வடக்கு மாகாண சபை அமைச்சரவை மாற்றம்! முதல்வரால் முடியாதா?

இதனை யாரோ கிளப்பிவிடும் புரளி என எவரும் எண்ண வேண்டாம். உண்மையில் அவ்வாறான முன்முயற்சிகள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இருந்தும் அமைச்சர்கள் மீதான ஊழல் விசாரணைக்கான கால அவகாசத்தை மேலும் இரண்டு மாதங்கள் நீடித்ததாக, மாகாணசபை தவிசாளர் சி வி கே சிவஞானம் அறிவித்த செய்தியை பார்த்து பலருள் எழுந்த கேள்வியே இது.

முதல்வர் தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் நான்கு அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றசாட்டு விசாரணைகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் நடைபெறுகின்றது. இந்த தருணத்தில் அந்த விசாரணைக்கு எந்தவித இடையூறும் ஏற்ப்படக்கூடாது என எண்ணினால், அதனை நிரூபிக்க அமைச்சு பதவிகளை தாமே துறக்க வேண்டிய தார்மீக கடமை அவர்களுக்கு உண்டு.

அவர்கள் அதனை செய்யாத பட்சத்தில், மடியில் கனம் உள்ளவர்கள் என எவரும் எண்ணுவதில் தவறில்லை. காரணம் வடக்கு மாகாண சபை பெரும் எதிர்பார்ப்புடன் தான் அமைந்தது. அதற்கு முக்கிய பங்குதாரர் முன்னாள் நீதி அரசர். நீண்ட நீதிபரிபாலான அனுபவம் கொண்டவர் என்பதால் சட்டப்படி கிடைக்க வேண்டிய அதிகார பரவலாக்கலை அவர் பெற்று, திறமையாக மாகாண சபையை நடத்துவார் என்ற மக்களின் நம்பிக்கை.

தனது அமைச்சர்களை அவர் தெரிவு செய்தபோது, அந்த நம்பிக்கை மேலும் வலுப்பெற்றது. ஏற்ப்பட்ட சலசலப்புகளுக்கு அஞ்சாமல் துறைசார் நிபுணர்களைத்தான், அமைச்சர்களாக தெரிவு செய்ததாக அவர் பகிரங்கமாக அறிவித்தார். தம்பிக்கு அமைச்சர் பதவி கேட்டவரை மேடையில் காட்டிக்கொடுத்தார். அனந்தி சசிதரனை அவர் திரும்பியும் பார்க்கவில்லை. அந்தந்த அமைச்சின் துரித செயலுக்காக சில உறுப்பினர்களையும் அறிவித்தார்.

தன்னை நடுநிலையாளனாக நிலை நிறுத்த முற்பட்டவர், மந்திரிசபை செயல்ப்படும் முறைமையில் திறமைக்கு முன்னுரிமை கொடுக்க முற்ப்பட்டவர், பதவி ஏற்பு என வந்த போது தனது குடும்பத்தினர் மற்றும் சம்மந்தியான வாசுதேவ நாணயக்காரா உடன் சென்று மகிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். அங்கே தான் அவருக்கு சனியின் பார்வை பட்டது.

ஏழரைச் சனியாக மாறிய உறுப்பினர் தாம் விரும்பியவர் முன் பதவிப் பிரமாணம் எடுத்தனர். முதல் கோணல் முற்றும் கோணல் ஆனது. அடுத்து அவரின் தெரிவான அமைச்சர்கள் அவருக்கு அட்டமத்து சனியாக மாறி, ஊழல் பேர்வழிகள் என பெயர் எடுத்தனர். முதல்வரால் உண்மைகளை அறியும் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டத்தில் இருந்தே, நெருப்பில்லாமல் புகையவில்லை என்ற விடயம் நிரூபணமாகிவிட்டது.

இனித் தெரிய வேண்டியது எவ்வளவு நிதி மூலங்கள் எவர் சொந்த நிதியாக, சொந்தங்களின் நிதியாக, பந்தங்களின் நிதியாக மாறியது என்பது மட்டுமே. இந்த நிலையில் தான் அந்த அமைச்சர்களை தொடர்ந்தும் அமைச்சர் பதவியில் தொடர விட்டால், நியாயமான குறுக்கீடு இல்லாத விசாரணை சாத்தியமா என்ற கேள்வி, சாமானியனுக்கு ஏற்ப்படுவதில் தவறில்லை. அது அவர்களின் நியாயமான சந்தேகமே.

