மக்கள் நாயகனும் கைக்கூலியும்

அது, உலகின் பல நாடுகளில் அரசாங்கங்களை கவிழ்ப்பது தொடர்பான சூழ்ச்சிகள் திட்டமிடப்படும் அமெரிக்காவின் நாசகர உளவு அமைப்பான சிஐஏவின் அலுவலக அறைகளில் ஒன்று.
அங்கிருந்து புறப்பட்டு அவன், வெள்ளை மாளிகைக்குச் செல்கிறான். டொனால்டு டிரம்ப்பை சந்திக்கிறான். அவர் முதுகில் தட்டி ஆசி வழங்குகிறார்.

அங்கிருந்து கொலம்பியாவுக்குச் செல்கிறான்; அங்கு ஜனாதிபதியாக இருக்கிற சிஐஏவின் தலைசிறந்த அடிமையும் வலதுசாரி வெறியனுமான இவான் டியூக் மார்க்கஸை சந்திக்கிறான். அவனும், என்ன உதவி வேண்டுமானாலும் கேள்; என்ன வேண்டுமானாலும் செய்துகொள்; ‘அவனை’ ஒழித்துக்கட்டு என்கிறான்.

Juan Guaidó,
அந்த உத்தரவாதத்தைப் பெற்றுக்கொண்டு, பிரேசிலுக்குச் செல்கிறான்… அங்கு சமீபத்தில் வன்முறையையும் கலவரத்தையும் தூண்டிவிட்டு நூலிழையில் ஆட்சியைக் கைப்பற்றிவிட்ட கொடிய நவீன பாசிச முகமான ‘ஜனாதிபதி’ ஜெயிர் பல்சானரோவை சந்திக்கிறான். அவனும் அதேபோலக் கூறுகிறான். அங்கிருந்து வெனிசுலாவுக்குத் திரும்புகிறான்.

நாடெங்கும் கலவரத்தையும், வன்முறையையும் கட்டவிழ்த்து விடுகிறான். நாடு பற்றி எரியத் துவங்குகிற சூழலைப் பயன்படுத்தி; எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் விலைபேசி, தன்வசப்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவராகிறான்; எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக உள்ள நாடாளுமன்ற அவையின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அடுத்த நிமிடமே, அவனுக்கு வெள்ளை மாளிகையிலிருந்து அழைப்பு வருகிறது. டிரம்ப்பின் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அவனுடன் பேசுகிறார். உன்னை நீயே ‘இடைக்கால ஜனாதிபதி’ என்று அறிவித்துக் கொள் என உத்தரவிடுகிறார். மக்கள் மத்தியில் செய்தியாளர்களைக் கூட்டி, இனி நான்தான் ‘இடைக்கால ஜனாதிபதி’ என அறிவிக்கிறான்.

அடுத்த நொடியே, நியூயார்க் டைம்ஸ் ஏட்டின் ஆசிரியர் குழு அவனைப் புகழ்ந்து தலையங்கம் எழுதுகிறது. வெனிசுலாவை புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் அற்புதமான தலைவன் கிடைத்துவிட்டான் என்று வானளாவப் புகழ்கிறது. புளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் குழு, வெனிசுலாவில் ஜனநாயகத்தை மீட்க வந்த ரட்சகன் என்று புகழ்கிறது. வால்ஸ்ட்டீரிட் ஜர்னல் ஏட்டின் ஆசிரியர் குழுவோ அவனை புதியதோர் ஜனநாயகத் தலைவன் என உயர்த்துகிறது.

அதேவேளை கனடா அரசு, வெனிசுலாவின் புதிய ஜனாதிபதி வாழ்க என்கிறது. பிரிட்டனில் துவங்கி பல்வேறு ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல், லத்தீன் அமெரிக்காவில் கொலம்பியா, பிரேசில் உட்பட பல்வேறு நாடுகளும் அடுத்தடுத்த நிமிடங்களில் வெனிசுலாவின் புதிய ஜனாதிபதியாக அவனை அங்கீகரிக்கின்றன.

