மரணத்தை பலமுறை கண்டு புன்னகை மலர்ந்த  தோழன் இவன்.

மலர்ச்சி இழந்த மக்களின்

மகிழ்ச்சி முகம் காண அன்று
மாணவ பருவத்தில் சுடு மணலில் விளையாடியவர்
மஞ்சம் சுகவாசம் துறந்தவர்

மக்களில்லாத மண்ணை நேசிக்கவில்லை-நாம்
மக்களுக்காகவே மண்ணை நேசிக்கின்றோம்
மா-காவியமான இவ்புரட்சிவசனம்
மனதை சிந்திக்க வைத்து
மக்களின் மானம்காத்தவர் அவர்தான்

மரணத்தை பலமுறை கண்டு சிரித்து
மணவாளன் போல் மக்கள் மத்தியில்
மாலைசூடி புன்னைகையில் வீரம் சுமந்து
மதியூகத்திற்க்கு சொந்தகாரன்

மந்திரம் தந்திரம் அறியாது-தமிழ்
மக்களின் இன்னல்களை மட்டும்
மனதில் சுமந்து நடமாடிய மகாத்மா

மதிப்புரை என்றென்றும் உங்களுக்கு மட்டும்
மதிப்பீடும் என்றென்றும் உங்களுக்கு மட்டும்
மதிப்பெண்ணும் என்றென்றும் உங்களுக்கு மட்டும்
மயிலாடும் புன்னகையுடன் என்றென்றும் உங்களுக்கு மட்டும், மானம் காத்த பெருமையும் உங்களுக்கு மட்டும்.அவர்தான்
மரணத்தை வென்ற மகாத்மா
மனிதநேயம் கொண்ட தோழன் இவன்

மனிதநேயம் கொண்ட எங்கள் தோழனே
மன்னனே நீங்கள் என்றும்எங்களுக்கு மட்டும்
மண்ணில் வாழ்க உங்கள் புகழ்
மக்கள் மத்தியில் தொடர்வோம் உங்கள் பணி
.
வாழ்க உங்கள் நாமம்

நன்றி முல்லைமைந்தன்.

இந்திய துணையின்றி ஈழத்தில் விடுதலை கிடையாது என்று கூறியதற்காக பத்மநாபாவை மண்ணுக்கு அனுப்பியவர்கள் அதே இந்திய துணையில்லாமையால் இறுதியில் சிங்களர்களால் மண்ணுக்கு அனுப்பப்பட்டார்கள் என்பது தான் வரலாறு. வரலாறு அவருக்கு சந்தர்ப்பம் தராவிட்டாலும், வரலாறு அவரது தூரநோக்கு சரி என நிரூபித்தது.

அடக்குமுறையும்,அகங்காரமும் கொண்ட ஒரு குழு,ஒரு இனத்தையே வேரோடு அழித்து ,தாங்களும் அழிந்து போனார்கள்.

இந்தியாவின் ஒத்துழைப்போடுதான் தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார்.

பத்பநாபா தான் பிறந்து வளர்ந்த நாட்டை நேசித்தது போலவே இந்தியாவையும் நேசித்த ஒருவர். இந்தியா, ஈழத்து மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு நேசக் கரம் நீட்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவர்.

நாபா இந்தியாவில் ஏராளமான நண்பர்களைப் பெற்றிருந்தார். தமிழ்நாட்டில் அவர் சந்திக்காத பிரமுகர்களோ மக்கள் அணியினரோ இல்லை என்றே சொல்லலாம். அன்னாரின் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்து இரங்கற் செய்தி வெளியிடாத மக்கள் இயக்கங்களே இல்லை எனலாம்.

இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் வாழ்ந்து அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்ட ஒருவர், ஈழவிடுதலை இயக்கங்கள் மத்தியில் இருந்தார் என்றால் அது பத்மநாபா ஒருவராகவே இருக்கும்.

நாபாவிடம் கர்வம், தலைக்கனம், அதிகார வெறி என்பனவற்றை யாரும் கண்டிருக்க முடியாது. பல்லாயிரக்கணக்கான இளம் தோழர்கள் அவர் சுட்டு விரலுக்குக் கட்டுப்பட்டு எதையும் செய்யத் தயாரான நிலையில் இருந்த போதிலும் , அவர் எந்தக் கட்டத்திலும் அதிகார மமதை – பதவி வெறி பிடித்து செயற்பட்டதில்லை – தலைக்கனம் பிடித்து நடந்ததில்லை.

* இன்று சகோதர யுத்தத்தை நடத்துவோரை நீங்கள் தேடி அழிக்க வேண்டியதில்லை அவர்கள் தம்மைத்தாமே அழித்துக் கொள்வார்கள்.
பத்மநாபா 1987

* நாம் மரணத்தை கண்டு அஞ்சவில்லை ஒரு அடிமையாய் அனாதையாய்
தெருக்களில் மரணித்துப் போவதைத்தான் வெறுக்கிறோம்.
பத்மநாபா 1987.