஜானுக்குச் சார்பாகப் போரிடத் தொடங்கினர். அதனால், அதுவரை இந்நெருக்கடியில் ரஷ்யா கடைப்பிடித்த நிலைப்பாடு பெரிதும் மாறியது. வரலாறு நெடுகிலும் நகோனோ-கரபாக் பகுதி அஸர்பைஜானுக்குரியது என்ற நிலைப்பாட்டைக் ரஷ்யா கடைப்பிடித்தது.

இந் நெருக்கடி மதஅடிப்படையிலானதாகி, ரஷ்யாவுக்கு எதிராகப் போராடும் செச்னியப் போராளிகளை அஸர்பைஜான் துணைக்கழைத்து அவர்கட்கு அரச பாதுகாப்பு வழங்கி ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட உதவியமையால், நகோனோ-கரபாக் விடயத்தில் ரஷ்யாவின் நிலைப்பாடு மாறியது. மேலும் முஐகிதீன்களின் வருகையையும் அஸர்பைஜானின் இஸ்லாமிய அடிப்படைவாத நிலைப்பாட்டையும் கருதி நகோனோ-கரபாக் அஸர்பைஜானின் சுயாட்சிப் பிராந்தியமாகத் தொடர்வது சாத்தியமில்லை என ரஷ்யா கருதியது. ஈரான்-ஈராக் போரில் வென்று பிராந்தியத்தின் முக்கியமான சக்தியாக உருவெடுத்;த ஈரான் அஸர்பைஜானின் பக்கம் நின்றது. ரஷ்யா ஆர்மேனியாவின் பக்கம் நின்றது. இவையும் நகோனோ-கரபாக் பகுதிக்காக அஸர்பைஜானுக்கும் ஆர்மேனியாவுக்கும் ஒரு போர் விளைய வழியமைத்தது. 1993இல் உக்கிரமடைந்த போரின் விளைவாக ஆயிரக்கணக்காணோர் இறந்தார்கள்;. பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தார்கள். ஒரு கட்டத்தில் ஆர்மேனியா அஸர்பைஜானின் நிலப்பரப்பில் 14மூஐக் கைப்பற்றியிருந்தது. போரில் ஏற்பட்ட பின்னடைவால், பேச்சுவார்த்தைகளில் அஸர்பைஜான் நகோனோ-கரபாக் பிரதிநிதிகளை ஒரு தனித்தரப்பாக ஏற்று நகோனோ-கரபாக் பற்றிய பேச்சுக்கட்கு இணங்கியது. போரிடும் மூன்று தரப்புகளையும் ஒன்றிணைத்து 1994இல் போர் நிறுத்தமொன்றுக்கு உடன்படுவிப்பதில் ரஷ்யா பிரதான பங்காற்றியது.

அதன் பின் நிரந்தர சமாதானத்தை எய்துமாறு அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் இணைத் தலைமையிலான மின்ஸ்க் குழு நியமிக்கப்பட்டது. இன்றுவரை பல தடவைகள் பேச்சுக்கள் இடம்பெற்றும் தீர்வு எட்டப்படவில்லை. நகோனோ-கரபாக் 4,400 சதுர கிலோமீற்றர் பரப்புடைய மலைப்பாங்கான பிரதேசமாகும். அதன் மக்கள் தொகை 150,000. ஆர்மேனியாவுக்கும் அஸர்பைஜானுக்குமிடையே இப் பகுதிக்கான இன்னொரு யுத்தம் கடந்த வாரம் தொடங்கியுள்ளது. இது, பூகோள அளவிலும் தமது பிராந்திய நலன்கட்காகப் போட்டியிடும் சக்திகளின் தந்திரோபாய நகர்வுகளிலும் புதிய கட்டத்தை எட்டியுள்ளது.

1990களில் அஸர்பைஜானுக்கும் ஆர்மேனியாவுக்கும் போர் நடந்தபோது ரஷ்யா வலுவுடன் இல்லை. மேற்குலகத் தனிமைப்படுத்தலாலும் தனது இஸ்லாமியச் சார்பு நிலைப்பாட்டாலும் ஈரான் அஸர்பைஜானை ஆதரித்தது. ரஷ்யா கடந்த தசாப்தத்துள் தன்னை ஒரு தலையாய அரங்காடியாக நிறுவியுள்ளது. இப்போது ரஷ்யாவும் ஈரானும் நெருக்கமான நட்புச் சக்திகள். எனவே ரஷ்யாவும் ஈரானும் இப் போர் மேலும் வலுக்காமற் பேச்சுக்களினூடு தீர்வுகாண விரும்புகின்றன. இந் நெருக்கடியின் பூகோள அமைவிடம் ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்துகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளால் சிரிய நெருக்கடி போன்ற இன்னொரு நெருக்கடியையோ அகதிகளின்; வருகையையோ தாங்கவியலாது.

இப் பின்னணியில் பிராந்திய சக்திகள் உட்பட யாரும் விரும்பாத ஒரு யுத்தம் திடீரென ஏன் தொடங்கியது என்ற வினாவை எழுப்பல் தகும். நகோனோ-கரபாக்கின் பகுதிகளை மீளக் கைப்பற்றுவதற்காக அஸர்பைஜான் தாக்குதல் தொடுத்ததிலிருந்தே யுத்தம் இம்முறை தொடங்கியது. இவ்வளவு காலமும் அமைதியாக இருந்த அஸர்பைஜான் வலிந்து தாக்கியமைக்குக் காரணங்கள் உண்டு.