ரஜனியின் அண்ணாமலை திரைப்படத்தில் தன் பிடரியை சொறிந்தபடி, ராதாரவி பேசும் பிரபல வசனம் “கூட்டி கழிச்சு பார் கணக்கு சரியா வரும்” என்பதே. பதவியில் இருக்கும் அமைச்சரை பகைத்துக்கொள்ள ஊழியர்களுக்கு என்ன பைத்தியமா? விசாரணைக்கு வருபவருக்கு எப்படி கணக்கு காட்டினால் தம் இருப்பைத் தொடர்ந்து தக்கவைக்கலாம் என்ற வித்தை தெரிந்த, விண்ணர்கள் பலர் நிறைந்த நிர்வாக கட்டமைப்பில், விசாரணை கமிசன் வெறும் கண்துடைப்பே.

இங்கு கவனத்தில் எடுக்க வேண்டிய முக்கியமான விடயங்களை மூடி மறைத்தே பல நிகழ்வுகள் நடக்கின்றன. முதலில் முதல்வர் உட்பட வடக்கு மாகாண அமைச்சரவையில் இருப்பவர்கள் அதன் உருவாக்க காலத்தில் அவர்கள் செய்த பங்களிப்பை ஆராய்வோம். வட்டுக்கோட்டை தீர்மானம் தந்த எதிர்கட்சி தலைவர் பதவி மாவட்ட சபைக்குள் தன்னை முடக்க முற்ப்பட்ட வேளையில்த்தான் இளையவர் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.

தலைமைகள் மீதான வெறுப்புத் தான் அவர்களை இரும்புகளை ஏந்தச் செய்தது. இளங்கன்றுகள் பயம் அறியவில்லை. ஆனால் பாதை மாறின, தம்முள் மோதின. அவர்களின் தியாகம் இந்திய நலன் சார்ந்த ஒப்பந்தமாக மாறியபோதும், அது கவனத்தில் கொள்ளப்பட்டதால் தான் மாகாணசபை அறிமுகமானது. அது தமக்கு ஏற்புடையது அல்ல என எதிர்த்தவர்களை விட்டுவிடுவோம். ஆனால் தற்காலிகமாக இணைந்த வடக்கு கிழக்கு மாகாண அரசுக்கு உதவியாக இவர்கள் இருந்தார்களா?

முதல்வர் நீதித்துறை, அமைச்சர்கள் கல்வித் திணைக்களம், வைத்தியம், சூழல்ஆராட்சி, சட்டக்கல்லூரி என தம் சுயபாதுகாப்பு வாழ்வில் இருந்தனர். அன்று எந்த சேதாரமும் இன்றி தேர்தல் வெற்றி தான் முக்கியம் என லண்டனில் இருந்து, யாழ் பிரபல வைத்தியர் வெற்றிவேலர் மகன் யோகேஸ்வரனை கூட்டி வந்து, கூட்டணி தேர்தலில் நிறுத்தியதே, அதே போல வெற்றியை மட்டும் வேண்டி தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டிவந்தவர்களே இவர்கள்.

வெள்ளையர் காலத்து வயிற் கொலர் ஜோப் (white collar job) போலவே இன்று இவர்கள் செய்யும் வெள்ளைவேட்டி அரசியல் கலாச்சாரம் அடிமட்ட பிரச்சனைகளை அறியமாட்டாது. தம்மையும் தம்மை சார்ந்தவரையும் வளப்படுத்தும் நோக்கம் மட்டுமே கொண்டது. பொதுச் சொத்து தமது சொத்து என அதை தம்முள் எப்படி பங்கிடுவது என்பது முதல், பிடிபட்டால் எவ்வாறு தப்பிப்பது என்ற நெளிவு சுளிவுகளும் தெரிந்த பல பெருச்சாளிகள் நிறைந்த நிர்வாக கட்டமைப்பு இவர்கள் தலமையில்.

விடுதலைப் போராளிகளின் உயிர்த்தியாகத்தால் விளைந்த மாகாணசபை என்ற பயிரை நோகாமல் அறுவடை செய்யும் காரியவாதிகள். மட்டக்களப்பில் சூடு கசக்கிகள் என்று ஒரு சொல் வழக்கில் உண்டு. வயல் அறுவடையின் பின் உப்பட்டிகளாக கட்டி, களத்து மேட்டில் வட்ட வடிவமாக ஒன்றன் மேல் ஒன்றாக உப்பட்டியை பரப்பி சூடு வைத்திருப்பார்கள். மறுநாள் சூடடிக்க உழவுயந்திரம் வரும் போதுதான் நேற்று இரவு நடந்தது தெரியவரும்.

