பின்னோக்கி செல்லும் நினைவலைகள்!

முப்பத்தி எட்டு ஆண்டுகள் கடந்தும் நினைவில் நீங்காது நிலைத்து நிற்கும் நிகழ்வுகள் மகிழ்ச்சியை, மன ஆதங்கத்தை கலந்து தரும் தருணத்து பதிவு இது. கல்வியின் உச்ச நுழைவாயிலான பட்டம் பெறல் என்ற, பல்கலைக்கழகம் செல்லும் தெரிவு கிடைத்த மகிழ்ச்சியை எனக்கு தந்த ஆண்டு 1978. அதே ஆண்டில் கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் வீசிய சூறாவளியால் ஏற்பட்ட, அனர்த்தத்தை நேரில் கண்டது ஆதங்கம். ஆனால் அழிவில் இருந்து மீண்டுவர கிழக்கை நோக்கிய வடக்கு இளையவர்களின் வருகை பேருவகை. கட்சி அரசியலுக்கு அப்பால் வடக்கும் கிழக்கும் அதுவரை மனதளவில், பிரதேசவாதம் இன்றி செயல்ப்படவில்லை. பின்பு கட்சி அரசியலில் கூட செல்லையா இராஜதுரை சந்தித்ததும், தலைமைத்துவ மோகத்தால் வந்த பிரதேசவாதம் என்பது மறுப்பதற்கு இல்லை.

மாறாக வடக்கு கிழக்கு இளைஞர்கள் மத்தியில் தோன்றிய புதிய ஒன்றுகூடல், சூறாவளி அழிவுடன் பிரதேசவாதத்தையும் புரட்டிப்போட்டது. முன்பு யாழில் இருந்து இடமாற்றம் பெற்று அரச அதிகாரிகள் மட்டக்களப்பு சென்றால், மாந்திரீகம் செய்து மயக்கிவிடுவார்கள், படுத்த பாயோடு ஒட்டச்செய்வார்கள் என்ற புரளிக்கதைகள் எல்லாம் யாழில் உலவிய காலத்தில், யாழ் பல்கலைகழக இளையவர் சேகரித்த நிவாரண பொருட்கள் ஏற்றிவந்த வாகனம் தான், முதன் முதல் மட்டக்களப்பு நகரை வந்தடைந்தது. அந்த பட்டதாரி மாணவ இளையவரை யாரும் மாந்திரீகம் செய்து மயக்கவும் இல்லை, அவர்கள் படுத்த பாய் ஓட்டவும் இல்லை. வடக்கு இளையவர், கிழக்கு இளையவர் இருவரது மனங்கள் இணைந்ததால் ஏற்பட்டது மகிழ்ச்சி, பிரபாகரன் கருணா பிளவால் சிதைந்து ஏற்பட்டது மனஆதங்கம்.

தமது அரசியல் காரணங்களுக்காக நாம் தமிழ் பேசும் மக்கள் என்ற கோசத்துடன், முஸ்லிம் மக்களை உள்வாங்கிய மூத்த அரசியல் தலைமைகள், கிழக்கில் தேர்தலில் போட்டியிட்டு தோற்று போனாலும் மருதமுனை மசூர்மௌலானாவை, மேல்சபை செனட்டர் ஆக்கியது மகிழ்ச்சி. பின் முஸ்லிம்மக்களின் அபிப்பிராயம் உள்வாங்கப்படாமல் எடுத்த தீர்மானத்தால், கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் தமிழரசு கட்சியின் பிரச்சார பேச்சாளராய் மேடைகளில் முழங்கிய மௌலானா, மனம் வருந்தி விலகியதும் ஆதங்கம். அதேபோல் தன் அரசியல் ஆசான் அண்ணன் அமிர் பெற்றுத்தராத பட்சத்தில், தம்பி அஸ்ரப் தமிழ் ஈழத்தை பெற்றுத்தருவான் என்ற மகிழ்ச்சி நீடிக்காது, அஸ்ரப் அகன்று சென்றது ஆதங்கம்.

