பேரவலத்தின் பின்னரும் தொடரும் எம்மவர் அவலம்!?

முள்ளிவாய்க்கால்வரை நீடித்த எமது ஆயுத போராட்டம் அரச பயங்கரவாதத்தால் ஆரம்பித்து, சகோதர படுகொலை வரை தொடந்து பின்னர், ஒரு மொழி பேசும் சகோதர இனத்தின் மீதான வன்மமாக மாறியது மட்டுமன்றி, அப்பாவி சிங்கள பொதுமக்களையும் பலிகொண்டு இறுதியில் தானும் பலியாகிப் போனது. கல்வியில் பண்பாட்டில் விருந்தோம்பலில் ஒழுக்கத்தில் அன்னியரும் மெச்சத்தகு இனமாக இருந்த எம்மவர் வாழ்வில், பதவி அரசியல் எனும் புயல் வீசி அனைத்தையும் கபளீகரம் செய்தது.

பலமொழி பேசும் நாடுகள் கூட உரிமைகளை தம்முள் பகிரும் நிலையை, இருமொழி பேசும் இலங்கை தீவில் ஏற்படுத்த முடியாத பேரினவாத சிந்தனை, இருதரப்பையும் மோதலில் ஈடுபட செய்த நிலைமையை, தமக்கு சாதகமாக்கிய இருதரப்பு அரசியல் தலைமைகளும், தம் பதவிப் போட்டிக்கு மக்களை பகடை காயாக பாவித்த நிலை நீடித்த போதுதான், ஆயுதங்கள் இளையவர் கைகளில் புகுந்தன. அகிம்சைக்கு எதிராக ஹிம்சை அறிமுகமாக கண்ணுக்கு கண், உயிருக்கு உயிர் என தீவிரவாதம் துளிர்விட்டது.

என் நினைவுகளின்படி 1971ம் ஆண்டு தென்னிலங்கையில் ஏற்பட்ட ஆயுத கிளர்ச்சிவரை, கமக்காரர் வசம் மட்டுமே துப்பாக்கிகள் இருந்தன. நெற்பயிர் முதல் சேனை செய்கையை நாசம் செய்யும் விலங்குகள், மற்றும் முந்திரி தோட்டத்தை சேதம் செய்யும் பறவைகளை கட்டுப்படுத்த வேண்டியே, அனுமதிபெற்ற துப்பாக்கிகள் பாவனையில் இருந்தன. ஒரு சிலர் அவற்றை காட்டு மிருகங்களை இறைச்சி தேவைக்காக வேட்டையாட பயன்படுத்தியது விதிவிலக்கு. மேலும் சிலர் கரையோர பிரதேசங்களில் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கை செய்ய, அனுமதி இல்லாத கைத்துப்பாக்கிகளும் வைத்திருந்தனர்.

தொடர் இனக்கலவரங்கள் எதிர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை தந்தவேளை தான், எம் இன இளையவர் கைகளில் ஆயதங்கள் திணிக்கப்பட்டன. அதுவரை மேடைகளில் முழங்கியவரின் பேச்சுக்களை வாக்குகளாக மாற்றிய இளையவர், தம் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி எம் உரிமைகளை பெறுவர் என்றே திடமாக நம்பினர். அதனால் தேர்தல் காலத்தில் தலைவர்களின் வெற்றிக்காய் ஓடி ஓடி உழைத்தவர்கள், தங்கள் பரீட்சை தேர்வுக்காகவும் கஸ்டப்பட்டு படித்தனர். ஆனால் அவர்களின் பல்கலைகழக கனவை தரப்படுத்தல் முறைமை கலைத்தபோது தலைமையை வெறுத்தனர்.

பேசிப்பேசியே இருந்ததையும் இழந்து நிற்கும் தலைமைகளை, எதிர்க்கும் அவர்கள் மனநிலைக்கு மக்களின் ஆதரவும் இருந்தது. இணக்க அரசியல் செய்வதும், பின் ஒப்பந்தங்கள் போடுவதும் அவை மீறப்படும் போது பிலாக்கணம் பாடுவதும், கேட்டு கேட்டு புளித்துப்போனதால், புரட்சிகர சிந்தனை கொண்ட இளையவர் வருகைக்கு, மக்கள் மறைமுக ஆதரவு தரத்தொடங்கினர். அதன் பின்னணியில் உருவான இயக்கங்களின் மறைமுக செயல்பாடுகள் பகிரங்கமாக, 1983 ஜூலை இனக்கலவரம் காரணமாயிற்று. தென்னிலங்கையில் வைத்த தீ வடக்கு கிழக்கு இளையவர் மனதில், கொழுந்துவிட்டு எரிந்தது.