சில மாதங்களாக வெயிலிலும் மழையிலும் சிரமப்பட்டு பயிர்வளர்த்து, அதை நெல்மணிகளாக மாற்ற அவர்கள் அமைத்த சூட்டை, எந்த வித சிரமமும்படாமல் தாம் கொண்டுவந்த மரைக்காலில் கையால் கசக்கி, நெல்மணிகளை திருடிச் சென்றிருப்பார் சிலர். அவர்களைத் தான் சூடு கசக்கிகள் என்பர். இன்று வடக்கு மாகாண சபையில் நடப்பவைகளைப் பார்க்கும் போது இவர்களும் அந்த சூடுகசக்கிகளின் செயலை செய்பவர் எனவே எண்ணத்தோன்றுகிறது.

வேறு எந்த மாகாண சபைகளிலும் எழாத குற்றச்சாட்டுகள், வடக்கு மாகாண சபையில் முதல்வர் தவிர்த்து ஒட்டுமொத்த அமைச்சர்கள் மீதும் எழுந்திருக்கும் நிலையில், இவர்களுக்கு வாக்களித்த மக்களின் வேட்டியை கூட இவர்கள் விட்டுவைப்பார்களா என்ற மனக்கிலேசம், அனைவரையும் வெட்கித் தலைகுனிய வைக்கிறது. ராணுவம் காணிகளை வைத்திருக்கிறது, சிங்களவர்கள் வடக்கில் மீள குடியேறுகிறார்கள் என ஓலமிடும் இவர்கள் தமது மக்களின் நிதியை கபளீகரம் செய்கின்றனர்.

இந்த நிலையில் நியாயமாக நடந்தேறி இருக்கவேண்டிய நிகழ்வுகள் இரண்டே இரண்டு தான். ஒன்று தம்மீதான குற்றச்சாட்டு விசாரணை முடியும்வரை தமது அமைச்சு பதவிகளை அவர்கள் தாமே முன்வந்து துறந்திருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்யாத பட்சத்தில் இரண்டாவது செயலாக முதல்வர் இடைக்கால தீர்வாக தனது அமைச்சரவையை மாற்றி அமைத்திருக்க வேண்டும். தவறு நடக்கவில்லை என்பது நிரூபணமானால் மீண்டும் இவர்களை உள்வாங்கலாம்.

ஊழல் நடந்துள்ளது என்பது விசாரணை கமிசன் அமைத்த உடனேயே தீயாய் பரவிவிட்டது. இனி விசாரணைக்கு இடையூறுகள் ஏற்ப்படாது எனும் செயல் மூலம் மட்டுமே உண்மை வெளிப்படும் என்றே அனைவரும் நம்புவர். கள்வனிடம் காவல் பொறுப்பு இருந்தால் என்ன நடக்கும் என்பது எவருக்கும் தெரியும். பதவி அதிகாரம் யாரையும் விலை பேசும் அல்லது அவர்களுக்கு ஏற்புடைய விருந்துபசாரங்களை வழங்கும். சுன்னாகம் நீர் மாசு அறிக்கையே அதற்கான முன் உதாரணம்.

குற்றம் நிரூபணம் ஆகும் வரை ஒருவரைக் குற்றவாளி என கூறுவதில்லை. சட்டப்படி அவர் சந்தேக நபர்தான். இருந்தும் சாட்சிகளுக்கு இடையூறு விளைவிக்கலாம், அல்லது சாட்சிகளை விலைக்கு வாங்கலாம் எனும் நிலையில் சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்கிறார்கள். அது குற்றவியல் பற்றிய நீதித்துறை சார்ந்த செயல்ப்பாடு என்றால், அரசியல் செயல்ப்பாட்டிற்கு அது பொருந்தாதா? அரசியலில் ஊழலுக்கு என தனி நிகழ்ச்சி நிரல் ஏதேனும் உண்டா?

