பிலிபைன்ஸ் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்ட கனடியத் தமிழர் சுட்டுக்கொலை!

(த ஜெயபாலன்)
பிலிபைன்ஸில் சுட்டுக்கொல்லப்பட்ட நிரஞ்சன் சச்சிதானந்தனந்தம் (39) என்பவரின் மரணக் கிரியைகள் நேற்று ஒக்ரோபர் 9, 2016 கனடா வன்கூவர் மாநிலத்தில் நடைபெற்றது. போதைவஸ்துக் கடத்தலில் ஈடுபட்ட மக்ஸ் என்றழைக்கப்படும் நிரஞ்சன் சச்சிதானந்தம் செப்ரம்பர் 14, 2016இல் பிலிப்பைன்ஸில் லா யுனியன் என்ற பகுதியில் உள்ள சன் யூஆன், பரங்கே ரபொக் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.

பிலிப்பைன்ஸில் தனது வீட்டில் மது போதையில் இருந்த போதே இவர் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார். இவருடன் குடியில் இணைந்திருந்தவரும் துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நிரஞ்சனின் பின்பக்கமும் மார்பிலும் நான்கு துப்பாக்கிச் சுட்டுக் காயங்கள் காணப்பட்டது.

நிரஞ்சனை சுட்டவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இவர்கள் சுட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளனர். நிரஞ்சன் மீது கடத்தல், மிரட்டல் மற்றும் வழக்குகள் இருப்பதாக சன் யூஆன் பொலிஸார் குற்றம்சாட்டி உள்ளனர்.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட நிரஞ்சன் அவருடைய பெற்றோருக்கு ஒரே பிள்ளை. கனடாவில் வார்கூவரில் வாழ்ந்து வந்தனர். பிலிபைன்ஸில் படுகொலை செய்யப்பட்ட நிரஞ்சனின் உடல் ஒக்ரோபர் 5 அன்றே கனடாவிற்கு கொண்டுவரப்பட்டது.

போதைவஸ்து கடத்தல் தலைவர்களில் ஒருவரான மயூரன் சுகுமாரன் என்ற அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தமிழர் ஒருவர், அவர் புனர்வாழ்வு பெற்ற பின்னரும் ஏப்ரல் 29, 2015இல் இந்தோனிசியாவில் மரணதண்டனைக்கு உள்ளானது தெரிந்ததே.

இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் காட்டிக் கொடுத்தவர்கள் என்ற போர்வையில் படுகொலைகள் இடம்பெற்ற பாணியில் தற்போது பிலிபைன்ஸில் கொலைகள் மேற்கொள்ளப்படுகிறது.

பிலிபைன்ஸ் நாட்டில் புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி ரொட்ரிகோ டுரேற்ரே தனது தேர்தல் காலத்தின் போதே போதைவஸ்துக்கு எதிரான யுத்தம் ஒன்றை பிரகடனப்படுத்தப் போவதாகக் கூறியிருந்தார். அவர் பதவியேற்று நாட்டு மக்களுக்கு முதன் முதலில் உரையாற்றிய போது கடைசி போதைவஸ்து கடத்தல்காரன் கடைசி போதைவஸ்து விற்பவன் கடைசி போதைவஸ்து பாவிப்பவன் இருக்கும் வரை இந்த போதைவஸ்துவுக்கு எதிரான யுத்த்தம் தொடரும் என்று அறிவித்திருந்தார். அவர் மற்றுமொரு சந்தர்ப்பத்தில் பெருமளவில் இரத்தம் சிதறும் என்றும் எச்சரித்து இருந்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது போதைவஸ்து வர்த்தகத்தில் ஈடுபடும் 100,000 பேர் கொல்லப்படுவார்கள் என்றும் அவர்களின் உடல்கள் தலைநகர் மனிலா கடலில் மிதக்கும் என்றும் அந்த உடல்களை உண்டு மீன்கள் கொழுக்கும் என்றும் எச்சரித்து இருந்தார்.

ஜனாதிபதியாக டுரேற்ரே பதவியேற்று மறுநாள் யூலை 01 2016 முதல் அடுத்த இரு மாதங்களில் 2400 பேர் போதைவஸ்துக்கு எதிரான யுத்தத்தில் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் 700 அதிகமான கொலைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 1000க்கும் அதிகமான கொலைகள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்தவர்களால் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவிக்கின்றது. இவ்வாறான ஒரு கொலையே நிரஞ்சனின் வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

ஜனாதிபதி டுரேற்ரே போதைவஸ்து கடத்தல்காரர்களை அதனை பயன்படுத்துபவர்களை போய் கொல்லுங்கள் என்று மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். தனது மோசமான வார்த்தைப் பிரயோகங்களுக்கு பெயர் பெற்ற ஜனாதிபதி டுரேற்ரே “வேசைகளின் பிள்ளைகள் எங்களுடைய பிள்ளைகளை அழிக்கின்றனர். நீங்கள் ஒரு பொலிஸ்காரனாக இருந்தாலும் இதற்குள் செல்ல வேண்டாம் என்று நான் உங்களை எச்சரிக்கிறேன். ஏனென்றால் நான் உங்களை கொல்வேன்” என்று தலைநகர் மநிலாவில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகையில் தெரிவித்து இருந்தார்.

சர்வதேச உரிமை அமைப்புகள் பிலிபைன்ஸில் நடைபெறும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் பற்றி கடும்கண்டனங்களைத் தெரிவித்து இருந்தது. இவைபற்றி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கேள்வி எழுப்புவார் என ஒரு ஊடகவியலாளர் கேட்ட போது ஒபாமாவை வேசை மகன் என்று ஜனாதிபதி டுரேற்ரே குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி டுரேற்ரே யின் போதைவஸ்துக்கு எதிரான யுத்தத்தில் மக்களை கொலை செய்வதை துண்டுவதை அவர் மீளப்பெற வேண்டும், இதுவரை கொல்லப்பட்டவர்கள் பற்றிய பொறுப்புக் கூறப்பட வேண்டும் மேலதிக கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது. அலையான சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் பிலிபைன்ஸின் போதைவஸ்து மற்றும் குற்றச்செயல்களுக்குப் முடிவுகட்டாது எனத் தெரிவிக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை இது நாட்டில் சட்டஓழுங்கற்ற நிலையையும் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளது.