பன்முகப்படுத்தப்பட்ட தலமையை உருவாக்குவதற்கான ஆரம்ப புள்ளியாக இருந்திருக்கும்

ஆட்சி அமைப்பதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் எழுதப்படாத உடன்படிக்கையில் செயற்பட்டு வருகின்றன. இந்தப் புதிய சூழலைப்பற்றி பல்வேறு வகையான அபிப்பிராயங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதிகமும் பதற்ற நிலையிலான அபிப்பிராயங்களாகவே உள்ளன.

இந்தப் புதிய உறவுச் சூழலைப்பற்றி யாரும் முறையான (முறையியல் சார்ந்த) கருத்துகளை முன்வைத்ததாகத் தெரியவில்லை. பத்திரிகைகள் கூட நொட்டை, நையாண்டி, பதற்றம், சகிக்க முடியாமை என்ற நிலையிலேயே எழுதி வருகின்றன.

இந்தப் புதிய அரசியல் நிலை தொடர்பாக ஏற்பட்ட – எதிர்காலத்தில் ஏற்படப்போகும் நன்மை, தீமை பற்றியோ சாதக பாதகங்களைப் பற்றியே விவாதிக்கவில்லை.

மட்டுமல்ல, யாழ்ப்பாணத்துக்கு வெளியிலும் இதே பிரச்சினைகளே உண்டு. அங்கும் யாரும் தனித்து ஆட்சியமைக்க முடியாது.

ஆகவே ஒட்டு மொத்தத்தில் இந்தப் பிரச்சினை தொடர்பாக ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட அரசியல் தீர்மானங்களும் இல்லை. அதைப்பற்றிய கண்ணோட்டங்களும் இல்லை.

ஏதோ ஒரு மாதிரி சபைகளை இப்போது அப்பிடி இப்பிடி ஆரதரவைத்திரட்டி அமைப்போம். மிச்சத்தைப் பிறகு பார்ப்போம் என்ற கணக்கில்தான் எல்லாமே நடந்து கொண்டிருக்கின்றன.

கூட்டமைப்பிற்கு ஆதரவளிப்பது தொடர்பில் எத்தகைய தீர்மானத்தைத் தாம் எடுத்தோம் என்றோ சபைகளில் எவ்வாறான அடிப்படையில் செயற்படப்போறோம் என்பதைப் பற்றியோ ஈ.பி.டி.பி எதையும் வெளியே தெரிவிக்கவில்லை.

அதைப்போல, ஈ.பி.டி.பியின் ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பும் தான் எவ்வாறு இந்தச் சபைகளை நிர்வகிக்கப்போகிறேன் என எத்தகைய திட்டங்களையும் பகிரங்கப்படுத்தவில்லை.

புதியதொரு ஜனநாயகச் சூழலை உருவாக்கும் விதமாக மக்கள் அனைத்துத் தரப்பினருக்கும் வாக்களித்திருக்கிறார்கள். இதை அனைத்துச் சபைகளிலும் கவனிக்க முடியும். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முறையும் இதற்கமைய உருவாக்கப்பட்ட ஒன்று.

ஆனால், இதையெல்லாம் யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.

ஆகவே பழைய பாதையில்தான் இந்தப் பயணமும் நடக்கப் போகிறது.

பெருமூச்சுகளும் சலிப்புகளுமே மிஞ்சும் காலம் தமிழரை விட்டு இப்போதைக்கு நீங்கப் போவதில்லை.

காங்கிரசை அரியணை எறவிடாமல் தடுப்பதில் கிடைத்த வெற்றி தமிழ் மக்களுக்கு நன்மையானதுதான் இதில் ஈபிடிபி யின் செயற்பாடு முக்கிய பங்கை வகிக்கின்றது ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான்தான் தமிழ் மக்களின் ஏக தலமை என்று மீண்டும் கூறும் வாய்ப்பும் ஏற்பட்டுத்தான் இருக்கின்றது. இது இரண்டையும் தவிர்த்து ஏனைய சக்திகள் (அது கட்சிகளாக இருக்கலாம் தனிநபர் சுயேட்சை குழுக்களாக இருக்லாம்) சில சபைகளில் ஆட்சியமைபதிருந்தால் அது இன்னொரு பன்முகப்படுத்தப்பட்ட தலமையை உருவாக்குவதற்கான ஆரம்ப புள்ளியாக இருந்திருக்கும் இதுதான் இன்றைய தேவையும் கூட

(கருணாகரன் – சாகரன்)