விளைவு நாம் கடந்து வந்த வரலாறு. வீறுகொண்ட இளையவரை வழிநடத்த தலைமைகள் தயங்கியது அவர்களின் இயலாமை. தாம் தேர்தல்களில் வெல்வதற்காகவே வெற்று வாக்குறுதிகள் வழங்கியதால், வந்த வினைதான் இது என்பதை அவர்கள் உணர்ந்ததால், குற்ற உணர்வில் மட்டுமல்ல தம் தவறுக்கான தண்டனை கூட கிடைக்கலாம் என்ற பயத்திலும், அவர்கள் தம்மை பாதுகாப்பாக தமிழகத்தில் தக்கவைத்து கொண்டனர். திடீரென ஊதிப்பெருத்த இயக்கங்களின் வேலைத்திட்டம் மாற்றத்துக்கு உள்ளானது. அதுவரை மக்களை அரசியல் மயப்படுத்தி அவர்களை அணிதிரட்டிய விடுதலை போராட்டம் என்ற நிலை, இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு விலைபோனது.

அமெரிக்காவின் கைப்பிளையை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவராவிட்டால், தனது பிராந்திய வல்லரசு எனும் சட்டாம்பிள்ளை செயல், சவாலுக்கு உட்படும் என்ற பிராந்திய நலன் சார்ந்த இந்திய சிந்தனை, ஈழபோராட்டத்தை தன் நிகழ்ச்சிக்கு உட்படுத்தியது. ஜே ஆர் கடைப்பிடித்த திறந்த பொருளாதார கொள்கை, மேற்குலகம் சார்ந்த செயல், சோவித்யூனியன்சார் நிலைப்பாடு கொண்ட இந்திய கொள்கை வகுப்பாளரின் சவாலுக்கு உட்பட்டது. பிராந்திய நலன் சார்ந்த தம் தேவைக்கு கிடைத்த எடுப்பார் கை பிள்ளை நிலைக்கு, ஈழ விடுதலை இயக்கங்களை தத்தெடுப்பதன் மூலம் மொத்த இலங்கையையும் தம் கட்டுபாட்டில் வைத்திருக்கும் சூத்திரம் வகுத்தனர்.

இந்தியாவின் ஆதரவை தமக்கு கிடைத்த பெரும் பாக்கியம் எனவே இயக்க தலைமைகள் இதய சுத்தியுடன் நம்பினர் என்பது, உமாமகேஸ்வரன், பிரபாகரன் தவிர்த்து ஏனைய தலைமைகளின் நிலைப்பாடாக இருந்தது உண்மை.‘’வங்கம் தந்த பாடம்’’ மூலம் உமா தன் மனநிலையை வெளிப்படுத்தியது போலவே, தங்கள் தொலைதொடர்பு சாதனங்கள் உட்பட ஆயுத களைவும், தமிழகத்தில் இடம்பெற்றதை எதிர்த்து, பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்து உணர்த்தினார். இந்திய மண்ணையும் அதன் ஆதரவையும் தம் தேவைக்காக பயன்படுத்தும் சூத்திரம் அவர்களின் பாணி. ஆனால் நாபா போன்றவர்கள் இந்திய பிராந்திய நலனுக்குட்பட்ட பாதையை தேர்ந்தெடுத்தனர்.

அதனால் தான் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்று கொண்டது மட்டுமல்ல, தற்காலிகமாக இணைந்திருந்த போதும் காலப்போக்கில் அது நிரந்தரமாகும் என்ற முடிவில், முதலாவது வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கு முகம் கொடுத்தார். மட்டக்களப்பில் நடந்த பிரசார கூட்டத்தில் பொதுவாக அதிகம் பேசாத பழக்கம் கொண்ட நாபா, நீண்ட உரை நிகழ்த்தி ஏன் ஒப்பந்தத்தை ஏற்றோம், எமது அடுத்த அரசியல் இலக்கு என்ன என்ற விளக்கத்தை அளித்து, மாகாண சபை முறைமையை எமது உரிமைகளை முழுமையாக பெறுவதற்கான முதல்படியாக ஏற்பதாக கூறி, காலக்கிரமத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பற்றிய எதிர்பார்க்கை பற்றியும் தெளிவூட்டினார்.