நாம் ஓர்நிரை, ஒரே மொழி பேசும் மக்கள் என்று வேதாந்தம் பேசியவர்கள், முஸ்லிம் மக்களை பற்றிய அணுகுமுறையில் காட்டிய பேதைமை, தம்மை தென்னிலங்கை கட்சிகள் மட்டுமல்ல தமிழ் கட்சிகளும் கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்கள் என்ற மன ஓட்டத்தில், அஸ்ரப் தலைமையில் உருவான கட்சியால் முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சி. ஆனால் முஸ்லிம் காங்கிரசுடன் 1988ல் வடக்கு கிழக்கு மாகாணசபை தேர்தலில் நேரடி மோதலில் ஈடுபடவேண்டி வந்தது, ஈ பி ஆர் எல் எப் க்கு ஆதங்கம். 1978 ல் இளையவராக வடக்கில் இருந்து வந்து, சூறாவளி புனர்வாழ்வு வேலைத்திட்டத்தில் கிழக்குடன் கைகோர்த்த இளைஞரே, பின்பு ஆயுத இயக்கங்களிலும் இணைந்தனர். அதில் கணிசமான முஸ்லிம்களும் இருந்தனர்.

1978க்கும் 1988க்கும் இடைப்பட்ட அந்த பத்து ஆண்டுகளில், மகிழ்ச்சி மற்றும் ஆதங்கம் கலந்த பல நிகழ்வுகள் நிகழ்ந்தன. 1978க்கு முன்பு மாந்திரீக கலக்கமும், பாய் ஒட்டும் பயமும் மட்டமே இருந்தது. அந்த கட்டுக்கதைகளை கட்டியவர் காரியவாதிகள். மட்டக்களப்பின் வயல்வெளிகள், பால்வளம், பழகும் பண்பு, அவர்களின் விருந்துபசாரம், சற்று மயக்க நிலையை தந்ததால், அந்த வசதிக்காக அதனை தம் வாழ்விடமாக்கியவர் உண்மைநிலை மறைத்து, உருவாக்கிய கதைகள் அவை என்று புரிந்தபின்பு, ஒட்டி உறவாடிய எம்மவரிடையே முதலில் இயக்க மோதல், பின்பு உள்முரண்பாடு என்ற, புதிய வேதாளம் மீண்டும் முருங்கை மரமேறியது. வடக்கு கிழக்கு தமிழர்கள் மட்டுமல்ல, முஸ்லிகளும் கசப்புணர்வை தம்முள் வளர்க்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது.

1988ல் நடந்த வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தலில், வடக்கில் உறுப்பினர்கள் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டதால், தேர்தல் தவிர்க்கப்பட்ட நிலைமையில் கிழக்கில் தேர்தல் இடம்பெற்றது. இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் இந்தியா, முஸ்லிம்களின் முதுகில் குத்தியதாக ஆதங்கப்பட்ட அஸ்ரப்பின் தலைமையில், அவர்கள் தமக்கான பங்கை தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் மூலம் பெறமுயன்றனர். அதனால் கிழக்குமாகாண தமிழர்களும் முஸ்லிம்களும் நேரடி மோதலில் ஈடுபட்டு, தற்காலிகமாக இணைந்திருந்த வடக்கு கிழக்கு தொடர்ந்து நீடிக்க வேண்டுமா? என்ற பரீட்சை களமாக அது மாறியது. கிழக்கின் மொத்த ஆசனங்களில் ஒரு ஆசனம் மட்டுமே அம்பாறை வாழ் சிங்களவர் வசமானது. அவரும் அடுத்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வென்றதால், அந்த இடத்துக்கு யு.என்.பி கட்சி சார்பில் நியமிக்கப்பட்டவர் மசூர்மௌலானா.