டொனால்டு டிரம்ப், வெனிசுலாவின் புதிய ஜனாதிபதி ஜூவான் குவாய்டோ என பிரகடனம் செய்கிறார். ஜூவான் குவாய்டோ வெனிசுலாவில் பிறந்தாலும் அமெரிக்காவில் படித்தவன். சிஐஏவின் கைக்கூலியாக தேர்வு செய்யப்பட்டு, வன்முறைகளையும் கலவரங்களையும் படுகொலைகளையும் எப்படி நிகழ்த்துவது என்று பயிற்சி அளிக்கப்பட்டவன். அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைசிறந்த அடிமைகளில் ஒருவன்.

வெனிசுலாவில் தனக்கு அடிமையாக மறுக்கிற நிக்கோலஸ் மதுரோவை ஒழித்துக் கட்டுவதற்காக வெள்ளை மாளிகையை இயக்குகிற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கடைந்தெடுத்த கைக்கூலியாக செல்படுவேன் என்று அவர்களிடம் உறுதியளித்துக் கொண்டவன்.

குவாய்டோவை வெனிசுலாவின் ஜனாதிபதியாக அறிவித்த கையோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கே ஆட்சி நடத்தி வருகிற நிக்கோலஸ் மதுரோவை ‘சட்டவிரோதமானவர்’ என்று வெள்ளை மாளிகையிலிருந்து டிரம்ப் அறிவிக்கிறார். ஒருவார காலத்திற்குள், மதுரோ, ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற வேண்டுமென உத்தரவு போடுகிறார்.

வேறொரு நாட்டிற்கு தானே ஜனாதிபதியை நியமிப்பதும், அந்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி நடத்திவரும் ஜனாதிபதியை சட்டவிரோதமானவர் என்று அறிவிப்பதும் உலகின் எந்த சட்டத்திற்கும் உட்பட்டது அல்ல என்பது தெரியாதவர் அல்ல டொனால்டு டிரம்ப். அந்த சட்டங்கள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்து, வெனிசுலா எனும் தேசத்தின் இறையாண்மையை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்து, ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளையெல்லாம் சுக்குநூறாக கிழித்தெறிகிறார் டொனால்டு டிரம்ப். நம் கண் முன்னே இத்தகைய பயங்கரம் பகிரங்கமாக அரங்கேறுகிறது.

வெனிசுலா உலக வரைபடத்தில் தென் அமெரிக்கக் கண்டத்தில் மையமான பகுதியில் அமைந்திருக்கும் அற்புதமான நாடு.

இன்றைய தேதியில், உலகிலேயே நிரூபிக்கப்பட்ட பெட்ரோலிய வளம் மிக மிக அதிக அளவில் இருக்கும் முதன்மையான நாடு. 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின்படி, உலகம் முழுவதும் இன்னும் உறிஞ்சப்படாமல் இருப்பு இருக்கிற மொத்த பெட்ரோலியத்தில் 20 சதவீதம் வெனிசுலாவில்தான் இருக்கிறது. உலகின் அன்றாட பெட்ரோலியத் தேவையை பூர்த்தி செய்கிற முதல் பத்து பெரிய எண்ணெய் வள நாடுகளில் ஒன்று வெனிசுலா. உலகிற்கு அன்றாடம் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்கிற முதல் ஐந்து பெரிய பெட்ரோலிய வளம் கொண்ட நாடுகளில் ஒன்று வெனிசுலா.