அந்த தெளிவூட்டல் தான் மாகாண நிர்வாகத்துக்கு, கற்றவர்களை புலிகளின் அச்சுறுத்தலை கூட மீறி ஈர்த்தது. இதுவரை கிடைத்த அதிகார பகிர்வில் கூடியது மட்டுமல்ல, அதுவரை போடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் அனைத்தும் சிங்கள தரப்பால் மீறப்பட்டது போன்ற நிலை தோன்றாது, என்ற நம்பிக்கை இந்திய உத்தரவாதத்தால் ஏற்ப்பட்டது. நடைமுறை சாத்தியமான விடயத்தை நாம் தவறவிட்டால் முழுமையும் இழக்கும் நிலை வரும் என்ற போதுதான், அடைந்தால் தமிழ் நாடு இல்லையேல் சுடுகாடு என முழங்கிய அறிஞர் அண்ணா கூட, பாரத பிரதமர் நேருவின் மனநிலை அறிந்ததும், விட்டுக்கொடுப்புக்கு இணங்கியது போல, பிரபாகரனும் அன்று முடிவெடுக்கவில்லை.

மக்கள் நலன் சார்ந்த அரசியலோ, போராட்டமோ அவர்களை காக்கவைத்து ஏமாறவோ, அல்லது பலிக்கடா ஆக்கவோ கூடாது. எம்மவர் அரசியல் தலைமைகள் காலத்துக்கு காலம் மக்களை காக்கவைத்து, கடைசியில் கைவிரித்தது தான் வரலாறு. அதே போல ஆயுத போராட்டத்தின் பூரண உரிமையாளர் தான்தான் என்று செயல்பட்ட பிரபாகரன், தவறவிட்ட மிகப்பெரிய சந்தர்ப்பம் இலங்கை இந்திய ஒப்பந்தம். அதன் பின்பு சர்வதேச அனுசரணையுடன் சந்தர்ப்பங்கள் வந்தபோது, மிகப்பெரிய இழப்புகளை அவர் தலைமையை ஏற்ற விடுதலை போராளிகள் மட்டுமல்ல, அவரை நம்பிய மக்களும் சந்தித்திருந்தனர்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் பிராந்திய நலன் சார்ந்து போடப்பட்டதால், எமது உரிமைக்கான அதிகார பகிர்வு படிப்படியாக நிறைவேற கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் மேற்கு உலக மூக்கோட்டல் கடைசியில் எம்மவரை கையறு நிலைக்கு கொண்டு சென்ற நிலைதான், நாம் முள்ளிவாய்காலில் கண்ட பேரவலம். அயலவர் உதவி கூக்குரல் கேட்டதும் கிடைக்கும் என்பது யதார்த்தம். அதில் சுயநலம் இருக்காது என எதிர்பார்க்க முடியாது. இருந்தும் தவிர்க்க கூடாதது. ஆனால் வெளியூரில் இருக்கும் பயில்வான் வருவான் என்ற எதிர்பாப்பில், அயலவரை தவிர்த்தால் விளைவு பேரவலத்தில் தான் முடியும்.

மகாவம்சமும் அநகாரிக தர்மபாலாவின் சிந்தனையும் சிங்கள மக்களை, ஒருவித பயபீதியில் தான் இன்றுவரை வைத்திருக்கிறது. தென்னிந்திய ஆக்கிரமிப்பு பற்றிய வலாற்று திரிபுகள், அவர்களை இலங்கை வாழ் தமிழர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியில், காரியங்களை தமக்கு சாதகமாக மாற்றும் மன நிலையில் செயல்ப்படுத்துகிறது. வெள்ளையர் வெளியேறிய பின்பு வடக்கு கிழக்கு கிழக்கில் உருவான சிங்கள குடியேற்றம் மட்டுமல்ல, மலையாக தமிழரின் வாக்குரிமை பறிப்பும் அதற்கு சான்றாகும். உலகின் எந்த பகுதியிலும் இல்லாத தனி இனமான தம்மீது, தமிழர்கள் ஆளுமை செய்யும் நிலைமை ஏற்படலாம் என்ற அச்சம் தான், அவர்களின் அதிகார பகிர்வை கொடுக்க விரும்பாத மனநிலை.