வடக்கு கிழக்கு மாகாண சபை ஆளும் கட்சியாக தமிழ் கட்சியும், எதிர்கட்சியாக முஸ்லிம் கட்சியும் இருந்தபோதும், பத்மநாபா மூன்று இனத்தவரும் பங்கேற்கும் மந்திரி சபை அமைக்கவே ஆலோசனை வழங்கினார். அதன்படி தமிழ், முஸ்லிம், சிங்கள அமைச்சரவையாக ஒரு நிறைவான வடக்கு கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் சபையாக அமைந்தது. இது பேரினவாதிகளின் மனதில் மட்டுமல்ல பிரபாகரன் மனத்திலும் விரோத்ததை, குரோதத்தை வளர்த்தது. எப்படியும் இவர்களை இயங்காமல் செய்யவேண்டும் என்றவர்களின் பேரினவாத விருப்ப தெரிவாக, அடுத்து நடந்த அதிபர் தேர்தலில் வென்று பிரேமதாச ஜனாதிபதியானார். அவரது வெற்றி வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதல் தோல்வியானது. சிங்கள அமைச்சராக நியமிக்கப்பட்ட தயான் ஜயதிலக பதவி விலகி பிரேமதாசா கரம் பற்றினார்.

ஈழப்போராட்டத்தை ஆதரித்த தென்னிலங்கை புத்தி ஜீவிகளில் தயான் ஜயதிலக, ஈ பி ஆர் எல் எப் ஐ பொறுத்தவரை முக்கியமானவர். வெறுமனே ஆதரவு மட்டுமன்றி ஒருங்கிணைந்த மொத்த விடுதலை போராட்டத்துக்கு என, தனது பி ஆர் எப் ( People Revolutionary Front ) அமைப்பை, பத்மநாபவுடனான தோழமையில் இணைத்தவர். ஆரம்பகால வேலைத்திட்டத்தில் நடந்த கலந்துரையாடல், கருத்தரங்கு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் போது ஒருதடவை, மட்டக்களப்பு போய்ஸ் ரவுணில் நடந்த கலந்துரையாடலின் பின் தயான், புல்சரா லியனகே, திராணகம (முறிந்த பனை ரஜனியின் கணவர்), முத்து போன்றவர்கள் கருத்து பரிமாறல் முடிந்து தெற்கு திரும்பிய சில மணி நேரத்தில், பொலிசார் சுற்றிவளைப்பில் வரதராஜபெருமாள் உட்பட பல தோழர்கள் கைதாகி பின் மட்டக்களப்பு சிறை உடைப்பில் வெளிவந்தனர்.

தனது அமைப்பினருக்கு ஆயுத பயிற்சி வழங்க அவர் கமல், பியல், சிறில், உட்பட பல தோழர்களை நாபாவிடம் அனுப்ப, அவர்களுக்கான பயிற்சி கும்பகோணம் சிவபுரம் முகாமில் வழங்கப்பட்டது. அந்த பயிற்சிக்கு செல்ல பயணசெலவுக்கான நிதி அபகரிப்பு நடவடிக்கை, தென்னிலங்கையின் அதி உயர் பாதுகாப்பு பகுதியில் இடம்பெற்றவேளை, அதில் பி ஆர் எப் உடன், ஈ பி ஆர் எல் எப் இப்ராகிம் (சிவகரன்) இணைந்து செயல்ப்பட்டார். பாதுகாப்பு அமைச்சர் அத்துலத்முதலியை கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட வேளை, தகவல் கசிந்து ராம் மாணிக்கலிங்கம் பிடிபட அந்த முயற்சி கைவிடப்பட்டு, தயான் உட்பட அனைவரும் தலைமறைவாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவர்களில் பலருக்கு தமிழ் பெயரில் பாஸ்போட் எடுத்து கொடுக்க முடிந்த என்னால் அந்த ஏஜன்சி நபர் பிடிபட்டதால் தயான் விடயத்தில் தோல்வி ஏற்பட்டது.

இருந்தும் அவரின் தந்தை இந்திய தூதரகம் மூலம் செய்த ஏற்பாட்டில் இந்தியா சென்று, டெல்கியில் தங்கியிருந்த போதும் எம்முடனான தொடர்பை பேணினார். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் உருவான வடக்கு கிழக்கு மாகாண சபையில், அமைச்சராக அன்றைய ஜனாதிபதி ஜெயவர்த்தன முன் பதவிபிரமாணம் செய்த தயான் ஜயதிலக, அடுத்த சில மாதங்களில் தன் மாகாண அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். தனது இராஜினாமா கடித்ததில் அன்றைய சோவியத்யூனியன் தலைவர் கோர்பச்சேவ் எழுதிய, பெரஸ்ட்ரோயிகாவின் சில பகுதிகளை அவர் கோடிட்டு காட்டி, தன் இராஜினாமா முடிவை நியாயப்படுத்தியது இன்றும் என் நினைவில்.

