மிரட்டலுக்கு அஞ்சி பதவி விலகத் தேவையில்லை!

பொருளாதார நெருக்கடிக்கு இன்றைய அரசாங்கம் மட்டும் காரணம் அல்ல. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்களும், தொடர்ச்சியான ஏகாதிபத்திய நவ காலனித்துவ பிடிப்பும், தற்போதைய உலகச் சூழலுமே காரணம். அப்படியிருக்க இன்றைய அரசாங்கமும், ராஜபக்ச குடும்பமும்தான் இதற்குக் காரணம் என்றால் அது கேலிக்குரிய கருத்து.

எது எப்படியளிருப்பினும், தற்போதைய ஜனாதிபதியும், பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட அரசாங்கமும் எந்தக் காரணம் கொண்டும் பதவி விலகக்கூடாது. ஏனெனில் அவர்கள் இலங்கையின் ஏகப் பெரும்பான்மையான மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். மக்கள் ஒரு தேர்தல் மூலம் மறு தீர்ப்பு வழங்காமல் அவர்கள் தாங்களாகவே பதவி விலகினால் அது மக்கள் வழங்கிய தீர்ப்பை ஊதாசீனம் செய்ததாகி விடும். அப்படியிருந்தும் அவர்கள் தாங்களாகவே பதவி விலகினால் அது மிரட்டல் அரசியலின் விளைவும் கோழைத்தனத்தின் விளைவும் ஆகும்.

வேண்டுமானால் அவர்களைப் பதவி விலகக் கோரி மிரட்டுபவர்கள் இலங்கையின் அரசியல் சாசன முறைப்படியும், ஜனநாயக முறைப்படியும் குற்றவியல் பிரேரணை, நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பனவற்றைறக் கொண்டு வந்து, அவற்றை உரிய முறைப்படி நிறைவேற்றி அவர்களைப் பதவி நீக்கம் செய்யலாம். மக்களின் நேரடித் தீர்ப்பை ஊதாசீனப்படுத்தினாலும், மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் அவர்களது தீர்மானத்தை ஏற்பதில் தவறில்லை.

அப்படிச் செய்தால் பதவி இழக்கும் அரச தலைவர்களுக்கும் அது நல்லது. ஏனெனில், இந்த அதிகார வெறி பிடித்தவர்களின் உண்மை நிலையைப் புரிந்து கொண்டு, 2015 இல் வீழ்த்தப்பட்டு பின்னர் மக்கள் ஆதரவுடன் மீண்டெழுந்த ‘பீனிக்ஸ்’ பறவைகள் போல அவர்கள் மீண்டெழ வாய்ப்புண்டாகும்.