பரிஸ் கம்யூன்: உலகின் முதலாவது தொழிலாளர் புரட்சியின் 150ஆவது நினைவு தினம்!

பரிஸை மையமாகக் கொண்டு தொழிலார்கள் நிறுவிய ஆட்சிக்கு அவர்கள் “பரிஸ் கம்யூன்” எனப் பெயரிட்டார்கள். 72 நாட்கள் மட்டுமே நீடித்த இந்த ஆட்சியை அதிகார வர்க்கம் இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து தோல்வியுறச் செய்த போதிலும், 46 வருடங்கள் கழித்து ரஸ்யாவில் லெனின் தலைமையில் நடைபெற்ற மகத்தான ஒக்ரோபர் சோசலிஸப் புரட்சிக்கு ஒரு முன்னோட்டமாக இது இருந்ததுடன், உலகத் தொழிலாளி வர்க்கத்துக்கு பல படிப்பினைகளையும் விட்டுச் சென்றது.
1789இல் நடந்த பிரான்சியப் புரட்சி மன்னராட்சி முறையை ஒழித்து முதலாளித்துவ வர்க்கத்துக்கு அரசியல் அதிகாரத்தை கைமாற்றியது. பிரான்சில் ஏற்பட்ட இந்தச் சமூகக் கொந்தளிப்பு ஐரோப்பா முழுவதும் சமூக மாற்றங்களை ஏற்படுத்தியது. பிரான்சில் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்களும், நகர்ப்புற வறிய மக்களும் 1830 மற்றும் 1848 ஆகிய ஆண்டுகளில் பெரும் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் ஆளும் முதலாளித்துவ வர்க்கம் தனது இராணுவத்தையும் பொலிசையும் ஏவி இந்தக் கிளர்ச்சிகளை அடக்கிவிட்டது.

சுரண்டலை ஒழித்துக்கட்டி, சமத்துவமான சமுதாயம் ஒன்றை அமைக்க வேண்டும் என ஆவல் கொண்டிருந்த மார்க்சிஸவாதிகள், அராஜகவாதிகள், கற்பனாவாத சோசலிஸ்ட்டுகள் ஆகியோருக்கு முன்னால் ஒரு கேள்வி எழுந்து நின்றது. அதாவது, அடக்கியொடுக்கப்பட்டு, சுரண்டப்படும் வர்க்கத்தால் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு சமூகத்தை வழிநடத்த முடியுமா என்பதே அந்தக் கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலாகவும் நிகழ்வாகவும் அமைந்ததுதான் பரிஸ் கம்யூன் போராட்டம்.

1870 கோடை காலத்தில் லூயிஸ் நெப்போலியனுக்கு (இவன் 1852 – 70 காலத்தில் பிரான்ஸ் சக்கரவர்த்தியாக இருந்த முதலாவது நெப்போலியனின் பெறாமகன்) எதிரான போர் புறுஸ்யாவில் ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து, செப்ரெம்பரில் புறுஸ்ய இராணுவம் 200,000 பிரான்சியப் படையினரையும் அதிகாரிகளையும் சிறைக் கைதிகளாகப் பிடித்தது. இதைத் தொடர்ந்து பிரான்சிய முதலாளி வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் கட்சிகள் சக்கரவர்த்தியை பதவி நீக்கம் செய்து, பிரான்ஸை ஒரு குடியரசாகப் பிரகடனப்படுத்தின.

இந்த நேரத்தில்தான் பரிஸில் வாழ்ந்த தொழிலாளர்களும் வறிய மக்களும் இணைந்து தேசிய பாதுகாப்புப் படையொன்றை உருவாக்கியதுடன், புறுஸ்ஸிய இராணுவத்திடம் சரணடையவும் மறுத்தனர். தேசியப் பாதுகாப்புப் படை பிரான்சிய முதலாளி வர்க்கத்துக்கு எதிராக தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்து நின்றது. இதனால் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தேசிய சபைக்கும், தொழிலாளர்களின் பல்வேறு அமைப்புகளுக்கும் இடையில் மோதல் நிலை உருவானது.