ஆரம்பத்தில் இருந்தே ஈழ விடுதலையை ஆதரித்தபோது மாக்சிசவாதியாக இருந்த தயான், இந்திய அமைதிப்படை வருகையுடன் தன் நிலைபாட்டை மாற்றி, இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுடன் சிங்கள பெரும்தேசிய சிந்தனை கொண்ட பிரேமதாசாவுடன் ஐக்கியமானார். ஈழவிடுதலை போராட்டாத்தின் நியாயத்தன்மையை ஏற்றுக்கொண்ட சிங்கள தலைமைகளுள் முக்கியமானவர் விஜயகுமாரரணதுங்க. ஈழவிடுதலை போராட்ட இயக்க தலைவர்களை சந்திக்க சென்னை வந்தவரை. பத்மநாபா, கேதீசுடன் அண்ணாசாலை ஹோட்டலில் சந்தித்தவேளையில் விஜயகுமாரரணதுங்க, சந்திரிகாவுடன் வந்திருந்த ஓசி அபயகுனவர்த்தனா கூட விஜய் படுகொலைக்கு பின்னர், ஜனாதிபதி தேர்தலில் பிரேமதாசாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியுற்ற பின்பு, சிறிது காலத்தில் அவருடன் ஐக்கியமானார்.

எமது போராட்ட நியாயத்தன்மையை ஏற்றுக்கொண்டு எம்மோடு அரசியல் மற்றும் ஆயுதபோரட்டத்தில் இணைந்தவர்கள், பின்னர் எம்மைவிட்டு விலகியது ஏன் என்ற உண்மை காரணங்கள் இன்றுவரை பகிரங்கப்படவில்லை. வேலுப்பிள்ளை செல்வநாயகம் முதல் வேலுப்பிள்ளை பிரபாகரன் வரை தாம் வரித்துக்கொண்ட அகிம்சை, மற்றும் ஆயுதவழி போராட்ட கொள்கையில், தம்முடன் இணைந்த அனைவரையும் ஓர்நிரையில் வழிநடத்த தவறினரா? அத்தனை தமிழ் அகிம்சைவழி கட்சிகளும் உடைவினை சந்தித்தது போலவே, ஆயுதவழி போராட்ட இயக்கங்களும் தமக்குள்ள மோதல் மற்றும் உள்முரண்பாட்டுக்கு முகம்கொடுத்தன. இயக்கங்களின் போராட்டத்தை சிறுபிள்ளை வேளாண்மை என்ற முத்திய முருங்கை மரங்களும் எதனையும் சாதிக்கவில்லை.

எனது எண்ண ஓட்டத்தில் சிங்கள தலைமைகளும், முஸ்லிம்தலைமைகளும் மக்களை முன்னிறுத்தி தங்கள் தலைமைத்துவ இலக்கை அடைய முற்படும் வேளையில், எம்மவர் தங்களை முன்னிறுத்தி தமது தலைமைத்துவ இலக்கை அடையமுற்படுவதால் தான், இந்த நிலை என புலப்படுகிறது. யார் தலைவன் என்ற தீர்மானம் எட்டப்படும் வேளையில் அகிம்சை தலமைகள், அன்று சிங்களத்தை காட்டி எடுத்த முடிவுகளால் தமிழ் மக்களை தம் தலைமையின் கீழ் கொண்டுவந்தனர். ஜீ ஜீ பொன்னம்பலம் தவறு விட்டார் என கூறி எஸ் ஜே வி செல்வநாயகம் தலைவர் ஆனார். பின் செல்வநாயகம் தலைமையில் இருந்து வெளியேற்றப்பட்ட காவலூர் நவரத்தினம் சுயாட்சி கழக தலைவரானார்