இதில் 41 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகிறது. தனது தேவையில் கிட்டத்தட்ட சரி பாதி பெட்ரோலியத்தை அமெரிக்கா வெனிசுலாவிடமிருந்து பெறுகிறது என்றும் இதைச் சொல்லலாம்.
வெனிசுலா அமெரிக்காவுக்கு அருகில் இருக்கிறது. பெட்ரோலியத்தை கொண்டு செல்லும் செலவு குறைவு. இதற்கு முன்பு வெனிசுலாவிடமிருந்து அமெரிக்கா காசு கொடுத்தெல்லாம் பெறவில்லை. 1999ல், கியூப புரட்சித் தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் வழிகாட்டுதலுடன் சோசலிச சிந்தனைகளை நெஞ்சில் ஏந்தி, ராணுவத்தில் புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்களையும் அணிதிரட்டி பொலிவாரிய புரட்சி நடத்தி தளபதி சாவேஸ் ஆட்சிக்கு வந்தது முதல், வெனிசுலாவின் பெட்ரோலியத்தை அமெரிக்காவால் களவாடிக் கொண்டு செல்ல முடியவில்லை. அதற்கு முன்பு கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வெனிசுலாவின் எண்ணெய் வளம் அமெரிக்காவின் காலடியின் கீழ்தான் இருந்தது.

அது 1890களின் வரலாறு. அப்போது வெனிசுலாவுக்கும் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கும் இடையே இருந்த எல்லைத் தகராறில் தானடித்த மூப்பாக தலையிட்டு வெனிசுலாவில் ஒரு கைக்கூலியை உருவாக்கிக் கொண்டது அமெரிக்கா. அன்றைக்கு அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஜனாதிபதியாக குரோவர் கிளீவ்லேண்ட் இருந்தார். அவரது நிர்வாகம் படிப்படியாக வெனிசுலாவை தனது கைகளின் பிடிகளில் கொண்டுவரத் துவங்கியது. 1908ம் ஆண்டு அங்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை பயன்படுத்தி அமெரிக்க கடற்படை நேரடியாக தலையிட்டு, அங்கு துணை ஜனாதிபதியாக இருந்த ஜூவான் வின்சென்ட் கோமேஜ் என்பவர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உதவி செய்தது; கலவரத்தையும் வன்முறையையும் கட்டவிழ்த்துவிட்டு எண்ணற்ற மக்களை படுகொலை செய்து கோமேஜ் ஜனாதிபதியாக உட்காருவதற்கு அமெரிக்க வெள்ளை மாளிகை அனைத்து உதவிகளையும் செய்தது. கோமேஜ், வெள்ளை மாளிகையின் மிகச்சிறந்த அடிமையாக – கைக்கூலியாக மாறினான். 1935ஆம் ஆண்டு அவன் செத்துப் போகும் வரையில் வெனிசுலாவில் நடத்தப்பட்ட பயங்கரங்களும், கொடூரங்களும் கொஞ்சநஞ்சமல்ல. கற்கால காட்டுமிராண்டித்தன ஆட்சியை அவன் நடத்தினான். அரசியல் கைதிகள் தலை துண்டித்துப் படுகொலை செய்யப்பட்டார்கள். அரசியல் எதிரிகள் நிரந்தரமாக முடக்கப்பட்டார்கள். அதையும் மீறி ஜனநாயகம் பேசியவர்களின் கழுத்திலும், ஆண்குறியின் விரைகளிலும் இறைச்சியைக் கோர்க்கும் கொடிய கொக்கிகளை மாட்டி தலைகீழாகத் தொங்கவிட்டு படுகொலை செய்தான். இவனது ஆட்சியில்தான் ஒட்டுமொத்த வெனிசுலாவின் எண்ணெய் வளத்தையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பகாசுர கார்ப்பரேட் கம்பெனிகள் முற்றாக தங்களது கைகளின் கீழ் கொண்டு வந்தன. குறிப்பாக, இன்றைய அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான எக்ஸான் மொபில் மற்றும் ராயல் டட்ச்ஷெல் ஆகியவை முழுக்க முழுக்க வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைச் சுரண்டிக் கொழுத்தவைதான்.