இந்தியா தன் பிராந்திய நலன் சார்ந்து என்ன முடிவை எடுத்தாலும் அது தனியே, தமிழர் நலன் பேணுவதாக மட்டுமே அமையும் என்ற பயம் சிங்களத்துக்கு உண்டு. ஆனால் உண்மைநிலை அதுவல்ல. தமிழ் ஈழம் அமையுமானால் அது தமிழ்நாட்டில் எதிரொலிக்கும் என்பது, இந்திய கொள்கை வகுப்பாளருக்கு தெரிந்ததால்,அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இலங்கையை துண்டாடும் திட்டம் இருக்கவில்லை. இருந்தும் தனி நாடு கோசம் வெற்று பேசுபொருள் என்பதை, சிங்களம் நம்ப தயாராக இல்லை. அதனால் தான் அது சீனாவை நோக்கிய பட்டுப் பாதையில் பயணிக்க விரும்புகிறது.

இந்தப் பாதையில் தனது பயணத்துக்கு தமிழர் தயவை பெறவே, மேற்குலகு எம்மவர் மீது கொள்ளும் கரிசனை என்பதை நாம் புரிந்துகொள்ள தவறினால், அயலவனை வெறுத்து தொலைதூர பயில்வானின் வருகைக்கு காத்திருந்த பேரவலம், மீண்டும் எம் மண்ணில் அரங்கேறலாம். அன்று நாபா போன்ற யதார்த்தவாதிகள் மக்கள் நலன் சார்ந்து எடுத்த முடிவை, பிரபாகரனும் எடுத்து இருந்தால், அவர் மட்டுமல்ல எம்மவரும் தம் சொந்த மண்ணில் சந்ததி பல கண்டு வாழும் பாக்கியம் பெற்றிருப்பர். அன்னிய நாடுகளில் அகதியாய், வேற்று மொழி தெரியாது புலம்புவராய், புலம் பெயர்ந்த தேசத்து தெருக்களில் கண்ணீர் விடும் நிலை ஏற்ப்பட்டிராது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரியும் முடிவை எடுத்தவேளை, தம் எதிர்காலம் பற்றிய புலம்பல், வேலை தேடி வந்த போலந்து போன்ற ஐரோப்பிய நாட்டினருக்கு ஏற்பட்ட போதும், திரும்பி சென்றால் ஏற்பட கூடிய, அரச பயங்கரவாதம் பாற்றிய பயம் அவர்களுக்கு கிஞ்சித்தும் இல்லை. ஆனால் இன்றுவரை சிறிலங்கா சென்று திரும்பும் தமிழர் நிலை அப்படியானதா என்ற கேள்விக்கு, ஆம் என்ற பதிலை யார் கூறினாலும், அது உண்மை இல்லை என்பது தான் யதார்த்தம். அடிக்கடி பயணிக்கும் என்னை பார்க்கும் புலனாய்வு அதிகாரி தரும் வரவேற்பு, பல ஆண்டுகள் கழித்து பயணிக்கும் அப்பாவிகள் பலருக்கு கிடைப்பதில்லை.

என்வரையில் எந்த மனக்கிலேசமும் இன்றி பயணங்கள் தொடர்ந்தாலும், அங்கு நிகழும் நிகழ்வுகளால் பயமின்றிய பயணம், புலம்பெயர்ந்த அனைவருக்கும் சாத்தியம் இல்லை என்பதே தொடரும் அவலம். அரசியல் காரணங்களால் அடிக்கடி நடக்கும் பேரணிகளும் கண்டன கூட்டங்களும், இனங்களிடையே முறுகல் நிலையை நீறுபூத்த நெருப்பாகவே வைத்திருக்கிறது. நல்லாட்சி என்ற நாமத்துடன் அமைந்த கூட்டு அரசில் கூட இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான வெளிப்படை தன்மை காணப்படவில்லை. தீர்வு பற்றி பேசினால் பேரினவாத பூதம் சிகளஉறுமய, ஜாதிக ஹெல உறுமய உருவில் வெளிவரும் என்ற நிலையில் மூடு மந்திரம்போல் காக்கப்படுகிறது.