தலைவர்களின் எழுச்சி போதாது என புறப்பட்ட இளையவர், எம்மில் யார் பெரியவர் என்ற முடிவை தம் கையில் இருந்த ஆயுதங்கள் கொண்டு தீர்மானிக்க புறப்பட்டு பலர் மாண்டு மடிந்தனர். மக்களின் உரிமைக்காக அகிம்சை வழியிலும், ஆயுதவழியிலும் போராட புறப்பட்ட தலைமைகளின் பின் செல்ல மக்கள் தயங்கவில்லை. எல்லா துன்பங்களையும் தாங்கிக்கொண்டும் அவர்கள் போராட்டங்களின் போது, தம் பங்களிப்பை தம் உயிர் தற்கொடைவரை கொடுத்தது வரலாறு. ஆனால் எந்த தலைமையும் மக்களை முன்னிறுத்தி, அவர்களுக்கு போராட்ட நிகழ்வுபற்றி பூரண, தெளிவான, விளக்கமோ அல்லது போராட்டத்தினால் ஏற்ப்படக்கூடிய விளைவுகளின் சாதக பாதக நிலைமை பற்றிய தெளிவூட்டலோ இன்றி, வெறும் உணச்சிகளை தூண்டும் பேச்சால் அவர்களை தம் பின்னால் அணிதிரள செய்தனர்.

தமிழ் தலைமைகள் எதுவுமே பொது பிரச்சனையில் ஒன்றுபடமுடியாத நிலை போன்ற செயல்பாட்டை சிங்கள முஸ்லிம் மக்களின் தலைமைகளிடம் காணமுடியவில்லை. தம் இனம் சார்ந்த விடையத்தில் ஒரணியில் அவர்கள் இணையாவிடிலும், ஏட்டிக்கு போட்டியாக செயல்ப்படுவதில்லை. தமிழ் அரசு கட்சி முடிவு தன் இனம் சார்ந்த நலனுக்கு குந்தகமாகலாம் என்று உணர்ந்தவுடன், மசூர் மௌலானா விட்டு விலகினார். அண்ணன் அமிர் கூட எம் நம்பிக்கையை தகர்த்துவிட்டார் என கூறித்தான், அஸ்ரப் முஸ்லிம் காங்கிரசை தொடங்கினார். இந்திய மேலாதிக்க வாதத்தை எதிர்த்த தென்னிலங்கை மக்களின் மனநிலை அறிந்து, தயான் ஜயதிலக மந்திரி பதவியை புறம்தள்ளினார். ஆனால் இதுபோல் எந்த ஒரு தீர்க்கமான தடம்மாறாத செயலை, கொள்கை பிடிப்புடன் எம் தலைமைகள் செய்ததா என்ற கேள்விக்கு இன்றுவரை விடையில்லை.

பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்தவர் தந்த மாவட்டசபையை ஏற்றவர்கள் பின்பு, 6வது திருத்தம் வந்தபோது நாட்டைவிட்டு வெளியேறி, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்பு வந்து, அன்று எதிர்த்த 6வது திருத்தம், இன்றுவரை அப்படியே இருக்க பாராளுமன்றம் செல்கின்றனர். ஆயுதம் ஏந்தியவரும் தமக்குள் மோதி இறுதியில், அரசுகளின் அரவணைப்பில் செயல்ப்படுவதை எம் முன்வினை என்று கொள்வதா? அல்லது இந்திய அமைதிப் படையுடன், பிரேமதாசா கொடுத்த ஆயுதம் கொண்டு போரிட்டது மட்டுமல்ல, மகிந்த கொடுத்த பணத்துக்கு கைமாறாய் பிரபாகரன், வடக்கு மக்களை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காது, ரணிலின் வெற்றியை தடுத்து மகிந்தவை வெல்லவைத்து இறுதியில் தன் விதியை தானே நந்திக்கடலில் முடித்தது மட்டுமன்றி, தன்னை நம்பிய மக்களை, போராளிகளை முள்ளிவாய்க்காலில் மொத்தமாய் கொடுத்ததை அவர் தம் ஊழ்வினை என்பதா?