கோமேஜின் சாவுக்குப் பிறகு 1948ல் ஆட்சிக்கு வந்த மற்றொரு கைக்கூலி மார்க்கோஸ் ஜிமனேஸ். இவன் அவனை விடக் கொடிய சர்வாதிகாரியாக செயல்பட்டான். அமெரிக்க பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் அடிமைக்கூலியாக வேலைசெய்தான். தனது சொந்த மக்களை கொடூரமாக கொன்று குவித்தான். பல்லாயிரக்கணக்கான அப்பாவி வெனிசுலா மக்கள் குரூரமான முறையில் கொல்லப்பட்டார்கள்.

1958ல் ஜனநாயக முயற்சிகள் துவங்கினாலும் மீண்டும் மீண்டும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நுகத்தடியில் பூட்டப்பட்ட – அமெரிக்க பெட்ரோலிய கார்ப்பரேட் கம்பெனிகளின் சொர்க்கமாக மாற்றப்பட்ட வெனிசுலா 40 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக சுதந்திரக் காற்றைச் சுவாசித்தது.
அது 1998. வெனிசுலா ராணுவத்திற்குள் புரட்சிகர நடவடிக்கைகள் மேற்கொண்டு மக்கள் தலைவனாக மலர்ந்தார் சாவேஸ். பொலி வாரியப் புரட்சி நடந்தது. அந்த நிமிடம் முதல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நடுநடுங்கச் செய்யும் நடவடிக்கைகளைத் துவக்கினார் சாவேஸ். மக்கள் அவரைக் கொண்டாடினார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கைக்கூலி களும் வெனிசுலாவுக்குள் அவர்களால் பலன்பெற்ற பெரும் கார்ப்பரேட் முதலாளிகளும் நிலப் பிரபுக்களும் சாவேசுக்கு மிகப்பெரும் எதிரி களாக மாறினார்கள். அமெரிக்காவின் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், சாவேசை பிசாசு என்று சாடினார்.

Hugo Chávez
2002ம் ஆண்டு சாவேசை வீழ்த்துவதற்கு சிஐஏ சூழ்ச்சி செய்தது. அவரது ஆட்சிக்கு எதிராக, சிஐஏவின் பயிற்சிக் கூடங்களில் கொலைகாரப் பயிற்சி பெற்று, பின்னர் வெனிசுலாவில் அரசியல்வாதியாக களமிறக்கப்பட்ட எலியாட் அப்ராம்ஸ் என்பவன் தலைமையில் பெரிய கலகம் நடத்தப்பட்டு ஜனாதிபதி சாவேஸ் சிறை வைக்கப்பட்டார்; ஆனால் வெனிசுலா முழுவதும் மக்களின் எழுச்சி வெடித்தது. ராணுவத்தில் மிகப்பெருவாரியான அதிகாரிகளும் வீரர்களும் சாவேசை விடுவிக்க குரல் கொடுத்தனர். அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டு 48 மணி நேரத்தில் சாவேசை விடுவித்து, அமெரிக்க ஏகாதிபத்திய கைக்கூலிகளின் சூழ்ச்சிகளை முறியடித்தார்கள். சாவேஸ் இன்னும் எழுச்சியோடு தனது புரட்சிகர நடவடிக்கைகளைத் தொடர்ந்தார்.

வெனிசுலா குடிமக்களின் சொர்க்கமாக மாறியது. சாவேஸ் ஏழைகளின் ஏசுவாக வலம் வந்தார். வெனிசுலாவின் பெட்ரோலிய வளம் முழுவதும் மக்கள் சொத்தாக மாறியது. அமெரிக்க பெட்ரோலிய கார்ப்பரேட் கம்பெனிகள் துரத்தி அடிக்கப்பட்டன. வெனிசுலாவிடமிருந்து முதல் முறையாக பெட்ரோலை காசுகொடுத்து வாங்கியது அமெரிக்கா.