உரிமைகளை வென்றெடுப்பார் என்றுதான் விக்னேஸ்வரன் முதல்வர் ஆவதை ஆதரித்தோம். அவரின் அமைச்சர்களே ஊழல் விசாரணைக்கு முகம் கொடுக்கும் நிலையில் களையெடுக்க முதல்வர் தயாரா? மத்தியவங்கி விடயத்தில் அர்ஜுன மகேந்திரனை பின்னிப் பெடல் எடுத்த சிங்களம், வடக்கு மாகாண அமைச்சர்களின் செயல் கண்டு எள்ளி நகையாடாதா? நாம் பயப்படும் அளவிற்கு விக்கியர் பெரிய பூதம் அல்ல என அன்று மகிந்த ராஜபக்ச சொன்னது உண்மையாகிவிடுமா?

முயல் பிடிப்பதை மூஞ்சையில் தெரியும் என்பது மகிந்தவுக்கே அன்றே விளங்கி விட்டதா? ஆனால் மெத்தப்படித்த வடக்கின் மேதாவிகளுக்கு ஏனோ விளங்கவில்லையா? வினைத்திறன் அற்ற முதல்வர், ஊழல் விசாரணைக்கு முகம் கொடுக்கும் அமைச்சர்கள் என வடக்கு மாகாண சபை விமர்சிக்கப்படும் நிலையில்கூட அதைப்பற்றி கவனத்தில் கொள்ளாது, முதல்வர் கனடாவின் நகரத்துடனும் பிரித்தானிய நகரத்துடனும் கைகோர்த்துக் கிடைக்கப்போகும் பலன் என்ன?

சுன்னாகம் நீர்மாசு முதல் இரணைமடு நீர் விநியோகம் வரை இழுபறி. பொருளாதார மத்திய நிலையம் எங்கே என்பதில் இழுபறி. துப்பரவு தொழிலாளர் நிரந்த நியமனம் இன்றி யாழ் நகரமே நாறியது. ஆசிரியர் இடமாற்றத்தில் கூட பாலியல் குற்றச்சாட்டு. குளத்து மீன்பிடி அமைச்சரா என்ற கூக்குரல். கூடவே பட்டம் விடப்போனவர் அவிழ்த்துவிட்ட கட்டுக்கதையால் தலைவர் வருவார் என நம்பி சுமந்திரனை கொல்ல முயலும் சதி.

அனுமன் வால் போலவே இவர்களின் இயலாமைப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இந்த தருணத்தில் இவர்களின் எண்ணம், செயல் எல்லாமே தம்மை எப்படி இந்த விசாணையில் இருந்து தப்பிக்க வைப்பது என்பதாகவே இருக்கும். மக்களை பற்றியோ, அல்லது மேற்கொள்ளக் கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றியோ இவர்கள் சிந்தையில் எதுவும் தோன்றாது. அதனால் தான் இடைக்கால மந்திரிசபை மாற்றம் அவசியம் ஆகிறது.

துறைசார்ந்த நிபுணர்கள் அமைச்சர்கள் ஆகியும் இன்று அவர்கள் ஊழல் விசாரணை கமிசன் முன் ஆஜராகும் நிலையில், வடக்கு முதல்வருக்கு உள்ள நேர்மையான தெரிவு அமைச்சரவை மாற்றம். அதற்க்கான தெரிவை அமைப்பு சார்ந்து எடுக்கலாம். தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள பங்குதாரக் கட்சிகள் சார்பானைவரை இடைக்கால அமைச்சர்கள் ஆக்கினால், முன்னாள் போராளிகளான அவர்கள் மக்கள் நலன் சார்ந்தே நடப்பர்.

புளட் அமைப்பின் லிங்கநாதன், டெலோவின் சிவாஜிலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எப் இன் சர்வேஸ்வரன், விடுதலைப் புலிகளின் அனந்தி சசிதரன் என, உரிமை போராட்டத்தில் மக்களின் நலன் சார்ந்து செயல்ப்பட உருவான அமைப்புகளை சேர்ந்த இவர்களை அமைச்சர்களாக்கினால், மாகாண நிர்வாகம் வேகம் எடுக்கும். காரணம் அவர்களின் அத்திவாரம் மக்கள் நலன் சார்ந்து போடப்பட்டது. தங்கள் செயல்ப்பாட்டின் மூலம் மாற்றத்தை விரும்புபவர்கள்.