நிர்ப்பந்தத்தின் நிமித்தம் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ஜே ஆர், அதை தன் மக்களின் நலன் சார்ந்து தான் செய்தேன் என சட்டக்கல்லூரி ஆண்டுவிழாவில் விளக்கம் அளித்தார். இந்திய இராணுவம் சிங்களத்தை ஆக்கிரமிக்காது இருக்கவே, இந்திய அமைதிகாக்கும் படைகளை வடக்கு கிழக்கில் அனுமதித்து, தன் மக்களை காத்து போராளிகளை நிராயுதபாணிகளாக்க முயன்றேன் என்றார். அதே வேளை எதிர்கட்சி தலைவர் சிறிமா கூட ஒப்பந்தத்தை தன் மக்கள் சார்ந்து எதிர்த்தார். இடதுசாரி கட்சிகள் தவிர்த்து சிங்கள பேரினவாத கட்சிகள் எல்லாம், தம் மக்கள் சார்ந்து முடிவெடுத்தன. கையொப்பம் இட்டாலும் பல உள்குத்து வேலைகளை செய்து ஜே ஆர் 13வது அரசியல் திருத்த சட்டத்தை நடைமுறை சாத்தியமற்றதாக்கினார். அதில் மத்தியநிரல், மாகாணநிரல், பொதுநிரல் என்ற சூத்திரத்தில், பொது நிரல் மூலம் அதிகார பகிர்வை மாகாணத்துக்கு சாத்தியமற்றதாக்கினார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் மதில் மேல் பூனையாக இருந்தவேளை, தம்புள்ள முதல் தர்க்கா நகர்வரை நடந்த தீ வைப்புகள், பள்ளிவாசல் மீதான தாக்குதல்கள், முஸ்லிம் மக்களின் காணிகள் அபகரிப்பு என நடந்த அத்துமீறல்களால் தம் இன மக்கள் நலன் மேல்கொண்ட அக்கறையால், முஸ்லிம் புத்திஜீவிகள், உலாமாக்களின் உந்துதலினால் முஸ்லிம் மக்களின் முடிவு முன்கூட்டியே எடுக்கபட்டுவிட்டது என்ற செய்திதான், அந்த கட்சியையும் பின்பு மைத்திரி தெரிவை ஆதரிக்கவைத்தது. தமது மக்கள் எடுத்த முடிவை மீறமுடியாத நிலைமை தோன்றும் போதெல்லாம் சிங்கள தலைமைகளும் முஸ்லிம் தலைமைகளும் தம் மக்கள் பின்னால் பயணிக்கின்றனர். ஆனால் தமிழ் தலைமைகள் ஏட்டிக்கு போட்டியாக மக்களை குழப்பி ஆளாளுக்கு தீர்மானம் எடுக்க தமக்கென தனித்தனி மாநாடுகள், தனித்தனி பேரணிகள் என நடத்தி மக்களை திரிசங்கு நிலையில் வைத்திருக்கின்றன.

அண்மையில் நடந்த எழுக தமிழ் பேரணியின் பின்னணியில் இருந்தவரை அனைவரும் அறிவர். தமது அரசியல் எதிர்பார்ப்புக்காகவே அவர்கள் மக்களை தம்பின்னால் அணிதிரள சொன்னார்களே அன்றி மக்களின் நலன் கருதி அல்ல என்பது பகிரங்க உண்மை. இத்தனை அழிவிற்கு பின்பும் தமக்குள்ள நடத்தும் பதவிக்கான அரசியல் பலப்பரீட்சையை இவர்கள் விட்டுவிட தயாரில்லை. கூட்டமைப்பு எட்டடி பாய்ந்தால், பேரவை பதினாறு அடி பாயும். இடையில் குழம்பிய குட்டையில் ஈ பி டி பி வலை வீசும். பதவிகள் தேடும் ஓட்டத்தில் கவனம் செலுத்தும் தலைமைகள், மக்கள் பிரச்சனை பற்றிய தீர்வு தம்மால் மட்டுமே எட்டப்படும் என்று தேர்தல் மேடைகளில் முழங்கி பின்னர், மக்களின் அரசியல் உரிமைகள் முதல் அவர்களின் காணி விடிவிப்புகள், நிவாரணம், சிறை வாடுவோர் விடுதலை வரை தனித்தனி நடவடிக்கை செய்து, அரசுக்கு எதிராக மென்வலு அணுகுமுறையும் தமக்குள்ள வன்வலு அணுகுமுறையும் கொண்ட விலாங்கு நிலைதான் நிதர்சனம்.

(ராம்)