பற்குணம் A.F.C (பகுதி 100 )

இந்திய இராணுவம் குடாநாட்டைக் கைப்பற்றிய பின் புலிகளை வேட்டையாடும் முயற்சிகளை மேற்கொண்டது.இதில் பல அப்பாவிகளும் கைது செய்யப்பட்டனர்.சில மனிதர்கள் பிடிக்காதவர்களை பழிவாங்க இதையும் சந்தர்ப்பமாக பயன்படுத்தினர்.

இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க உதவிகேட்டு பலர் வந்தனர்.இதில் அப்பாவிகளை விடுவிக்க பற்குணம் உதவினார்.இதே போல முன்னாள் தீண்டாமை ஒழிப்பு இயக்க போராளி யப்பான் (மன்னிக்கவும் பெயர் தெரியாது) என அழைக்கப்படும் ஒருவரை தவறான தகவலால் இந்திய இராணுவம் கைது செய்தது.இதை மட்டுவில் வேலையா,சங்கானை தர்மலிங்கம் ( இவர் முன்னாள் தீண்டாமை ஒழிப்பு போராளி). ஆகியோர் பற்குணத்தின் கவனத்துக்கு கொண்டுவர பற்குணம் நேரே சென்று அவரை விடுவித்தார்.அந்த மனிதர் நன்றி சொன்னபோது நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.நீங்கள் அன்று எங்கள் உரிமைக்காக போராடியவர்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

புலிகளின் நிதிப்பொறுப்பாளர் செல்வரத்தினத்தை இந்திய இராணுவம் தேடியது.இவர் அகப்படாததால் அவரின் சகோதரியின் கணவரை இந்திய இராணுவம் கைது செய்தது.இவர் நல்லூர் ப.நோ.கூ சங்க முகாமையாளர் என நினைக்கிறேன்.இவரை விடுவித்து தருமாறு அவரின் மனைவி பற்குணத்திடம் வந்தார்.உணமையில் அவருக்கு புலிகளோடு ஈடுபாடுகள் இல்லை.எனவே அவரை விடுவிக்க உதவினார்.இதே வேளை பற்குணத்தை கைது செய்த புலிகளின் சண்டிலிப்பாய பொறுப்பாளர் சிவநேசன் கைது செய்யப்பட்டார்.இவரையும் விடுவிக்க அவரது குடும்பம் ்பற்குணத்திடம் மன்றாடியது.

எனக்கு அப்பாவிகள் விடுதலைக்கு மட்டுமே உதவமுடியும் .புலிகளின் அங்கத்தவர்களுக்கு உதவமுடியாது என்று திட்டவட்டமாக மறுத்தார்.அவருக்கு பழிவாங்கும் நோக்கம் இருக்கவில்லை.அப்படி உதவினால் உண்மையான அப்பாவிகளை காப்பாற்ற முடியாமல் போகலாம் எனகருதியே மறுத்தார்.

1988 பிறந்தது.போக்குவரத்து மற்றும் தனது மகள் அபிராமியின் படிப்பு காரணமாக யாழ் நகர்ப்புற பகுதிக்குள் இடம்பெயர. தீர்மானித்தார்.1988 பொங்கலின் பின் அரியாலைப் பகுதிக்கு இடம்பெயர்ந்தோம்.இது ஸ்ரான்லி கல்லூரிக்கு அருகில் குடி பெயர்ந்தோம்.

நாங்கள் இங்கே இடம் பெயர்ந்தது எனது சொந்த ஊரான மந்துவில் உறவுகளுக்குத் தெரியாது.இந் நிலையில் புலிகளின் மந்துவில் பொறுப்பாளர் ஆஞ்சநேயர்(இளம்பரிதி பின்னாள் அரசியல் பொறுப்பாளர்)என் சகோதர்ர் ஒருவரிடம் விசாரித்துள்ளார்.அவருக்கு நாங்கள் இடம் பெயர்ந்த விசயம் தெரியாது.புலிகளுக்கும் தெரியாது.கைது செய்யப்பட்ட தனது சகா ஒருவரை விடுவிக்க இளம்பருதி பற்குணத்தை தேடியுள்ளார்.

ஆனாலும் புலிகள் பற்குணத்தை வேவு பார்த்தவண்ணமே இருந்தனர்

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)