ஏகாதிபத்தியம் – உலகம் முழுவதும் பெட்ரோலிய வளத்தை தனது காலடியின் கீழ் கொண்டுவர வெறியோடு அலைகிற அமெரிக்க ஏகாதிபத்தியம் -ஆப்கானிஸ்தானைச் சிதைத்தது; லிபியாவைத் தகர்த்தது; இராக்கைச் சின்னாபின்னமாக்கியது. சிரியாவைப் பாய்ந்து குதறியது. வடகொரியாவை அழிக்க முயற்சித்தது. வெனிசுலாவையும் விடாமல் துரத்தியது.

சாவேசுக்கு சூழ்ச்சிகரமாக கொடிய விஷம் கொடுத்து மெல்லக் கொன்றது. 2013 சாவேசுக்குப் பிறகு அவரது பொலிவாரியப் புரட்சியை உயர்த்திப் பிடித்து வெனிசுலா சோசலிஸ்ட் கட்சியின் தலைவராகவும் மக்களின் மனம் கவர்ந்த ஜனாதிபதியாகவும் மலர்ந்தார் நிக்கோலஸ் மதுரோ. ஒரு சாதாரண போக்குவரத்துத் தொழிலாளி. அரசியல் கற்று, இடதுசாரி சித்தாந்தம் கற்று, சாவேசின் உற்ற தோழனாய் மாறி, வெனிசுலா மக்களின் இதயத்தில் சாவேசைப் போலவே அமர்ந்தார் மதுரோ.
இனி அசைக்க முடியாது என்றெண்ணிய ஏகாதிபத்தியம், மதுரோ ஆட்சியில் அமர்ந்த நாள் முதல் அவரை ஒழிப்பதற்கு களத்தில் இறங்கியது. வெனிசுலாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து நெருக்கடிக்கு உள்ளாக்கியது. வெனிசுலாவின் ஒரே மிகப்பெரிய பொருளாதார ஆதாரம் அதன் தீராத பெட்ரோல் வளம்தான். ஆனால் அந்த பெட்ரோலிய வளத்தை எங்கும் கொண்டு செல்ல விடாமல் தடுக்கும் நோக்கத்துடன் பல நாசகர முயற்சிகளை அமெரிக்கா செய்தது. இதன் விளைவாக கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார சிக்கலில் மதுரோ அரசு சிக்க வைக்கப்பட்டது. அதையும் மீறி மக்களுக்கான நடவடிக்கைகளைத் தொடர்கிறார் மதுரோ.

இத்தகைய பின்னணியில்தான் டிரம்ப் நிர்வாகம் முழு மூச்சில் வெனிசுலாவை வீழ்த்தி, அதை மீண்டும் தனது நுகத்தடியில் பூட்டி அடிமையாக்குவதற்கு, அதன் ஒட்டுமொத்த பெட்ரோலிய வளத்தையும் கைப்பற்றுவதற்கு வெறியோடு இறங்கியிருக்கிறது.

2018 ஜூலையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மிகப்பெரும் வன்முறை கலவரத்தை தூண்டிவிட்டு பல படுகொலைகளை அரங்கேற்றினார்கள் அமெரிக்க கைக்கூலிகள். அதற்கு முன்னதாக, வன்முறையைப் பிரயோகித்தும், எதிர்க்கட்சிகளில் பலவீனமானவர்களை விலைக்கு வாங்கியும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றனர். ஆனால் மக்கள் உண்மையை உணர்ந்து கொண்டார்கள். ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் மதுரோவை தங்களது இதய சிம்மாசனத்தில் அமர்த்தினார்கள். இதை ஏகாதிபத்தியம் எதிர்பார்க்கவில்லை. எப்படியேனும் மதுரோவை அழிப்பது என கங்கணம் கட்டி அதற்கான ஒரு தலைசிறந்த கைக்கூலியைத் தேடியது.
அந்த கைக்கூலிதான் ஜூவான் குவாய்டோ.

பேரரசன் டிரம்ப் உத்தரவு போடுகிறான். அதை கைக்கூலி வெனிசுலாவில் நிறைவேற்ற முயல்கிறான்.
வெனிசுலாவில் மக்கள் இருக்கிறார்கள் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள்.

(Thank you Thenee)