20 உறுப்பினர்களை தாருங்கள் 2016ல் தீர்வு நிச்சயம் என, கடந்த தேர்தலின் போது சம்மந்தர் ஐயா கேட்ட கால அவகாசம் முடிய, இன்னமும் இரண்டு மாதங்கள் தான் உண்டு. அவர் கேட்ட 20 கிடைக்கவிட்டாலும் தீர்வு கிடைக்கும் என்றுதான், அண்மைய வவுனியா தமிழரசு கட்சி கூட்டத்தில் கூட கூறப்பட்டது. அகிம்சை போராட்டம், ஆயுத போராட்டம் என 60 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்த நீங்கள், இன்னமும் 2 மாதங்கள் பொறுத்திருங்கள் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. பலர் பொங்கி எழுந்தபோது, அமிர்தலிங்கம் நீலன் திருச்செல்வம் போல என்னையும் கொன்றால் தீர்வு கிடைக்குமா என்ற கேள்வியும் சுமந்திரனால் கேட்கப்பட்டது.

இங்கு எழும் கேள்வி எவரது ஆளுமையின் கீழ் தீர்வு திட்டம் நிறைவேற்றப்படும் என்பதே. சந்திரிகா ரணில் மைத்திரி விருப்பு முயற்சியிலா? அல்லது கூட்டமைப்பின் கோரிக்கை அடிப்படையிலா? அல்லது மேற்குலகின் நெருக்குதலிலா? அல்லது இந்திய இடைசெருகலிலா?. அன்று சந்திரிகா கொண்டுவந்த தீர்வு திட்டத்தை எதிர்த்தவர் ரணில். ரணில் பிரபாகரனுடன் ஒப்பந்தம் போட்டதால் அவரின் அரசையே கலைத்தவர் சந்திரிகா. அப்பம் உண்ணும் வரை மகிந்தவின் அருகில் இருந்தவர் மைத்திரி. தமிழ் ஈழ கோரிக்கைக்கு அங்கீகாரம் கிடைத்தும், எதிர்கட்சி தலைவர் பதவியை ஏற்ற அமிர் அண்ணா போலவே, 20பது கேட்ட சம்மந்தர் ஐயாவும் எதிர்கட்சி தலைவராய் செயல்ப்படுகிறார்.

இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் குருட்டு மனிதர்களாக, மக்களை வைத்திருக்கிறது நாம் எதிபார்க்கும் தீர்வு திட்டம் என்பது மட்டுமே நிஜம். பூட்டிய அறைக்குள் ஆண்டுகள் கடந்தும் பேசிய விடயங்கள் மக்கள் முன்வைக்கப்படாது, கால அவகாசம் மட்டுமே கேட்கப்படுகிறது. பேரினவாதிகள் குழப்புவார்கள் என்று கூறியே பகிரங்கப்படாத விடயங்கள் பற்றி வதந்திகளால் வீண் சந்தேகங்களை, வாதப்பிரதிவாதங்களை வவுனியாவில் நடந்த கூட்டத்தில் பார்த்தோம். அதே போன்ற நிலைமையே வடக்கு கிழக்கு எங்கும் நிலவுகின்றது. தாம் தெரிவு செய்த பிரதிநிதிகள் முன்னெடுக்கும் தீர்வுத் திட்டம் பற்றிய விளக்கம் அறிய ஆவல் கொள்பவருக்கு, கால அவகாசம் கேட்பது மட்டுமே பதில்.

நல்லாட்சியின் நாயகர்கள் மட்டுமல்ல நம்மவரும் கூட, தாம் இணக்கத்துடன் அடைய முற்படும் தீர்வுத்திட்டம் பற்றி வெளிப்படையாக பேசத்தயங்குகின்றனர். அதற்கான நியாயங்களை அவர்கள் கூறினாலும், நடைமுறையில் அவர்களின் தீர்வு செயல்முறைக்கு வருமா? அவ்வாறு வரும்போது எழக்கூடிய எதிர்வலைகளை எவ்வாறு சமாளிப்பது என்ற வேலைத்திட்டம் உள்ளதா, என்ற நியாயமான சந்தேகம் பாதிக்கப்பட்ட இனத்துக்கு உண்டு. பண்டா செல்வா, டட்லி செல்வா ஒப்பந்தங்களை சிங்கள தீவிரவாதம் செயல் அற்றதாக்கியது. ஆனால் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எம்மவர் தான் எமக்கு பயன் அற்றதாக்கினர்.