அமைச்சரவை மாற்றம் என்பது புதிய விடயமல்ல. பாராளுமன்றங்களில் சட்டப்பேரவைகளில் நாம் பார்த்து அறிந்தவையே. அமைச்சரவை மாற்றங்களும், அமைச்சுக்களின் செயலாளர்கள் மாறுவதும், திணைக்களங்களின் தலைமைகள் மாறுவதும் நிர்வாக சீரமைப்பு நடவடிக்கை மட்டுமே. ஒரு சில சம்பவங்கள் வேண்டுமானால் பழிவாங்கலாக அமைவதுண்டு. ஆனால் பொதுவாக அவ்வாறல்ல. அதே வேளை ஊழல் சார்ந்த விசாரணைக்கு முகம் கொடுப்பவர் நிச்சயம் விலத்தப்பட வேண்டும்.

அது பழிவாங்கல் நடவடிக்கை அல்ல. அவர்களின் மீதான விசாரணை முடிவில் மீண்டும் அவர்களை உள்வாங்க முடியுமானால் அதுவும் தவறில்லை. தமக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கையை தக்கவைக்கவும், தாம் தேர்வு செய்தவரின் செயல்பற்றி அவர்கள் அறியும்படியான நடவடிக்கையை எடுக்க வேண்டிய கடமை எல்லா அரசியல் தலைமைகளுக்கும் உண்டு. அதுவும் நீண்ட நெடிய யுத்த பாதிப்பில் சின்னாபின்னமாகி போன எம் இனத்துக்கு இதுவே அதி முக்கியமாகும்.

அதனால் தான் முன்னாள் நீதிஅரசர் தலைமையில் அமைந்த மாகாணசபை அமைச்சரவையில் ஊழல் என்று புகைந்தவுடனே மக்கள் திகைத்து விட்டார்கள். பின்னர் ஊழல் விசாரணை கமிசன் வந்ததும் ஏதோ நடக்கப்போகிறது என நம்பினார்கள். ஆனால் கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி அவர்களின் நம்பிக்கையை இழக்க செய்தது. மேலும் குற்றம் சுமத்தப்பட்ட அமைச்சர்களே பதவியில் இருக்கையில், நியாயமான விசாரணை சாத்தியமா என்ற சந்தேகமும் வலுக்கிறது.

அன்று தற்காலிகமாக இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை இந்தியாவின் பொம்மை அரசு என்று விமர்சித்த பெருந்தகைகள், பின்னர் அது துண்டாடப்பட்டு கிழக்கில் மட்டும் தேர்தல் நடந்து பிள்ளையான் முதல்வர் ஆனதும் அது மகிந்தவின் எடுபிடி அரசு என்றனர். இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை தேர்தலை மட்டுமல்ல, முதலாவது கிழக்கு மாகாணசபை தேர்தலையும் புறக்கணித்தவர்கள், புலிகளின் அழிவிற்கு பின் தேர்தலில் போட்டியிட வந்தனர்.

அமைந்தது தமிழர் அரசு என வடக்கு மாகாணசபை தேர்தல் வெற்றியை தலையங்கமாக்கினர். பின்னர் பதவி பிரமாணம் எடுப்பது முதல் அமைச்சரவை தெரிவுவரை முரண்பட்டு நின்றனர். வினைத்திறன் அற்ற மாகாண அரசு என அதன் உறுப்பினர்களே குரல் எழுப்பம் நிகழ்வும் நடந்தேறியது. ஆனால் நாங்கள் ஊழல் செய்வதில் வினைத்திறன் உள்ளவர்கள் என கமிசன் வைத்து விசாரணை செய்யும் அளவிற்கு அமைச்சர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

முதல்வரே இதற்க்கு பரிகாரம் தேடவேண்டியவர். வெறுமனே மேடைகள் தோறும் கண்களை மூடி நெஞ்சில் கைவைத்து குருப்பிரம்மா குருவிஸ்ணு குருதேவோ மகேஸ்வரா குருசாட்சாத் பரப்பிரம்மா குருவேநமக என சுலோகம் சொல்லிவிட்டு தன் உரையை வாசிப்பதை விட, கண்திறந்து வடக்கு மாகாண சபையில் நடந்த, நடக்கும் ஊழல்களை களைய முதல்வர் முன்வர வேண்டும். அதற்காக இடைக்கால அமைச்சரவை மாற்றத்தை செய்யும் முடிவை முதல்வர் எடுப்பாரா?…

(ராம்)