அதைத் தொடர்ந்து, மார்ச் 18ஆம் திகதி முதலாளித்துவ தேசிய சபை விடுத்த உத்தரவின் பிரகாரம் 40,000 இராணுவத்தினர் பரிஸ் மலைப்பகுதிகளில் இருந்த தேசிய இராணுவத்தின் 300 பீரங்கிகளைப் பறிமுதல் செய்தனர். அத்துடன் படையினர் பெருமளவில் மக்களையும் தொழிலாளர் தலைவர்களையும் கைது செய்தனர்.

இந்தப் போராட்டத்தின் போது, தமது பீரங்களைப் பாதுகாப்பதற்காக பெண்கள் தமது உடல்களால் அவற்றை மறைத்து நின்றனர். அந்தப் பெண்களைச் சுடுமாறு இராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்ட போதிலும், அவர்கள் சுட மறுத்துவிட்டனர். அது மட்டுமல்லாமல் இராணுவத்தினர் தமது கட்டளை அதிகாரிகளையும் கைது செய்தனர். இந்த அதிகாரிகளில் சிலர் 1848இல் தொழிலாளர்களைப் படுகொலை செய்தவர்கள் ஆவர். இந்த அதிகாரிகள் பின்னர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். அத்துடன் அடிபணிய மறுத்த இந்த இராணுவத்தினர் தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றவும் சந்தர்ப்பம் வழங்கினர்.

ஆதைத் தொடர்ந்து, அன்றிரவு கிளர்ச்சியாளர்கள் தேசிய இராணுவத்தின் தலைமையகம், மத்திய பொலிஸ் தலைமையகம், பரிஸ் நகர மண்டபம் என்பனவற்றைக் கைப்பற்றித் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, பரிஸ் நகரின் கட்டுப்பாட்டை எடுத்துவிட்டனர். ஏழை மக்களின் இந்த ஜனநாயக அதிகாரம் 72 நாட்கள்வரை நீடித்தது. ஆனால் இந்தப் போராட்டம் பரிஸில் மட்டும் நடந்ததாலும், ஏனைய மாகாணங்களின் உதவியின்மையாலும் இறுதியில் அதிகார வர்க்கத்தால் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டது.

இந்த பரிஸ் கம்யூன் போராட்டம் நடந்தபொழுது, 1847இல் “கம்யூனிஸ்ட் அறிக்கை”யை எழுதி வெளியிட்ட சர்வதேச தொழிலாளி வர்க்கத்தின் ஆசான்களான கார்ல் மார்க்சும், பிரெடரிக் ஏங்கெல்சும் தாம் கனவு கண்ட தொழிலாளி வர்க்க அரசின் ஒரு மாதிரியை நேரடியாகக் கண்டதுடன், அந்தப் போராட்டம் வழங்கிய அனுபவங்களையும் படிப்பினைகளையும் ஆய்வும் செய்தனர்.

பரிஸ் கம்யூன் போராட்டம் 72 நாட்களில் தோல்வி கண்டாலும், அது வழங்கிய உணர்வின் காரணமாக பின்னர் ரஸ்யா, சீனா உட்பட பல நாடுகளில் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களை உருவாக்கி சோசலிச அரசுகள் தோன்றுவதற்கு அத்திவாரமிட்டது. அந்த உணர்வு 150 வருடங்களின் பின்னும் இன்றும் உலகத் தொழிலாள வர்க்கத்துக்கு உந்து சக்தியைக் கொடுத்தவண்ணம் உள்ளது.

இந்தப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த அனைத்து பரிஸ் கம்யூன் தியாகிகளுக்கும் எமது அஞ்சலியையும் செவ்வணக்கத்தையும் செலுத்துவோமாக!