நாம் தவறவிட்ட சந்தர்ப்பங்களை மீட்டுப்பார்க்கும் மனநிலை, எம்மவரிடம் அரிதாகவே உள்ளது. பிடித்த முயல்களின் கால்கள் பற்றிய வாதம் புரிந்தே, அடையமுடிந்த இலக்கை தவறவிட்டோம். தீர்வை வெளியில் தேடும் எம்மவர் போக்கு, அணிகளாய் பிளவுக்கு உட்படும் போது தான், எதிர்தரப்பு எம்மை ஏமாற்றுகிறது. ஒருமித்த கருத்தாக்கம் கடந்த 60 ஆண்டுகளாக எம்மவரிடம் ஏற்படவில்லை. அதிகார பகிர்வு எந்த அலகு கொண்டு பெறப்பட வேண்டும் என்ற ஒத்த நிலைப்பாட்டை, நாம் அடைய முடியாத நிலையில், தீர்வு வெகுதொலைவில் என்றே எண்ணத் தோன்றுகின்றது. சமஸ்டி, ஒருநாடு இருதேசம், மாகாணங்களுக்கான அதிகார பகிர்வு என, எதிலும் ஒருமித்த நிலை இன்றுவரை இல்லை.

பேரவலத்தின் பின்புலத்தில் இருந்தவரே இன்று எமக்கான தீர்வு பற்றி பேசவென, பறந்து பறந்து வருகின்றனர். மேற்குலகின் நிகழ்ச்சி நிரல் எவ்வாறு இருக்கும் என்பதை இரட்டை கோபுர தாக்குதலின் பின் நிகழ்ந்த நிகழ்வுகள் மூலம் நாம் பாடம் கற்கவேண்டும். உலகெங்கும் உள்ள விடுதலை கேட்டு போராடியவர்களை பயங்கரவாதிகள் என பட்டியலிடும் அதிகாரத்தை அமெரிக்கா தன் கையகப்படுத்திய பின்னரும், கப்பல்கள் வரும் காப்பாற்றுவார்கள் என நம்பியவர்கள் பெற்ற அனுபவம், தீர்வுத்திட்ட முடிவிலும் ஏற்ப்படலாம் என்ற சந்தேகம் நியாயமானதே. கூட்டு அரசினுள் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் அதற்கான கட்டியம் கூறுகின்றது. மேலும் புத்தமதத்துக்கு முதன்மை மற்றும் புதிய பயங்கரவாத சட்டம் பற்றிய சலசலப்பும் தொடங்கிவிட்டது..

2016ல் தீர்வு வரும் என்ற சம்மந்தரின் நம்பிக்கை மட்டுமே இன்று எம்முன்னால் உள்ளது. அரசியல் அணுகுமுறையில் எதிர்வு கூறலை முன்வைப்பது தவறல்ல. ஆனால் நீண்ட நெடிய பிரச்சனைக்கான தீர்வு பற்றிய செயல்முறைகளை, மூடு மந்திரம்போல வைத்திருந்து, அதுபற்றிய தெளிவூட்டல் அற்ற நிலையில் மக்கள் முன் அவைவெளிப்படும் நிலையில், ஏற்ப்படகூடிய சாதக பாதக நிலைபற்றிய பயம் மேலெழுகிறது. இன்னும் இருமாத காலத்துள் ஜீ பூம் பா என தீர்வு நகல் வெளிவருமா? அல்லது அடுத்த மாதம் கிளரி கிளிங்டன் அமெரிக்க ஜனாதிபதியான பின், கால நீடிப்பு கேட்பார்களா? அல்லது பத்திரகாளி அல்லது பரமபிதா அல்லது பாரத பிரதமர் பார்த்துகொள்வார் என்ற புதிய பல்லவியா?

(ராம்)