பற்குணம் (பதிவு 6)

அண்ணன் பற்குணம் இறுதியாக படிக்க சம்மதித்தார்.ஆனால் பாடசாலையில் வகுப்புகள் தொடங்கிய சில மாதங்களின் பின்பே சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் சேர்ந்தார்.
படிக்க சேரும் முன்பு கஷ்டம் என்ற வார்த்தை எனக்கு சொல்ல வேண்டாம் என்பதையும் முன்னெச்சரிக்கையாக சொன்னார்.ஆனாலும் அவருக்கு வீட்டின் சூழல் தெரியும்.

டிறிபேர்க் கல்லூரியில் கதிர்காமநாதன் என்ற நல்ல நண்பர் கிடைத்தார்.அவர் நாவற்குழியைச் சேர்ந்தவர். கொஞ்சம் வசதியான குடும்பத்தவர்.

டிறிபேர்க் கல்லூரியில் சேர்ந்த சில நாட்களின் பின்பு ஒரு நாள் மீசாலை புத்தூர் சந்தியில் உள்ள வாசிகசாலையில் பேப்பர் படிக்கும் போது சிலர் சாதிரீதியான காரணம் காட்டி அவரை வெளியேற்ற முயன்றனர்.அவர் அதை எதிர்த்து நின்றார்.இதுவே அவர் முதல் எதிர்கொண்ட அடக்குமுறைக்கு எதிரான களம்.இரத்தினம் அவர்களின் பக்க பலத்தால் அந்த சாதி வெறியர்களை துணிவாக எதிர் கொண்டார்.

அவர் படிக்கும் காலத்தில் டிறிபேர்க் கல்லூரி அதிபராக சபாபதிப்பிள்ளை இருந்தார்.ஒரு நாள் பொட்டு வைத்து வந்த சில பெண்பிள்ளைகளைக் கண்டித்தார்.இதைக் கண்ட பற்குணமும்,கதிர்காமநாதன் இருவரும் மறுநாள் காலை கல்லூரி வாசலில் நின்று பாடசாலைக்கு வந்த எல்லோருக்கும் பொட்டு வைத்தனர்.அதிபர் சபாபதிப்பிள்ளை காரில் வரும்போது அவருக்கும் மறித்து பொட்டு வைத்தார்.அவரும் எதுவும் யோசிக்காமல் ,மறுக்காமல் பொட்டோடு உள்ளே சென்றுவிட்டார்.

பிரார்த்தனை முடிந்தபின் அதிபர் மாணவரகளைப் பார்த்தார்.எல்லோரும் பொட்டுடன் நின்றனர்.அதன் பின்னரே அவருக்கு என்ன நடந்தது என விளங்கியது.உடனே இருவரையும் அழைத்து விசாரித்தார்.அண்ணன் தன் நிலையில் இருந்து விடவில்லை .இறுதியில் அதிபர் இறங்கி வந்தார்.எல்லோரும் பொட்டு வைக்க அனுமதிக்கப் பட்டனர்.

அண்ணன் பற்குணம் மத நம்பிக்கை அற்றவர். ஆனால் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுவதை எதிர்பவர்.

(விஜய பாஸ்கரன்)
(தொடரும்….)