சிரிய யுத்தத்தில் ரஷ்யாhவின் வெற்றியை அமெரிக்காவால் சீரணிக்க இயலவில்லை. ரஷ்யாவை அதன் கொல்லைப்புறத்திலேயே ஒரு யுத்தத்தில் அமிழ்த்தி ரஷ்யாவைப் பலமிழக்கச் செய்ய அமெரிக்கா எதிர்பார்க்கிறது. அதற்கு அமெரிக்க எடுபிடியான துருக்கி உதவுகிறது. சிரிய நெருக்கடியில் ரஷ்ய விமானங்களை துருக்கி சுட்டு வீழ்த்திய பின் ரஷ்ய-துருக்கி உறவு சுமுகமாக இல்லை. மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ். மீதான தாக்குதல்களினூடு ரஷ்யா ஐ.எஸ்.ஐ.எஸ் மூலம் துருக்கி மலிவு விலையில் பெற்றுவந்த பெற்றோலியத்தை மறுத்துள்ளது. எனவே ரஷ்யாவுக்கு எதிராக எதையும் செய்யத் துருக்கி தயங்காது என்பது அமெரிக்கக் கணிப்பு.

இன்றைய நிலையில் கிழக்கு ஐரோப்பாவில் எதையும் சாதிக்கக்கூடிய ஒரு சக்தியாக ரஷ்யாவின் வளர்ச்சி மேற்குலகின் விருப்புக்குரியதல்ல. அஸர்பைஜானின் தலைநகர் பக்கூ, ஜோர்ஜியத் தலைநகர் டிபிலீசி மற்றும் துருக்கியின் எரிசுரும் ஆகியவற்றை இணைக்கும் எண்ணெய்க்குழாய்கள், எரிவாயுக்குழாய்கள் மற்றும் புகையிரதப் பாதை என்பன நகோனோ-கரபாக்கிற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளன.

கிழக்கு ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் எண்ணெய், எரிவாயு, இயற்கை வளங்கள் என்பவற்றின் பயணப்பாதை இதுவே. இப்பாதைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இதன் அண்டை நாடான ஆர்மேனியா, ரஷ்யாவுடன் பாதுகாப்பு உடன்பாடொன்றை எட்டியுள்ளது. எனவே ரஷ்யாவால் இப்பாதைகளுக்கு முட்டுக்கட்டை இடவியலும். அஸர்பைஜான் நகோனோ-கரபாக்கைக் கைப்பற்றுவது அமெரிக்க நலன்களுக்கு பயனுள்ள அதே வேளை நீண்டகால நோக்கில் ரஷ்யாவின் பிராந்திய ஆதிக்கத்தைக் குறைக்கவும் உதவும்.

கிழக்கு ஐரோப்பாவில் ஒரு யுத்தத்தைத் தொடக்குவதில் அமெரிக்காவும் துருக்கியும் தத்தமது நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டுள்ளன. அமெரிக்க நோக்கில், கிழக்கு ஐரோப்பாவில் ஏற்படும் அமைதியின்மை ரஷ்யாவுக்கு சவாலாகும். ஏற்கனவே இஸ்லாமிய-கிறிஸ்தவ மத முரண்பாடாக மாறியுள்ள அஸர்பைஜான்-ஆர்மேனிய நெருக்கடிக்கு உயிர் கொடுப்பதன் மூலம் கிறிஸ்தவ நாடான ரஷ்யாவுக்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக் கிளறலாம். ஏலவே, மேற்குலக ஆதரவுடன் ரஷ்யாவுக்கெதிராகக் கிளறிய செச்னியப் பிரிவினைப் போர் தோற்ற பின்னர், ரஷ்யாவையும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் இலக்காக்கல் அமெரிக்க எதிர்பார்ப்பு.

துருக்கியைப் பொறுத்தவரை, துருக்கி தன்னை ஒரு பிராந்திய வல்லரசாக வளர்க்க நினைக்கிறது. அஸர்பைஜான்-ஆர்மேனிய நெருக்கடியில் வெளிப்படையாக அஸர்பைஜானை ஆதரிப்பதன் மூலம் அப் பிராந்தியத்தின் இஸ்லாமிய ஆதரவுச் சக்தியாகத் தன்னைக் காட்டுவதன் மூலம் ஈரானை ஒதுக்கவும் நெருக்கடியை வளர்ப்பதன் மூலம் இராணுவ, பொருளாதார நலன்களைப் பெறவும் அவற்றின் மூலம் தனது நிலையை உயர்த்தவும் துருக்கி விரும்புகிறது. மாறாக, ரஷ்யாவும் ஈரானும் அமைதி வழித் தீர்வை வலியுறுத்துகின்றன.

இது அமெரிக்காவோ துருக்கியோ எதிர்பார்த்த எதிர்வினைகளல்ல. எனவே நீண்டு விரியும் இன்னொரு போருக்கான வாய்ப்பை ரஷ்யா மறுத்துள்ளது. உறைநிலையில் உள்ள முரண்பாடுகள் ஆபத்தானவை. அவை எந்நேரமும் மீள உயிர்க்கக் கூடியவை. இன்றை உலகின் மீதான ஆதிக்கம் என்ற விளையாட்டில் இன்னொரு அத்தியாயமாக அஸர்பைஜான்-ஆர்மேனிய நெருக்கடி நகோனோ-கரபாக்கில் அரங்கேறுகிறது. உலகம் அமைதியாயிருப்பதை எல்லோரும் விரும்புவதில்லை.