புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part4)

படையினரின் தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்கக் கொல்லப்படும் புலிகளின் தொகையும் அதிகரித்தது. கட்டாய ஆள் சேர்ப்பின் மூலம் பலவந்தப்படுத்தித் துப்பாக்கி முனையில் புதியவர்கள் பிடித்துச் செல்லப்பட்டவர்கள் எப்படி மூர்க்கத்தனமாக முன்னேறிவரும் படையினருடன் போரில் ஈடுபட முடியும்? அதிலும் புலிகள் தரப்பில் மிக இள வயதினர், குறிப்பாக மாணவப் பருவத்தினர். 15-22 வரையானவர்களே அதிகம். ஒரு வாரம் பயிற்சி, பின்னர் மூன்று நாள் பயிற்சி, இறுதியில் ஆயுதங்களை இயக்குவதற்கான பயிற்சி மட்டும் என்ற அளவிலேயே புலிகள் இவர்களைக் கள முனைக்கு அனுப்பினர். ஏற்கனவே முன்னேறிவரும் படையினர் வெற்றிபெற்றுவரும் சூழலில் அதற்கான உளவியலைப் பெற்றிருந்தனர். புலிகள் தரப்பில் பின்னடைவு நிலையில் மூத்த புலிகளின் உறுப்பினர்களுக்கு அவநம்பிக்கையும் உளச்சோர்வும் ஏற்பட்டிருந்தன. ஆனாலும் தலைமையின் கட்டளைக்கும் வற்புறுத்தலுக்கும் பணிந்து நடவடிக் கையை மேற்கொண்டாலும் படைத்தரப்பைச் சிதைக்கக் கூடிய மாதிரியோ அல்லது படைநகர்வை கட்டுப்படுத்தவோ தாமதப்படுத்தவோ கூடிய அளவுக்கு அவர்களின் தாக்குதல்கள் அமையவில்லை.

இதன் காரணமாகக் கள முனையிலிருந்து கட்டாய ஆட்சேர்ப்பின் மூலமாகப் பிடித்துச் செல்லப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் தப்பி ஓடிக்கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் களமுனையிலிருந்தோ பயிற்சி முகாமிலிருந்தோ ஓடினால் அதற்குப் பதிலாக அந்தந்தக் குடும்பங்களில் இருந்து தாய் அல்லது தந்தை அல்லது குடும்பத்தின் வேறு உறுப்பினர்கள் எவரையாவது அவர்கள் பிடித்துச்சென்று கட்டாயத் தண்டனைக்குட்படுத்தினார்கள். இதன் காரணமாகச் சில பிள்ளைகள் போர்க்களத்தில் தப்புவதற்கு வழியற்று நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவ்வாறு இக்கட்டான நிலையில் போர்க்களத்தில் நின்று உயிரிழந்த இளைஞர்களும் பெண்களும் ஆயிரக் கணக்கில் அடங்கும். சனங்கள் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இடப் பெயர்வைச் சமாளிப்பதா? இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக்கொளவதா? பிள்ளைகளைக் காப்பாற்றுவதா என்று தெரியாத பேரவலம் ஒரு பெரும் சுமையாகச் சனங்களின் தலையில் இறங்கியது. சனங்களுக்கும் புலிகளுக்குமிடையில் மோதல்கள் உருவாகின. இறந்த பிள்ளைகளின் உடலை பெற்றோரிடம் காட்டுவதற்கே புலிகள் அஞ்சும் நிலை ஏற்பட்டது. பல பெற்றோர் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் புலிகளைத் தாக்கியிருக்கின்றனர்.

இப்படிப் போரின் தீவிர நிலை சனங்களை இறுக்கிக் கழுத்தை நெரித்துக்கொண்டிருந்தபோதுதான் புலிகளின் கெடுபிடிகளும் மிக உச்ச நிலையில் அதிகரித்தன. படையினர் நெருங்க நெருங்க அதைத் தமது பரப்புரைக்கு வாய்ப்பான ஆயுதமாக்கி ‘எதிரி வருகிறான்; நீங்கள் அவனிடம் மண்டியிடப் போகிறீர்களா?’, ‘உயிரினும் மேலானது தாய்நாடு’, ‘சிங்கள வெறியனின் கைகளில் சிக்கிச் சாவதைவிட அதற்கெதிராகப் போரிட்டுச் சாவது மேல்‘, ‘எங்கள் குலத்தமிழ்ப் பெண்களே உங்கள் கற்பு சிங்கள வெறியனுக்கென்ன பரிசா?’ என்று சனங்களின் மனதில் கலவரத்தையும் அச்சத்தையும் ஊட்டினார்கள். படைத் தரப்பின் தாக்குதல்களும் சனங்களை அச்சமடையவே வைத்தன. இதனால் கடந்த காலங்களில் சிங்கள இராணுவத்தின் தாக்குதல்களால் மிகவும் கசப்பான அனுபவத்தைப் பெற்றிருந்த சனங்கள் இன்னும் இன்னும் அச்சமடையத் தொடங்கினார்கள். இது ஒருவகையில் புலிகளுக்குச் சாதக நிலையைத் தோற்றுவித்தது. மன்னாரிலிருந்து சிறிலங்கா படையினர் தமது நடவடிக்கையை ஆரம்பித்து ஒன்றரை வருடமாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஏறக்குறைய இரண்டரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இந்தக் காலத்தில் மிக மூர்க்கமாக விமானத்தாக்குதல்கள் நடந்தன. இதன்போது பல நூற்றுக்கணக்கான சனங்கள் கொல்லப்பட்டிருந்தனர். செஞ்சோலைப் படுகொலை, தமிழ்ச்செல்வன் கொலை என்பவை பலருக்கும் நினைவுக்கு வரலாம். கிளிநொச்சியில் நடந்த பிறிதொரு தாக்குதலில் 26.11.2007 அன்று பிரபாகரன் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தார்.

படைத்தரப்பின் தாக்குதல் வலயத்திற்கு அப்பால் மக்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். அப்படி ஓடிப் பாதுகாப்புத் தேடிக்கொள்வ தற்கான இடம் சனங்களுக்கிருந்தது. ஆனால், இப்படி ஓடிக்கொண்டிருந்தபோது அவர்களுக்கான உழைப்பு, வருமானம், இருப்பிடம், பொருட்கள் என்பன இல்லாத நிலை உருவாகியது. பொருட்களைக் கொழும்பில் இருந்து வன்னிக்குள் எடுத்துவருவதற்கான தடையும், கட்டுப்பாடுகளும் உணவுப்பொருட்களைப் பெறுவதற்கே பெரும் நெருக்கடியை உருவாக்கியது. பஞ்சம் பட்டினியும் தலைவிரித்தாடின. ‘வன்னி’ இலங்கையின் நெற்களஞ்சியம் என்று வர்ணிக்கப்படுவதுண்டு.

(அருண் நடேசன்)

(தொடரும்….)